Published:Updated:

IPL Auction 2022: பழசும் இளசும் கலந்த CSK... எப்படி இருக்கு இந்தப் புதிய சென்னை சூப்பர் கிங்ஸ்?

New Players - New Era | சென்னை சூப்பர் கிங்ஸ்

வெளிநாட்டு ஓப்பனர், வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர், மெயின் ஸ்பின்னர் என சென்னை டிக் அடிக்க வேண்டிய பாக்ஸ்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஆனால், முதல் நாளை விட இரண்டாம் நாளில் சென்னை மிகச்சிறப்பாக செயல்பட்டு அத்தனை பாக்ஸ்களையும் டிக் அடித்திருக்கிறது.

IPL Auction 2022: பழசும் இளசும் கலந்த CSK... எப்படி இருக்கு இந்தப் புதிய சென்னை சூப்பர் கிங்ஸ்?

வெளிநாட்டு ஓப்பனர், வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர், மெயின் ஸ்பின்னர் என சென்னை டிக் அடிக்க வேண்டிய பாக்ஸ்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஆனால், முதல் நாளை விட இரண்டாம் நாளில் சென்னை மிகச்சிறப்பாக செயல்பட்டு அத்தனை பாக்ஸ்களையும் டிக் அடித்திருக்கிறது.

Published:Updated:
New Players - New Era | சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல் மெகா ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. அத்தனை அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களுக்குக் கோடிகளைக் கொட்டி கொடுத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வருங்கால சிங்கங்களை தேர்ந்தெடுத்து கர்ஜிக்க தயாராகியிருக்கிறது. சென்னை அணி இந்த ஏலத்தில் எப்படி செயல்பட்டது? சென்னை அணி தேர்ந்தெடுத்திருக்கும் வீரர்கள் எப்படி? என்பது குறித்த ஒரு அலசல் இங்கே...

ஏலத்தின் முதல் நாள் முழுவதும் தங்களின் பழைய வீரர்களை மீண்டும் வாங்கிக்கொள்வதிலேயே சென்னை அணி அதிக கவனம் காட்டியிருந்தது. முதல் நாளில் சென்னை அணி 6 வீரர்களை வாங்கியிருந்தது. தீபக் சஹார், அம்பத்தி ராயுடு, ப்ராவோ, ராபின் உத்தப்பா, ஆசிஃப் என அந்த 6 வீரர்களில் 5 பேர் சென்னை அணிக்காக ஆடிய பழைய வீரர்கள். ஆறாவதாக எடுக்கப்பட்ட துஷார் தேஷ்பாண்டேவும் கடந்த சீசனில் சென்னை அணியின் நெட் பௌலராக இருந்தவரே. முதல் நாளின் முடிவில் சென்னை அணியிடம் 20.45 கோடி ரூபாய் எஞ்சியிருந்தது. இந்த தொகையை வைத்துக் கொண்டு சென்னை அணி குறைந்தபட்சமாக 8 வீரர்களை இரண்டாம் நாளில் எடுக்க வேண்டியிருந்தது. வெளிநாட்டு ஓப்பனர், வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர், மெயின் ஸ்பின்னர் என சென்னை டிக் அடிக்க வேண்டிய பாக்ஸ்கள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஆனால், முதல் நாளை விட இரண்டாம் நாளில் சென்னை மிகச்சிறப்பாக செயல்பட்டு அத்தனை பாக்ஸ்களையும் டிக் அடித்து முழுமையாக 25 வீரர்களையும் வாங்கிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை அணியை பொறுத்தவரைக்கும் எப்போதுமே தொடக்கத்தில் ஒரு தரமான வெளிநாட்டு ஓப்பனரை வைத்திருப்பார்கள். ஹைடன், மைக் ஹஸ்ஸி, ஸ்மித், மெக்கல்லம், வாட்சன், டூ ப்ளெஸ்ஸி என சென்னைக்காக ஆடிய அத்தனை ஓப்பனர்களும் மேட்ச் வின்னர்களாக இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில் இந்த முறை சென்னை அணிக்காக ஆடப்போகும் வெளிநாட்டு ஓப்பனர் யார் எனும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. டூ ப்ளெஸ்ஸிக்கே சென்னை அணி முயன்றது. ஆனால், அவர் 5 கோடிக்கு மேல் சென்றதால் பின்வாங்கியது. அதன்பிறகு டி காக், வார்னர் போன்றோருக்கும் முயன்றது. ஆனால், அதே 5 கோடி எல்லையை அவர்களும் தாண்டியதால் சென்னை பின் வாங்கியது. இந்நிலையில்தான் இரண்டாம் நாளில் டெவான் கான்வேயை சென்னை 1 கோடிக்கு வாங்கியிருந்தது. கான்வே தென்னாப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த கிரிக்கெட்டர். அறிமுகமான கொஞ்ச நாளிலேயே நியூசிலாந்து அணியின் தவிர்க்க முடியாத ஓப்பனராகியிருக்கிறார். இடது கை பேட்ஸ்மேன் வேறு என்பதால் ருத்துராஜுக்கு சரியான பார்ட்னராக இருப்பார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓப்பனிங் கூட்டணி சரியாக செட் ஆகிவிட்டது. அடுத்து நம்பர் 3 இல் மொயீன் அலி ஆடுவார் அல்லது அடிப்படை விலையான 2 கோடிக்கே வாங்கப்பட்டிருக்கும் ராபின் உத்தப்பா ஆடுவார். பேட்டிங் ஆர்டரில் உத்தப்பா எவ்வளவு மேலே ஆடுகிறாரோ அவ்வளவு சிறப்பாக ஆடுவார். காயங்களினால் கொஞ்சம் அவதிப்பட்டு வருகிறார். அதுமட்டுமே பிரச்னை. அவரை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஆட அம்பத்தி ராயுடுவை 6.25 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். கடந்த நான்கு சீசன்களாக சென்னை அணியின் முக்கியமான வீரராக இருக்கிறார். அதே ஃபார்மை தொடரும்பட்சத்தில் அம்பத்தி ராயுடுவும் சரியான தேர்வே.

அடுத்தடுத்து ப்ராவோ, தோனி, ஜடேஜா ஆகியோர் களமிறங்குவார்கள். இதில், ப்ராவோவும் தோனியும் எத்தனை சீசன்களுக்கு ஆடப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. தோனி குட்பை சொல்லும்போது கூடவே சேர்ந்து ப்ராவோவும் குட்பை சொல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அடுத்தடுத்து அவர்களுக்கான ரீப்ளேஸ்மெண்ட் வீரர்களை பிடிக்கும் வேலையும் சென்னைக்கு இருக்கக்கூடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்
சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்

இந்திய அணிக்கு ஆடியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சஹார் மட்டுமே இருக்கிறார். சமீபத்தில் U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை சேர்ந்த ஹங்கர்கேக்கர் எனும் இளம் வீரரும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இவரும் புதிய பந்தில் சிறப்பாக வீசக்கூடியவர். சீராக 140+ கி.மீ வேகத்தைக் கொண்டவர். பேட்டிங்கிலும் சில பெரிய ஷாட்களை ஆடும் திறன் படைத்தவர். இவரை 1.50 கோடிக்கு சென்னை வாங்கியிருப்பது சிறப்பான விஷயம். கடந்த சீசனில் ஹேசல்வுட் சென்னை அணிக்காக மிகச்சிறப்பாக வீசியிருந்தார். ஏலத்தில் ஹேசல்வுட் கிடைக்காததால் இந்த வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் யார் எனும் கேள்வி எழுந்திருந்தது. அதற்குத் தீர்வாக கிறிஸ் ஜோர்டனை 3.6 கோடிக்கும், ஆடம் மில்னேவை 1.9 கோடிக்கும் சென்னை வாங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் சொதப்பியிருந்தாலும் இருவருமே சரியாக பயன்படுத்தப்படும்பட்சத்தில் நல்ல ரிசல்ட்டை கொடுக்கக்கூடியவர்களே.

இவர்கள் போக கடந்த சீசனில் ஆடிய கே.எம்.ஆசிஃப், நெட் பௌலராக இருந்த துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங், முகேஷ் சௌத்ரி போன்ற உள்ளூர் வேகப்பந்து வீச்சாளர்களையும் சென்னை தேர்வு செய்திருக்கிறது. துஷார் தேஷ்பாண்டே டெல்லி கேப்பிட்டல்ஸ்க்காக ஒரு சில போட்டிகளில் ஆடி அவரின் வேகத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். சிமர்ஜித் சிங் டெல்லியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர். தவான் தலைமையில் இலங்கைக்கு சென்ற இந்திய அணியோடு நெட் பௌலராக சென்றவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் காயமடைந்த பிறகு அவருக்கு பதிலாக ரீப்ளேஸ்மெண்ட்டாக எடுக்கப்பட்டவர். இவருமே ஒரு நல்ல தேர்வே! முகேஷ் சௌத்ரி மகாராஷ்டிராவை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர். பேக் அப்பாக வைத்துக்கொள்ள ஒரு நல்ல வேகப்பந்து வீச்சு முகாமை சென்னை உருவாக்கியிருக்கிறது.

இவர்கள் போக, ஆல்ரவுண்டர் கேட்டகரியில் சிவம் துபே, ப்ரெட்டோரியஸ், ப்ராவோ போன்றோரும் மிதவேகம் வீசுபவர்களாக இருக்கிறார்கள்.

ஸ்பின்னை பொறுத்தவரை கடந்த சீசனில் ஜடேஜாவையும் மொயீன் அலியையும் வைத்தே சென்னை அணி சமாளித்துவிட்டது. ஆனாலும், கரன் சர்மா, இம்ரான் தாஹீர், சாண்ட்னர் போன்றோர் பென்ச்சில் பேக் அப் ஆப்சனாக இருந்தனர். இந்த முறை சாண்ட்னரை மீண்டும் சென்னை அணி 1.9 கோடிக்கு வாங்கியிருக்கிறது. ஸ்பின்னர்களில் இவரைத் தவிர பெரிய பெயர்கள் இல்லை. ஆனால், இலங்கையின் இளம் வீரரான மஹீஸ் தீக்ஷனாவை சென்னை 70 லட்சத்திற்கு வாங்கியிருக்கி்றது. பந்தை இரண்டு பக்கமும் திருப்பக்கூடிய மிஸ்டரி ஸ்பின்னர் இவர். உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எக்கானமி 5.5 மட்டுமே. இவர் சென்னை சேப்பாக்கத்தில் ஆடுவாரா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த சீசன் மும்பையில் மட்டுமே நடைபெறுவதாக கூறப்படுவதால் இவர் சென்னை அணியின் துருப்புச்சீட்டாக இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. இவர்கள் போக மும்பையின் லெக் ஸ்பின்னரான பிரஷாந்த் சொலாங்கி, ஆந்திராவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னரான பகத் வர்மா ஆகியோரையும் பேக் ஆப்சனாக வாங்கி வைத்திருக்கின்றனர்.

பேக் அப் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை ஒடிசாவை சேர்ந்த சுப்ரான்ஸு சேனாபதியை 20 லட்சத்திற்கு வாங்கியிருக்கிறார்கள். சமீபமாக ரஞ்சி போட்டிகளில் ஒடிசா அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக இவர் இருக்கிறார். மேலும், கடந்த சீசன்களிலும் சென்னையிலேயே இருந்த தமிழக வீரர்களான ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோரையும் அடிப்படை விலைக்கே எடுத்து வைத்திருக்கின்றனர்.

சென்னை அணி ஓரளவிற்கு எல்லா பாக்ஸையும் டிக் அடித்துவிட்டது. தினேஷ் கார்த்திக், ஷாரூக்கான் ஆகியோருக்கு சென்னை கொஞ்சம் கடினமாகவே முயன்றிருந்தது. ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதில் லோயர் ஆர்டரில் ஆடும் வேறு வீரர்களும் கிடைத்தது போல் இல்லை. இப்போதைய அணியில் ப்ராவோ, தோனி போன்றோர் இருந்தாலும் இவர்களுக்கு பிறகு ஒரு வீரரை ரீப்ளேஸ்மெண்டாகத்தான் கொண்டு வர வேண்டும்.

ஒட்டுமொத்தமாக சென்னை அணி சாம்பியன் வீரர்களை பெரும்பாலும் அப்படியே தக்க வைத்திருக்கிறது. சில திறமையான இளம் வீரர்களையும் சிறப்பாகத் தேர்வு செய்திருக்கிறது. வழக்கமாக Daddy's Army என கிண்டல் அடிக்கப்படும் சென்னை அணியில் இந்த முறை மஹீஸ் தீக்ஷனா, ஹங்கர்கேக்கர் போன்ற 2கே கிட்களும் இணைந்திருப்பது புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. பழைய கட்டமைப்போடே கொஞ்சம் உருமாறியிருக்கும் இந்தச் சிங்கமும் கர்ஜிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்னை அணி தேர்வு குறித்த உங்களின் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.