Published:Updated:

IPL-ல் என்னதான் நடக்கிறது? நான்காவது இடத்துக்கான போட்டியில் 4 அணிகள்... யார் உள்ளே, யார் வெளியே?!

ipl
News
ipl

கடைசி ஐந்து ஓவர்களில் ராஜஸ்தான் எடுத்தது வெறும் 19 ரன்கள்தான். மொத்தமாய் 90/9. ஐபிஎல் வரலாற்றில் இருபது ஓவர்கள் பேட்டிங் செய்த அணி எடுத்த இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது. பேட்டிங் செய்த 11 பேரில் 7 பேர் சிங்கிள் டிஜிட்.

இன்னும் சொற்ப ஆட்டங்களே இருக்கின்றன. ஆனாலும் எட்டாவது இடம் தவிர மீதி எந்த இடமும் உறுதியாகாத த்ரில்லை தொடர்ந்து கொடுத்து வருகிறது இந்த 2021 ஐபிஎல் சீசன். அதுவும் டிஃபெண்டிங் சாம்பியன் மும்பைக்கு இது மானப் பிரச்னை. ஆனாலும் அவர்களின் எஸ்.டி.டியைப் பொறுத்தவரை இப்படி ஒரு சீசன் நன்றாக ஆடினால் மற்றொரு சீசன் தத்தளிப்பது வழக்கமான ஒன்றுதான். மறுபக்கம் முதல் சீசனில் வசந்தம் வீசியதோடு சரி, இன்னமும் ஃபைனலை எட்டிக்கூட பார்க்கவில்லை ராஜஸ்தான்.

இந்த முறை ப்ளே ஆஃப்புக்குள் நுழைய இரு அணிகளுக்குமே இது மிக முக்கியமான ஆட்டம். மும்பையில் குவின்டன் டி காக்கிற்கு பதில் இஷான் கிஷன், க்ருணாலுக்கு பதிலாக ஜிம்மி நீஷம். ராஜஸ்தானில் மார்க்கண்டேவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் கோபால், ஆகாஷ் சிங்கிற்குப் பதிலாக குல்தீப் யாதவ். ராஜஸ்தானும் இடதுகை பந்துவீச்சாளர்களும் விஜய் சேதுபதியும் புதுப்படங்களும் போல. புதிது புதிதாய் ரிலீஸ் செய்துகொண்டே இருப்பார்கள்.

RR v MI | IPL 2021
RR v MI | IPL 2021

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டாஸ் ஜெயித்த மும்பை, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் மூன்று ஓவர்களில் டிபிக்கல் அதிரடி ஆட்டம்தான் ஆடியது ராஜஸ்தான். இதற்கு முன் ஆடிய ஆட்டங்கள் எல்லாமே ஸ்லோ பிட்ச்தான் என்பதால் இந்தமுறையும் 140 வந்தாலே ஆச்சர்யம் என நினைத்த வேளையில் மூன்று ஓவர்களில் 26 ரன்கள். சரி, மும்பைக்கு சிக்கல்தான் என நினைத்த நேரத்தில் ஈஸி கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜெய்ஸ்வால். ஐந்தாவது ஓவரில் அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்த லூயிஸும் கிளம்ப வழக்கம்போல பொறுப்பு சாம்சன் தலைமேல் விழுந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராஜஸ்தானுக்கு ஒரு ராசியுண்டு. எல்லா பேட்ஸ்மேன்களும் சொதப்பும் ஆட்டத்தில் சாம்சன் ஜொலிப்பார். சாம்சன் சீக்கிரமே வெளியேறும் ஆட்டத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் வெளுப்பார்கள். ஆனால், பாவம் இந்த ஆட்டத்தில் இரண்டுமே நடக்கவில்லை. கறிக்கஞ்சி விருந்தில் சட் சட்டென ஆளை எழுப்பிவிடுவது போல வந்த வேகத்தில் போய்க்கொண்டே இருந்தார்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள். ஓவருக்கு ஒரு விக்கெட் எடுத்து நெட் ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்தார்கள் மும்பை பௌலர்கள். ஓரளவு தாக்குப் பிடித்ததே திவேதியாவும் மில்லரும்தான். அதுவும் ஆஹா ஓஹோ பார்ட்னர்ஷிப் எல்லாம் இல்லை. 32 பந்துகளில் 21 ரன்கள். அந்த பார்ட்னர்ஷிப் உடையும்போது ராஜஸ்தானின் ஸ்கோர் 71/6. அதற்குள் 15 ஓவர்கள் முடிந்திருந்தது. பின்னாடியே மில்லரும் நடையைக் கட்ட டெயில் எண்டர்கள் உருட்டி உருட்டி ஆல் அவுட்டாகாமல் சிங்கிள் சேர்த்தார்கள்.

RR v MI | IPL 2021
RR v MI | IPL 2021
கடைசி ஐந்து ஓவர்களில் ராஜஸ்தான் எடுத்தது வெறும் 19 ரன்கள்தான். மொத்தமாய் 90/9. ஐபிஎல் வரலாற்றில் இருபது ஓவர்கள் பேட்டிங் செய்த அணி எடுத்த இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது. பேட்டிங் செய்த 11 பேரில் 7 பேர் சிங்கிள் டிஜிட். மும்பை கொடுத்த எக்ஸ்ட்ராக்களே நான்கு பேட்ஸ்மேன்களின் ஸ்கோரைவிட அதிகம். குல்டர் நைலுக்கு மட்டும் நான்கு விக்கெட்கள்.

தக்காளித் தொக்கு போல ஒரு டார்கெட். அடித்து விரட்டி எடுத்தால் ரன்ரேட்டும் கூடும். ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தடுக்கலாம். சாதாரணமாக மும்பைக்கு இது சுலபமான வேலைதான். ஆனால் இந்த சீசனில் மும்பை ஆடும் தினுசே புரியாத புதிராக இருப்பதால் கொஞ்சம் பயத்தோடுதான் இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் ஒரு முடிவோடு இறங்கியதைப் போல களம் கண்டார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். முதல் ஓவரிலேயே 14 ரன்கள். ஐந்து ஓவர்களில் 48 ரன்கள். நடுவே கேப்டன் ரோஹித் வெளியேறியதைப் பற்றியெல்லாம் கவலையேபடாமல் வெளுத்தார் இஷான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த ஓவரிலேயே சூர்யா கிளம்ப, ஹர்திக் வந்தார். 'நீ சும்மா வேடிக்கை மட்டும் பாரு' என அவருக்கும் சேர்த்து நொறுக்கினார் இஷான். சக்காரியா வீசிய எட்டாவது ஓவரில் மட்டும் 24 ரன்கள். சட்டென அந்த ஓவரில் டிவியை ஆன் செய்து மேட்ச் பார்க்க வந்தவர்களுக்கு, 'அடேங்கப்பா எட்டாவது ஓவரிலேயே இந்த அடி அடிக்கிறாங்கன்னா டார்கெட் ஒரு முன்னூறு இருக்கும் போலயே' எனத் தோன்றிருக்கும். ஆனால், நிஜத்தில் அடுத்த இரண்டே பந்துகளில் மேட்ச் முடிந்தது. கிட்டத்தட்ட ஹாட்ஸ்டார் ஹைலைட்ஸ் நீளம்தான் மொத்த மேட்ச்சும். 25 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார் இஷான் கிஷன். அதைப் பார்க்க மும்பை ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் கண்ணிலும் நிம்மதி தெரிந்தது. குல்டர் நைல்தான் ஆட்டநாயகன்.

RR v MI | IPL 2021
RR v MI | IPL 2021

மும்பை ப்ளே ஆஃப்புக்குள் செல்வது இன்னமும் உறுதியாகவில்லைதான். கொல்கத்தா அடுத்த ஆட்டத்தில் இதே ராஜஸ்தானோடு தோற்கவேண்டும். ஒருவேளை ராஜஸ்தான் அந்த ஆட்டத்தில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் (120 ரன்களுக்குக் குறையாமல்) வென்று, மும்பை கடைசி ஆட்டத்தில் தோற்றால் ராஜஸ்தானுக்குமே வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் சென்னையோடு கடைசி ஆட்டத்தில் மோதும் பஞ்சாப் மிகப்பெரிய வெற்றி பெற்றால் பஞ்சாப்பும் 12 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப்புக்குத் தகுதி பெற வாய்ப்பிருக்கிறது.

தொடரின் இரண்டாம்பாதியில் எப்போதும் கம்பேக் கொடுக்கும் மும்பையை இந்த அணிகள் எளிதில் எடைபோடாது. மற்றபடி சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகளோ, 'எல்லாப் பயலும் படியிலேயே நிக்கிறான். எவனாவது உள்ள ஏறி வர்றானா பாரு' என எட்டிப்பார்க்கும் கண்டக்டர் வடிவேலு மோடில்தான் தொடரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.