Published:Updated:

நிகழ மறுத்த அசாத்தியம்... தோல்விகரமான வெற்றியுடன் ப்ளேஆஃப் ​வாய்ப்பை இழந்த பல்தான்ஸ்!

சன்ரைசர்ஸ் 64 ரன்களைக் கடந்த போதே ஆட்டம் முடிந்துவிட்டது. அதன்பிறகு நடந்ததெல்லாம் சம்பிரதாயம்தான். ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் கனவோடு சீசனைத் தொடங்கிய மும்பை அணி ப்ளேஆஃப்ஸுக்கு கூட தகுதிப்பெற முடியாமல் வெளியேறியிருக்கிறது.

99.9 சதவீதம் ப்ளேஆஃப்ஸுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்ற சூழலில்தான் சன்ரைசர்ஸுக்கு எதிராக மும்பை அணி களமிறங்கியது. மீதமிருக்கும் 0.01% வாய்ப்பை சாத்தியமாக்கி கொள்வது அசாத்தியம். ஆனால், அந்த அசாத்தியத்தை நிகழ்த்திக் காட்ட தங்களால் இயன்றவரைப் போராடி வீழ்ந்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ்! MI-Mission Impossible?

சன்ரைசர்ஸ் அணியில் நேற்று வில்லியம்சன் இல்லை, புவனேஷ்வர் குமார் இல்லை, வில்லியம்சனுக்குப் பதிலாக கேப்டனாக வார்னரையும் கொண்டு வரவில்லை. கடந்த சில போட்டிகளாக ட்ராப் செய்யப்பட்டிருந்த மனீஷ் பாண்டேவை அழைத்து வந்து கேப்டன் பொறுப்பையும் கொடுத்திருந்தார்கள்.

போட்டியை வெல்வதற்கு முன்பு டாஸைக் கட்டாயம் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் மும்பை இருந்தது. அதேபோல், ரோஹித் சர்மா டாஸை வென்றார், பேட்டிங்கையும் தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் சூப்பரான அணியோடு இறங்கினாலே சுமாராக ஆடும்... இந்தப் போட்டியில் சுமாரான அணியோடு இறங்கினால் சொல்லவா வேண்டும்? முந்தைய நாள் மும்பை ரசிகர்கள் கனவுலகத்தில் மிதந்தபடி ரோஹித் 150* இஷன் 100*.... என போட்டிருந்த மீம்களெல்லாம் நிஜமாக்கிவிடுவதை போன்றே புறச்சூழல்கள் அமைந்தன.

இஷன் கிஷன்
இஷன் கிஷன்
IPL

ப்ளே ஆஃப்ஸுக்கு மும்பை அணி செல்ல வேண்டுமாயின் சன்ரைசர்ஸ் அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அப்படியெனில், குறைந்தபட்சம் மும்பை அணி 250 ரன்களையாவது எடுத்தாக வேண்டிய சூழல். மும்பையின் டார்கெட்டுமே அதுவாகத்தான் இருந்தது. ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரி அல்லது சிக்ஸராக்க வேண்டும் என்ற முனைப்புடனையே ஆடியிருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 235-9 என்ற ஸ்கோரை எடுத்திருந்தனர். சன்ரைசர்ஸை 64 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கினால் மும்பை ப்ளே ஆஃப்ஸுக்குத் தகுதிப்பெற்றுவிடலாம். மும்பை ரசிகர்களுக்கு மும்பை மீதிருந்த நம்பிக்கையை விட சன்ரைசர்ஸ் மீது அதிக நம்பிக்கையிருந்தது. இந்த சீசனில் அவர்களின் ட்ராக் ரெக்கார்ட் அப்படி! ஆனால், அதிசயமாக நேற்று சன்ரைசர்ஸ் அணியும் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 193-8 என்ற ஸ்கோரை எடுத்தது. மனீஷ் பாண்டே அரைசதத்தைக் கடந்திருந்தார்

சன்ரைசர்ஸ் 64 ரன்களைக் கடந்தபோதே ஆட்டம் முடிந்துவிட்டது. அதன்பிறகு நடந்ததெல்லாம் சம்பிரதாயம்தான். ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் கனவோடு சீசனைத் தொடங்கிய மும்பை அணி ப்ளேஆஃப்ஸுக்கு கூட தகுதிப்பெற முடியாமல் வெளியேறியிருக்கிறது. வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ப்ளேஆஃப்ஸில் இடத்தை உறுதி செய்திருக்கிறது.

இந்தப் போட்டியில் மும்பை அணி தோற்றிருந்தாலும் சில பாசிட்டிவ்வான விஷயங்களும் அரங்கேறியிருந்தது. இஷன் கிஷனும் சூர்யகுமார் யாதவும் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கின்றனர். கடந்த சீசனில் மும்பை அவ்வளவு சௌகரியமாக கோப்பையை வென்றதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் இவர்கள் இருவருமே. இஷன் கிஷன் 14 போட்டிகளில் ஆடி 516 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 16 போட்டிகளில் ஆடி 480 ரன்களையும் எடுத்திருந்தனர். மிடில் ஆர்டரில் மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். ஆனால், இந்த சீசனில் இருவருமே கடுமையாக சொதப்பியிருந்தனர்.

இஷன் கிஷன் முதல் 10 போட்டிகளில் வெறும் 107 ரன்களை மட்டும்தான் எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 80 க்கும் கீழ் இருந்தது. இந்த மோசமான பெர்ஃபார்மென்ஸால் இரண்டு போட்டிகளில் ட்ராப்பும் செய்யப்பட்டார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்
IPL

இந்த சீசனின் முதல் பாதியில் சுமாராக ஆடிய சூர்யகுமார் இரண்டாம் பாதியில் ரொம்ப சுமாராக ஆடினார். 6 போட்டிகளில் மொத்தமே 62 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

இந்த சொதப்பல் மும்பை அணிக்கு மட்டுமில்லை. இந்திய அணிக்குமே கவலையளிப்பதாக இருந்தது. ஏனெனில், விரைவில் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இவர்கள் இருவருமே களமிறங்க இருக்கின்றனர்.

ஏக்கங்களையும் வருத்தங்களையும் போக்கும் வகையில் சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இருவருமே அதிரடியான ஃபார்முக்குத் திரும்பியிருந்தனர். ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்கிய இஷன் கிஷன் முதல் பந்திலிருந்தே EA கிரிக்கெட்டின் Easy மோடில் ஆடுவதை போலத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அவர் சந்தித்த முதல் பந்தையே மிட் விக்கெட்டில் சிக்சராக்கியிருந்தார். சித்தார்த் கௌல் வீசிய இரண்டாவது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள். முகமது நபி வீசிய 3 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள். ஜேசன் ஹோல்டர் வீசிய 4 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என அட்வான்ஸாக தீபாவளி கொண்டாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

16 பந்துகளில் அரைசதத்தை கடந்திருந்தார். இஷன் கிஷனின் இந்த ஆட்டம்தான் எவ்வளவு பெரிய அசாத்தியத்தையும் மும்பை சாதிக்க முடியும் என ரசிகர்களுக்குக் குறைந்தபட்ச நம்பிக்கையை கொடுத்தது.

இஷன் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்களை எடுத்துக் கொடுத்து உம்ரான் மாலிக்கின் பந்தில் அவுட்டானர்.

மனீஷ் பாண்டே
மனீஷ் பாண்டே
IPL

பவர்ப்ளேயில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரன்ரேட் மிடில் ஓவர்களில் கொஞ்சம் குறைந்ததை போல இருந்தது. அதை டெத் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் சரி செய்தார். அவரும் தன் பங்கிற்கு ரஷீத்கான், உம்ரான் மாலிக், ஹோல்டர், சித்தார்த் கௌல் என அத்தனை பேரையும் வெளுத்தெடுத்தார். 40 பந்துகளில் 82 ரன்கள். 13 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர். இவர்கள் இருவரும் ஆடிய ஆட்டம்தான் மும்பை ரசிகர்களை அந்த 0.01% வாய்ப்பில் நம்பிக்கை கொள்ள வைத்தது. ஆனால், எப்போதும் நடக்காத விஷயமாக சன்ரைசர்ஸ் நேற்று கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் ஆடிவிட்டதால் மும்பையின் கனவு காற்றில் கரைந்தது. போட்டியை 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றாலும், அவர்களால் ப்ளேஆஃப்ஸுக்குத் தகுதிப்பெற முடியவில்லை.

கொரோனா காரணமாக ஐபிஎல் சில மாறுதல்களுடன் தொடங்கப்பட்ட போது மும்பை அணி முதல் 5 போட்டிகளை சென்னை சேப்பாக்கத்தில் வைத்து ஆட வேண்டியதாயிற்று. வான்கடே பிட்ச்சில் ஆடி பழக்கப்பட்ட மும்பை அதற்கு சம்பந்தமே இல்லாத டெஸ்ட் மேட்ச் பிட்ச்சைக் கொண்டிருக்கும் சேப்பாக்கத்தில் ஆடியதே முதல் பிரச்னையாக இருந்தது. அந்த 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே மும்பை வென்றிருந்தது. அங்கேயே ஒரு பெரிய மொமண்டத்தை மும்பை இழந்திருந்தது.

கடந்த சீசனில் மும்பை அணி கோப்பையை வென்றதற்கு அவர்கள் ஒரு அணியாக பெர்ஃபார்ம் செய்ததே காரணம். எந்த ஒரு தனி வீரரையும் அவர்கள் நம்பியிருக்கவில்லை. பேட்டிங் பலத்தை வைத்து மட்டுமோ அல்லது பௌலிங்கை வைத்து மட்டுமோ வென்றிருக்கவில்லை. எல்லா டிபார்ட்மெண்ட்களும் எல்லா வீரர்களும் பெர்ஃபார்ம் செய்தனர்.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
IPL

ஆனால், இந்த சீசனில் அப்படியில்லை. முதல் பாதியில் பேட்டிங்கிற்கு ரோஹித்தையும் பொல்லார்டையுமே நம்பியிருந்தனர். பௌலிங் பெரிதாக எடுபடவே இல்லை. இரண்டாம் பாதியில் பௌலிங் பிரச்னைகள் சரியாகியிருந்தது. ஆனால், பேட்டிங்கில் இன்னும் ஓட்டைகள் விழுந்தன. 'ஒரு அணியாக நாங்கள் கூட்டாக சிறப்பான பெர்ஃபார்மென்ஸை கொடுவில்லை' என இதை நேற்றைய போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் ரோஹித் சர்மாவும் ஒப்புக்கொண்டார்.

கடந்த சீசனில் மும்பை அணி ஆடிய விதத்தை யாராலும் மறக்க முடியாது. அத்தனை அணிகளின் மீதும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தினர். அனுபவம் + இளமை + உள்ளூர் திறமைகள் என அந்த அணி கட்டமைக்கப்பட்டிருந்த விதமே அதற்குக் காரணமாக அமைந்திருந்தது. மும்பை வேறெதோ ஒரு உயர்தளத்தில் நின்று களமாடியதை போலவும் மற்ற அணிகள் கீழே நின்று அண்ணாந்து பார்த்ததை போலவும்தான் அது இருந்தது. அடுத்த சீசனுக்கு மெகா ஏலம் நடைபெற இருப்பதால் இதே கட்டமைப்பு பலத்துடன் ஒரு அணியை உருவாக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியே!

மெல்ல விடைகொடு மனமே! பல்தான்ஸுக்கு பைபை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு