DY Patil மைதானத்தில் நடந்த முந்தைய போட்டி ஒரு ஹை ஸ்கோரிங் கேமாக அமைந்தது. நேற்றைய RCB vs KKR போட்டியும் அதே போன்ற ஒன்றாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்க ஒரு லோ ஸ்கோரிங் த்ரில்லராக முடிந்தது அப்போட்டி. இரண்டு அணி பௌலர்களும் முதல் ஆறு ஓவர்களுக்குள் விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் இதற்கான முக்கிய காரணம். குறிப்பாக முந்தைய போட்டியை போலல்லாமல் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது.
ஆகாஷ் தீப் இம்முறையும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் பவர்பிளேவில் அவர் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகள் ஆர்.சி.பி அணியை உடனடியாக போட்டிக்குள் கொண்டுவந்தது. மிடில் ஓவர்களில் ஹஸரங்காவின் பந்துவீச்சு அபாரம். வெறும் 20 ரன்கள் கொடுத்து நான்கு ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர். சாஹலுக்கு மாற்றாக சுமார் 10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஹஸரங்கா தன் முக்கியத்துவத்தை உணர்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷல் படேலை பற்றி சொல்லத்தேவையில்லை.முதல் இரண்டு ஓவர்களை விக்கெட் மெய்டனாக வீசி கொல்கத்தாவின் ரன்களை மொத்தமாக கட்டுப்படுத்தினார். ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே போட்டியில் இரண்டு மெய்டன்களை வீசிய இரண்டாவது வீரர் ஹர்ஷல் படேல். இச்சாதனையை முதலாவதாக செய்தவரும் பெங்களூரு அணியின் சிராஜ் தான், அவரும் இதே கொல்கத்தா அணிக்கு எதிராகதான் இதை நிகழ்த்தியிருந்தார்.
ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா பேட்டர்கள் ஒவ்வொருவராக பெவிலியன் திரும்பிக்கொண்டிருக்க உமேஷ் யாதவ்-வருண் சக்கரவர்த்தி இருவரும் தான் 10-வது விக்கெட்டிற்காக அந்த அணியின் அதிகபட்ச பார்ட்னெர்ஷிப்பைபே அமைத்தனர். கொல்கத்தாவை அணியை போன்றே ஆர்.சி.பி அணியும் பவர்பிளேவிற்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இப்படி இருக்க அடுத்துகளமிறங்கிய இருபெரும் அதிரடி பேட்டர்கள் தட்டுப்பாட்டத்தை கையில் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்க முனைந்தனர்.

தொடர்ந்து அறிய கீழுள்ள வீடியோவை காணுங்கள்.