Published:Updated:

PBKS v LSG: சுமாரான லக்னோவும், படு சுமாரான பஞ்சாப்பும்; வேற மாதிரியாவது தோற்கலாமே கிங்ஸ்?!

Mayank Agarwal | KL Rahul ( IPL )

அணியே தோற்றாலும் அசராமல் நின்று பஞ்சாப் அணிக்காக கே.எல்.ராகுல் பெர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தார். அது மனதிற்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால், புதிய கேப்டனான மயங்க் அகர்வாலோ அதைக் கூடச் செய்வதில்லை.

PBKS v LSG: சுமாரான லக்னோவும், படு சுமாரான பஞ்சாப்பும்; வேற மாதிரியாவது தோற்கலாமே கிங்ஸ்?!

அணியே தோற்றாலும் அசராமல் நின்று பஞ்சாப் அணிக்காக கே.எல்.ராகுல் பெர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தார். அது மனதிற்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால், புதிய கேப்டனான மயங்க் அகர்வாலோ அதைக் கூடச் செய்வதில்லை.

Published:Updated:
Mayank Agarwal | KL Rahul ( IPL )

தோல்வியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றியை போல தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமே. இந்த உன்னதமான கருத்தை உலக உயிர்களுக்கு எடுத்துரைப்பதற்காக அறிவியலாளர்களெல்லாம் இணைந்து ஒரு ரோபோவை உருவாக்குகிறார்கள். 'Speed 1 Terahertz, memory 1 zeta byte' என அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவது மட்டும்தான் அதனுடைய வேலை. என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோற்றுப்போகும். அப்படி ஒரு ரோபோ உருவாக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அச்சு அசலாக சிவப்பு கலர் ஜெர்சி அணிந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை போலத்தான் இருக்கும். எல்லா அம்சங்களும் இருந்தும் தோல்வியடைவதற்கென்றே ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோவை போலத்தான் பஞ்சாப் அணி தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முறை லக்னோ அணிக்கு எதிராக 154 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியாமல் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

KL Rahul
KL Rahul
IPL

பஞ்சாப் அணியின் கேப்டனான மயங்க் அகர்வாலே இந்தப் போட்டியில் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்தால் சரியாகத் திட்டமிட்டு ஒரு வெற்றிகரமான ஸ்கோரை எடுக்க முடியவில்லை என்பதால் சேஸிங்கைத் தேர்வு செய்தார்.

லக்னோ அணியின் சார்பில் கே.எல்.ராகுலும் டீ காக்கும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். முதல் ஓவரையே அர்ஷ்தீப் சிங்கின் கையில் மயங்க் அகர்வால் கொடுத்திருந்தார். ஷார்ட் மிட் விக்கெட்டில் அருகருகே இரண்டு ஃபீல்டர்களை வைத்து ஓவர் தி விக்கெட்டில் வந்து லெக் ஸ்டம்ப் லைனில் அர்ஷ்தீப் சிங் வீசியிருந்தார். இந்த ஓவரைக் கொஞ்சம் தட்டுத்தடுமாறி கே.எல்.ராகுல் ஆடி முடித்தார். முதல் ஓவரிலேயே தடுமாறிவர் ரபாடா வீசிய மூன்றாவது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். குட்லெந்த்தில் டைட்டாக டெஸ்ட் மேட்ச்சில் வீசுவதை போல ரபாடா வீச அதில் எட்ஜ் ஆகி கே.எல்.ராகுல் வெளியேறினார். நம்பர் 3 என்பது லக்னோ அணிக்கு கொஞ்சம் செட் ஆகாத ஸ்பாட்டாக இருக்கிறது. இந்த முறை நம்பர் 3 இல் தீபக் ஹூடா வந்தார்.

Hoods + De Kock
Hoods + De Kock
IPL
டீ காக் + தீபக் ஹூடா இந்தக் கூட்டணி சிறப்பாக ஆடி ஒரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். இருவரும் இணைந்து 85 ரன்களை எடுத்திருந்தனர்.

டீகாக் நல்ல டச்சில் இருந்தார். ரபாடாவின் ஓவரிலேயே தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். ரிஷி தவான், லிவிங்ஸ்டன் எனத் தனியாகச் சிக்கியவர்களுக்கு எதிராக தீபக் ஹூடாவும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

இவர்கள் இருவரும் ஆடிக்கொண்டிருக்கும் வரை ஸ்கோர் சீராக முன்னேறிக் கொண்டிருந்தது. இவர்கள் இருவரும் அவுட் ஆனவுடன் லக்னோ அணி சரிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. 46 ரன்களில் சந்தீப் சர்மாவின் பந்தில் எட்ஜ் ஆகி அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே டீகாக் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே தீபக் ஹூடாவை பவுண்டரி லைனிலிருந்து ஒரு த்ரோவை வீசி டைரக்ட் ஹிட்டாக ரன் அவுட் ஆக்கினார் பேர்ஸ்ட்டோ. 13-16 இந்த நான்கு ஓவர்களில் 13 ரன்களைச் சேர்ப்பதற்குள் மட்டும் 5 விக்கெட்டுகளை லக்னோ இழந்திருந்தது. க்ருணால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஸ்டாய்னிஸ் என முக்கியமான வீரர்கள் எல்லாருமே சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகினர். கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர். வழக்கமாக, பஞ்சாப் அணிதான் இப்படிக் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை விடும். அவர்களுக்கு எதிராக அவர்களை போன்றே லக்னோ மிமிக் செய்ய முயன்றதை போன்று இருந்தது. கிடைத்த நல்ல தொடக்கத்திற்கு 180+ ஸ்கோரை எடுத்திருக்க வேண்டும். ஆனால், லக்னோ அணி 153 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

Punjab Kings
Punjab Kings
IPL

பஞ்சாபுக்கு 154 ரன்கள் மட்டுமே டார்கெட். மயங்க் அகர்வால், தவான், லிவிங்ஸ்டன், பேர்ஸ்ட்டோ, ராஜபக்சா, ஜித்தேஷ் என சரவெடியான பேட்டிங் லைன் அப்பை வைத்திருக்கும் பஞ்சாப் இந்த டார்கெட்டை 17 ஓவருக்குள் முடித்து ரன்ரேட்டை உயர்த்தும் முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்களோ வழக்கம்போல அடித்தால் சிக்ஸர், இல்லை அவுட் என்கிற மனநிலையுடனேயே ஆடி சொதப்பிவிட்டனர். அணியே தோற்றாலும் அசராமல் நின்று பஞ்சாப் அணிக்காக கே.எல்.ராகுல் பெர்ஃபார்ம் செய்து கொண்டிருந்தார். அது மனதிற்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால், புதிய கேப்டனான மயங்க் அகர்வாலோ அதைக் கூடச் செய்வதில்லை. முதல் விக்கெட்டாக அவர்தான் சரிகிறார். தவான் நின்று ஆட வேண்டும் என்பதற்காக மயங்க் அதிரடியில் இறங்க, சமீராவின் ஓவரில் 25 ரன்களிலேயே எக்ஸ்ட்ரா கவரில் ராகுலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தவான் கொஞ்ச நேரம் நின்றாரே ஒழிய பெரிதாக ஆடவில்லை.

Dhawan
Dhawan
IPL
15 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே அடித்து ரவி பிஷ்னோயின் பந்தில் ஸ்வீப் ஆட முயன்று ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். தவான் அவுட் ஆன அந்த இடத்திலேயே பஞ்சாபின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ராஜபக்சா எனப் பெரிய கைகள் இருந்தாலும் தவான் ஒரு முனையில் நின்றால் மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் ஆடும் அதிரடி ஆட்டத்திற்கு ஒரு மதிப்பு கிடைக்கும். தவானே அவுட் ஆகிவிட்ட பிறகு, டார்கெட்டை எட்டுவதல்ல 20 ஓவருக்கு ஆல் அவுட் ஆகாமல் நிற்பதுதான் பஞ்சாபுக்கான டாஸ்க்காக இருந்தது. ரவி பிஷ்னோயின் ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன், மோஷின் கானின் பந்தில் ஒரு ரேம்ப் ஷாட்டுக்கு முயன்று எட்ஜ் ஆகி வெளியேறினார். இன்னும் கொஞ்ச நேரம் நின்று 20வது ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தாலே வென்றுவிடலாம் என்ற சூழலில் சமீராவின் பந்தில் பேட்டை விட்டு தேர்டு மேனில் கேட்ச் ஆகி பேர்ஸ்ட்டோ வெளியேறினார்.

Bairstow
Bairstow
IPL
இடையில் க்ருணால் பாண்டியா அற்புதமான ஒரு ஸ்பெல்லை வீசி ராஜபக்சா மற்றும் ஜித்தேஷ் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

கடைசி 5 ஓவர்களில் டெய்ல் எண்டர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட பஞ்சாப் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

பேட்டிங்கில் இன்றைய நாள் எங்களுக்குச் சிறப்பாக இல்லை. எளிதில் விக்கெட்டுகளை விட்டோம். Below Par Performance ஐயே கொடுத்திருக்கிறோம்.
மயங்க் அகர்வால்

என பஞ்சாபின் கேப்டன் மயங்க் அகர்வால் பேசியிருந்தார். நல்ல விஷயம். தோல்விக்கான காரணத்தை சரியாக உணர்ந்திருக்கிறார். ஆனால், அந்த பிரச்னை என்னவோ இந்தப் போட்டியில் மட்டும்தான் ஏற்பட்டதை போல கூறுவதுதான் நெருடலாக இருக்கிறது. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் ஆடியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான போட்டிகளில் பஞ்சாப் அணி Below Par பெர்ஃபார்மென்ஸைத்தான் கொடுத்திருக்கிறது. தவான் அவுட் ஆகிவிட்டால் நிலைத்தன்மையே இல்லாமல் வீழும் பேட்டிங் லைன் அப்பாக இருக்கிறது. சூழலை புரிந்து விக்கெட்டைக் காத்து நின்று ஆடும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர். இதுதான் இந்த அணுகுமுறைதான் பிரச்னை என்பது இரண்டாவது போட்டியிலேயே தெரிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் மாற்றிக்கொள்ளவே இல்லை.

உணர்வுகளற்ற ரோபோ போன்று ப்ரோக்ராம் செய்யப்பட்ட ஹார்ட் ஹிட்டிங்கை மட்டுமே நம்பி பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சொதப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்திற்குப் பிறகு ரோபோ சிட்டிக்கு உணர்வுகள் வருவதை போல, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு உணர்வுகள் வர வேண்டிய நேரமிது!

Punjab Kings
Punjab Kings
IPL
அவர்கள் என்ன சூழலில் ஆடுகிறோம் என்பதை உணர வேண்டும். டி20 யில் சிக்ஸர்கள் அடிப்பது முக்கியம்தான். ஆனால், அது மட்டுமே டி20 கிடையாது என்பதை உணர வேண்டும். அணிக்காக அணுகுமுறையை மாற்றி வெல்ல வேண்டும் என்கிற உணர்வு வர வேண்டும். மொத்தத்தில் ஒரு பஞ்சாப் 2.0 உருவாக வேண்டும்.