தோற்கும் குதிரை எனப் பலரும் பந்தயம் கட்டிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல், தன் அபாரமான தொடர் ஃபார்ம் மற்றும் கன்சிஸ்டன்சி மூலம் ஜெயிக்கும் குதிரையாக ரேஸில் முந்திவருகிறார். "க்ளாஸ் மட்டுமல்ல, ஃபார்மும் இவ்விடம் நிரந்தரம்" - ஐபிஎல்லில் கே.எல்.ராகுலின் சமீப சீசன்களின் குறுவுரை இதுதான்.
ஐந்து ஆண்டுகளாக ஆரஞ்சுக் கேப்புக்கான பந்தயத்தில் உள்ளூர் வார்னராக தவறாமல் இடம்பெற்று வரும் பெயர் கேஎல் ராகுல். 2018-ல் இருந்து தொடர்ச்சியாக ஐந்து சீசன்களில் 500-க்கும் அதிகமான ரன்களை ராகுலின் பேட் பார்த்துள்ளது. இதற்கு முன்னதாகவே நம்ப முடியா வகையில், வார்னர் ஆறு வருடங்கள் 500+ ரன்களை அடித்திருக்கிறார்தான்; கோலி மற்றும் தவான்கூட, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் வெவ்வேறு சீசன்களில் ஐந்து முறை 500+ ரன்களைக் குவித்திருக்கிறார்கள். எனினும் இதனை இடைவெளியின்றி, தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் நிகழ்த்தியிருக்கும் வீரர், ராகுல் மட்டுமே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ரன்கள் வந்து சேர்ந்திருக்கும் கால கட்டங்களும், அதில் ராகுல் சந்தித்திருக்கும் சவால்களும்தான், இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன. 2018-ல் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கம் விக்கெட் கீப்பர் என்ற இரட்டைப் பளுவோடு வலம் வந்தவருக்கு கூடுதல் சவாலான கேப்டன் பதவியும் இந்த இடைவெளியில்தான் வந்து சேர்ந்தது. 2020 சீசனில் பஞ்சாப்பின் பன்னிரண்டாவது கேப்டனாகும் வாய்ப்பையும் அவர் பெற்றார். பஞ்சாப் டு லக்னோ இடமாற்றமும் அவருக்கு இந்த வருடம் நடந்தேறியது. ஆனால், இத்தனை மாற்றங்களும் அவரைப் பொறுத்தவரை ஏற்றங்களாகவே இருந்து வந்துள்ளன.
2018 - 2021 சீசன்களில் முறையே 659, 593, 670, 626 ரன்களைக் குவித்திருந்த ராகுல், இந்தாண்டில் இதுவரை 537 ரன்களைக் குவித்துள்ளார். இதில் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு விஷயம், அவரது பிரமிக்கத்தக்க சராசரிதான். இந்த ஐந்து ஆண்டுகளில், நடப்பு ஆண்டைத் தவிர எல்லா ஆண்டுகளிலும் அவரது சராசரி 50-க்குக் கீழ் இறங்கவே இல்லை. இந்த ஆண்டும்கூட அது 48.8 எனக் குறிப்பிடத்தக்க வகையிலேயே உள்ளது. எங்கேயும் அவரது ரன்குவிப்பில் எந்த சுணக்கமோ, பின்னடைவோ இருந்ததில்லை. ஒரே சீராக அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆண்டுக்கணக்காக!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதுவும் பஞ்சாப்புடனான பயணத்தில் இவ்வளவு ரன்கள் வந்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கதே. காரணம், பொதுவாக பஞ்சாப் அணி குளறுபடிகளின் கூடாரம். சிஎஸ்கே, மும்பையோடு ஒப்பிடுகையில், வீரர்களை ஆதரித்து, அனுசரித்து அவர்களை மேலேற்றும் இயல்பு அவர்களிடம் குறைவே. நன்றாக ஆடக் கூடிய வீரர்கள் கூட, சமயத்தில் பெஞ்சில் அமர்த்தப்படுவார்கள். அங்கே கேப்டன் பதவி தொடங்கி, பிளேயிங் லெவன் மற்றும் வீரர்கள் ஆடும் பொஷிசன் வரை என எல்லாமே ஒவ்வொரு நாளும் மாற்றத்துக்கு உட்பட்டதே. ஆனால் அப்படிப்பட்ட அணியிலும்கூட ராகுலின் மீது வேறு மாதிரியான பார்வை படியவேயில்லை, அதற்கு அவர் இடமளித்ததும் இல்லை. நிரந்தர ஓப்பனராக, அணியை ஒரு கையில் தாங்கிப் பிடித்த கேஎல் ராகுலின் மீது உண்மையில் பஞ்சாப் தனது மொத்த நம்பிக்கையையும் பதியமிட்டது. ராகுலும் அதற்கு 100 சதவிகித நியாயம் கற்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், 'ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெத்' என்பது போல, ஒவ்வொரு சீசனிலும் அவரது மொத்த ஆட்டமும் வீணாகவே போய்க் கொண்டிருந்தது.

2018-ல் ஏழாவது இடத்தில் முடித்த பஞ்சாப், அதன்பின் கடந்த மூன்று ஆண்டுகளும் தொடர்ச்சியாக ஆறாவது இடத்தில் முடித்தது. ஒருமுறை கூட பிளேஆஃப்புக்கு முன்னேறவேயில்லை. ஆனால், இந்த சீசன்களில் எல்லாமே அந்த அணியின் டாப் ரன் ஸ்கோரரில் ஒருவராக ராகுல்தான் இருந்தார். குறிப்பாக 2018 மற்றும் 2020-ல் ராகுலின் ஃபார்ம் உச்சத்தில் இருந்தது. 2018-ல், மும்பை, ராஜஸ்தான், சன்ரைசர்ஸுடன் முட்டிமோதி 11 கோடிக்கு பஞ்சாப்பால் வாங்கப்பட்டிருந்த ராகுல், ஓப்பனிங் சீசனிலேயே பட்டையைக் கிளப்பினார். 2017 ஐபிஎல்லை காயத்தால் தவறவிட்டிருந்தவர், அதற்கும் சேர்த்து ரன் வேட்டையாடினார். இந்தியாவின் ஒருநாள் அணியின் லெவனுக்கு ராகுலின் பெயர் பரிசீலிக்கப்பட்டதும் இதற்குப் பின்னதாகத்தான்.
அதன்பின் 2020-ம் ஆண்டு அரபு நாட்டில் நடைபெற்ற ஐபிஎல்லில், வெறி பிடித்தது போல் ரன்களைக் குவித்தார் ராகுல். இவரை ஆட்டமிழக்கச் செய்வதே எதிரணிகளுக்கான பெரிய சவாலாக இருந்தது. அவர்களது டீம் மீட்டிங் அத்தனையிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பெயர் இவருடையதுதான். இவரை வீழ்த்துவதற்கான ஸ்கெட்ச்சைத்தான் அணிகள் தங்களது வெற்றிக்கான ப்ளூ பிரிண்டாகப் பார்த்தனர். அந்த சீசனில் 670 ரன்களை, 55.83 ஆவரேஜோடு குவித்த ராகுலைத் தேடி ஓடி அடைந்தது ஆரஞ்ச் கேப்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த சீசன்களில் மயங்க் அகர்வாலுடனான அவரது பார்ட்னர்ஷிப்கள், பல போட்டிகளில் பஞ்சாப் அணியை படுதோல்வியிலிருந்து காப்பாற்றின. இருந்தாலும், மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களாக அதில் பல மாறாமல் போனதற்கு மற்ற வீரர்களின் பங்களிப்பு முழுமையாக இல்லாமல் போனதும் முக்கியமான காரணம். இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்தாலே போதும், சைக்கிள் ஸ்டாண்டில் ஒன்றைத் தட்டிவிட்டால் அத்தனையும் விழுவதைப் போல் கண்ணாடி மாளிகையாக நொறுங்கி விழும் பேட்டிங் லைன் அப் கடந்த சீசன்களில் அவர்களிடம் இருந்தது (இன்னமும் கூட). அதனாலே, பல போட்டிகளில் ராகுல் டிஃபெண்டிங் மோடில் ஆட வேண்டியிருந்தது.
2018-ல் 158 ஆக இருந்த ராகுலின் ஸ்ட்ரைக் ரேட், அடுத்து வந்த சீசன்களில் 130-களில் உலவ இதுவும் ஒரு காரணம். ஓப்பனிங்கில் ஆங்கரிங் ரோலில் ஆட வைத்ததும் அதுதான். இதனால்தான் 2548 ரன்களை பஞ்சாப்பில் அவர் குவித்திருந்தாலும், அது கோப்பைக்கான முதலீடாக இல்லாமல் கடலில் கரைத்த உப்பாக, பயனில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது. அதனை மாற்றி எழுதி வருகிறது நடப்பு சீசன்.

வீரராக மட்டுமில்லாமல் கேப்டனாகவும் அவரது திறன் பலமுறை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 2020-ல் பஞ்சாப்பின் கேப்டனாக அவர் பதவியேற்ற போது, முதல் ஏழு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அணி வென்றது. ஆனால், தவறுகளில் பாடம் கற்ற ராகுல், அடுத்த ஏழு போட்டிகளில் ஐந்தில் அணியை வெல்ல வைத்தார். நொண்டிக் குதிரையோடு அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியாமல் போனாலும் முடிந்தளவு சமாளித்தார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்கத் தொடரின் போது, இந்திய அணியின் கேப்டனாக தலைமையேற்று அவர் பிரகாசிக்கத் தவறிய போதும், "அவர் கேப்டன்சிப் மெட்டீரியல் இல்லை - கிளவுன் கேப்டன்சிப்" என பல விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இம்முறை லக்னோ அணியை ரேஸில் வெல்லும் அமைப்போடு அவர் வழிநடத்துகிறார். 100 சதவிகிதம் இல்லையென்றாலும், முன்னிலும் சிறப்பாகவே கம்பீரின் வழிகாட்டுதலோடு ராகுலின் செயல்பாடு உள்ளது.
ஆகமொத்தம், லக்னோவுடனான அவரது அறிமுக சீசனே அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது. ஏலத்தில் வராத வீரர்களில் அதிகத் தொகை (17 கோடி) கொடுத்து கைப்பற்றப்பட்ட வீரர் கேஎல் ராகுல்தான். அந்த முடிவுக்காக எந்த இடத்திலும் லக்னோ, "அவசரப்பட்டு விட்டோமோ?" என யோசிக்க விடாத அளவு அவரது செயல்பாடுகள் உள்ளன. பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் என முழு பேக்கேஜாக அவர்களுக்குக் கிடைத்த ராகுல்தான் லக்னோவை, "ராகுல் இருந்தால், லக் நவ்" எனச் சொல்ல வைத்துள்ளார். இந்த சீசனில், தற்சமயம் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பட்லரை அடுத்து ராகுல்தான் இருக்கிறார். ஒரு வார இடைவெளிக்குள் மும்பையை தனது இரண்டு சதங்களால் இவர் அடித்துத் துவைத்ததிலிருந்து அவர்கள் மீளவேயில்லை.

டீ காக்குடனான அவரது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்கள், பல போட்டிகளில் லக்னோவுக்குக் கை கொடுத்துள்ளன. ஒரு அணியின் இரண்டு ஓப்பனர்களும் 500 ரன்களை ஒரே சீசனில் கடப்பது இது இரண்டாவது முறை மட்டுமே. கடந்த ஆண்டு, டு ப்ளெஸ்ஸி மற்றும் கெய்க்வாட் இதனைச் செய்திருந்தனர். அதனை மீண்டுமொரு முறை ராகுல் - டீ காக் இருவரணி நிகழ்த்திக் காட்ட, பிளேஆஃப்புக்குள் ஜோராக நுழைந்துள்ளது லக்னோ. இந்தப் புரிதல்தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை உடைய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பையும் கேகேஆருக்கு எதிரான போட்டியில் கட்டமைக்க வைத்துள்ளது. வழக்கம் போல், இம்முறையும் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் எழாமல் இல்லை. ஆனாலும், ஒரு முனையை போர் முனையாக்கி அவர் கேடயம் தாங்குவதால்தான் அணி பல இடங்களில் பலத்த சேதாரத்தைச் சந்திப்பது தவிர்க்கப்படுகிறது என்பதே உண்மை.
இன்னொரு வகையில் பார்த்தாலும் இந்திய ரசிகர்களுக்கு கேஎல் ராகுலின் ஃபார்ம் ஆறுதல் அளிக்கிறது. கோலி, ரோஹித் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மென்கள் நடப்பு சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. ரிஷப் பண்ட் கூட தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தவில்லை. அப்படி இருக்கையில், கேஎல் ராகுல் முழுமையான நம்பிக்கை அளிக்கிறார்.
இந்த சீசனில், இந்திய வீரர்களில் அதிக ரன்களை அடித்திருப்பது (537) ராகுல்தான். டி20-ல் அவரது அணுகுமுறையில் சற்றேனும் மாற்றம் வேண்டுமென்பது உண்மைதான் என்றாலும், "ராகுல் ஒரு ஸ்ட்ரீட் ஸ்மார்ட் கிரிக்கெட்டர், எங்கேயும் பொருந்திப் போவார்" என சமீபத்தில் இர்ஃபான் பதான் கூறியதைப் போல், இந்திய அணியில் அதற்கேற்றவாறு ராகுல் தன்னைத் தகவமைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

பேட்ஸ்மேனாக 2016-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்காக ஆடியிருக்கிறார்தான் என்றாலும், பஞ்சாப் அணிக்காக ஆடும் போது அந்த அணி பிளேஆஃப்புக்கு போனதில்லை. அதேபோல், இதுவரை எந்த சீசனிலும் அவர் 14 போட்டிகளுக்கு மேல் விளையாடியதே இல்லை. இந்த சீசனில் அது முதல்முறையாக நடக்கவிருக்கிறது.
கேப்டனாக ராகுலின் முதல் பிளேஆஃப் இது என்பதோடு, ஆரஞ்சுக் கேப்புக்கான ரேஸிலும் அவர் இன்னமும் நீடிக்கிறார். வீரராகவும், கேப்டனாகவும் அவருக்கான இரட்டைச் சவால் இது!
ஆரஞ்சுக் கேப்பை மட்டும் அடைந்து ஆறுதல் அடைவாரா அல்லது அதனுடன் கோப்பையையும் சேர்த்தே கையகப்படுத்துவாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.