Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021 : தம்பியின் தற்கொலை, கொடூர வறுமை, தீவிர மன அழுத்தம்... சேத்தன் சக்காரியாவின் கதை தெரியுமா?!

சேத்தன் சக்காரியா
சேத்தன் சக்காரியா

கிறிஸ் கெயிலுக்கு சக்காரியா வீசிய இரண்டு பந்துகளுமே டாட். கெயில் அந்த பந்துகளை தொடக்கூட இல்லை. நியூ பாலில் தன்னால் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும் என்பதை கிறிஸ் கெயிலை க்ரீஸில் வைத்துக் கொண்டு நிரூபித்துக் காட்டினார் சக்காரியா.

'' நாங்கள் சந்தித்த துயரங்களும், வலி வேதனைகளும் இன்னொருவருக்கு வரக்கூடாது என நினைக்கிறோம். என்னுடைய கணவர் லாரி டிரைவர். மூன்று பெரிய விபத்துகளில் சிக்கி படுத்தபடுக்கையாக இருக்கிறார். என்னுடைய இரண்டாவது மகன், அதாவது சேத்தன் சக்காரியாவின் தம்பி சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனான். அப்போது சேத்தன், சையது முஷ்தாக் அலி தொடரில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறப்பாகப் பந்து வீசிக்கொண்டிருந்த சக்காரியாவிடம் தம்பி இறந்தது குறித்து நாங்கள் 10 நாட்களுக்கு சொல்லவேயில்லை. தம்பி இறந்தது தெரிந்தால் சக்காரியாவால் சரியாக விளையாடமுடியாது என்பதால் மறைத்துவிட்டோம்.

ஒவ்வொருமுறையும் சேத்தன் போனில் அழைக்கும்போது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டும் சொல்லிவந்தேன். தம்பியிடம் பேசவேண்டும் என்று அவன் சொல்லும்போது நான் பேச்சை வேறுபக்கம் திருப்பிவிடுவேன். அவனுடைய அப்பாவையும் அவனோடு பேசவைக்கவில்லை. உண்மையை அப்பா சொல்லிவிடுவார் என்கிற பயம் எனக்கு இருந்தது. ஆனால், ஒருநாள் அவன் போனில் பேசும்போது நான் உடைந்து அழுதுவிட்டேன். தம்பி இறந்ததகவல் தெரிந்ததும் சேத்தன் யாரோடும் ஒருவாரம் பேசவேயில்லை. சாப்பிடவும் இல்லை. அண்ணனும் தம்பியும் அவ்வளவு நெருக்கமாக இருப்பார்கள்.

இந்த துயர சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்துதான், ஐபிஎல் ஏலத்தில் 1.20 கோடிக்கு சக்காரியா ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டான். ஏதோ கனவுபோல இருந்தது. ஒருநாள் உணவுக்காக நாங்கள் படாதபாடுபட்டவர்கள்!''

- வர்ஷாபென், சேத்தன் சக்காரியாவின் தாய்

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணியில் யார், யார் களம் இறங்குவார்கள் என எல்லோரும் ப்ளேயிங் லெவன் அறிவிப்புக்காக காத்திருக்க அதில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக ஒரு பெயர்... சேத்தன் சக்காரியா. 23 வயது சக்காரியாவுக்கு ஐபிஎல்-ல் முதல் போட்டி. பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே மைதானத்தில் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா என பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் பௌலர்களை பறக்கவிட, சக்காரியா மட்டுமே இவர்களின் அதிரடிக்கு கடிவாளம் போட்டு சிறப்பாக பந்துவீசியவர்.

தம்பியுடன் சக்காரியா
தம்பியுடன் சக்காரியா

முஸ்டஃபைசுர் ரஹ்மான் 4 ஓவர்களை வீசி 45 ரன்களையும், கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்களை வீசி 41 ரன்களையும் கொடுத்திருந்தனர். சக்காரியா மட்டுமே கட்டுக்கோப்பாக 4 ஓவர்களை வீசி 31 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

பவர்ப்ளேவில் இரண்டு ஓவர்களையும் 16-வது ஓவருக்கு மேல் இரண்டு ஓவர்களையும் வீசியிருந்தார் சக்காரியா. முதல் ஓவரையே சக்காரியாவை வைத்து ஆரம்பித்தார் கேப்டன் சஞ்சு சாம்சன். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஸ்டம்ப் லைனில் சிறிய இன்ஸ்விங்கோடு பேட்ஸ்மேனுக்கு ஷாட் ஆட இடம் கொடுக்காமல் முதல் ஓவரை சிறப்பாக வீசியிருந்தார் சக்காரியா. இந்த லைன் & லென்த் கொஞ்சம் மிஸ் ஆன இரண்டு பந்துகள் மட்டும் பவுண்டரிக்கு சென்றிருந்தது. முஸ்டஃபைசுர் 2 வது ஓவரை வீச, மூன்றாவது ஓவரை மீண்டும் சக்காரியா வீசினார். கடந்த ஓவரில் கிடைத்த படிப்பினைகளோடு இந்த ஓவரை அட்டகாசமாக வீச ஆரம்பித்தார். இந்த ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து மயாங்க் அகர்வாலின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஷாட் ஆட இடம் கொடுக்காமல் ஸ்டம்ப் லைனிலேயே டைட்டாக வீசிக் கொண்டிருந்ததால், கடுப்பாகிய மயாங்க் அகர்வால் லெக் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்து வந்து டிரைவ் ஆட முயன்று எட்ஜ்ஜாகி கீப்பரான சாம்சனிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டை விட, சக்காரியா அடுத்து வீசிய இரண்டு பந்துகள்தான் அவரின் திறனை முழுமையாக வெளிக்காட்டியது. மயாங்க் அகர்வால் அவுட் ஆனவுடன், யுனிவர்சல் பாஸான கிறிஸ் கெய்ல் உள்ளே வந்தார். கிறிஸ் கெயிலுக்கு சக்காரியா வீசிய இரண்டு பந்துகளுமே டாட். கிறிஸ் கெயில் அந்த பந்துகளை தொடக்கூட இல்லை, தடுமாறியிருந்தார். இரண்டு பந்துகளுமே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டவை. ஒரு பந்து பிட்ச் ஆகி இன்ஸ்விங் ஆகி வந்தது. இன்னொரு பந்து பிட்ச்சாகி அவுட்ஸ்விங் ஆகி வெளியே சென்றது. நியூ பாலில் தன்னால் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும் என்பதை யுனிவர்சல் பாஸான கிறிஸ் கெயிலை க்ரீஸில் வைத்துக் கொண்டு நிரூபித்துக் காட்டினார் சக்காரியா.

சேத்தன் சக்காரியா
சேத்தன் சக்காரியா

நியூ பாலில் சிறப்பாக வீசும் பௌலர்கள், டெத் ஓவரில் சொதப்புவதை பார்த்திருப்போம். ஆனால், சக்காரியா டெத் ஓவரிலுமே மிரட்டினார். 17 மற்றும் 20 வது ஓவரை வீசிய சக்காரியா 20 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். குறிப்பாக, கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையயும் வீழ்த்தியிருந்தார். நியுபாலில் வீசுவதற்கும் டெத் ஓவர்களில் வீசுவதற்கும் வெவ்வேறு அணுகுமுறைகளை கையாண்டார் சக்காரியா.

131.6, 130.3, 131.1, 130.4, 134.7, 130.4 Kmph என முதல் ஓவரை இப்படி ஒரே சீரான வேகத்திலேயே வீசியிருந்தார். அதாவது, ஒரு டெஸ்ட் மேட்ச் பௌலிங்கை போல ஒரு லைன் & லென்த்தை பிடித்துக் கொண்டு ஒரே சீரான வேகத்தில் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தார். அதேநேரத்தில், டெத் ஓவர்கள் என்று வரும்போது வேறு மாதிரியாக முயன்றார். 20 வது ஓவரை 111.6, 126.7, 106.7, 116.7, 109.1, 106.9 kmph என வீசியிருந்தார். ஒவ்வொரு பந்திலும் வேகத்தைக் கூட்டி குறைத்து வேரியேஷன் காட்டினார். பேக் ஆஃப் தி ஹேண்டில் இருந்து வீசும் மெதுவான பந்துகளை பிரதான ஆயுதமாக பயன்படுத்தினார்.

எல்லா பௌலர்களையும் ஈவு இரக்கமின்றி அட்டாக் செய்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சக்காரியாவிடம் மட்டுமே அடக்கி வாசித்தனர். முதல் போட்டியிலேயே இவ்வளவு சிறப்பாக வீசிய இந்த சக்காரியா யார்?

குஜராத்தின் பாவ்நகரில் உள்ள வார்தேஜ் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்தான் சேத்தன் சக்காரியா. ஏழ்மையான குடும்பம். இவருடைய தந்தை லாரி டிரைவர். 16 வயது வரை டென்னிஸ் பந்தில் மட்டுமே கிரிக்கெட் ஆடியவர் சக்காரியா. அதன்பிறகே, முறையான பயிற்சிகளோடு கிரிக்கெட் ஆடத் தொடங்கி 2018-ம் ஆண்டில் செளராஷ்ட்ரா அணிக்கு ஆட தேர்வாகியிருக்கிறார்.

சேத்தன்
சேத்தன்

15 ரஞ்சி போட்டிகளில் ஆடியிருக்கும் சக்காரியா 41 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இடக்கை பௌலராக சிறப்பாக வீசுவதால் கடந்த ஐபிஎல் சீசனில் சக்காரியாவை நெட் பௌலராக துபாய்க்கு அழைத்து சென்றிருந்தது பெங்களூர் அணி. இதன்பிறகு, கடந்த ஜனவரியில் நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி தொடரிலும் சக்காரியா சிறப்பாக ஆடினார். இந்த தொடரில் 5 போட்டிகளில் ஆடியவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எக்கானமி 4.9 மட்டுமே. இந்த பர்ஃபாமென்ஸ்தான் சக்காரியாவின் மீது வெளிச்சம் பாய்ச்சியது.

இந்த சமயத்தில்தான் சக்காரியாவின் தம்பி தற்கொலை செய்துகொண்டு இறந்தார். ராஜஸ்தான் அணி ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அதனாலேயே உனத்கட்டுக்கு பல கோடிகளை கொட்டி வாங்கிப் போட்டது. ஆனால், அவரால் எதிர்பார்த்த அளவுக்கு பர்ஃபார்ம் செய்ய முடியவில்லை. அதனாலேயே சக்காரியா மாதிரியான இளம் பௌலரை ஏலத்தில் எடுத்தது. முதல் போட்டியிலேயே அணியின் எதிர்பார்ப்பை சக்காரியா பூர்த்தி செய்திருக்கிறார்.

தொடர்ந்து சக்காரியாவுக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படும்பட்சத்தில் இந்த சீசனின் சென்சேஷனாக நிச்சயம் சக்காரியா உருவெடுப்பார்.

Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு