Published:Updated:

மிட் சீசன் டிரான்ஸ்ஃபர்... சென்னைக்கு வருகிறாரா அஜிங்கியா ரஹானே?! #CSK #IPL2020

ரஹானே
ரஹானே

மிட் சீசன் டிரான்ஸ்ஃபர்... சென்னை என்ன செய்யும்?! சென்னைக்கு ஆஃப் ஸ்பின்னர் யார்?! ரஹானேவை வாங்குவார்களா, வருவாரா?!

லீக் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போது அதிகம் விளையாடாத வீரர்களை அணிகள் தங்களுக்குள் அணிமாற்றம் செய்துகொள்வதே மிட் சீசன் டிரான்ஸ்ஃபர். உலகம் முழுக்க கால்பந்து, கூடைப்பந்து லீக் போட்டிகளில் மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் என்பது வழக்கமானது. 12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் நடந்ததில்லை. கடந்த முறை ஏலத்தில் எடுக்காத வீரர்களை மட்டுமே டிரான்ஸ்ஃபர் செய்யும் முறையை அறிமுகப்படுத்திய பிசிசிஐ, இம்முறை ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களையும் மிட் சீசனில் டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ளலாம் என அறிவித்தது.

ஐபிஎல் விதிகளின்படி முதல் சுற்று லீக் போட்டிகள் முடிந்ததும், அதாவது ஒவ்வொரு அணியும் 7 லீக் போட்டிகளை விளையாடி முடித்ததும், ப்ளேயிங் லெவனில் அதுவரையிலும் 2 போட்டிகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம். இதன்படி அக்டோபர் 12-ம் தேதிக்குப்பிறகு மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் நடக்கலாம். அதிகபட்சமாக 2 வீரர்களை மட்டுமே இந்த முறையில் மாற்றிக்கொள்ளமுடியும். இரண்டு அணிகளுமே அதற்கு ஒப்புக்கொள்ளவேண்டும். மேலும் ஒரு வீரரை வாங்க விரும்பும் அணி, விற்கும் அணி அந்த வீரருக்கு என்ன விலையை சொல்கிறதோ அதைக்கொடுக்கவேண்டும். இது ஒவ்வொரு ஐபிஎல் அணிக்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்து இல்லாமல், வெளியில் இருந்து கொடுக்கப்படவேண்டும். இந்த விதிமுறையின்படி 2020 சீசனில் நூறுக்கும் மேற்பட்ட வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், மற்ற அணிகளுக்குத் தேவையான முக்கிய வீரர்களை ஒவ்வொரு அணியும் விட்டுத்தருமா என்பதில்தான் சர்ப்ரைஸ் இருக்கிறது.

மிட் சீசன் டிரான்ஸ்ஃபருக்குத் தகுதியான வீரர்கள் பட்டியலில் பல முக்கிய வீரர்கள் இருக்கிறார்கள். சிஎஸ்கே-வைப் பொறுத்தவரை இம்ரான் தாஹிர், சான்ட்னர், ஹேஸில்வுட், ஜெகதீசன், சாய் கிஷோர் என 10 வீரர்கள் மிட் சீசன் டிரான்ஸ்ஃபருக்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். மும்பையில் கிறிஸ் லின், மிட்செல் மெக்லீனிகன், சொருப் திவாரி டெல்லியில் அஜிங்கியா ரஹானே, அலெக்ஸ் கேரி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் டிரான்ஸ்ஃபருக்குத் தகுதியான முக்கிய வீரர்கள். ஹைதராபாத் அணியில் விஜய் ஷங்கர், சித்தார்த் கவுல், விருத்மான் சஹா, முகமது நபி, பஞ்சாபில் முருகன் அஷ்வின், பெங்களூரில் ஜோஷ் ஃபிலிப் ஆகியோர் இருக்கிறார்கள்.

ரஹானே
ரஹானே

சென்னை என்ன செய்யும்?!

இந்த முறை மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் யாருக்கு முக்கியமோ இல்லையோ, சென்னைக்கு மிக மிக முக்கியம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என இருவருமே தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை அணியில் இருந்து விலகிவிட்ட நிலையில் இவர்களுக்கான ரீப்ளேஸ்மென்ட் வீரர்களை சென்னை அணி இன்னும் அறிவிக்கவில்லை. அதனால் மிட் சீசன் டிரான்ஸ்ஃபரில் சென்னை அணி 2 வீரர்களை மற்ற அணிகளில் இருந்து வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணிக்குத் தேவைப்படமாட்டார்கள். வாட்சன், டுப்ளெஸ்ஸி, சாம் கரண், பிராவோ என வெளிநாட்டு கோட்டா ஃபுல்லாக இருக்கிறது. இதனால் இந்திய வீரர்களை வாங்கவே சென்னை ஆர்வம் காட்டும்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக ஒரு ஆஃப் ஸ்பின்னர்தான் அணியின் அத்தியாவசிய தேவை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு சென்னைக்கு சரியான சாய்ஸாக இந்த மிட் சீசன் டிரான்ஸ்ஃபரில் இருப்பவர் அஜிங்கியா ரஹானே. ராஜஸ்தானில் இருந்த ரஹானேவை சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே டிரான்ஸ்ஃபரில் மாற்றிக்கொண்டது டெல்லி. ஆனால், டெல்லியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோருமே நல்ல ஃபார்மில் இருப்பதால் ரஹானே விளையாடுவதற்கான அவசியமே ஏற்படவில்லை. அதனால், ரஹானேவை சென்னை அணி வாங்க முயற்சிக்கலாம். இதற்கு டெல்லி அணி அனுமதியளிக்கவேண்டும்.

ஆனால், ரஹானேவை தோனி விரும்புவாரா என்பது சந்தேகம். தோனி ஹைதராபாத் அணியில் இருக்கும் இளம் வீரர் விராட் சிங்கை வாங்க விரும்பலாம். ஜார்கண்டை சேர்ந்த விராட் சிங்கை 1.9 கோடிக்கு ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது. ஆனால், இதுவரை விராட் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. ஒருவேளை ஹைதராபாத் அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டால் சிஎஸ்கே வாங்கலாம். இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் சிங் கடந்த ஆண்டு நடைபெற்ற சயது முஸ்தாக் அலி தொடரில் மிகச்சிறப்பாக விளையாடியவர். கேதர் ஜாதவின் இடத்துக்கு விராட் சிங் சரியான மாற்றாக இருப்பார்.

இவர்கள் இருவரும் கிடைக்கவில்லை என்றால் பெங்களூரு அணியில் இருந்து பார்த்தீவ் பட்டேலை சென்னை அணுகலாம். ஏற்கெனவே சென்னை அணியில் இருந்தவர் பார்த்தீவ். அதனால், சீனியர்களை விரும்பும் சென்னை அணி இவரை எடுக்கலாம். இவர்கள்தவிர பஞ்சாப் அணியில் இருக்கும் பவர் ஹிட்டரான தீபக் ஹூடாவையும் வாங்க சென்னை முயற்சி செய்யும் எனத் தெரிகிறது. இது தவிர மும்பை அணியில் இருக்கும் ஆதித்ய தாரேவையும் சென்னை அணி வாங்க முயற்சி செய்யலாம்.

Virat Singh
Virat Singh

ஆஃப் ஸ்பின்னர் யார்?!

ஆஃப் ஸ்பின்னர் சிஎஸ்கே அணிக்குத் தேவையா என்பதிலேயே தோனிக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரிகிறது. அதனால், ஆஃப் ஸ்பின்னருக்கு பதிலாக சென்னை இரண்டு பேட்ஸ்மேன்களை வாங்கவே விரும்பும் என எதிர்பார்க்கலாம்.

ரஹானேவை வாங்குவார்களா, வருவாரா?!

ரஹானே
ரஹானே

ரஹானேவை விடுவிக்க டெல்லி விரும்பினாலும், அவருக்கு அதிக தொகை கேட்கும் எனத்தெரிகிறது. எப்போதுமே சிக்கனத்தை கடைபிடிக்கும் சிஎஸ்கே மிட் சீசனில் பெரிய தொகைக்கு ரஹானேவை வாங்குமா என்பது சந்தேகமே. டெல்லி அணியின் ஓப்பனர்களான பிரித்வி ஷா அல்லது தவான் காயம் அடைந்தால் அந்த இடத்துக்கு ரஹானேதான் சரியான சாய்ஸாக இருப்பார் என்பதால் ரஹானேவை டெல்லி விடுவிக்காது என்றும் தெரிகிறது. இதனால் ரஹானே சென்னைக்கு வருவது சந்தேகம்தான்.

அடுத்த கட்டுரைக்கு