Published:Updated:

கேன் வில்லியம்சன்: தனி ஒருவன் நினைத்துவிட்டால்... சூப்பர் ஓவரில் தோற்றாலும் இவர் சூப்பர்மேன்தான்!

கேன் வில்லியம்சன் ( AP )

பல போட்டிகளில் பார்த்துப் பழகிய காட்சிதான் மறுபடியும் அரங்கேறியது டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் சமீபத்தில் ஆடிய போட்டியிலும். இருவராக ஆட வேண்டிய ஆட்டத்தை, வில்லியம்சன் ஒருவர் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தார்.

கேன் வில்லியம்சன்: தனி ஒருவன் நினைத்துவிட்டால்... சூப்பர் ஓவரில் தோற்றாலும் இவர் சூப்பர்மேன்தான்!

பல போட்டிகளில் பார்த்துப் பழகிய காட்சிதான் மறுபடியும் அரங்கேறியது டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் சமீபத்தில் ஆடிய போட்டியிலும். இருவராக ஆட வேண்டிய ஆட்டத்தை, வில்லியம்சன் ஒருவர் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தார்.

Published:Updated:
கேன் வில்லியம்சன் ( AP )
இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில், ஒரு குதிரை சண்டியாய் ஓட மறுக்க, அதையும் இழுத்துக் கொண்டு ஓடும் இன்னொரு குதிரையின் நிலைமையைப் போல்தான், பல போட்டிகளில் தனியாகப் போராடிக் கொண்டிருப்பார் வில்லியம்சன்.

Fabulous Four-ல் ஒருவர், பேக் ஃபுட் ஷாட்களின் சாகசக்காரர், நான்காம் இன்னிங்ஸின் நாயகன் என இவரது ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் அடைமொழிகள் பல உண்டு. எனினும் இவரது இயல்பை இன்னமும் தெளிவாகக் குறிக்கும் வார்த்தை, 'ஆபத்பாந்தவன்'. எப்பொழுதெல்லாம், இவரைச் சார்ந்த அணி நெருக்கடியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம், அதனை மீட்க ஒற்றை மனிதனாகப் போராடும் போராளிதான், கேன் வில்லியம்சன். ஆடுவது டெஸ்ட் போட்டியோ, ஒருநாள் போட்டியோ, டி20யோ, எந்த ஃபார்மட்டாக இருந்தாலும், தனது தனித்துவத்தால், வியத்தகு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் வில்லியம்சன். டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக மட்டும் ஒரு போராட்டமான இன்னிங்ஸை ஆடிவிடவில்லை, அவரின் பெரும்பாலான கிரிக்கெட் நாள்கள் முழுவதும் தன்னந்தனிப் போராட்டம் நிறைந்ததே! உலகக் கிரிக்கெட் அரங்கில், தனிஒருவனாக, அணிக்காக அவர் அரங்கேற்றிய 'ஒன் மேன் ஷோ' களக்காட்சிகளில் ஒருசில இங்கே!

Kane Williamson | கேன் வில்லியம்சன்
Kane Williamson | கேன் வில்லியம்சன்
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2014 - மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 161 ரன்கள்

கேன் வில்லியம்சனின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, ஹோம் கிரவுண்டிலேதான் ஆதிக்கம் செலுத்துவார் என்பது. அப்படிப் பேசுபவர்கள் வில்லியம்சன் ஆடிய இந்த இன்னிங்ஸைக் காணாதவர்களாகத்தான் இருப்பார்கள். பிரிட்ஜ்டவுனில் நடந்தது இந்தப் போட்டி. முதலில் ஆடிய நியூசிலாந்து, 293 ரன்களைக் குவித்தது. முதல் இன்னிங்சில், 68 பந்துகளில், 43 ரன்களைக் குவித்திருந்தார், வில்லியம்சன். அவருக்கு உறுதுணையாக டெய்லர், மெக்கல்லம், நீசம் ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை ஆடிச் சென்றிருந்தனர். பதில் தாக்குதல் நடத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 317 ரன்களைக் குவித்தது‌. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது நியூசிலாந்து. ஓப்பனர் டாம், டக் அவுட்டாக, ஒன்டவுனில் இறங்கினார் வில்லியம்சன். மறுமுனையில், நீசமைத்தவிர மற்றவர்கள், கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லாமல், ஆட்டமிழந்து கொண்டே சென்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெகு பொறுப்பான ஒரு ஆட்டத்தை அன்று ஆடினார், வில்லியம்சன். ராஸ் டெய்லர் தவிர்த்து மற்ற அத்தனை மத்தியவரிசை வீரர்களுடனும் 50 ரன்களுக்கும் அதிகமான பார்ட்னர்ஷிப் ரன்களைச் சேர்த்திருந்தார். இதில் அதிகமான ரன்கள் வில்லியம்சனிடமிருந்து வந்ததென சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் போட்டியில், தன்னுடைய ஏழாவது சதத்தை நிறைவு செய்தார் கேன் வில்லியம்சன். ரோச், ஹோல்டர் ஆகியோர் வேகத்தால் மிரட்ட, பென் சுழலால் பயங்காட்டினார். கிட்டத்தட்ட 87 ஓவர்கள் களத்தில் நின்ற வில்லியம்சன், 22 பவுண்டரிகளைச் சேர்த்திருந்தார். இந்தப் போட்டியில், ஃபிளிக் ஷாட்டுகளை அவ்வளவு நேர்த்தியாக ஆடியிருப்பார் வில்லியம்சன். 24 வயதே ஆன ஒருவரால் இவ்வளவு பக்குவப்பட்ட ஓர் ஆட்டத்தை ஆட முடியுமா என அனைவரையும் வியக்க வைத்த இன்னிங்ஸ் அது. கிட்டத்தட்ட ஒன்றரை நாள்கள் முழுவதும் நின்ற வில்லியம்சன், மெக்கல்லம் டிக்ளேர் செய்யாவிட்டால், இன்னமும் இரண்டு நாள்கள்கூட களத்தில் நின்றிருப்பார். 271 பந்துகளில், 161 ரன்களை வில்லியம்சன் சேர்த்திருந்தார். இது அந்த இன்னிங்ஸில் அணி அடித்திருந்ததில், 49 சதவிகித ரன்களாகும். இதன் மூலமாக, 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது நியூசிலாந்து.

சதம் விளாசிய கேன் வில்லியம்சன்
சதம் விளாசிய கேன் வில்லியம்சன்

2018 - இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 112* ரன்கள்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை நூலிழையில் தவறவிடுவது நியூசிலாந்துக்கு வழக்கமான ஒன்றுதான், பழக்கமான தோல்விதான். இந்தப் போட்டியிலும், இதுதான் நடந்தது. 234 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது நியூசிலாந்து. குப்டிலின் விக்கெட் இரண்டாவது ஓவரிலேயே போய்விட, போட்டியின் சரிபாதி ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே, ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து. விக்கெட்டுகள் மறுமுனையில் விழுந்துகொண்டே இருப்பது, ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தும். நம்பிக்கையின் அடிவாரத்தையே ஆட்டிப் பார்க்கும். ஆனால் வில்லியம்சனிடம் இதெல்லாம் நடக்கவே நடக்காது. முன்ரோவுடனான பார்ட்னர்ஷிப்பில் மட்டுமே 70 ரன்கள் வந்தது. அடுத்துவந்தவர்கள் எல்லாம் 8,0,0,3 என மோசமாக ஆடி வெளியேறினர். ஆனால், விடாப்பிடியாய் நின்ற வில்லியம்சன், சான்ட்னருடன் இணைந்து, 96 ரன்கள் பார்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். கடைசியில் சான்ட்னர் ரன்அவுட்டாக, மறுபடியும் தனியாளாக வில்லியம்சன் போராட, இறுதியில், வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது நியூசிலாந்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2019 - இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில், 95 ரன்கள்

இந்தியா 179 ரன்களை முதலில் குவிக்க, இரண்டாவதாக ஆடிய நியூசிலாந்தில் குப்டில் மட்டுமே 31 ரன்கள் என 20 ரன்களுக்குமேல் எடுத்திருந்த ஒரே பேட்ஸ்மேன். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 48 பந்துகளில் 95 ரன்களைக் குவித்திருந்தார் வில்லியம்சன். துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் டையில் முடிய, சூப்பர் ஓவருக்குப் போனது போட்டி. பும்ராவின் பந்துகளைச் சந்தித்த வில்லியம்சன், ஓவர் த ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸரையும், பின் ஒரு பவுண்டரியுடனும் 17 ரன்களுக்கு ஸ்கோரை எடுத்துச் சென்றார். எனினும், ஹிட்மேனின் இரண்டு சூப்பர் ஹிட் சிக்ஸர்களால் இந்தியாவுக்கு வெற்றி வசப்பட்டது. பிரதான போட்டியில் போராடுவது மட்டுமின்றி, சூப்பர் ஓவரிலும் போராடுவதே வில்லியம்சனுக்கு விதிக்கப்பட்டது போலும். வில்லியம்சனின் போராட்டம் வீண், இதுவே தலையங்கங்களை அடிக்கடி அலங்கரிக்கும் செய்தியாய் இருந்து வருகிறது.

விராட் கோலி - கேன் வில்லியம்சன் #INDvENG
விராட் கோலி - கேன் வில்லியம்சன் #INDvENG

2018 - சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 84 ரன்கள்

183 என்ற இமாலய இலக்கை, சிஎஸ்கே, ரெய்னா, ராயுடு அதிரடியால் நிர்ணயிக்க, அடுத்து இறங்கிய சன்ரைசர்ஸில், யூசுஃப் பதானைத் தவிர, மற்ற எல்லோரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, வில்லியம்சன் அன்றும் போராடிக் கொண்டேதான் இருந்தார், 18-வது ஓவர்வரை! 51 பந்துகளில், 84 ரன்களைக் குவித்த வில்லியம்சன், பிராவோவின் பந்தில் வீழ, இறுதியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில், கோட்டைவிட்டது சன்ரைஸர்ஸ். 2017-ல் டில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 51 பந்துகளில் குவித்த 89 ரன்கள், 2018-ல் அதே டில்லிக்கு எதிராக 53 பந்துகளில் குவித்த 83 ரன்கள், 2019-ல் ஆர்சிபிக்கு எதிராக 43 பந்துகளில் குவித்த 70 ரன்கள் என இந்த மாஸ்டரின் மாஸ்டர்பீஸ்கள் ஏராளம் ஏராளம்.

சங்கிலித் தொடர் நிகழ்வுகள்

பல போட்டிகளில், மற்ற வீரர்களிடமிருந்து ஆதரவு கிட்டாது, அணி தோல்வியைத் தழுவுவதும், சோர்ந்த கவலை தோய்ந்த முகத்தோடு ஆட்டமிழக்காமல் வில்லியம்சன் களத்தில் நிற்பதும், அதைப் பார்த்து ரசிகர்கள் கண்கலங்குவதும், வாடிக்கையாகவே மாறிவிட்ட ஒன்று.

காலம் உருண்டோடினாலும், ஃபார்மெட்கள் மாறினாலும், களங்கள் பல கண்டாலும், ஆடும் அணி, எதிரணி எதுவாய் இருந்தாலும், வில்லியம்சனுக்கு இது மட்டும் மாறாமலே இருந்து வருகிறது. ஆனாலும், எப்பொழுதும் போல் அவர் சிரிக்கிறார், காண்பவர்களைக் கலங்க வைத்து! ஓர் உலகக் கோப்பையையே, ஒரு கணத்தில் சூப்பர் ஓவரில் தாரைவார்த்ததைவிட வேறெந்த வலி, பெரிதாக இருந்துவிடப் போகிறது?!

சண்டிக் குதிரைகள்

Williamson
Williamson
IPL

பல போட்டிகளில் பார்த்துப் பழகிய காட்சிதான் மறுபடியும் அரங்கேறியது டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் சமீபத்தில் ஆடிய போட்டியிலும். இருவராக ஆட வேண்டிய ஆட்டத்தை, வில்லியம்சன் ஒருவர் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தார். இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில், ஒரு குதிரை சண்டியாய் ஓட மறுக்க, அதையும் இழுத்துக் கொண்டு ஓடும் இன்னொரு குதிரையின் நிலையில்தான் இருந்தார் வில்லியம்சன். விராத் சிங் பந்துகளை வீணடிக்க, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், சப்போர்டிங் ரோலைக்கூட சரியாகச் செய்யாமல் வெளியேற, வில்லியம்சன் மட்டுமே வில் பவரோடு ஆடிக் கொண்டிருந்தார்.

முடிந்த அளவுக்கு, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார். ஸ்பின் பௌலிங்கைக் குறிவைத்துத் தாக்கி ரன்களைச் சேர்த்தார். பில்டப் ஆன பிரஸரை, பௌலர்கள் பக்கமே திருப்பிவிட்டார். பிட்ச் மிகவும் ஸ்லோ ஆனதால், பந்து பேட்டுக்குவர மிகத் தாமதமானதால், பேக்ஃபுட் ஷாட்டுகளை ஆடி, அதனை மிக அழகாகச் சமாளித்தார் வில்லியம்சன். ஸ்லோ டிராக்கில், சேஸிங் செய்யும்போது பேட்டிங் செய்வதற்கான ஒன்றரை மணிநேர சிறப்பு ஷார்ட்டைம் கோர்ஸ் போலத்தான் அது இருந்தது.

இன்டென்ட் என்னும் வார்த்தைக்கும் அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்தார். இத்தனை செய்தும், வெற்றி மட்டும் வசப்படவில்லை. வழக்கம்போல அவர் களத்தில் பேட் ஏந்தி நிற்கும் தருணத்தில், அவரது அணி தோல்வியைத் தழுவியுள்ளது. அவரது அரைசதம் வீணானது.

தனது 'தி பெஸ்ட்' ஆட்டத்தை ஆடி, தன்னால் இயன்ற அத்தனையையும் 100 சதவிகிதம் செய்தும், தான் சார்ந்திருக்கும் அணி வெற்றிக் கோட்டுக்கு அருகில் போய் போய் கோட்டை விடுவது எவ்வளவு பெரிய வேதனை?! அதனை ஆண்டுக்கணக்காய் அனுபவித்து வருகிறார் வில்லியம்சன்.

Kane Williamson
Kane Williamson

வீரர்கள் தேர்வில் தொடங்கி பல குளறுபடிகளால் சன்ரைசர்ஸ் வீழ்ந்தது அனைவரும் அறிந்ததே! சூப்பர் ஓவர்களில் இரண்டாவதாகவே வருவது சோர்வளிப்பதாக போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் கூறியிருந்தார் வில்லியம்சன். ஓர் உலகக்கோப்பையே ஒரு சூப்பர் ஓவருக்கு இரையாக கொடுத்ததன் வேதனையின் எச்சங்கள்தான் அந்த வார்த்தைகள். சூப்பர் ஓவரில் வென்றாலும், தோற்றாலும், சூப்பர்மேன்கள் சூப்பர்மேன்கள்தானே?!

Super overs does not deserve this superman!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism