Published:Updated:

ராகுல் கேப்டன் இன்னிங்ஸ் ஆடினாலும் பஞ்சாபின் வெற்றிக்கு அவர் காரணம் அல்ல... மேட்ச்சை மாற்றிய தருணம்?

கே.எல். ராகுல் வேண்டுமானால் 'Strike rate is overrated' என உதறித் தள்ளலாம். ஆனால், டி20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் முக்கியமானதே. கே.எல்.ராகுல் எவ்வளவு அதிக ரன்களை அடித்து கொடுத்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டை குறைவாகவே வைத்திருப்பார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொல்காத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியை வென்று இந்த ஐபிஎல் சீசனை இன்னும் விறுவிறுப்பாக மாற்றியுள்ளது பஞ்சாப் கிங்ஸ். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 165-7 என ஸ்கோர் செய்திருந்தது. சேஸ் செய்த பஞ்சாப் அணி போட்டியை கடைசி ஓவர் வரை இழுத்து தமிழக வீரர் ஷாரூக்கானின் அதிரடி சிக்சர் மூலம் வென்றது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை அனலிஸ்ட்டான நேதன் லேமனை அதிகம் நம்பியிருக்கும் அணி. அவர் எதையாவது புள்ளிவிவரத்தோடு நோட் போட்டு கொடுத்துவிட்டால் அதை அப்படியே களத்தில் நிகழ்த்தி காட்டுவதுதான் மோர்கன் & கோவின் வேலை.

சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான டேவிட் ஹஸ்ஸி ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அதில் ''நாங்கள் 170 ரன்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார். இறுதியில் கொல்கத்தா எடுத்தது 171 ரன்கள். அந்த ஸ்கோரை கடைசி பந்து வரை கொண்டு சென்றுதான் சென்னை அணியால் வெல்ல முடிந்தது. எண்கள் மற்றும் மேட்ச் அப்களின் அடிப்படையில் இப்படியான சிறப்பான முன் திட்டமிடலோடு கூடவே பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லமின் குணாதிசயமான 'எதற்கும் அஞ்சாமை'யும்அத்தனை வீரர்களின் மனதிலும் ஊறியிருந்தது. இந்த இரண்டும்தான் இந்த இரண்டாம் பாதி ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவின் எழுச்சிக்கு காரணமாக இருந்தது.

துபாய் மைதானத்தில் இதுவரை நடைபெற்றிருக்கும் 6 போட்டிகளின் ஆவரேஜ் ஸ்கோர் 159. அந்த ஸ்கோரை முதலில் எட்ட வேண்டும். அதன்பிறகு, வருவதெல்லாம் போனஸ் என்கிற திட்டமிடலுடனே கொல்கத்தா களமிறங்கியது.
அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்
Punjab Kings

வெங்கடேஷ் ஐயரின் பொறுமையான பேட்டிங் அணுகுமுறையின் மூலம் இதை உணர்ந்து கொள்ளலாம். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா எடுத்த ஸ்கோர் 165-7. ஆவரேஜை விட சற்று அதிகம். ஆனால், போனஸ் ரன்கள் பெரிதாக வந்திருக்கவில்லை. கொல்கத்தாவை அந்த போனஸ் ரன்களை எடுக்கவிடாமல் தடுத்தது அர்ஷ்தீப் சிங்கும் ரவி பிஷ்னாயுமே.

அர்ஷ்தீப் சிங். பஞ்சாபை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர். கடந்த சீசனிலேயே மிகச்சிறப்பாக வீசியிருந்தார். 8 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த சீசனில் குறிப்பாக இந்த இரண்டாம் பாதியில் அட்டகாசமாக வீசி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தார். சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 125 ரன்களை டிஃபண்ட் செய்த போது 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். ஹோல்டரை க்ரீஸுக்குள் வைத்துக் கொண்டு 19-வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருந்தார். கொல்கத்தாவுக்கு எதிரான இந்த போட்டியிலும் 4 ஓவர்களை வீசி 32 ரன்களை கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷுப்மன் கில்லின் விக்கெட் விழுந்தது. ஷுப்மன் கில் முன்பெல்லாம் அதீத விக்கெட் ஜாக்கிரதையோடு ஒருநாள் போட்டி போல ஆடுவார். ஆனால், இந்த இரண்டாம் பாதி சீசனில் விக்கெட்டை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளுத்தெடுக்கிறார். அவர் அடிக்க தொடங்கும் போதே அவரின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தியது பஞ்சாபுக்கு சாதகமாக அமைந்தது.

முதல் பந்தை வெளியே எடுத்துவிட்டு இரண்டாவது பந்தை சிறிதாக மூவ் செய்து இன்கம்மிங் டெலிவரியாக அர்ஷ்தீப் வீசியிருப்பார். ஷுப்மன் கில்லின் பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் புகுந்து மிடில் ஸ்டம்ப் தெறித்தது.

டெத் ஓவரில் ஒரு ஸ்லோயர் ஒன்னில் ராணாவின் விக்கெட்டையும், இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஒரு யார்க்கரில் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். ஒரு டி20 பௌலருக்கு தேவையான அத்தனை வேரியேஷன்களையும் கச்சிதமாக வைத்திருக்கிறார் அர்ஷ்தீப் 'டி20 கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் குறிப்பிடத்தக்க வீரராக உயர்வார்' என மேத்யூ ஹைடனும் கமென்ட்ரியில் புகழ்ந்திருந்தார்.

கொல்கத்தா அணிக்கு இன்னொரு ஸ்பீட் ப்ரேக்காக அமைந்தது ரவி பிஷ்னோயின் ஓவர்கள். 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பொறுமையாக இன்னிங்ஸை கட்டமைத்துவிட்டு டெத் ஓவரில் அடித்து வெளுக்க தயாரான வெங்கடேஷ் ஐயர் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் முன் 15 வது ஓவரிலேயே ரவி பிஷ்னோய் அவரை வெளியேற்றியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரவி பிஷ்னோய்
ரவி பிஷ்னோய்
IPL

இதற்கு முன் ராகுல் திரிபாதியின் விக்கெட்டையுமே வீழ்த்தியிருந்தார். இரண்டுமே ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விக்கெட்டுகள். ரஷீத்கானை போன்றே ரவி பிஷ்னோயும் வீசுவதெல்லாமே கூக்ளிகள்தான். எல்லாமே 90 கிமீ வேகத்திற்கு மேலான பந்துகள்தான். சர்ப்ரைஸ் இல்லாவிட்டாலும் பேட்டர்களால் இவரை சமாளிக்க முடியவில்லை.

இந்த சீசனில் இரண்டே இரண்டு போட்டிகளில்தான் எக்கானமி ரேட் 6 -க்கும் அதிகமாக வீசியிருக்கிறார். மற்ற எல்லா போட்டிகளிலும் கட்டுக்கோப்பாக வீசியதோடு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.

விரைவில் லிமிட்டெட் ஓவர்களில் இந்திய அணியின் மெயின் ஸ்பின்னராக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் இருவரின் சிறப்பான ஸ்பெல் மற்றும் இவர்களுக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஷமியின் பந்துவீச்சால் கொல்கத்தா அணி ஆவரேஜ் ஸ்கோருக்கு சற்று கூடுதலாக மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாபுக்கு டார்கெட் 166. பஞ்சாப் அணியின் கேப்டனான ராகுலின் பொறுப்பான பேட்டிங்கும் தமிழக வீரரான ஷாரூக்கானின் அதிரடியான ஃபினிஷிங்குமே பஞ்சாபின் வெற்றிகரமான சேஸுக்கு காரணமாக அமைந்தது.

கே.எல்.ராகுல் ஒற்றை ஆளாக நின்று பேட்டிங்கில் கலக்கினாலும், ஆரஞ்ச் தொப்பியையே வென்றாலும் அவரின் பேட்டிங்கில் ஒரு குறை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அது ஸ்ட்ரைக் ரேட். கே.எல். ராகுல் வேண்டுமானால் 'Strike rate is overrated' என உதறித் தள்ளலாம். ஆனால், டி20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் முக்கியமானதே. கே.எல்.ராகுல் எவ்வளவு அதிக ரன்களை அடித்து கொடுத்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டை குறைவாகவே வைத்திருப்பார். இந்த சீசனில் இதுவரையிலான அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 130. கடந்த சீசனில் 14 போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 129. டீசன்ட்டான ஸ்ட்ரைக் ரேட் தானே? மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தெரியும். உள்ளே இறங்கி ஒவ்வொரு போட்டியாக அலசினால்தான் சங்கதி தெரியும். முக்கால்வாசி போட்டிகளில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 120-க்கும் கீழ்தான் இருக்கும். ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து வெளுத்திருப்பார். அதன்மூலம், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஸ்ட்ரைக் ரேட் டீசன்ட்டாக தெரிந்துவிடும்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்
Punjab Kings
இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடியிருக்கிறார். அதில் 8 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 120-க்கும் கீழ் இருக்கிறது. மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அதன்மூலம், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஸ்ட்ரைக் ரேட் 130 என டீசன்ட்டாக தெரிகிறது.

ராகுலை தவிர பெரிதாக யாரும் பெர்ஃபார்ம் செய்வதில்லை என்பதால் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் 17-18 ஓவர் வரை நின்று பொறுமையாக ஆடும் ராகுல் இன்னிங்ஸை சரியாக ஃபினிஷ் செய்து கொடுப்பதில் தடுமாறினார். கடைசி 2-3 ஓவர்களில் வந்தவுடனேயே பந்தை பறக்கவிடும் அளவுக்கு பஞ்சாபிடம் வீரர்கள் இல்லை.

நிக்கோலஸ் பூரன் மாதிரி ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் பெர்ஃபார்ம் செய்வதில்லை. இதுதான் பஞ்சாபின் பெரும்பாலான தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது. ராகுலின் பொறுமையான ஆட்டத்திற்கும் எந்த மதிப்பும் இல்லாமல் போனது. ஆனால், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக அப்படி நடக்கவில்லை. ராகுல் பொறுமையாகத்தான் ஆடினார். பெரும்பாலான நேரங்களில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் கீழ்தான் இருந்தது. கடைசியில் ஒன்றிரண்டு சிக்சர்களை அடித்து ஸ்ட்ரைக்ரேட்டை 120 ஆக உயர்த்தினார். ஆனால், வழக்கம்போல சரியாக ஃபினிஷ் செய்ய முடியாமல் கடைசி ஓவரில் 55 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 4 பந்துகளில் 4 ரன்கள்தான் வேண்டும். வழக்கமான இப்படியான சூழல்களில் பஞ்சாப் வீரர்கள் கடுமையாக சொதப்பி தோல்வியடைவார்கள். சோகத்தில் கன்னத்தில் கை வைத்து உட்காந்திருக்கும் கே.எல்.ராகுலை அத்தனை கேமராக்களும் ஃபோக்கஸ் செய்யும். ஆனால், நேற்று பஞ்சாப் வென்றது தமிழக வீரரான ஷாரூக்கான் சிக்சர் அடித்து சிறப்பான ஃபினிஷ் கொடுத்திருந்தார். 17-வது ஓவரில் இறங்கியவர் 9 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 22 ரன்களை அடித்து பஞ்சாபுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

ஷாரூக்கான்
ஷாரூக்கான்
IPL
இப்படியான ஒரு ஃபினிஷர் இல்லாமல்தான் இத்தனை நாளும் ராகுலின் கேப்டன் இன்னிங்ஸ்கள் விரயமாகிக் கொண்டிருந்தது. இப்போது ஷாரூக்கான் கிடைத்திருக்கிறார். இவரை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டியது பஞ்சாபின் கடமை.

பஞ்சாப் இந்த போட்டியை வென்றிருப்பதன் மூலம் கொல்கத்தா, பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கிடையே ஃப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறுவதற்கான போட்டி இன்னும் கடுமையாகியுள்ளது. இனிதான் ஆட்டமே ஆரம்பம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு