Published:Updated:

KKR v RR: ரிங்கு சிங்கின் அதிரடி, ராணாவின் முதிர்ச்சி; ஐந்து தோல்விகளிலிருந்து மீண்டுவந்த கொல்கத்தா!

KKR v RR

ஷிவம் மவியின் பந்தை ராக்கெட்டில் ஏற்றி மேலே அனுப்பினார் சஞ்சு. அந்தப் பந்து கீழே இறங்குவதற்குள் ஒரு டீ சாப்பிட்டே வந்திருக்கலாம் என்றாலும், டீப் மிட் விக்கெட்டில் நிற்பதால், பொறுப்புடன் நின்று அட்டகாசமாக அதை கேட்ச் பிடித்தார் ரிங்கு சிங்.

Published:Updated:

KKR v RR: ரிங்கு சிங்கின் அதிரடி, ராணாவின் முதிர்ச்சி; ஐந்து தோல்விகளிலிருந்து மீண்டுவந்த கொல்கத்தா!

ஷிவம் மவியின் பந்தை ராக்கெட்டில் ஏற்றி மேலே அனுப்பினார் சஞ்சு. அந்தப் பந்து கீழே இறங்குவதற்குள் ஒரு டீ சாப்பிட்டே வந்திருக்கலாம் என்றாலும், டீப் மிட் விக்கெட்டில் நிற்பதால், பொறுப்புடன் நின்று அட்டகாசமாக அதை கேட்ச் பிடித்தார் ரிங்கு சிங்.

KKR v RR
தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்து ஒரு வெற்றியைப் பெறுவது, அந்த அணியின் ஆட்டக்காரர்களுக்கு உற்சாகம் அளிக்கிறதோ இல்லையோ, அந்தந்த அணியின் ரசிகர்களை நிச்சயம் குதூகலப்படுத்தும். அதுவும் தொடரிலிருந்தே வெளியேறும் நிலைக்கு எல்லாம் சென்றுவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஒரு வெற்றி, அவர்களின் இருப்பை உறுதி செய்யும்போது அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சென்னையின் ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி அப்படியானது என்றால், 'எனி பிளாஸ்திரீஸ் டுடே?' எனக் கேட்டால் கொல்கத்தா ரசிகர்கள் ஹவுரா பிரிட்ஜிலிருந்து கத்துவது கேட்கும்.

இந்தத் தொடரில் சென்னை அளவுக்குக் கொல்கத்தாவின் பெர்ஃபாமன்ஸ் மோசமில்லை என்றாலும் தொடர்ந்து ஐந்து தோல்விகள், மொத்தம் ஆறு தோல்விகள், நேற்று கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் டேபிளில் சென்னையின் கீழ் சென்றிருக்க வேண்டிய நிலை. ஆனால், தெளிவாக, நிதானமாக, விக்கெட்டுகளை இழக்காமல் முதிர்ச்சியுடன் சேஸ் செய்து மேலேயிருந்த பஞ்சாபைப் பிடித்து கீழே இழுத்து ஏழாவது இடத்திற்கு புரோமோஷன் வாங்கியிருக்கிறது கொல்கத்தா.

KKR v RR
KKR v RR

டாஸில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பூ எனச் சொல்லி, அது பூவே விழ, பூப்பாதையாக ஃபர்ஸ்ட் பேட்டிங் எடுக்காமல் வழக்கம்போல சேஸிங் எனச் சிங்கப் பாதைக்கு வண்டியை விட்டார். வெற்றியின் விளிம்பிலேயே வந்து தோற்பதைவிடுத்து அத்தகைய ஆட்டங்களை இனி வெல்ல வேண்டும் என்று நடு கிரவுண்டில் உறுதிமொழியும் எடுத்தார். ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் வெங்கடேஷ் ஐயரை உட்கார வைத்துவிட்டு அனுகுல் ராய்க்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். அதேபோல ஹர்ஷித் ராணாவுக்கு பதில் ஷிவம் மவிக்கு ஜாக்பாட். அங்கே ராஜஸ்தான் அணியில் டேரில் மிச்செலுக்குப் பதில் கருண் நாயர் என்றார் சஞ்சு சாம்சன்.

ராஜஸ்தான் ஓப்பனர்களாக பட்லரும், படிக்கல்லும் உள்ளே வர, 'பட்லர் ஃபார்ம்ல இல்லாமயே 50 அடிப்பாரே' எனப் பிதியானார்கள் கொல்கத்தா ரசிகர்கள். ஆனால், பட்லர் 'சர்ப்ரைஸ்' என்பதாய் இன்று டெஸ்ட் மேட்ச் மோடில் பந்துகளை டீல் செய்தார். பவுண்டரியுடன் தொடங்கினாலும், 3வது ஓவரில் விழுந்த படிக்கல் விக்கெட், பட்லருக்கான சுதந்திரம் கிடைப்பதைத் தாமதப்படுத்தியது. உமேஷ் வீசிய அந்தப் பந்தை அவரிடமே கையில் கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினார் படிக்கல். பவர்பிளேயின் உள்ளாகவே உமேஷ் தன் விக்கெட் கணக்கைத் துவங்குவது இது முதல் முறையல்ல. பவர்பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என எப்போது பந்தைக் கொடுத்தாலும் கேமை மாற்ற உமேஷ் முயல்வது ஆரோக்கியமான விஷயம். இருந்தும் உள்ளே வந்த சாம்சன் தன் இருப்பைப் பதிவுசெய்ய, உமேஷின் அடுத்த ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்தார். பவர்பிளேயின் கடைசி பந்தில் பட்லர் சிக்ஸர் அடிக்க, 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

KKR v RR
KKR v RR

டிம் சவுத்தி வருவதற்காகக் காத்திருந்தது போலவே, பட்லர் 8வது ஓவரில் அவரின் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தும் அதே நடக்கும் என எதிர்பார்க்க, பட்லர் அடித்த பந்தை லாங் ஆனில் நின்றிருந்த ஷிவம் மவி வலது புறம் ஓடிச் சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார். 22 ரன்னில் பட்லர் அவுட்டானது ஆச்சரியமில்லை. ஆனால், அதற்கு அவர் எடுத்துக்கொண்டது 25 பந்துகள். தன் கரியரில் மிகச்சிறந்த ஃபார்மிலிருக்கும் பட்லர் இப்படித் திணறி ஆடிய இன்னிங்ஸ், நிச்சயம் ராஜஸ்தான் பேட்டர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கும். ஆனால், 'பந்தயத்தை விட்றாதடா' எனச் சண்டைச் சேவலாக ஒற்றை ஆளாகப் போராடத் தொடங்கினார் கேப்டன் சஞ்சு. கருண் நாயர், கிடைத்த வாய்ப்பைச் சொதப்பும் விதமாக, அனுகுல் ராயின் கடைசி ஓவரில் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை அடித்து பவுண்டரி ரோபிற்குக் கொஞ்சம் உள்ளே நின்றிருந்த ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 14 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை அடித்திருந்தது ராஜஸ்தான்.

6 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 80 ரன்கள் லட்சியம் என்று ஆடியிருக்க வேண்டிய ராஜஸ்தான், 60 ரன்கள் நிச்சயம் என மந்தமான மோடில் ஆடத் தொடங்கியது. 15வது ஓவரில் 5 ரன்கள், 16வது ஓவரில் 3 ரன்கள் என உருட்டத் தொடங்க, ராஜஸ்தான் ரசிகர்களோ, `இந்த லைவை நிறுத்திட்டு, பட்லரின் பழைய இன்னிங்ஸ் ஹைலைட்ஸை போடலாமே' எனக் கண்களைக் கசக்கினார்கள்.

பிரஷர் ஏறத் தொடங்க, ரியான் பராக், சவுத்தி வீசிய 17வது ஓவரில் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்திலும் அதிரடி காட்ட முயல, 'சும்மா சும்மாலாம் அடிக்கக் கூடாது சம்பந்தம்' என தன் அனுபவத்தைக் காட்டும் விதமாக, பராக்கின் விக்கெட்டைத் தூக்கினார் சவுத்தி. அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசிய ஷிவம் மவி, ஆஃபில் லெந்த் பால் ஆசை காட்ட, அதை ராக்கெட்டில் ஏற்றி மேலே அனுப்பினார் சஞ்சு. அந்தப் பந்து கீழே இறங்குவதற்குள் ஒரு டீ சாப்பிட்டே வந்திருக்கலாம் என்றாலும், டீப் மிட் விக்கெட்டில் நிற்பதால், பொறுப்புடன் நின்று அட்டகாசமாக அதை கேட்ச் பிடித்தார் ரிங்கு சிங்.

KKR v RR
KKR v RR

உள்ளே வந்த ஹெட்மெயர் தன் பங்குக்கு இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க, 20 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்தது ராஜஸ்தான். ஒரு கட்டத்தில் 180 ரன்கள்வரை சாத்தியம் என்றிருந்த கணிப்புகளைப் பொய்யாக்கி ஒரு சுமாரான டார்கெட்டை கொல்கத்தா கையில் கொடுத்தது ராஜஸ்தான். 'இதை வெச்சிட்டு கீழ் திருப்பதி வரைக்கும்கூட போக முடியாதே' என ராஜஸ்தான் பௌலிங் படை சிணுங்க, இருந்தும் போராடக் களமிறங்கினர். காரணம் கொல்கத்தாவின் டாப் ஆர்டரை சாய்த்துவிட்டால், ஏற்கெனவே ஆட்டத்தில் இருக்கும் அவர்களின் மிடில் ஆர்டர் மொத்தமாகச் சரிந்துவிடும். அதை நிகழ்த்திக் காட்டுவதுதான் ராஜஸ்தானின் அஜெண்டாவாக இருந்திருக்கும். ஆனால், நடந்ததோ வேறு!

ஓப்பனிங்கில் ஃபின்ச்சுடன் சர்ப்ரைஸாக பாபா இந்திரஜித் களமிறங்கினார். ராஜஸ்தான் பௌலர்களான டிரென்ட் போல்ட்டும், பிரசீத் கிருஷ்ணாவும் டைட் லைனிலேயே வீசி பேட்டர்களுக்கு பிரஷரை ஏற்றினர். 4வது ஓவரை வீசவந்த குல்தீப் சென், தன் இரண்டாவது பந்திலேயே ஃபின்ச்சின் ஸ்டம்புகளைத் தகர்த்தார். அடுத்த ஓவரிலும் போல்ட் டைட்டாக வீசி கூடுதல் பிரஷர் ஏற்ற, தொடர்ந்து வந்த பிரசீத் கிருஷ்ணாவின் ஓவரில் ஸ்கூப் ஷாட்டெல்லாம் அடித்து பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் பாபா இந்திரஜித். 'ஓ நீ இப்படி வர்றியா?' என ஃபைன் லெக் பக்கம் ஆளைப் போட்டு, புல் ஷாட்டுக்கு ஏதுவாக ஒரு அரை மனது பவுன்சரை இறக்கினார் பிரசீத். எதிர்பார்த்த அந்த புல் ஷாட்டையே இந்திரஜித்தும் ஆட, ஃபைன் லெக்கில் புதிதாக முளைத்திருந்த அஷ்வின் கேட்சைப் பிடித்தார். நிதிஷ் ராணாவும், ஸ்ரேயாஸும் களத்தில் ஜோடி சேர்ந்தனர்.

KKR v RR
KKR v RR

ஆனால், ஸ்பின்னர்களுக்கே முன்னுரிமை அளித்த சஞ்சு, அஷ்வினையும், சஹாலையும் மூன்று ஓவர்கள் வீச வைத்தார். 7, 6, 4 என சிங்கிள் டிஜிட்டலியே அந்த மூன்று ஓவர்களில் ரன்கள் வர, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்துக்குள் வர முயன்றது ராஜஸ்தான். 10 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்களை இழந்து தவித்தது கொல்கத்தா.

அப்போதுதான் அஷ்வின் வீச வந்த 11வது ஓவரில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தினார் நிதிஷ் ராணா. முதல் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி, இரண்டாவது பந்தில் நேரான ஸ்வீப்பில் ஒரு சிக்ஸர், மீண்டும் மூன்றாவது பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி என பிரஷரை பன்மடங்காகக் குறைத்தார். கொட்டாவி விடத் தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்கள் எனர்ஜி டிரிங் குடித்ததாய் நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

அடுத்த ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸர், அதற்கடுத்த ஓவரில் ராணா ஒரு பவுண்டரி என ரன்ரேட் கணக்குக்கு இவர்கள் ஆடத் தொடங்க, போல்ட் லெக் சைடில் ஒரு ஷார்ட் பாலை வீசினார். ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டில் பட்டதாகவே அனைவரும் உணர, அந்த எட்ஜ்ஜை கீப்பர் சாம்சன் கேட்சாக மாற்றி அப்பீல் செய்தார். அம்பயர் வைடு சிக்னல் கொடுக்க டிஆர்எஸ் என சண்டைக்குத் தயாரானார் சாம்சன். வெற்றி அவருக்கே கிடைத்தது. கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் 34 ரன்களில் அவுட். 13 ஓவர்கள் முடிவில் 96/3 என ரசிகர்களுக்குச் சற்றே கிலியைக் கிளப்பியது கொல்கத்தா. களத்தில் 24 வயதேயான ரிங்கு சிங்கும், கொஞ்சம் சீனியர் பிளேயரான நிதிஷ் ராணாவும்!

KKR v RR
KKR v RR
அடுத்த இரண்டு ஓவர்கள், வெண்பொங்கல் சாப்பிட்ட திங்கள் கிழமை காலையாக நகர, தேவைப்படும் ரன்ரேட் சற்றே ஏற்றம் கண்டது. தற்போது 30 பந்துகளில் 46 ரன்கள் தேவை. வெளியே ரஸல், நரைன் போன்றோர் இருக்கிறார்கள் என்பதால் இந்த ரன்ரேட் ஏற்றம் எவ்வித பிரஷரையும் கூட்டவில்லை. ஆனால், அவர்கள் எல்லாம் எதற்கு என ரிங்கு சிங்கே ஆட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் அல்லது ஒரு சிக்ஸர் என கணக்குப் போட்டு அடிக்கத் தொடங்கினார்.

இங்கேதான் சஞ்சுவின் கேப்டன்சியின் அனுபவமின்மை வெளிச்சத்துக்கு வந்தது. சஹாலின் 4 ஓவர் கோட்டாவை விக்கெட்டுகள் வீழ்ந்தபோது முடித்திருக்காமல், 18வது ஓவரை வீச அவரை அழைத்தார். அந்த ஓவரில் 13 ரன்கள். கூடுதல் துயரமாக எல்பிடபுள்யூ-விற்கு ஒரு க்ளோஸ் கால். ஆனால், டிஆர்எஸ் எடுக்க மறுத்துவிட்டார் சஞ்சு. ரீப்ளேயில் அது அம்பயர் கால்தான் எனத் தெரிந்தாலும், இப்படியான முக்கியமான கட்டத்தில் வாய்ப்பிருந்தும் அவர் ரிவ்யூவை எடுக்காதது ஆச்சரியமாக இருந்தது.

2 ஓவர்களில் 18 ரன்கள் தேவை. பிரசீத் கிருஷ்ணாவுக்கு ஒரு ஓவர், குல்தீப் சென்னுக்கு ஒரு ஓவர் என சஞ்சு கணக்குப் போட, 'அப்படியெல்லாம் சிரமம் வேண்டாம்' என பிரசீத்தின் ஓவரிலேயே கிட்டத்தட்ட ஆட்டத்தை முடிக்கப் போய்விட்டார் ரிங்கு. அந்த ஓவரை டைட் லைனில் வீச பிரசீத் பிளான் போட, 'ஒரு ஸ்கூப் எப்படியாவது அடிச்சடணும்' என ஆஃப் சைடே சென்று கொண்டிருந்தார் ரிங்கு. அவரைத் துரத்தியவாறே பிரசீத் பால் போட, வைடுகள் மட்டுமே கிடைத்தன. மிஸ் ஃபீல்டில் ஒரு பவுண்டரி, ஒரு வைடுக்கு டிஆர்எஸ் ரிவ்யூ, யார்க்கர் லெந்த் பாலில் பவுண்டரி என ரிங்கு தொட்டதெல்லாம் பொன்னானது. 19வது ஓவர் முடிவில் ஸ்கோரும் லெவலானது. குல்தீப் சென்னிடம் 20வது ஓவர். மெய்டன் வந்தாலே சூப்பர் ஓவர்தான் என்னும்போது 'இந்த படையப்பா அவ்ளோ டைம் எல்லாம் எடுத்துக்க மாட்டான்' என்பதாக முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து கேமை முடித்தார் ராணா.

ராணா ஒரு பக்கம் ஆங்கரிங் ஆட, இளம் வீரரான ரிங்கு சிங், தன் வாழ்நாளில் மறக்க முடியாத, அதே சமயம் தன் கரியருக்கு என ஒரு மிக முக்கியமான இன்னிங்ஸை ஆடியிருந்தார். 23 பந்துகளில் 42 ரன்கள், இரண்டு முக்கியமான கேட்சுகள் என ஆட்டநாயகன் விருது அவரைத் தேடி வந்தது. உத்தரப்பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்த ரிங்குதான் அங்கிருந்து வந்து ஐபிஎல் ஆடும் முதல் வீரர்.

அதை உருக்கமாகப் பதிவு செய்த ரிங்கு, "நாங்கள் ரஞ்சி போட்டிகள் ஆடியிருந்தாலும், ஐபிஎல்லின் பிரஷர் அதில் இல்லை. ஐந்து வருடங்களாக எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போது நான் என் அணிக்காகப் பங்களித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மெக்கல்லம், ராணா இருவருமே என்னை நிற்கச் சொல்லி ஆட்டத்தை முடித்துக்கொடுக்குமாறு அறிவுரை வழங்கினர். அதையே நான் செய்திருக்கிறேன்" என மகிழ்ச்சிப் பொங்கக் கூறினார்.

இந்தத் தோல்வியால் பாயின்ட்ஸ் டேபிளில் ராஜஸ்தானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெற்றி நிச்சயம் கொல்கத்தாவிற்கு ஒரு பெரும் நம்பிக்கையை அளித்திருக்கும். இது சென்னையின் பிளேஆஃப் கனவுக்குத்தான் பிரச்னை!