Published:Updated:

கிருஷ்ணப்ப கெளதம், மொயின் அலி, புஜாரா... சென்னை சூப்பர் கிங்ஸின் தேர்வுகள் சரியா?! #IPLAuction

மொயின் அலி
மொயின் அலி

மொயின் அலிதான் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டவராக இருப்பார் என எதிர்பார்க்க, ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல் தத்தளித்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிருஷ்ணப்ப கெளதமை 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிதாண்டியும் நடந்தது. 292 வீரர்களில் மொத்தம் 57 வீரர்கள் இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தின் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச், அலெக்ஸ் கேரி, மார்னஸ் லாபுஷேன், மேத்யூ வேட் என முக்கிய வீரர்களை எந்த அணிகளும் இன்றைய ஏலத்தில் கண்டுகொள்ளவேயில்லை.

இந்தமுறை ஏலம் போவது கஷ்டம்தான் எனக் கணிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை அவரது ஆரம்பவிலையான 2 கோடியில் இருந்து 2.20 கோடிக்கு உயர்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்தது.

19 கோடியோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் கிளென் மேக்ஸ்வெல்லை வாங்கக் கடும்போட்டியில் இறங்கியது. ஆனால், இறுதியில் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை பெங்களூரு தட்டிகொண்டுபோய்விட்டது. இதனால் ஐந்தாவது ஸ்லாட்டில் பேட்டிங்கும் செய்து, சுழற்பந்தும் வீசக்கூடிய மொயின் அலியைத் தவறவிட்டுவிடக்கூடாது என முடிவெடுத்து அவரை வாங்கப்போட்டிபோட்டது. பஞ்சாப் கிங்ஸும், சென்னை சூப்பர் கிங்ஸோடு விடாமல் மோத இறுதியில் மொயின் அலியை 7 கோடிக்கு வாங்கியது சென்னை.

மொயின் அலிதான் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டவராக இருப்பார் என எதிர்பார்க்க, ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல் தத்தளித்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிருஷ்ணப்ப கெளதமை 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. ஒரு அன்கேப்ட் ப்ளேயரை மிகப்பெரியத் தொகைக்கு வாங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் இருந்த கிருஷ்ணப்ப கெளதம் இரண்டே போட்டிகளில்தான் விளையாடினார். ஒரே ஒரு விக்கெட்தான் எடுத்தார். 2019 சீசனிலும் 1 விக்கெட்தான் எடுத்தார் கெளதம். பேட்டிங்கிலும் கடந்த சீசனின் டாப் ஸ்கோர் 22 ரன்கள் மட்டுமே. ஆஃப் ஸ்பின்னர் கட்டாயத்தேவையாக இருந்ததால் அனுபவமிக்க கெளதமை விடாமல் துரத்திப்போய் 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு எடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கிருஷ்ணப்ப கெளதம் - தோனி
கிருஷ்ணப்ப கெளதம் - தோனி

இந்த ஏலத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கு எந்தப் போட்டியும் இல்லாமல் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். புஜாராவை ஏலத்தில் எடுத்ததற்கு எல்லா அணிகளும் கைதட்டி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வாழ்த்துகள் தெரிவித்தன.

வெளிநாட்டு வீரர்கள் 8 பேர்தான் ஒரு அணிக்குள் இருக்கமுடியும் என்பதால் சென்னையின் வெளிநாட்டு கோட்டா மொயின் அலியோடு முடிந்துவிட்டது.

அதன்பிறகு சிறு சிறு தொகைக்கு இளம் வீரர்களை எடுத்தது சிஎஸ்கே. ஆந்திராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷங்கர் ரெட்டியை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

புஜாரா
புஜாரா

அடுத்து அதே ஆந்திரா அணியைச் சேர்ந்த கே பகத் வர்மாவை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. ஐதரபாத்தைச் சேர்ந்த 22 வயது பகத் வர்மா ஆஃப் ஸ்பின்னர். கேரம் பால் வீசுவதில் சிறந்தவரான பகத் வர்மா ரவிச்சந்திரன் அஷ்வினின் தீவிர ரசிகர்.

தமிழகத்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஹரி நிஷாந்த்தை முதல் சுற்றில் கண்டுகொள்ளாமல்விட்ட சிஎஸ்கே நிர்வாகம் இரண்டாவது சுற்றில் 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

இதோடு சென்னையின் 25 வீரர்கள் கோட்டா முடிந்தது. வெளிநாட்டு வீரர்கள் ஸ்லாட்டில் மொயின் அலி, இந்திய வீரர்கள் ஸ்லாட்டில் கிருஷ்ணப்ப கெளதம், புஜாரா, ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா, ஹரி நிஷாந்த் என ஐந்து வீரர்களை எடுத்திருக்கிறது சிஎஸ்கே.

ஹரி நிஷாந்த்
ஹரி நிஷாந்த்

இப்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜெகதீசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த் என மூன்று தமிழக வீரர்கள் இருக்கிறார்கள்.

இன்றைய ஏலத்தில் அதிகத்தொகைக்கு எடுக்கப்பட்ட மூன்று வீரர்களில் புஜாராவைத்தவிர மற்ற வீரர்களின் தேர்வு சென்னைக்கு அவசியமானதே. புஜாராவை ஏன் எடுத்தார்கள் என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது. சென்னைக்கு ஷேன் வாட்சன் போன்று ஓப்பனிங்கில் இறங்கி ஆடக்கூடிய பவர்ஹிட்டர்தான் தேவை எனும் புஜாரா ப்ளேயிங் லெவனுக்குள் பொருந்துவாரா என்பதும் சந்தேகம்தான்.

அடுத்த கட்டுரைக்கு