Published:Updated:

பஞ்சாபுன்னு பாவமா பார்த்தீங்களா... இது வேறமாதிரி கம்பேக் மக்களே! #KXIPvDC

#KXIPvDC
#KXIPvDC

கடந்த வாரம் வரை டேபிளின் அடியில் தவழ்ந்து கொண்டிருந்தவர்கள் ஒரே வாரத்தில் பெங்களூரு, மும்பை, டெல்லி என டேபிள் டாப்பர்களை அடுத்தடுத்து தோற்கடித்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'அட பாவம்பா' என உச்சிக்கொட்டியவர்களைப் பார்த்து இன்று 'பல்லே பல்லே' என உற்சாக ஆட்டம் ஆடுகிறது பஞ்சாப். கடந்தவாரம் வரை டேபிளின் அடியில் தவழ்ந்துகொண்டிருந்தவர்கள் ஒரே வாரத்தில் பெங்களூரு, மும்பை, டெல்லி என டேபிள் டாப்பர்களை அடுத்தடுத்து தோற்கடித்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள். சென்னை ரசிகர்கள் சிஎஸ்கே-வின் கம்பேக்கை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் கேஎல் ராகுல் - அணில் கும்ப்ளே கூட்டணி செம ஸ்பார்க்கோடு 'திரும்ப வந்துட்டேன்'னு சொல்லு என அட்டகாச கம்பேக் கொடுத்திருக்கிறது.


துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் முதல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். ரிஷப் பன்ட் அணிக்குள் மீண்டும் வந்ததால் அலெக்ஸ் கேரி நீக்கப்பட்டார். நார்க்கியாவுக்கு பதில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸ், ரஹானேவுக்கு பதில் ஹெட்மெயர் என மூன்று மாற்றங்களை செய்திருந்தது டெல்லி. பஞ்சாப் கிறிஸ் ஜோர்டனுக்கு பதிலாக நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷத்தை அணிக்குள் கோண்டுவந்திருந்தது.

Shikhar Dhawan
Shikhar Dhawan

நிதானமின்மை பிரச்னையால் தொடர்ந்து தள்ளாடும் பிரித்வி ஷா நேற்றும் ஏமாற்றினார். ஆட்டத்தின் நான்காவது ஓவர், நீஷத்தின் முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா 7 ரன்களில் அவுட். ஆனால், கடந்த போட்டியில் சென்சுரி அடித்து ஃபுல் ஃபார்முக்குத் திரும்பியிருக்கும் தவான், இந்தமுறை ஆரம்பத்தில் இருந்தே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். பவர்ப்ளேவின் முடிவில் 53 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது டெல்லி.

28 பந்துகளில் 50 ரன்கள் அடித்து செம ஃபார்மில் போய்க்கொண்டிருந்தார் தவான். தவான் 50 ரன்களைக் கடந்த அடுத்தப் பந்தில் முருகன் அஷ்வின் ஷ்ரேயாஸின் விக்கெட்டை எடுத்தார். ஷ்ரேயாஸ் 14 ரன்களில் அவுட். பன்ட் வந்தார். அவருடைய வழக்கமான ஆட்டத்தை அவரால் ஆடமுடியவில்லை. 20 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து ஸ்டாய்னிஸ் 9 ரன்களில் அவுட். ஆனால், ஒருபக்கம் விக்கெட்கள் விழுந்துகொண்டேயிருந்தாலும் தவானின் அட்டகாச ஆட்டம் தொடர்ந்து. சென்னைக்கு எதிராக சென்சுரி அடித்திருந்த தவான், நேற்று பஞ்சாபுக்கு எதிராகவும் அடுத்த சென்சுரியை அடித்தார். சென்னை தவானின் பல கேட்ச் வாய்ப்புகளைவிட்டது. ஆனால், பஞ்சாபுக்கு எதிராக அதிர்ஷ்டங்களின் துணையில்லாமல் அழகாக ஆடி சதம் அடித்தார் தவான். 57 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரின் கடைசிப்பந்தில் ஹெட்மெயர் 10 ரன்களில் அவுட் ஆக, தவான் இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக 106 ரன்கள் அடித்திருந்தார். டெல்லி 165 ரன்கள் டார்கெட்டை பஞ்சாபுக்கு கொடுத்தது. தவானுக்கு இன்னொரு பேட்ஸ்மேன் கைகொடுத்திருந்தால் டெல்லியின் ஸ்கோர் நிச்சயம் 180 ரன்களைத் தாண்டியிருக்கும். ஆனாலும், பெளலிங்கில் பலம் அதிகம் என்பதால் 164 ரன்களே போதுமானது என்கிற தைரியத்துடன் பெளலிங்கைத் தொடங்கியது டெல்லி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#KXIPvDC
#KXIPvDC

2020 ஐபிஎல்-ன் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், அக்ஸர் பட்டேலின் ஆஃப் ஸ்பின்னில் வீழ்ந்தார். 15 ரன்களில் ராகுல் அவுட் ஆக, கிறிஸ் கெய்ல் வந்தார். கெய்லின் விக்கெட்களை அதிகமுறை வீழ்த்தியவர் அஷ்வின்தான் என்பதால் அடுத்த ஓவருக்கு அஷ்வினைக் கொண்டுவருவார் என எதிர்பார்த்தால், ஷ்ரேயாஸ் ஏமாற்றினார். சாம்ஸ், தேஷ்பாண்டே என வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்தடுத்த ஓவர்களைக் கொடுக்க, இதில் தேஷ்பாண்டேவின் ஓவரை அடித்து வெளுத்தார் கெய்ல். பவுண்டரி, பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி, சிக்ஸர் என முதல் ஐந்து பந்துகளில் மட்டும் 24 ரன்கள். கெய்ல் மிரட்ட, தன்னுடைய முடிவு தவறு எனப்புரிந்துகொண்டு அடுத்த ஓவரில் அஷ்வினைக் கொண்டுவந்தார் ஷ்ரேயாஸ். இரண்டாவது பாலிலேயே கெய்ல் போல்ட். 13 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தார் கெய்ல். அடுத்த சில பந்துகளிலேயே மயாங்க் அகர்வால் ரன் அவுட் ஆக பஞ்சாப் சரிய ஆரம்பிப்பதுபோல் தோன்றியது. ஆனால், நிக்கோலஸ் பூரன் டெல்லி பெளலர்களை ஒற்றையாளாக சமாளித்தார்.

துஷார் தேஷ்பாண்டேவுக்கு சோதனைகள் தொடர்ந்தன. முதல் ஓவரில் கெய்ல் அடித்து வெளுக்க, இரண்டாவது ஓவரில் பூரன் ராக்கெட்களைவிட ஆரம்பித்தார். அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்க, இந்த ஓவரிலும் 15 ரன்கள் கொடுத்தார் தேஷ்பாண்டே. 10 ஓவர்களின் முடிவில் 100 ரன்களைத்தாண்டிவிட்டது பஞ்சாப். இதனால் அடுத்த 60 பந்துகளில் 64 ரன்கள்தான் டார்கெட் என்பதால் பிரஷர் இல்லாமல் ஆடினார்கள்.

ரபாடா வந்துதான் பூரனின் விக்கெட்டைத்தூக்கினார். 28 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அவுட் ஆனார் பூரன். 40 ரன்கள்தான் தேவை என்கிற நிலையில் ஜிம்மி நீஷத்தை இறக்காமல், தீபக் ஹூடாவை இறக்கியது பஞ்சாப். ஹூடா தடுமாறிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் சுமாரான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல் 32 ரன்களில் அவுட் ஆனார். நீஷம் வந்தார். டேனியல் சாம்ஸின் 19வது ஓவரின் கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்து பஞ்சாபின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்துவைத்தார் நீஷம்.

#KXIPvDC
#KXIPvDC

டெல்லியை வீழ்த்த 5 பேட்ஸ்மேன், 2 பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் என 7 பேட்ஸ்மேன்களோடு களமிறங்கியிருந்தது பஞ்சாப். ''ஜிம்மி நீஷம், ஏழாவது பேட்ஸ்மேனாக விளையாடவேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதில் கிறிஸ் ஜோர்டன் விளையாடியிருந்தால் அது பெளலிங்கில் உதவியாக இருந்திருக்கும்'' என்கிற விமர்சனங்களை உடைத்து வெற்றிபெற்றிருக்கிறது பஞ்சாப்.

தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருக்கும் பஞ்சாப், சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளை முந்தி 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறது. அடுத்தடுத்தப் போட்டிகளில் பஞ்சாபின் வெற்றி தொடர்ந்தால், டேபிள் டாப்பராகவும் அவர்கள் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு