Published:Updated:

CSK v SRH: தோனியின் கேப்டன்ஸி... மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பிய சென்னை!

Chennai super kings ( IPL )

"இந்த மஞ்சள் நிற ஆடை இல்லையென்றால், வேறு மஞ்சள் நிற ஆடையில் இருக்கப்போகிறேன்"

CSK v SRH: தோனியின் கேப்டன்ஸி... மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பிய சென்னை!

"இந்த மஞ்சள் நிற ஆடை இல்லையென்றால், வேறு மஞ்சள் நிற ஆடையில் இருக்கப்போகிறேன்"

Published:Updated:
Chennai super kings ( IPL )

நிழல் கேப்டனில் இருந்து மீண்டும் நிஜ கேப்டனாக மாறியிருக்கிறார் தோனி, விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறில் தோற்று இருப்பதால், ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் கேப்டன் பதவி தோனிக்குச் சென்றிருக்கிறது. அணியின் நலனைக் கருத்தில்கொண்டு என்று சொல்லப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி கேப்டன் பதவியில் விலகியபோது கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அர்ஜுனருக்கு கிருஷ்ணர் போல, ஃபீல்டிங் செட் செய்வதில் பல விஷயங்களில் தோனிதான் ஆலோசனை, முடிவு எல்லாம் எடுத்துக்கொண்டிருப்பார். வெற்றி பெற்றால் தோனிக்குப் புகழுரையும், அது க்ளிக் ஆகவில்லை என்றால் கோலிக்கு வசவுச் சொற்களும் பரிசாகக் கிடைக்கும். இந்த சீசனிலும் பல சமயங்களில் தோனிதான் முடிவெடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், தோல்விக்கான பலிகடாவாக ஜடேஜா முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். எது எப்படியோ பாகுபலி இருக்கும் வரையில் அவன் தான் அரசன் என்பது போலத்தான் சென்னை அணிக்கு தோனியும். நரைகூடி கிழப் பருவமெய்தி சென்னை அணிக்கான ஏலத்தில் வீரர்களை எடுக்கும் சமயம் வந்தாலும், தோனிதான் சென்னை அணியின் கேப்டனாக இருப்பார். நிரந்தர பொதுச் செயலாளர் போல, நிரந்தர கேப்டன் தோனி. அதற்கேற்ப முதல் போட்டியிலேயே வென்றும்விட்டார்.

Dhoni
Dhoni
IPL

நேற்றைய இரண்டு போட்டிகளிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விழுந்த மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர் ஷர்துல் தாகூர் மட்டுமே. அதே போல் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் விழுந்த இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியவர் நடராஜன்தான். சரி இரண்டாவது போட்டியில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்த சீசனில் கேன் வில்லியம்சன் போட்டிகளில் வெல்கிறாரோ இல்லையோ டாஸில் அநாயசமாக வெல்கிறார். டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் சேஸ் செய்ய தீர்மானித்தார். அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாடுவீர்களா என டேனி மோரிசன் கேட்டதற்கு, " இந்த மஞ்சள் நிற ஆடை இல்லையென்றால், வேறு மஞ்சள் நிற ஆடையில் இருக்கப்போகிறேன்( நிர்வாகப் பொறுப்பு) " என்றார் தோனி. பிராவோவுக்குப் பதிலாக டெத் பௌலர் சிமர்ஜீத் சிங் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், நான்கு வெளிநாட்டு வீரர்கள் என்னும் லாஜிக்கில் ஷிவம் டூபேவுக்குப் பதிலாக புது மாப்பிள்ளை கான்வே உள்ளே வந்தார். ஐதராபாத் அணியில் யாதொரு மாற்றமும் இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் XI : ருத்ராஜ் கெய்க்வாட், கான்வே, தோனி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, ஜடேஜா, சிமர்ஜீத் சிங், மஹீஷ் தீக்சனா, முகேஷ் சௌத்ரி, மிச்சல் சாண்ட்னர், பிரிட்டோரியஸ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் XI : கேன் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி , நிக்கோலஸ் பூரன், மர்க்ரம், சஷாங்க் சிங், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜேன்சன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார்
ruthraj , conway
ruthraj , conway
IPL

கான்வேயும் ருத்ராஜ் கெய்க்வாட்டும் ஓப்பனிங் இறங்கினார்கள். என்ன ஓப்பனிங் கூட்டணியே மாறுபடுகிறது என யோசித்துக்கொண்டிருக்கையில், இருவரும் மெதுவாகவே ஆடத் தொடங்கினார். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தார்கள். ருத்ராஜ் ஜேன்சன் பந்தில் ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸும், லாங் லெக்கில் ஒரு சிக்ஸும் அடித்தார். மூன்று அடி வாங்கிவிட்டு திருப்பி அடிக்கும் எம்ஜிஆர் என நினைத்திருந்தால், இந்த சீசனில் எட்டு அடி வாங்கிவிட்டு ஒன்பதாவது போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் ருத்ராஜ் கெய்க்வாட்.

வேகமாக பந்துவீசி இந்த சீசனில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் உம்ரான் மாலிக். ஒரு காலத்தில் இப்படித்தான் வருண் ஆரோனும் வீசிக்கொண்டிருந்தார் என்றாலும், உம்ரான் மாலிக்கிடம் துள்ளியம் இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால், அவர் வீசிய பந்துகளை ஜஸ்ட் லைக் தட் டீல் செய்தார் ருத்ராஜ். எவ்வளவு வேகமாக வந்தாலும், பந்துகள் இருக்க வேண்டிய இடம் பௌண்டரி லைன் என்பதில் தீர்மானமாக இருந்தார். அவுட்சைட் ஆஃபில் வீசப்பட்ட பந்தை கவர் பக்கம் பௌண்டரிக்கு அனுப்ப, அடுத்து வந்த லெந்த் பாலை லாங் ஆனில் சிக்ஸருக்கு விளாசினார். இந்தப் போட்டியில் வென்றால்தான் அடுத்த போட்டிகளில் கொஞ்சமேனும் சுவாரஸ்யம் இருக்கும் என்பதை உணர்ந்த கான்வேயும் அடித்து ஆடத் தொடங்கினார். மர்க்ரம் பந்தில் பௌண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார். உம்ரான் மாலிக் வீசிய இரண்டாவது ஓவரிலும் இரண்டு பௌண்டரி அடித்து தன் அரை சதத்தை நிறைவு செய்தார் ருத்ராஜ்.

ருத்ராஜ்
ருத்ராஜ்
IPL

உம்ரான் மாலிக்கைப் போல மர்க்கரத்தையும் டார்கெட் செய்து ஆடினார் ருத்ராஜ். 90 மீட்டரில் லாங் ஆனில் ஒரு சிக்ஸ், அடுத்து பந்திலேயே ஸ்வீப் அடித்து லாங் ஆனில் இன்னொரு சிக்ஸ் என மின்னல் வேகத்தில் ருத்ராஜின் ஸ்கோர் உயர்ந்து கொண்டிருந்தது. நான்காவது ஓவரில் ருத்ராக் அடித்த பந்தை தடுக்க நினைத்து, கைகளில் காயம் பட்டு வெளியேற வாஷிங்டன் சுந்தர் ஐதராபாத்துக்குப் பாதமாகவும், சென்னைக்கு சாதகமாகவும் அமைந்தார். ஓவருக்கு பத்து ரன்கள் குறையாமல் கொடுத்த மர்க்ரத்தை மூன்றாவது ஓவர் வீச வைத்தால், அதிலோ 15 ரன்கள் சென்றது. மர்க்ரம் என்றில்லை யாராக இருந்தாலும் இன்று அடித்துவிடுவது என்கிற பீஸ்ட் மோடில் இருந்தார் ருத்ராஜ். அதனாலேயே , இந்த சீசனில் அனைவரையும் நடுங்க வைத்த மாலிக்கால் இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. மாலிக் வீசிய மூன்றாவது ஓவரில் 17 ரன்கள் போனது. ஜேன்சனின் ஓவரில் கான்வேயும் பீஸ்ட் மோடுக்கு மாறினார். ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார். பின்னர் அதே ஓவரில் ஒரு பௌண்டரி, மீண்டும் ஒரு சிக்ஸ். சென்னை 15வது ஓவரில் 150 ரன்களை எளிதாகக் கடந்தது.

புவியைத் தவிர எல்லோரின் ஓவரிலும் ரன்கள் எக்கச்சக்கமாய் குவிந்தது. நான்கு ஓவர்களில் வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சேஃப் ஜோனி ஸ்பெல்லை முடித்துக்கொண்டார் புவி. நட்டு வீசிய பந்தை சரியாக கனெக்ட் செய்யாததால், பேக்வர்டு பாயிண்டில் நின்று கொண்டிருந்த புவியிடம் எளிதாகக் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ருத்ராஜ். 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ருத்து. இந்த சீசனில் அதிகபட்ச ஓப்பனிங் பார்னர்ஷிப் இதுதான். ஒன் டவுனில் எல்லோரையும் முடிந்திக்கொண்டு தோனி உள்ளே வந்தார். சரி இதெல்லாம் தோனி வழக்கமாக செய்வதுதான் என்பதால் வழக்கம்போல அதை ஜாலியாக டீல் செய்ய வேண்டியதாகிவிட்டது. ஆனால், நடராஜ் வீசிய பந்தை அடிக்க முயன்று ஃபைன் லெக்கில் இருந்த உம்ரான் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களுக்கு வெளியேறினார். இன்னும் இருபது ரன்கள் தோனி சேர்த்து அடித்திருந்தாலும் , ருத்ராஜின் 99ஐவிட அது அணிக்கு எவ்வளவு முக்கியமானது என பேச்சு எழுந்திருக்கலாம் என்பதாலோ என்னவோ, தோனி விரைவாகவே அவுட்டாகிவிட்டார். கடைசி ஓவரில் இரண்டு பௌண்டரி அடித்து, சென்னை அணியின் ஸ்கோரை 202 ஆக்கினார் கான்வே. 55 பந்துகளில் 85 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் கான்வே. 2 விக்கெட் இழப்புக்கு 202 என்பதால் `காத்துவாக்குல் ரெண்டு காதல்' பட ப்ரோமோஷன் போல இருந்தது சென்னையின் ஸ்கோர்.

Williamson
Williamson
IPL

கடினமான இலக்குதான் என்றாலும், பேட்டிங் எளிதாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் ஒரு வேளை சேஸ் செய்து விடுவார்களோ என்கிற அச்சமும் இயல்பாகவே இருந்தது. ஆனாலும், கேன் வில்லியம்சன் விளையாடும் வேகத்துக்கு அதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிதும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்பதால் கொஞ்சம் நம்பிக்கைப் பிறந்தது. கேன் வில்லியம்சனும், அபிஷேக்கும் ஓப்பனிங் இறங்கினார்கள். ஓவருக்கு பத்து ரன்கள் இலக்கு என்பதால் ,ஆரம்பத்தில் இருந்தே அந்த ரன்ரேட் குறையாத வண்ணம் பார்த்துக்கொண்டார்கள். முகேஷ் வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பௌண்டரிகள் அபிஷேக் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

தன் முதல் ஓவரிலேயே ஃபிரண்ட் ஃபூட் நோ பால் என்கிற தவறைச் செய்தார் சிமர்ஜீத் சிங். ஃப்ரீ ஹிட் சாமர்த்தியமாக சிக்ஸராக்கினார் கேன் வில்லியம்சன். மூன்றாவது ஓவரை வீச வந்த மிச்சல் சாண்டரை பௌண்டரி, சிக்ஸருடன் வரவேற்றார் அபிஷேக். 28 பந்துகளில் அரைசதம் கண்டது இந்தக் கூட்டணி. அடேங்கப்பா என ஆச்சர்யப்படுவதற்குள் , பவர்பிளேயின் கடைசி ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முகேஷ் சௌத்ரி வீசிய பந்தை சரியாக கனெக்ட் செய்யாததால் பிரோட்டரியஸிடம் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக். அபிஷேக்கிற்கு இந்தப் போட்டியில் ஏற்கெனவே சில சமயம் அதிர்ஷ்டம் கை கொடுத்தது அதற்கென்று ஒவ்வொரு தடவையுமா கொடுக்க முடியும் ஏற்கெனவே இரண்டு முறை கேட்ச் மிஸ்ஸானபோது தோனி செம்ம கடுப்புடன் காணப்பட்டார். அதுவும் தனக்கு வந்த ஐந்து கேட்ச்களில் முகேஷ் விட்ட மூன்றாவது கேட்ச் அது. ஆட்டத்தின் ஆரம்பத்திலும் இப்படியாக கேட்ச்களை கோட்டை விடுவதுபற்றி வருத்தப்பட்டார். அடுத்த வந்த ராகுல் திரிபாதி அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், பொறுப்பற்ற முறையில் வந்த வேகத்தில் முதல் பந்திலேயே சிமர்ஜீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது ஐதராபாத்.

mukesh
mukesh
IPL

மிச்சல் சாந்டனர் வீசிய பந்தை அதே திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார் மர்க்ரம். அடுத்த பந்தை 90 மீட்டருக்கு சிக்ஸராக்கினார். அடுத்த பந்தையும் லாங் ஆன் பக்கம் சிக்ஸாக்க முயல அதை கேட்ச் பிடித்துவிட்டார் ஜடேஜா. ஆசைப் படலாம் பேராசைப் படக்கூடாது என்பதாக மூன்றாவது சிக்ஸுக்கு ஆசைப்பட்டும் அவுட்டானார் மர்க்ரம். விக்கெட்டுகள் விழுந்தாலும், எப்பாடு பட்டாவது அடித்துவிட வேண்டும் என்கிற உத்வேகம் வில்லியம்சனிடம் காணப்பட்டது. ப்ரிட்டோரியஸ் வீசிய ஒத்த கை மாயாவியாக மாறி, ஒரு கையில் சிக்ஸராக்கினார். அடுத்த மஹீஷ் தீக்சனா ஓவரில், பூரானில் ஸ்விட்ச் ஹிட்டில் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால், ஓவருக்கு ஒரு சிக்ஸை எல்லாம் 'கீழ் திருப்பதி'க்குக் கூட போக முடியாது என்பதால் தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்துக்கொண்டிருந்தது.

37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன் இறுதியாக பிரிட்டோரியஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் அது அப்பட்டமான அவுட் என்பது தெரிந்தும், மனமில்லாமல் ரிவ்யூ செய்தார் வில்லி. இதுல டவுட் வேறயா என்பதாக அவுட் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. ஷஷாங் சிங் விக்கெட்டையும் முகேஷே கைப்பற்றினார். இனி எப்படியும் கிரவுண்டுக்குள் வர மாட்டார் என நினைத்த வாஷிங்டன் உள்ளே வந்து, அடிக்க முற்பட்டு போல்டாகி வெளியேறினார்.

கடைசி ஓவரில் 38 ரன்கள் தேவை . ஆறு பந்துகளையும் சரியாக வீசினாலே சென்னை வென்றுவிடும். அதே சமயம், அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் மொத்த ரன்ரேட்டை பாதகமாக்காமல் காப்பாற்றும் என்பதால் பூரானும் எல்லா பந்துகளையும் அடிக்க ஆயுத்தமானார். முதல் பந்து டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸ், அடுத்து ஒரு பௌண்டரி, அதன் பின்னர் இரண்டு சிக்ஸர் என ஆட்டத்தின் கடைசி ஓவர் 24 ரன்களுக்குச் சென்றது.

99 ரன்கள் எடுத்து சென்னையை மீண்டும் வெற்றி பாதைக்கு கொண்டு வந்திருக்கும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பிளே ஆஃப் வாய்ப்பு கடினம்தான் என்றாலும், மோதிப் பார்க்க முடிவு செய்துவிட்டது சென்னை. தூஃபான் தூஃபான் !