Published:Updated:

IPL Nostalgia: 229 ரன்கள் ரெக்கார்ட் ப்ரேக்கிங் பார்ட்னர்ஷிப்... கோலி - ஏபிடியின் தீராத ரன் வேட்டை!

25 பந்துகளில் அரைசதத்தை கடந்திருப்பார் ஏபிடி. இதன்பிறகுதான் ஆட்டமே ஆரம்பித்தது. 10 ஓவர்களுக்குப் பிறகு, கியரை மாற்றி வீசிய எல்லா பந்துகளையும் விளாசும் மோடுக்குச் சென்றார் டீவில்லியர்ஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐபிஎல்-ஐ பொறுத்தவரைக்கும் 'நாங்க ரெண்டு பேர்....எங்களுக்கு பயம்னா என்னென்னே தெரியாது' என்கிற விரப்புடனே திரிபவர்கள் சூப்பர்மேன் டீவில்லியர்ஸும் கிங் கோலியும். இருவரும் சேர்ந்து செய்திருக்கும் சம்பவங்கள் எக்கச்சக்கம். அவற்றில் உச்சபட்சமான முரட்டு சம்பவம் எதுவென்று தேடிப்பார்த்தால் ரெக்கார்டுகள் 2016 சீசனில் குஜராத்துக்கு எதிரான போட்டியை கைக்காட்டுகின்றன. அந்தப் போட்டியில் கோலியும் டீவில்லியர்ஸும் 229 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் போட்டிருந்தனர். இருவருமே சதம் அடித்திருந்தனர். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் இதுதான் என்கிற சாதனையும் கோலி-டீவில்லியர்ஸ் பெயரில் எழுதப்பட்டது.

2016 சீசன் பெங்களூரு அணிக்கு மிகச்சிறப்பான சீசனாகவே இருந்தது. 2011 க்கு பிறகு இந்த சீசனில்தான் பெங்களூரு அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. அந்த பெங்களூரு அணியில் கெய்ல், வாட்சன் போன்ற பெரிய தலைகள் இருந்தபோதும் கோலியும் டீவில்லியர்ஸும் மட்டுமே இருபெரும் தூண்களாக அணியை தாங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் தங்கள் கரியரின் உச்சபட்ச ஃபார்மில் இருந்த நேரம் என்பதால் இந்த சீசனில் வெளுத்தெடுத்திருப்பார்கள். குஜராத்துக்கு எதிரான இந்த போட்டிக்கு முன்பாகவே கோலியும் டீவில்லியர்ஸும் சேர்ந்து மூன்று பெரிய பார்ட்னர்ஷிப் இன்னிங்ஸ்களை ஆடியிருந்தனர்.

கோலி - ஏபிடி
கோலி - ஏபிடி

சன்ரைசர்ஸுக்கு எதிராக இருவரும் சேர்ந்து 157 ரன்களை அடித்திருந்தனர். கோலி 75 ரன்களையும் டீவில்லியர்ஸ் 82 ரன்களையும் அடித்திருந்தனர். டெல்லிக்கு எதிராக 107 ரன்களை இருவரும் சேர்ந்து அடித்திருந்தனர். இந்தப் போட்டியிலும் இருவரும் அரைசதத்தை கடந்திருந்தனர். அதேமாதிரி, புனேவுக்கு எதிராகவும் இருவரும் சேர்ந்து 155 ரன்களை அடித்திருந்தனர். இந்தப் போட்டியில் கோலி 80 ரன்களையும் டீவில்லியர்ஸ் 83 ரன்களையும் அடித்திருந்தனர்.

மற்ற வீரர்களாக இருந்திருந்தால் இந்த இன்னிங்ஸ்கள்தான் தங்களுடைய பெஸ்ட் என முடிவு செய்து ஒரு திருப்திகரமான மனநிலைக்கு சென்றிருப்பர். ஆனால், கோலியும் டீவில்லியர்ஸும் அப்படி திருப்திபட்டுக்கொள்ளுமளவுக்கு சாதாரண வீரர்கள் இல்லையே! இருவரும் காட்டுப்பசியுடைய திமிங்கலங்கள், அவர்கள் திருப்திபட்டுக்கொள்ள இந்த துக்கடா இன்னிங்ஸ்களெல்லாம் போதவே போதாது. எதிரணியை மொத்தமாக வாரிச்சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டதால்தான் அந்த திமிங்கலங்களின் பசி ஓரளவுக்கேனும் அடங்கும். அப்படியான நேரத்தில் அவர்களிடம் சிக்கியது குஜராத் லயன்ஸ். வெறிபிடித்த வேங்கையாக குஜராத் அணியை மொத்தமாகக் காலி செய்துவிட்டனர்.

சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சில் பெங்களூரு அணி முதல் இரண்டு மூன்று ஓவர்களில் கொஞ்சம் திணறவே செய்தது. யுனிவர்சல் பாஸான கெய்லால் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடவே முடியவில்லை. 13 பந்துகளைச் சந்தித்தவர் வெறும் 6 ரன்களில் பிரவீன்குமாரின் ஓவரில் ஸ்டம்பைப் பறிகொடுத்து வெளியேறியிருப்பார். குஜராத் லயன்ஸ் கொஞ்சம் ஆசுவாசமடைந்த நேரத்தில் டீவில்லியர்ஸ் உள்ளே வந்தார். வந்த வேகத்திலேயே சிக்சர்தான்! சிக்சருடனேயே தன்னுடைய ரன்கணக்கை தொடங்கினார் டீவில்லியர்ஸ். அதிரடியாக ஆடுகிறோம் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு சுற்றாமல் ஏதுவான பந்துகளை மட்டும் க்ரவுண்டுக்கு வெளியே பறக்கவிட்டு சிறப்பாக ஆடியிருப்பார் டீவில்லியர்ஸ். 25 பந்துகளில் அரைசதத்தை கடந்திருப்பார். இதன்பிறகுதான் ஆட்டமே ஆரம்பித்தது. 10 ஓவர்களுக்குப் பிறகு, கியரை மாற்றி வீசிய எல்லா பந்துகளையும் விளாசும் மோடுக்குச் சென்றார் டீவில்லியர்ஸ்.

கோலி - ஏபிடி
கோலி - ஏபிடி

இந்தப் போட்டியில் குஜராத் லயன்ஸின் வழக்கமான கேப்டனான ரெய்னா ஆடவில்லை. அவருக்கு பதிலாக பிரண்டன் மெக்கல்லமே கேப்டன்சியை பார்த்துக்கொண்டிருந்தார். ஆம்! பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார். தன்னுடைய அத்தனை யுக்திகளையும் டீவில்லியர்ஸுக்கு எதிராக இறக்கிய பிறகும் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்யலாம் என ஷிவில் கௌசிக்கையும் பிரவின் தாம்பேவையும் கொண்டு வந்தால் பந்து வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. சரி, வேகத்தைக் குறைத்து டீவில்லியர்ஸின் மொமண்டத்தை குலைப்போம் என ப்ராவோவையும் ஸ்மித்தையும் வீச வைத்தால் பேக் ஃபுட்டில் ஷாட் ஆடி பந்தைப் பறக்கவிடுகிறார்.

மொத்தத்தில் டீவில்லியர்ஸுக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார் மெக்கல்லம். "ஒரு ரசிகனாக டீவில்லியர்ஸ் மற்றும் கோலியின் ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன்" என போஸ்ட் மேட்ச் ப்ரசெண்டேஷனில் அப்பாவியாகப் பேசியிருப்பார் மெக்கல்லம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

25 பந்துகளில் அரைசதம் கடந்த டீவில்லியர்ஸ் 43 பந்துகளிலேயே சதத்தையும் கடந்து மிரட்டியிருப்பார். இவ்வளவு நேரமும் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் டீவில்லியர்ஸுக்கு சப்போர்டிவ் இன்னிங்க்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த கோலி இதன்பிறகுதான் சீனுக்குள்ளேயே வந்தார். கடைசி 3 ஓவர்களை கோலி கையில் கொடுத்துவிட்டு இன்னொரு எண்ட்டில் ரெஸ்ட் எடுக்க போய்விட்டார் டீவில்லியர்ஸ். டீவில்லியர்ஸ் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்ததால் அவருக்கு ஒத்துழைப்பாக ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து கொண்டு 39 பந்துகளில் அரைசதத்தை கடந்திருந்தார் கோலி. ஆனால், கடைசி 3 ஓவர்களில் ஒரு வெறியாட்டம் ஆடி 53 பந்துகளிலேயே சதத்தை கடந்துவிடுவார்.

கோலி - ஏபிடி
கோலி - ஏபிடி

ப்ராவோ வீசிய 18 வது ஓவரில் சிக்சரையும் பவுண்டரியையும் அடித்த கோலி, ஷிவில் கௌசிக் வீசிய 19வது ஓவரில் 4 சிக்சர்களோடு 30 ரன்களைச் சேர்த்திருப்பார். கடைசியாக ப்ரவீன்குமார் வீசிய 20வது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு சதத்தைக் கடந்திருப்பார். கடைசிக்கு முந்தைய பந்தில் ஸ்கொயர் லெகில் ஒரு ஷாட் ஆட முயன்று 109 ரன்களில் கேட்ச் ஆகிவிடுவார் கோலி. டீவில்லியர்ஸ் இன்னொரு எண்ட்டில் 129 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக நிற்பார். அணியின் ஸ்கோர் 248. அதில் டீவில்லியர்ஸ்-கோலி கூட்டணி மட்டும் 229 ரன்களைச் சேர்த்திருக்கும். இன்றைக்கு வரைக்கும் ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்க முடியாத பெஸ்ட் பார்ட்னர்ஷிப் இன்னிங்க்ஸாக இது நிற்கிறது.

இந்த முரட்டுத்தனமான இன்னிங்க்ஸாவது இந்த திமிங்கலங்களின் பசியை போக்கி திருப்திபட வைத்திருக்கும் என ரசிகர்கள் நினைக்க போஸ்ட் மேட்ச் ப்ர்செண்டேஷனுக்கு கொஞ்சம் சோகமாகவே வந்தார் டீவில்லியர்ஸ், "டி20 போட்டிகளில் டாட் ஆடுவதை வெறுக்கிறேன். ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். அவருடைய ஸ்பெல்லில் 9 டாட்களை ஆடியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் மீது எனக்கே கோபம் வருகிறது" 248 ஸ்ட்ரைக் ரேட்டில் 129 ரன்களை அடித்துவிட்டு டீவில்லியர்ஸ் பேசிய வார்த்தைகள் இவை.

இன்னமும் டீவில்லியர்ஸ்-கோலி இருவரின் ரன் பசியும் தீர்ந்தபாடில்லை. இந்த 229 ரெக்கார்டை அவர்களே முறியடிக்கும்பட்சத்திலாவது அந்த பசி தீருமோ என்னவோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு