Published:Updated:

ராகுல், மலான், ஷாருக்... பஞ்சாபை மூன்று கிங்ஸும் காப்பாற்றுவார்களா?! LEAGUE லீக்ஸ் - 5 #PunjabKings

பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் கரியரில், 91 சிக்ஸர்களை அடித்துள்ள மேக்ஸ்வெல்லால், சென்ற வருடம், ஒரு சிக்ஸரைக் கூட அடிக்க முடியவில்லை. வெறும், 102 ஸ்ட்ரைக்ரேட்டோடு மேக்ஸ்வெல் முடிக்க, அதன்பலனை பஞ்சாப் அனுபவித்தது.

ராகுல், மலான், ஷாருக்... பஞ்சாபை மூன்று கிங்ஸும் காப்பாற்றுவார்களா?! LEAGUE லீக்ஸ் - 5 #PunjabKings

ஐபிஎல் கரியரில், 91 சிக்ஸர்களை அடித்துள்ள மேக்ஸ்வெல்லால், சென்ற வருடம், ஒரு சிக்ஸரைக் கூட அடிக்க முடியவில்லை. வெறும், 102 ஸ்ட்ரைக்ரேட்டோடு மேக்ஸ்வெல் முடிக்க, அதன்பலனை பஞ்சாப் அனுபவித்தது.

Published:Updated:
பஞ்சாப் கிங்ஸ்

முதல்வருடம் ஒரு வீரரை எடுப்பதும், அடுத்தவருடம் அவரை வெளியே எறிவதும் என ஆண்டாண்டு காலமாக 'உள்ளே வெளியே' விளையாட்டில் வல்லமையுடன் வலிமைகாட்டும் அணி பஞ்சாப்.

சென்ற சீசனில், தொடரின் முதல் பாதியில், ஏழு போட்டிகளில், ஒன்றில் மட்டுமே வென்ற பஞ்சாப் கிங்ஸ், கம்பேக் கிங்காக, கடைசி ஏழு போட்டிகளில், ஐந்தில் வரிசையாக வென்று எதிரணிகளுக்கு ஷாக் கொடுத்து, சீசனை ஆறாவது இடத்தில் முடித்தது.

2014-ம் வருடம், ரன்னர் அப்பாக முடித்ததை மட்டுமே, தன்னுடைய ஒட்டுமொத்த சாதனையாகக் கொண்டாடி வருகிறது பஞ்சாப். ஐபிஎல்-ன் எல்லா சீசன்களிலும் விளையாடிய பெருமையைப் பெற்றிருந்தாலும், ஷேவாக், சங்ககாரா, யுவராஜ் என பல ஆளுமைகள் தலைமையேற்றுச் சிறப்பித்திருந்தாலும், கோப்பை என்பது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இதுவரை இரண்டு முறை மட்டுமே, ப்ளே ஆஃபிற்கு முன்னேறியிருக்கிறது. எதைத் தவறவிடுகிறது, எங்கே தவறிழைக்கிறது பஞ்சாப்?!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பலவீனம் - 1 : ப்ளேயிங் லெவன் காம்பினேஷன்!

வீரர்களை மட்டுமல்ல, கேப்டன்களையும் சுத்தலில் விடுவது பஞ்சாப் ப்ரீத்தி ஸ்டைல். சரி, எடுத்த வீரர்களைக் கொண்டும் ஒரு நிலையான ப்ளேயிங் லெவனை அமைக்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. கடந்தாண்டு, பதினான்கு போட்டிகளில், ஒன்பது வெவ்வேறு காம்பினேஷன்களில் களம்கண்டது பஞ்சாப். காயத்தால் இந்த மாற்றம் இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தது என்றாலும், மற்ற அத்தனை முறையிலும், பரிட்சித்துப் பார்க்கலாம் என்ற கணக்கிலேயே வீரர்களை மாற்றியது பஞ்சாப். முடிவு, ஒரு நிலையான அணி அமையாது, தடுமாற்றமே மிஞ்சியது.

ஜாஃபர் - ஷாருக் கான்
ஜாஃபர் - ஷாருக் கான்

பலவீனம் - 2 : டெத் ஓவர் பௌலிங்!

கடந்த சீசனில், டெத் ஓவர் எனச் சொல்லப்படும், 17 டு 20 ஓவர்களில், பஞ்சாப் பௌலர்களின் செயல்பாடு சிறப்பாக இல்லை. ஷமி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. பஞ்சாப் பௌலர்கள் கடந்த சீசனில், டெத்ஓவர்களில், சராசரியாக, ஓவருக்கு, 12.06 ரன்களை வாரி வழங்கி இருந்தனர். அதிக ரன்களை டெத் ஓவர்களில் கொடுத்த அணிகளின் பட்டியலில், பஞ்சாபே இரண்டாவது இடம் வகித்தது. முதலிடத்தை, ராஜஸ்தான் ராயல்ஸ் 12.21 எக்கானமியோடு பிடித்திருந்தது. இதேபோல், பஞ்சாப் பௌலர்கள் போன சீசனில் எடுத்த விக்கெட்டுகளில் 80-ல், 25 விக்கெட்டுகள் மட்டுமே, டெத்ஓவர்களில் எடுக்கப்பட்டிருந்தன. 126 ரன்களை டிஃபெண்ட் செய்து, சன்ரைசர்ஸுக்கே அதிர்ச்சி கொடுத்து, பஞ்சாப் வெற்றி பெற்ற அந்தப் போட்டியில் மட்டும்தான், ஆறு விக்கெட்டுகளை, கடைசி நான்கு ஓவர்களில் வீழ்த்தி பஞ்சாப் அசத்தியிருந்தது. மற்ற போட்டிகளில், அவர்கள் தோல்வியைத் தொட்டதற்கு டெத்ஓவர் குறைபாடும் முக்கிய காரணம். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், ஷமியைத்தவிர மற்ற இந்திய பௌலர்களின் அனுபவமின்மையும், ஷெல்டன் காட்ரலால், எதிர்பார்த்த அளவு சிறப்பான பங்களிப்பை வழங்க முடியாமல் போனதும்தான்.

பலவீனம் - 3 : ஏமாற்றிய மேக்ஸ்வெல்!

பஞ்சாப் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்த 2014-ம் ஆண்டு மட்டுமே, மேக்ஸ்வெல் மேஜிக் பஞ்சாபில் பலித்தது. அந்தவருடம் 500 ரன்களுக்கு மேல் குவித்து, அணியை ரன்னர்ஆப் என்னும் அந்தஸ்த்தை அடைய வைத்த மேக்ஸ்வெல், அடுத்த மூன்றாண்டுகள், குறிப்பிடத்தக்க தாக்கமெதையும் ஏற்படுத்தாமல் போக, 2017-ம் ஆண்டோடு அவருக்கு விடை கொடுத்தது பஞ்சாப். அவருக்கு மறுவாய்ப்பாக, 2020-ம் ஆண்டில் 10.75 கோடி கொடுத்து அவரைத் திரும்ப வாங்கியது பஞ்சாப். தங்களுடைய எக்ஸ் ஃபேக்டராக அவர் இருப்பார் என நம்பிய பஞ்சாப்புக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. 13 போட்டிகளில் அவருக்குப் பஞ்சாப் வாய்ப்பளித்தும், வெறும் 108 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார் மேக்ஸ்வெல். தனது ஐபிஎல் கரியரில், 91 சிக்ஸர்களை அடித்துள்ள மேக்ஸ்வெல்லால், சென்ற வருடம், ஒரு சிக்ஸரைக் கூட அடிக்க முடியவில்லை. வெறும், 102 ஸ்ட்ரைக்ரேட்டோடு மேக்ஸ்வெல் முடிக்க, அதன்பலனை பஞ்சாப் அனுபவித்தது.

பலவீனம் - 4 : மிடில் ஆர்டர், லோயர் மிடில் ஆர்டர் பிரச்னை!

ஓப்பனர்களாக, கேஎல் ராகுல் - மயாங்க் பெரும்பாலான போட்டிகளைச் சந்தித்தனர், ரன்களையும் குவித்தனர். அதற்கடுத்த இடங்களில், கெய்ல், பூரன் வலுசேர்த்தனர். எனினும், இதற்கடுத்த இடங்களில், நிலையாக நின்று ரன்களைக் குவிக்க, ஒரு சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இல்லாததே பஞ்சாபுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. மந்தீப், சர்ஃப்ராஸ் கான், ஹுடா, கௌதம் என யாரை அங்கே கொண்டு வந்தாலும், ரன் மட்டும் வரவேயில்லை. டாப் ஆர்டர் ஜொலித்தும், பின்வரிசை வீரர்கள் சோபிக்காததால், பல போட்டிகளை பறிகொடுத்ததுப் பரிதவித்தது பஞ்சாப்.

அனில் கும்ப்ளே - மயாங்க்
அனில் கும்ப்ளே - மயாங்க்

பலவீனம் - 5 : வருவோம்... விடைபெறுவோம்!

பஞ்சாப் பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானோர் அட்டாக்கிங் பேட்ஸ்மேன்களே. மத்திய ஓவர்களில், நின்று ஆட வேண்டும், ரன்களைச் சேர்க்க வேண்டும் எனும் பொறுப்பின்றி, அவர்கள் அடித்து ஆடி ஆட்டமிழக்க, அது வெற்றியின் விளிம்பில் இருந்த போட்டிகளிலிருந்து கூட அவர்களை, தோல்வியை நோக்கி இடப்பெயர்வு செய்தது.

2021 சவால்கள் : டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்!

டெத் ஓவர் குறைபாடைச் சமாளிக்க, பஞ்சாப் 14 கோடி கொடுத்து ஜை ரிச்சர்ட்சனை வாங்கியுள்ளதற்கான காரணம். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பேஷ் லீகில், டெத் ஓவர்களில், ரிச்சர்ட்சனின் எக்கானமி, 8.76 மட்டும் என்பதே. ரிலே மெரிடித்தை 8 கோடி கொடுத்து, பஞ்சாப் வாங்கியதற்கும், காரணம் அதே லீகில், அவரது டெத் ஓவர் எக்கானமி, 8.64 என்பதுவே. இது பஞ்சாபின் ஒரு புத்திசாலித்தனமான முடிவாகத் தெரிந்தாலும், இந்தியாவில் முதல்முறையாக தங்களது முதல் ஐபிஎல் தொடரைச் சந்திக்க இருக்கும், இந்த இருவரும் எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டு, ஷமிக்குச் சமமான ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே. எனினும் மணிக்கு, 145கிமீ வேகத்தில் தோட்டாவாய் இவர்கள் பாயச்செய்யும் பந்துகள் எந்த பேட்ஸ்மேனையும் நிலைகுலையச் செய்யும் என்பதே பஞ்சாபின் எதிர்பார்ப்பு.

மாயம் செய்வாரா மலான்?!

கடந்த சீசனில், சில போட்டிகளில் கெய்லால், உடல்நிலை காரணமாக விளையாட முடியவில்லை. வயது முதிர்வு காரணமாக, கெய்ல் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதியில்லை என்பதால், அவருக்கு மாற்றான ஒரு வீரராகவே, டேவிட் மலானை வாங்கியுள்ளது, பஞ்சாப். அதுவும், வெறும் 1.5 கோடிக்கு, டி20 ஃபார்மட்டில் முதலிடத்தில் இருக்கும் வீரரை வாங்கியது பஞ்சாப்பின் ஸ்மார்ட் மூவ். எனினும், நடந்து முடிந்துள்ள, இந்திய - இங்கிலாந்து தொடரில், மலானால் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. கெய்லுக்குப் பதிலாக, சில தொடக்கப் போட்டிகளில், பஞ்சாப், மலானை இறக்கி, வெள்ளோட்டம் பார்க்கும். அந்தப் போட்டிகளில், மலானின் செயல்பாடு எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே தொடரில் அவர்களது நிலை முடிவாகும். ஏனெனில், சென்ற தொடரிலும், கெய்லின் வருகையே அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்தது. இந்தத் தொடரில் அது எப்படிச் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஷாருக்கான் எனும் ஷார்க்!

அணியில் நம்பிக்கை தரும்படியான ஒரு அதிரடி இந்திய பேட்ஸ்மேன் வேண்டுமென்பதால், ஷாருக்கானை கடும் போட்டிக்கு நடுவே, 5.25 கோடிக்கு பஞ்சாப் வாங்கியுள்ளது. தொடக்க காலத்தில், ஓப்பனராக விளையாடிய ஷாருக்கானை, தமிழ்நாட்டுக்காக ஆடிய போது, ஃபினிஷராக மாற்றினார் தினேஷ் கார்த்திக். ஆனால், எந்த இடத்தில் இறங்கினாலும், அதற்குப் பொருந்திப் போய், அதிரடி காட்டி ரன் சேர்ப்பது, ஷாருக்கானின் இயல்பு. அது பஞ்சாபுக்கு பெரிய பலமாக இருக்குமென்பதால், பெரும்பாலும், பஞ்சாபின் எல்லாப் போட்டிகளிலும் ஷாருக்கான் இருப்பார்.

ஜொலிக்க இருக்கும் இந்திய முகங்கள்!

சென்ற வருடம், அர்ஷ்தீப் சிங், கடைசி நேரத்தில் எழுச்சியுற்று, எட்டு போட்டிகளில், ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மும்பை, ஆர்சிபி, டெல்லி உள்ளிட்ட அணிகளில், ஏழு வருடங்களாய் இடம் பெற்றிருந்தாலும், 34 வயதாகும் சக்சேனா, தன்னுடைய அறிமுக ஐபிஎல் போட்டிக்காகக் காத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சயத் முஷ்தாக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடரில் அவரது சிறப்பான செயல்பாடுகள், அவரை 30 இலட்சத்துக்கு வாங்க வைத்துள்ளது. இந்த முறை ஒரு சில போட்டிகளிலாவது அவர் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

டேவிட் மலான்
டேவிட் மலான்

மைதானம் சாதகமா?!

பஞ்சாப் தான் பங்கேற்கும் போட்டியில், ஐந்து போட்டிகளில், பெங்களூரில் விளையாடுகிறது. இது அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு, சாதகமாக அமையும். ராகுல், மயாங்க், கெய்ல் உள்ளிட்ட வீரர்கள் ரன்குவிப்பில் ஈடுபடுவார்கள் என்பதால், இந்தப் போட்டிகளில் பஞ்சாப் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் அதிகம். அதேபோல, சுழலுக்கு ஒத்துழைக்கும் சென்னையில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதிலும் ரவி பிஷ்னாய், முருகன் அஷ்வின் கடந்த தொடரைப் போல, சிறப்பாகச் செயலாற்றினால், பஞ்சாப் வெல்லலாம்.

கே.எல்.ராகுல் - மூன்று அவதாரம்!

போனமுறை கேப்டனாக முதல்முறை பதவியேற்ற கேஎல் ராகுல், தொடக்கத்தில் சில சரிவுகளைச் சந்தித்தாலும், அதன்பின் மிகப்பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி, அனைவரது புருவத்தையும் உயர வைத்தார். ஓப்பனர், விக்கெட் கீப்பர், கேப்டன் என மூன்று ரோலையும் செய்யும் வீரர்கள், சிறப்பாகச் செயல்பட வாய்ப்புக் குறைவு. ஆனால், அதை, கடந்த முறை சிறப்பாகவே செய்து, ஆரஞ்சுப் கேப்பையும் அதற்குப் பரிசாக வென்ற கேஎல் ராகுல், இந்த வருடமும் அதைத் தொடர்வார் என நம்பலாம்.

உத்தேச ப்ளேயிங் லெவன்!

கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், மலான்/கெய்ல், பூரன், மந்தீப் சிங்/ஹுடா, ஷாருக்கான், ஜோர்டன், ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னாய், ஷமி

ப்ளே ஆஃப் வரை முன்னேறத் தகுதியுள்ள அணியாகவே, பஞ்சாப் பார்க்கப்பட்டாலும், அவர்களது கடந்த கால வரலாறுகள், அதை நம்ப விடாமல் செய்கிறது. எனினும் சென்ற தொடரில், இரண்டாவது பாதியில் கண்ட எழுச்சியை, இத்தொடரில், முதலிலிருந்தே பஞ்சாப் காணும்பட்சத்தில், ப்ளேஆப் வாய்ப்பு அதிகம்!