Published:Updated:

15 Years of IPL: மெக்கலத்தின் சூறாவளி... உலகின் மிகப்பெரிய டி20 தொடராக ஐபிஎல் உருமாறியது எப்படி?

மெக்கலம் தவிர்த்து மொத்த ஆட்டத்திலும் பாண்டிங் மட்டும்தான் 20 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். கொட்டாவி வரவைக்கும் ஆட்டமாக இருந்திருக்க வேண்டிய ஆட்டத்தை தனி ஆளாக மக்களைக் கண் கொட்டாமல் பார்க்க வைத்தார் மெக்கலம்.

15 Years of IPL: மெக்கலத்தின் சூறாவளி... உலகின் மிகப்பெரிய டி20 தொடராக ஐபிஎல் உருமாறியது எப்படி?

மெக்கலம் தவிர்த்து மொத்த ஆட்டத்திலும் பாண்டிங் மட்டும்தான் 20 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். கொட்டாவி வரவைக்கும் ஆட்டமாக இருந்திருக்க வேண்டிய ஆட்டத்தை தனி ஆளாக மக்களைக் கண் கொட்டாமல் பார்க்க வைத்தார் மெக்கலம்.

Published:Updated:
50 ஓவர் போட்டிகள் - இந்தியாவின் முக்கிய நகரங்களின் பேர்களில் அணிகள் - ஒவ்வொரு அணிக்கும் ஒரு உரிமையாளர் - ஒப்பந்தம் அடிப்படையில் ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர்கள். இப்படி ஒரு யோசனையைத் தூக்கிக் கொண்டு 1996ல் பிசிசிஐ கதவைத் தட்டினார் லலித் மோடி.

அப்போதுதான் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியுடன் இந்தியா வெளியேறியிருந்தது. சச்சின் ஆட்டமிழந்தால் இந்தியாவின் கதை முடிந்துவிடும் என்ற நிலைதான் அப்போது இந்திய கிரிக்கெட்டுக்கு. சச்சினைக் கடந்து ஒரு நல்ல வீரரையே நம்மால் உருவாக்க முடியவில்லை... எப்படி இத்தனை அணிகளை வைத்து ஒரு தொடரை நடத்துவது என லலித் மோடியின் யோசனையை புறந்தள்ளியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

Lalit Modi
Lalit Modi

காலம் மெல்ல ஓடத் தொடங்கியது. சச்சினைத் தாண்டி கங்குலி, சேவாக், யுவராஜ், தோனி போன்ற வீரர்கள் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 2007-ல் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட பரிதாப தோல்வி இந்திய ரசிகர்களை சோகத்தில் தள்ளியது. ஒரு படம் தோல்வி அடைந்ததும் அதை ஈடு செய்ய மற்றொரு படம் நடித்துத் தருவது போல அதே ஆண்டே மற்றொரு உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தயாரானது. இந்த முறை 50 ஓவர் கிடையாது... 20 ஓவர்கள். 20 ஓவர் கிரிக்கெட் அப்போது இந்தியாவுக்கு மிகவும் புதிய விஷயம். பெரிதாக அனுபவம் இல்லை. அதுவும் போக பல ஆண்டுகள் கிரிக்கெட்டில் பழம் தின்று கொட்டை போட்ட சீனியர்கள் எல்லாம் விலகிக் கொள்ள, தோனி தலைமையிலான இளம் அணி அந்தத் தொடரில் பங்கேற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஓவருக்கு ஓவர் பறக்கும் சிக்சர்கள், அதிவேக அரை சதங்கள், ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள், ஆட்டம் டை ஆனால் பௌல்-அவுட் முறை, கடைசி பந்து வரை இருக்கும் விறுவிறுப்பு என்று பல புதிய பரிமாணங்களை இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்தத் தொடர். கூடவே பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்ற, 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு உலகக்கோப்பையை இந்தியா தனது கைகளில் ஏந்தியது.

மூன்று மணி நேரம் மட்டுமே நடக்கும் ஆட்டங்கள், ஓவருக்கு ஓவர் விளம்பரங்கள், வானுயர சிக்சர்கள் என ரசிகர்களை இந்த டி20 கிரிக்கெட் வசீகரிக்க தன்னுடைய பழைய யோசனையைத் தூசித் தட்டினார் லலித் மோடி. சென்னை, மும்பை என எட்டு நகரங்களின் பெயர்களில் அணிகள். சச்சின், கங்குலி, லஷ்மன், யுவராஜ், டிராவிட், சேவாக் என ஒவ்வொரு நட்சத்திர வீரரையும் ஒரு அணி எடுத்துக் கொண்டது. சென்னை தோனியையும், ராஜஸ்தான் வார்னேவையும் எடுத்துக் கொள்ள முதல் ஐபிஎல் தொடர் தயாரானது.

IPL
IPL

டி20 தொடர் ஆரம்பிப்பது பெரிய விஷயம் இல்லை. பணம் இருந்தால் ஆரம்பித்து விடலாம். அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுதான் பெரிய விஷயம். அப்போதுதான் ஓராண்டுக்கு முன்பு கபில்தேவ் போன்றோர் கூட ஐசிஎல் என்ற தொடரை ஆரம்பித்து அது மக்கள் மத்தியில் பெருத்த ஆரவாரம் இல்லாமல் போனது. எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிட்டு அது மக்கள் மத்தியில் சரியாகச் சென்று சேராவிட்டால் நஷ்டம்தான் ஏற்படும். எப்படி லலித் மோடி மக்களை ஈர்க்கப் போகிறார்? லலித் மோடி மற்றும் ஐபிஎல் தொடரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க நியூசிலாந்தில் இருந்து வந்து கொண்டிருந்தார் ஒருவர்.

கொல்கத்தா vs பெங்களூர். சின்னசாமி மைதானம். ஏழு லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்று கொல்கத்தா அணிக்காக ஆட வந்திருந்தார் மெக்கலம். கங்குலி, பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் அணி. அது மட்டுமல்ல, உலகையே அச்சுறுத்திய 2000களின் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜான் ப்யூக்கனன்தான் கொல்கத்தா அணிக்கும் பயிற்சியாளர். இத்தனை ஜாம்பவான்களுக்கு முன் நிற்கிறோமே என்ற எண்ணமோ அல்ல வேற எதுவுமா என்று தெரியவில்லை... வலைப் பயிற்சியில் ஒரு பந்தை கூட மெக்கலமால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. முதல் போட்டியில் அணியில் தான் இருப்போமா இல்லையா என்பது கூட அவருக்கு உறுதியாக தெரியவில்லை.

ஆட்டம் தொடங்கியது. பேட்டிங் வீரர்களின் சொர்க்கபுரி என்று சொல்லப்படும் சின்னசாமி மைதானத்தில் துவக்க வீரராக வந்தார் மெக்கலம். அவர் சந்தித்த ஆறு பந்துகளில் எந்த ரன்னும் வரவில்லை. ஐசிஎல் தொடரின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் மந்தமான ஆட்ட முறைதான். 140 என்ற ஸ்கோர்தான் பெருவாரியான ஆட்டங்களில் வந்தது. அதே நிலையில்தான் கிட்டத்தட்ட இந்தத் தொடரும் தொடங்கியது. சரி... ஆனது ஆகட்டும் என அடுத்த பந்தை மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடித்தார் மெக்கலம். அடுத்த 67 பந்துகள் மெக்கலமுக்கு 158 ரன்களை பெற்றுத் தந்தது. ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து ஆர்ப்பரித்தனர். ஐபிஎல் என்றால் இப்படிதான் இருக்கப் போகிறது என மெக்கலம் அடித்த ஒவ்வொரு அடியும் உத்தரவாதம் கொடுத்தது. முதல் படத்தை இயக்கி முடித்து காத்திருந்த புதுமுக இயக்குநர் போல் இருந்த லலித் மோடிக்கு இந்த இன்னிங்ஸ் மிகப்பெரிய ஊக்கம் தந்தது.

மெக்கலம் தவிர்த்து மொத்த ஆட்டத்திலும் பாண்டிங் மட்டும்தான் 20 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார். கொட்டாவி வரவைக்கும் ஆட்டமாக இருந்திருக்க வேண்டிய ஆட்டத்தை தனி ஆளாக மக்களைக் கண் கொட்டாமல் பார்க்க வைத்தார் மெக்கலம். இனி வர இருக்கும் கிரிக்கெட் திருவிழாவுக்கான டிரெய்லரை அன்று மெக்கலம் வெளியிட்டார்.

அப்போது சூடு பிடித்த ஐபிஎல் தற்போது வரை சூடாகவே இருக்கிறது. பதினான்கு தொடரைப் பார்த்த பிறகு கூட ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏப்ரல் - மே மாதங்களில் அத்தனை வீட்டு டிவியையும் மிகவும் எளிதாக ஆக்கிரமித்து விடும் ஐபிஎல். வடக்கு மாகாணங்களில் அன்போடு பழகும் தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக தோனி ஆனது எல்லாம் ஐபிஎல் தொடரின் மாயாஜாலம்தான்.

Brendon McCullum
Brendon McCullum
எந்த ஐபிஎல் தொடர் வேலைக்கு ஆகாது என்று ஒதுக்கப்பட்டதோ அதே தொடருக்காக தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கூட ஒத்திவைக்கப்படுகின்றன. சொந்த நாட்டுக்கு கூட ஆடாமல் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை தருகின்றனர். இதனால் காரசார விமர்சனங்களும் எழாமல் இல்லை. ஆனால், ஐபிஎல் இந்திய அணிக்கு பல்வேறு முத்தான பல வீரர்களை தந்து கொண்டே இருக்கிறது. இத்தனை பெரிய சாதனைகளைக் குறுகிய காலத்தில் செய்து முடித்த ஐபிஎல் தொடருக்கு இன்று 15வது பிறந்தநாள்.