Published:Updated:

IPL Fixing Scandal: 8 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட்டில் படிந்த கரை... அப்போது என்ன நடந்தது?

IPL Fixing Scandal

2000-ல் இந்திய கிரிக்கெட் சந்தித்த மேட்ச் ஃபிக்சிங் அவமானங்களுக்குப் பின், இது மிகப்பெரிய கறையாக, இந்தியக் கிரிக்கெட்டின் மேல் படிந்தது. ஐபிஎல்லே ஒட்டுமொத்தமாக தடைசெய்யப்பட வேண்டுமெனும் அளவிற்கு ரசிகர்கள் கொதித்துப் போனார்கள்.

IPL Fixing Scandal: 8 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட்டில் படிந்த கரை... அப்போது என்ன நடந்தது?

2000-ல் இந்திய கிரிக்கெட் சந்தித்த மேட்ச் ஃபிக்சிங் அவமானங்களுக்குப் பின், இது மிகப்பெரிய கறையாக, இந்தியக் கிரிக்கெட்டின் மேல் படிந்தது. ஐபிஎல்லே ஒட்டுமொத்தமாக தடைசெய்யப்பட வேண்டுமெனும் அளவிற்கு ரசிகர்கள் கொதித்துப் போனார்கள்.

Published:Updated:
IPL Fixing Scandal
ஒவ்வொரு ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களாலும், வாழ்நாளில் மறக்கவே முடியாத, நகக்கண்களில் விஷஊசி ஏற்றவதைப் போன்ற வலிதந்த விஷயம் 2013 ஸ்பாட் ஃபிக்சிங் புகாரும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும். சிக்கிய சின்ன மீன்கள் முதல் பெரிய திமிங்கலங்கள் வரை தோண்டத் தோண்ட, புதுப்புது பூதங்கள் கிளம்பி வந்து கொண்டே இருந்தன.

மே 15, 2013 - மும்பைக்கு எதிரான போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தது ராஜஸ்தான். பிளே ஆஃப்க்குத் தகுதிபெற வேண்டிய கட்டத்தில் கிடைத்த தோல்வி என்பதால், அழுதுபுலம்பி, அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு தூங்கி எழுந்த உடன், காலையில் அத்தனை செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஓடிய செய்தி, ரசிகர்களைப் பேரதிர்ச்சிக்கு எடுத்துச் சென்றது. ராஜஸ்தான் வீரர்கள் மூன்றுபேர், ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காக டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதே அத்தகவல்.

ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகிய மூன்று ராஜஸ்தான் வீரர்களுமே அதுவரை நடந்து முடிந்திருந்த போட்டிகளில், சிலவற்றில், குறிப்பிட்ட ஒரு ஓவரில், புக்கீஸ் என்ன சொன்னார்களோ அதைப்போல் செய்திருந்தனர் என்ற தகவல் கிடைத்திருந்தது. அதற்குரிய ஆதாரங்களையும் சேகரித்திருந்தது காவல்துறை. அதுவும் சமிக்ஞை மூலமாக, ஃபிக்சிங் செய்த ஓவரை வீசப்போவதை புக்கீஸுக்கு வீரர்கள் மறைமுகமாக உணர்த்தியிருந்ததையும், போட்டியுடைய வீடியோக்கள் சுட்டிக் காட்டின. இந்த ஒரு ஓவருக்காக லட்சக்கணக்கான பணத்தினை அவர்கள் புக்கீஸிடமிருந்து பெற்றதும் வெளிவந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கு - ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கு - ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரணமாக, பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில், இரண்டு ஓவர்களை மட்டுமே வீசி இருந்தார் ஸ்ரீசாந்த். அந்த முதல் ஓவரில், ஐந்து ரன்களை மட்டுமே கொடுத்திருந்தவர், அப்பொழுது எந்தத் துண்டையும் பேண்டில் சொருகி இருக்கவில்லை. ஆனால், அதற்கடுத்த ஓவர் வீச வந்தபோது, துண்டோடு வந்தார், அது, இப்பொழுது ஸ்பாட் ஃபிக்ஸ் செய்த ஓவரை வீசப் போகிறேன் என்று புக்கீஸுக்கு அவர் கொடுத்த சமிக்ஞை. அந்த ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகள் உட்பட 13 ரன்களைக் கொடுத்திருந்தார் ஸ்ரீசாந்த். 14 ரன்களைக் கொடுக்க வேண்டுமென்பதே புக்கீஸ்களுடனான ஒப்பந்தம். எனவே, 13 ரன்கள் மட்டுமே கொடுத்த தனக்கு பணம் கிடைத்துவிடுமா என்பதைப் பற்றி தனது நண்பரோடு ஸ்ரீசாந்த் சந்தேகத்தோடு பேசியிருந்த ஆடியோ ஆதாரம் போலீஸிடம் அகப்பட்டிருந்தது‌.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், மே 5 அன்று, ஜெய்ப்பூரில், புனேவுக்கு எதிரான ஒரு போட்டியில், ஒரு ஓவரை ஃபிக்ஸ் செய்து 14 ரன்களைத் தருவதற்காக, சண்டிலா 20 லட்சங்கள் முன்பணமாகப் பெற்று, அவ்வாறே செய்தும் முடித்திருந்தார். ஆனால், அவர்கள் கொடுக்கச் சொன்ன அந்த சமிக்ஞையை அவர் தர மறந்துவிட்டார். அதன் காரணமாக, அவர்களால் பெட்டிங்கில் ஈடுபட முடியாமல் போனதால், கொடுத்த பணத்தைத் திரும்பத் தருமாறு, புக்கீஸ் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆடியோ வீடியோ ஆதாரங்கள் எல்லாமும்தான் அவர்களுக்கு எதிரான பலமான சாட்சிகளாக வந்து நின்றன.

2000-ல் இந்திய கிரிக்கெட் சந்தித்த மேட்ச் ஃபிக்சிங் அவமானங்களுக்குப் பின், இது மிகப்பெரிய கறையாக, இந்தியக் கிரிக்கெட்டின் மேல் படிந்தது. ஐபிஎல்லே ஒட்டுமொத்தமாக தடைசெய்யப்பட வேண்டுமெனும் அளவிற்கு ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். டாமினோ விளையாட்டில், ஒன்றைத் தொட்டால், வரிசையாக அத்தனையும் விழுவதுபோல், மூன்று வீரர்களிடம் ஆரம்பித்தது, புக்கீஸ் தொடர்புடைய வேறு சிலநபர்கள் எனத் தொடர்ந்து, பல பெரியபுள்ளிகள் வரை கோட்டால் இணைத்தது.
ராகுல் டிராவிட் - ராஜஸ்தான் ராயல்ஸ்
ராகுல் டிராவிட் - ராஜஸ்தான் ராயல்ஸ்

'மேட்ச் ஃபிக்சிங்' என்பது ஒட்டுமொத்த போட்டியையையும் ஃபிக்சிங் செய்வது, 'ஸ்பாட் ஃபிக்சிங்' என்பதோ, போட்டியின் ஒரு குறிப்பிட்ட ஓவரை புக்கீஸ் ஃபிக்சிங் செய்வது, சர்ஜிகல் ஸ்ட்ரைக் போல. இங்கே, கிரிக்கெட் ஒருசிலருக்கு பொழுதுபோக்கு, ஒரு சிலருக்கு உயிர்மூச்சு, ஆனால், புற்றுநோய் செல்களாக நாடெங்கும் நிறைந்திருக்கும் புக்கீஸ்களுக்கு, பணத்தை வாரித்தரும் ஏடிஎம், அவ்வளவே! இதனால், இங்கே நடந்து கொண்டிருக்கும் விபரீதங்கள் பற்பல.

இந்த ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கோடு பெட்டிங் வழக்கு ஒன்று, இணையாகப் போடப்பட்டு, புக்கீஸுடனான தொடர்புக்காக, நடிகர் விந்து டாரா சிங் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்தவைதான் அதிர்ச்சி தரும் அதிரடிச் சம்பவங்கள்.

டாரா சிங்குடன் தொடர்புடைய பிசிசிஐயின் அப்போதைய பிரசிடன்ட் ஶ்ரீனிவாசனின் மருமகன் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இதனால் சிஎஸ்கேயின் ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதனால் பதறிய சிஎஸ்கே நிர்வாகம், மெய்யப்பனுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என அவசர அறிக்கை வெளியிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும், விசாரணை அதிகாரிகள் விடுவதாக இல்லை. ராஜஸ்தான் ராயல்ஸோடு, சிஎஸ்கேயையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். புக்கீஸுடன் மெய்யப்பனுக்குத் தொடர்பிருந்ததற்குரிய ஆதாரங்களும் சிக்கின. ஒரு குறிப்பிட்ட போட்டியில், பேட்டிங் ஆர்டரை மாற்றுமாறு, மெய்யப்பன் பயிற்சியாளர் ஃபிளமிங்கிடம் கூறியதும், அதன்பின் அந்தத் தகவலை அவர் புக்கீஸுகளுக்குக் கடத்தியதும் தெரியவர, அவரது தவறு ஊர்ஜிதமானது. இவர்களைத்தவிர ராஜஸ்தானின் முன்னாள் வீரரான அமித் சிங்கும் புக்கியாகச் செயல்பட்டது தெரியவந்தது. சித்தார்த் திரிவேதியையும் ஹர்மீத் சிங்கையும் புக்கீஸ் அணுகியதும் அதை அவர்கள் மறைத்ததும் தெரியவர, அவர்களிடமும் விசாரணை தொடங்கியது. இதற்கிடையில், ஸ்ரீசாந்துக்கும் சவானுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

குருநாத் மெய்யப்பன்
குருநாத் மெய்யப்பன்

பிசிசிஐக்கு தீராத அவப்பெயர் ஏற்படுத்திய இதைக் குறித்து விசாரிக்க, மூன்று நபர் குழுவை அமைத்தது பிசிசிஐ. ஆனாலும், பிசிசிஐ பிரசிடன்ட் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்பதில், ஸ்ரீனிவாசன் உறுதியாக இருந்தார். அவரிருக்கும் பட்சத்தில், விசாரணை எப்படி நியாயமானதாக இருக்குமென நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, அப்போதைய வைஸ் பிரசிடன்ட் அருண் ஜெட்லி மற்றும் ஐபிஎல் சேர்மேனாக இருந்த ராஜீவ் சுக்லாவும் இணைந்து கூட்டாக அறிக்கை விட்டனர். அதில், இந்த வழக்கிலிருந்து, ஸ்ரீனிவாசன் தள்ளி இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து பல நிகழ்வுகளுக்குப் பிறகு, ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்ய, வேறு வழியில்லாமல், ஸ்ரீனிவாசனும் தன் பதவியைத் தற்காலிகமாக ராஜினாமா செய்தார். ஜெக்மோகன் டால்மியா புது பிரசிடென்டாகப் பதவி ஏற்றார்.

ட்விஸ்டுகள் அதனோடு முடியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸின் கூட்டு உரிமையாளரான ராஜ் குந்த்ராவும், பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும், அணியின் முக்கியத் தலைவர்களே காரணமாக இருந்ததுதான், அணி வீரர்களின் இதயத்தில் இடியை இறக்கியது.

குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸின் அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட்டும் சிஎஸ்கே கேப்டன் தோனியும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். உள்ளே இருந்தே முதுகில் குத்திய, வீரர்கள் செய்த துரோகத்திற்கே கலங்கிப் போன டிராவிட்டுக்கு அணியின் உரிமையாளரின் பெட்டிங் விவகாரம், மேலும் வலியைத் தந்தது. தோனி, "2007 உலகக்கோப்பை தோல்வி தந்த வலிதான் பெரிதென நினைத்தேன், ஆனால் இது அதைவிட மோசமானதாக இருந்தது", எனப் பின்னாளில் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமின்றி, மேட்ச் ஃபிக்சிங் என்பது கொலைக்கு இணையான குற்றமெனக் குறிப்பிட்டிருந்தார்.

பிசிசிஐ ஏற்படுத்திய விசாரணை கமிஷன் இந்த இரு அணிகளுக்கும் சாதகமாகவே காய் நகர்த்தி, இவர்களை குற்றத்திலிருந்து விடுவிக்க, பீகார் நீதிமன்றத்தில், ஸ்ரீனிவாசனின் தலையீடு இருந்ததால், இது நியாயமாக நடத்திருக்குமென்ற நம்பிக்கையில்லை என பீகார் கிரிக்கெட் அசோஷியேசன் வழக்குப்பதிவு செய்தது. மறுபடியும் முதலிலிருந்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

தோனி, ஸ்ரீனிவாசன்
தோனி, ஸ்ரீனிவாசன்

இறுதியாக, உச்சநீதிமன்றம், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ஆர் எம் லோதாவின் தலைமையில், மூன்று நபர்கள் அடங்கிய முட்கல் கமிட்டியை ஏற்படுத்தி விசாரணையைத் தொடக்கியது. இந்தக் கமிட்டி சம்பந்தப்பட்ட அத்தனை நபர்களையும் ஒருவர் விடாமல் தெளிவாக விசாரித்தது. இருந்தாலும், அந்தக் கமிட்டியின் இடைக்கால அறிக்கையில், ராஜ் குந்த்ரா மற்றும் மெய்யப்பனைப் பற்றி குற்றஞ்சாட்டப்பட்டதே தவிர, ஸ்ரீனிவாசனின் மீது பெரிய குற்றச்சாட்டுகள் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், வழக்கின் மொத்த நகர்வுகளும், அவரைச் சுற்றித்தான் நகர்ந்து கொண்டிருந்தன. பிசிசிஐயிலிருந்து அவரை விலகி இருக்கச் சொல்லுதல், ஐசிசியில் இந்தியாவின் சார்பாகத் தொடரச்செய்தல், பின் அவரை வெளியேற்றுதல், பிசிசிஐ மீட்டிங்களில் கலந்துகொள்ளத் தடை, பின் அனுமதி என கண்கட்டுவித்தைக் காட்டிக் கொண்டிருந்தன நீதிமன்றத்தில் நடந்தேறிய விஷயங்கள்.

ஒருகட்டத்தில், கங்குலி, முட்கல் கமிட்டியில் இணைந்த பின், செயல்பாடுகள் வேகமெடுத்தன. இறுதியாக, முட்கல் கமிட்டி, தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய, அதில் ஸ்ரீனிவாசன் பெயரையும், ஐபிஎல்லின் முக்கிய அதிகாரி, சுந்தர் ராமனையும் தவறு செய்ததாகச் சேர்ந்திருந்தது. ஒருகட்டத்தில், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட, மூன்று வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கோர்ட் தள்ளுபடி செய்தது. மெய்யப்பனுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது.

இந்த வழக்கின் முடிவாக, ஜூலை 14, 2015-ம் ஆண்டு, ரசிகர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க விரும்பாத முடிவு எட்டப்பட்டது. சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. வீரர்கள் முதல் ரசிகர்கள்வரை எல்லோருக்கும் வேதனையளிக்கும் தருணமாக அது இருந்தது.
தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி, "சரி... மேலிடம் தவறு செய்தது, வீரர்கள் என்ன தவறு செய்தோம்?!" என்று கேள்வியெழுப்பி இருந்தார். இது அவரது மனதை மிகவும் பாதித்தாகவும் கூறியிருந்தார். அந்த இரண்டு ஆண்டுகளும் தோனி, ரெய்னா, டிராவிட் உள்ளிட்ட தங்கள் அணி வீரர்களை வேறு அணியில் பார்ப்பது ரசிகர்களுக்கு வேதனையளிப்பதாக இருந்தது. அதனால்தான், இரண்டாண்டுக்குப்பின் சிஎஸ்கே திரும்பிவந்த தருணம், அவர்களுக்கு மிக நெகிழ்ச்சியான, கண்களைக் கசியச் செய்வதாக மாறியது.

2000-மாவது ஆண்டு, மேட்ச் ஃபிக்சிங்கின் போது, ஏன் கங்குலியை அணுகவில்லை என்ற கேள்விக்கு, அவரை அணுக எங்களுக்கு அச்சமாக இருந்தது என்று பதிலளித்தாராம் புக்கீஸ்களில் ஒருவர். தீ கூட நெருங்க நடுங்கும் அந்த நேர்மையின் திமிர்தானே, எந்த ஒரு தொழிலிலும் அழகு. அதிலிருந்து பாதை பிறழும்போது, அதற்குரிய விளைவுகள், படுபயங்கரமாகத்தான் இருக்கும், தவறிழைப்போர், அதைச் சந்திக்கத் தயாராகத்தாகத்தானே இருக்கவேண்டும். அதை நிரூபித்ததே இந்த வழக்கும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism