Published:Updated:

IPL 2021 : தோனியுடன் கலாய்... அஷ்வினுக்கு அட்வைஸ்...கேப்டனாக ரிஷப் பன்ட் எப்படி?!

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

ஷ்ரேயாஸ் பதற்றத்தை டாஸிலேயே வெளிக்காட்டி விடுவார். அம்பயர் சொல்வதற்குள்ளேயே டாஸ் காயினை பறக்கவிடுவது, ப்ளேயிங் லெவனை மறந்து திறுதிறுவென்று முழிப்பது என ஷ்ரேயாஸ் டாஸிலேயே தன் மீதான அழுத்தங்களை வெளிக்காட்டிவிடுவார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியையே வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ரிஷப் பன்ட். ஆனால், அணியின் வெற்றி மட்டுமே வைத்து ஒரு வீரரை சிறந்த கேப்டன் என கூறிவிடமுடியாது. கேப்டனாக இருக்கிற வீரர் ஒரு தனித்த ஆளுமைத்திறனையும் சமயோஜித புத்தியையும் வெளிக்காட்டியாக வேண்டும். அந்தவகையில், டெல்லி அணியின் வெற்றி என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு ரிஷப் பன்ட் ஒரு கேப்டனாக நேற்றைய போட்டியில் எப்படி செயல்பட்டார் என்பதை மட்டும் பார்ப்போம்.

ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியதால்தான் ரிஷப் பன்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷ்ரேயாஸைப் பொறுத்தவரைக்கும் கேப்டன்சியில் எப்போதுமே ஒருவித பதற்றத்துடனே இருப்பார். அந்த பதற்றத்தை டாஸிலேயே பல போட்டிகளில் வெளிக்காண்பித்து விடுவார். அம்பயர் சொல்வதற்குள்ளேயே டாஸ் காயினை பறக்கவிடுவது, பதற்றத்தில் ப்ளேயிங் லெவனை மறந்து திறுதிறுவென்று முழிப்பது என ஷ்ரேயாஸ் டாஸிலேயே தன் மீதான அழுத்தங்களை வெளிக்காட்டி நான் பதற்றத்துடனேயே இருக்கிறேன் என்பதை எதிரணியின் கேப்டனுக்கு அறிவித்துவிடுவார்.

அப்படியொரு பதற்றமான கேப்டனை ரீப்ளேஸ் செய்வதால், ரிஷப் பன்ட் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்பதை டாஸிலிருந்தே கவனிக்கத் தொடங்கினேன். டாஸ் போடுவதற்கு முன்பாக செம கூலாக தோனியுடன் பேசிக்கொண்டிருந்தார் ரிஷப். 'தம்பி....கேப்டன்சியெல்லாம் சூதானமா நடந்துக்கனும். இதுக்கு பேருதான் டாஸ் காய்னு அண்ணன் இத தூக்கிப் போட்ட உடன பூவா, தலையான்னு சொல்லணும்' என தோனி க்ளாஸ் எடுக்க 'அப்டியாண்ணே....சரிண்ணே...சரிண்ணே' என ரிஷப் சொல்வதைப்போல இருவரும் ஜாலியாக டாஸ் காயினை வைத்து பேசிக் கொண்டிருந்தனர்.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

டாஸில் ரிஷப் பன்ட்டே வென்றார். டாஸை வென்றுவிட்டு ரிஷப் பன்ட் பேசும்போது அசால்ட்டான உடல் மொழியோடு 'நீங்க கூல் கேப்டன்னா... நா சூப்பர் கூல் கேப்டன்' என்கிற தொனியிலேயே பேசினார். ''விக்கெட் சாஃப்டாக இருப்பதால் முதலில் பந்துவீசப் போகிறோம்'' என்றார் பன்ட். அடுத்ததாக மைக் தோனி பக்கம் போக, 'நாங்களும் அதே காரணத்துக்காகதான் பந்துவீச நினைத்தோம்' எனக்கூற டாஸிலேயே சரியான முடிவை எந்தவித பதற்றமும் இல்லாமல் எடுத்து தேர்ச்சிப் பெற்றார் பன்ட்.

கடந்த சீசனில் 52 விக்கெட்டுகள் எடுத்திருந்த ரபாடாவும் நார்க்கியாவும் இந்தப் போட்டியில் ஆடவில்லை என்பதுதாம் டெல்லிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. அவர்கள் இல்லாமல் சென்னை அணியை ரிஷப் பன்ட் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

ஆனால், பவர்ப்ளேவில் க்றிஸ் வோக்ஸையும் ஆவேஷ் கானையும் வைத்து சிறப்பாக சமாளித்தார் ரிஷப். இவர்கள் வீசிய முதல் நான்கு ஓவர்களில் டுப்ளெஸ்சி, ருத்துராஜ் கெய்க்வாட் என சென்னை அணியின் இரண்டு ஓப்பனர்களும் அவுட் ஆகினர். பவர்ப்ளேவில் ஸ்லிப் வைத்து அட்டாக் செய்வது போன்ற அடிப்படை விஷயங்களையும் ரிஷப் பன்ட் சரியாக செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்பர்-3 ல் மொயின் அலி அடுத்து ரெய்னா என இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்களை தொடர்ந்து இறக்கி தோனி சர்ப்ரைஸ் கொடுக்க, சரியாக ஆஃப் ஸ்பின்னரான அஷ்வினை அழைத்து வந்து வீச வைத்தார் பன்ட். அஷ்வின் அடிவாங்கியிருந்தாலும் இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது ஒரு ஆஃப் ஸ்பின்னரை அறிமுகப்படுத்திய அந்த மூவ் சரியானதே.

கே.எல்.ராகுல் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக முதல் முறையாக கேப்டன் ஆகியிருந்தார். கேப்டன்சிக்கான குணாதிசயங்களை உணர்வதற்கே அவர் நிறைய போட்டிகள் எடுத்துக்கொண்டார். ராகுல் திவேதியா காட்ரெலின் ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டிருப்பார். அந்த ஓவரில் ஒரு முறை கூட கேப்டனாக ராகுல் காட்ரெலிடம் சென்று பேசியிருக்கமாட்டார். ஒரு பேட்ஸ்மேன் அடித்து நொறுக்கும்போது பௌலரிடம் சென்று கேப்டன் பேசுவது என்பது அடிப்படை. குறைந்தபட்சம் அடுத்த பந்தை தாமதப்படுத்துவதன் மூலம் பேட்ஸ்மேனின் மொமன்ட்டமையாவது குலைக்க முடியும். இதை நேற்று ரிஷப் பன்ட் சரியாக செய்திருந்தார்.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

அஷ்வினின் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை மொயின் அலி அடித்தவுடனேயே அஷ்வினிடம் சென்று பேசிவிட்டு வருவார் ரிஷப் பன்ட். அடுத்த பந்தே விக்கெட் விழுந்தது. இதுதான் ஆளுமைத் திறனுக்கான ஒரு உதாரணம். சீனியர் வீரர் 'அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை' என ஒரு கேப்டன் கைக்கட்டி நின்று வேடிக்கைப் பார்க்க முடியாது. அமித் மிஷ்ரா அடிபடும்போதும் தொடர்ந்து அவருடன் சென்று பேசிக்கொண்டே இருந்தார். இந்த ஒருவிஷயத்திலேயே கேப்டனாக ரிஷப் ஈர்த்துவிட்டார்.

ஒரு புது பேட்ஸ்மேன் க்ரீஸுக்குள் வந்தால் அவர் செட்டில் ஆவதற்குள் விக்கெட் எடுத்துவிட வேண்டும் என்பதற்காக, ஸ்லிப் வைத்து அக்ரஸிவ்வாக அட்டாக் செய்ததையெல்லாம் முதல் போட்டியிலேயே ரிஷப் பன்ட்டிடம் எதிர்பார்க்கவில்லை. சின்னச்சின்ன விஷயங்களையும் சிறப்பாக செய்திருந்தார்.

டெத் ஓவர்களில் மட்டும் கொஞ்சம் சொதப்பியிருந்தார். சாம் கரணின் பலம்-பலவீனம் டாம் கரணுக்கு தெரியும் என நினைத்து 19-வது ஓவரை அவரிடம் கொடுத்திருக்கலாம். அந்த ஓவரை சாம் கரண் வெளுத்துவிட்டார். க்றிஸ் வோக்ஸ் சிறப்பாகவே வீசியிருந்த போதும் 3 ஓவர் மட்டுமே வீசியிருந்தார். அவருக்கு முழுவதுமாக நான்கு ஓவரை கொடுத்திருக்கலாம். க்றிஸ் வோக்ஸ், ஆவேஷ் கான் இருவரும் கடைசி 4 ஓவர்களை வீசியிருந்தால் சென்னை அணியை இன்னுமே கூட கட்டுப்படுத்தியிருக்கலாம். ரிஷப் பன்ட் சறுக்கிய இடம் இது மட்டுமே.

ரெய்னா -  ரிஷப்
ரெய்னா - ரிஷப்

ரிஷப் பன்ட் கேப்டன் ஆனதாலோ என்னவோ ப்ரித்வி ஷா, தவான் இருவருமே வழக்கத்தை விட அதிரடியாக வெளுத்துக் கட்டிவிட்டார்கள். ஷர்துல் தாக்கூர் வீசிய 19- வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்து, கேப்டனாக தனது முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டார் பன்ட்.

போட்டி முடிந்தவுடன் சென்னை அணியின் வீரர்களே ரிஷப் பன்ட்டுக்கு ஒரு சேர வாழ்த்துக்கூறி பெவிலியனுக்கு வழியனுப்பினர்.

தோனி போன்ற சீனியர் வீரருக்கு எதிராக, முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் அளுமையாக்ச் ரிஷப் பன்ட் அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிபெறச் செய்தது பாராட்டுக்குரியது. இது அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர வேண்டும்.

மைக்கை நீட்டும் போதெல்லாம் ரிஷப் பன்ட் 'என் குருநாதரே அவருதாங்க...' என தோனியை கைக்காட்டி விடுவதால், 'பச்சக் குழந்தையினு பாலுட்டி வளர்த்தேன்.....' என சோக மியுசிக் வாசித்தபடி வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த ஃபீலிங்கில் இருக்கின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

யார்ரா அவன் எப்டி பார்த்தாலும் நம்ம பையடா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு