Published:Updated:

சூப்பர் ஓவரில் மும்பையை சம்பவம் செய்த சைனி யாரின் வளர்ப்பு தெரியுமா?! #NavdeepSaini #IPL

#NavdeepSaini
#NavdeepSaini

பொலார்ட் எனும் கோலியாத்தை களத்தில் துணிந்து சந்தித்து, நேருக்கு நேர் நின்று வீழ்த்தியிருக்கிறார் பொடியன் சைனி.

அதிகப்படியான புழுக்கம் மழையைத் தருவிப்பதைப்போல, நெருக்கடி மிகுதியான தருணங்களில் எல்லாம் ஒரு தலைவன் உருவாகி வெளியே வருவான். இப்படித்தான் நேற்று நவ்திப் சைனியும் ஆர்சிபியின் தலைவனாக உருவெடுத்து உயர்ந்து நின்றார்.

பெங்களூரு பெளலர்ஸ் இத்தனை ஆண்டுகாலமும் வள்ளலாக இருந்து ரன்களை வாரிக்கொடுத்துத்தான் பழக்கம். ஆனால் பொலார்ட் எனும் கோலியாத்தை களத்தில் துணிந்து சந்தித்து, நேருக்கு நேர் நின்று வீழ்த்தியிருக்கிறார் பொடியன் சைனி. #NavdeepSaini

Navdeep Saini
Navdeep Saini
AP
சூப்பர் ஓவரில் மும்பை 7 ரன்கள் மட்டுமே அடித்ததைப் பார்த்ததும் அம்பானிக்கு கனவு கலைந்திருக்கும். விஜய் மல்லையாவுக்கு மனது நிறைந்திருக்கும்.

காலங்காலமாக, ஆர்சிபி சந்தித்து வரும் டெத்ஒவர் பெளலிங் பிரச்னைகளுக்கு, சைனி ஒரு சர்வரோக நிவாரணியாக இருப்பார் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, ஆர்சிபி அணிக்காகவும், இந்திய அணிக்காகவும், ஆடி வருபவருக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வாய்ப்பு அமையவில்லை. நேற்று அது அட்டகாசமாக அமைந்தது. சன்ரைசர்ஸ் உடனான போட்டியில், ஒரே ஓவரில், 2 விக்கெட் எடுத்து அசத்தியவர் நேற்றைய சூப்பர் ஓவரின் மூலம், சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார். இந்த நிலையை அடைய சைனி கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல!

அடையாளம் கண்ட கெளதம் கம்பீர்!

சைனி கிரிக்கெட் பந்தில் ஆடும் ப்ரொஃபனஷல் கிரிக்கெட்டர் இல்லை. ஹரியானாவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடிவந்தவர். டென்னிஸ் பந்து தொடர்களில் விளையாடி ஒரு போட்டிக்கு 250 முதல் 500 ரூபாய் வரை சம்பாதித்து வந்தவருக்கு, கிரிக்கெட் பாலில் பந்துவீசத் தெரியாது.

#NavdeepSaini
#NavdeepSaini

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லி ரஞ்சி அணி வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது, அதில் நெட்பவுலராக பந்துவீசும் வாய்ப்பு சைனிக்குக் கிடைக்கிறது. ஆனால், கிரிக்கெட் பந்தில் எப்படிப் பந்துவீச வேண்டும் என்று குழம்பி நிற்கும் சைனியைப் பார்க்கிறார் டெல்லி அணியின் கேப்டன் கெளதம் கம்பீர். "வேகமும், டெக்னிக்கும் உன்னிடம் இருக்கிறது. டென்னில் பந்தில் எப்படி பந்துவீசுவாயோ, அதேபோல் வீசு... மற்றதெல்லாம் தானாக நடக்கும்" என்று ஊக்கப்படுத்தியவர் தொடர்ந்து சைனியின் பந்துவீச்சை கவனித்து வந்திருக்கிறார். டெல்லி அணியில் சைனியை விளையாட வைக்கவேண்டும் என்கிற அளவுக்கு கம்பீரின் மனதில் இடம்பிடித்துவிட்டார் சைனி. ஹரியானவில் பிறந்தவரை, அதுவும் டென்னிஸ் பால் பெளலரை எப்படி டெல்லி அணிக்கு விளையாட வைக்கமுடியும் எனப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. எல்லாவற்றையும் சமாளித்து டெல்லி அணிக்குள் சைனியை கொண்டுவந்துவிட்டார் கம்பீர்.

2013 டிசம்பரில் தனது முதல் ரஞ்சிப்போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடினார் சைனி. 2 விக்கெட்டுகள்தான் எடுத்தார். ஆனால், பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கமுடியாமல் திணறவைத்தார். இதனால் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி டெல்லி அணியில் நிரந்த இடம்பிடித்தார் சைனி.
#RCBvMI ஆம்ளே, பொம்ளே, அணில் கும்ப்ளே எல்லாம் வெறுத்துப்போய் இருக்கு சார்... ஜெயிச்சிடு கோலி சார்!

ஐபிஎல் கதவு திறந்தது!

2017-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில், இவரை டெல்லி அணி 10 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால், அந்த ஆண்டு விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், அந்த ஆண்டு நடந்த ரஞ்சி தொடரில் 8 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை எடுத்து பிரமிக்கவைத்தார் சைனி. இதனால் 2018-ம் ஆண்டு ஏலத்தில், இவரை எடுக்க பல அணிகள் முட்டி மோதின. பெங்களூருவுக்கு வெற்றி கிடைத்தது. ஆர்சிபி சைனியை 3 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனாலும், 3 கோடிக்கு வாங்கிவிட்டு அவரை பென்ச்சில்தான் உட்காரவைத்திருந்தார் கோலி.

#NavdeepSaini
#NavdeepSaini

இதற்கிடையே 2018-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டும் ப்ளேயிங் லெவனில் இடம்கிடைக்கவில்லை.

பெங்களூரு மரண அடி வாங்கிய 2019 ஐபிஎல்-ல் சைனிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 13 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் எடுத்தார். கோலி, சைனியை முதல்முறையாக கவனித்தார். இந்திய அணியிலும் கதவுகள் திறந்தன. சைனி திறமையான பெளலர் என அணிக்குள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை உலகுக்கு உணர்த்த கிடைத்த வாய்ப்புதான் இந்த மும்பைக்கு எதிரான போட்டி.

சரியான தருணத்தில் யார்க்கர், வைட் யார்க்கர், பவுன்சர் என பக்கா பிளானிங்கோடு பெளலிங் போட்டு மும்பையை சம்பவம் செய்துவிட்டார் சைனி. கோலிக்கு கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பு இது. சைனியை டெத் பெளலராகத் தொடர்ந்து பட்டை தீட்டினால்... அதேதான்... ஈ சாலா கப் நம்தே!

அடுத்த கட்டுரைக்கு