Published:Updated:

IPL 2022: தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சஹால்... இது மாஸ்டர் கம்பேக்குகளின் சீசன்!

தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சஹால்

IPL 2022: நடந்து முடிந்துள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் தலா இரண்டு ஆட்டநாயகர்கள் விருதுகளோடு கம்பேக் கொடுத்துள்ள இந்தியக் கம்பேக் வீரர்கள் குறித்த ஒரு பார்வை...

IPL 2022: தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சஹால்... இது மாஸ்டர் கம்பேக்குகளின் சீசன்!

IPL 2022: நடந்து முடிந்துள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் தலா இரண்டு ஆட்டநாயகர்கள் விருதுகளோடு கம்பேக் கொடுத்துள்ள இந்தியக் கம்பேக் வீரர்கள் குறித்த ஒரு பார்வை...

Published:Updated:
தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சஹால்
இளம் வீரர்களுக்கான பயிற்சிப் பாசறையாக மட்டுமில்லாமல், வேலிடிட்டி முடிந்து விட்டதாக ஓரங்கட்டப்பட்ட வீரர்களது கம்பேக்குகளையும் இந்த ஐபிஎல் சீசன் காட்சிப்படுத்தி வருகிறது. புதிய கத்திகள் பட்டைத் தீட்டப்படுவது அழகிய காட்சிதான் என்றாலும், `துருப்பிடித்து விடவில்லை' எனப் பழைய வாள்கள் போர்க்களத்தில் மிளிருவது, இன்னமும் அழகுதானே?
அந்த வகையில், நடந்து முடிந்துள்ள போட்டிகளில் குறைந்தபட்சம் தலா இரண்டு ஆட்டநாயகர்கள் விருதுகளோடு கம்பேக் கொடுத்துள்ள இந்தியக் கம்பேக் வீரர்கள் குறித்த ஒரு பார்வை...

குல்தீப் யாதவ்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவின் முதல் லெஃப்ட் ஆர்ம் அன்ஆர்தடாக்ஸ் ஸ்பின்னர், சஹாலுடன் இணைந்து லிமிடெட் ஃபார்மெட்டில் 2017-ல் இருந்து மூன்று ஆண்டுகள், 'சமாளிக்கக்கூடிய பேட்ஸ்மேன்களே இல்லை' எனுமளவு சாதனைச் சரித்திரம் எழுதியவர், "ஓவர்சீஸில் சிறந்த இந்திய ஸ்பின்னர் இவர்தான்" என ரவி சாஸ்திரியால், புகழ்மாலை சூடப்பட்டவர். ஆனால், காயம், மோசமான ஃபார்ம், ரெட்பாலில் ஆதிக்கம் செலுத்த முடியாதது, அஷ்வினின் மறுவரவு எனப் பல காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகள் குல்தீப்புக்கு சற்றே சோதனை காலமானது. காயம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல்லில்கூட அவர் முழுமையாகப் பங்கேற்கவில்லை. தற்போது அந்த இடைவெளி, வெறும் இடைவேளை மட்டுமே, தனது கேம் இன்னமும் முடிந்து விடவில்லை என குல்தீப் காட்டி வருகிறார்.

நரைன் மற்றும் வருணின் ஆதிக்கத்தால் குல்தீப்பின் முந்தைய ஐபிஎல் அணியான கேகேஆரில் அவரால் தனது திறனை நிரூபிக்க முடியவில்லை, வாய்ப்பே கிடைக்கவில்லை. அதற்குப் பழிதீர்ப்பதாகவே இருந்தது குல்தீப் அவர்களுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 6.2 எக்கானமியோடு மிரட்டியது.

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

மொத்தமாக 5 போட்டிகளில், 11 விக்கெட்டுகளோடு அசத்தி வருகிறார் குல்தீப். என்ன மாறியுள்ளது எனப் பார்த்தால், அவரது பந்துகள் முன்பைவிட சற்றே அதிக வேகத்தோடு வந்து பேட்ஸ்மேன்களைத் திறனடிக்கிறது. முன்பு பெரும்பாலான பந்துகளை ஃபுல் லெந்த்தில் வீசி பேட்ஸ்மேனை அடித்துஆட வைத்து விக்கெட் எடுத்தவர், தற்போது குட் லெந்த்தில் வீசி, நெருக்கடி தருகிறார். ஃப்ளாட்டர் டெலிவரிகள் கைகொடுக்கின்றன. வீசும் கூக்ளியும், ஸ்டாக் பாலும் முன்னிலும் மேம்பட்டிருக்கின்றன. வீழ்ச்சி - கற்றுக் கொள்வதற்கான கால அவகாசம்; அது அப்டேட்டட் குல்தீப்பாக அவரை மாற்றி இருக்கிறது. அவர் அனுபவித்த வலியின் வீரியத்தை கேகேஆருக்கு எதிரான விக்கெட் செலிப்ரேசனின் போது காணப்பட்ட ஆக்ரோஷமே சொல்லியது. இது தொடர்ந்தால், இந்திய அணியில் வொய்ட் பால் கிரிக்கெட்டில் அவருக்கான இடம் மறுபடி உறுதி செய்யப்படலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உமேஷ் யாதவ்:

குல்தீப் - சஹால் ஸ்பின் மாயத்தோடு, உமேஷ் - இஷாந்தின் வேகமும் சேர்ந்தேதான் கோலியினை டெஸ்டில் வெற்றிக் கேப்டனாக வலம்வர வைத்தது. ஆனால், காயமும் மற்ற பௌலர்களின் விஸ்வரூபமும், டெஸ்ட் அணியிலேயே உமேஷின் இடத்தைக் கேள்விக்குறியாக்கி வந்தது. கடந்த ஐபிஎல்லில் ஒரு போட்டியில்கூட டெல்லி அவரைப் பயன்படுத்தவில்லை. இதனால்தான் இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றில் வாங்கப்படாத வீரராக உமேஷ் இருந்தார். அதனாலேயே பிளேயிங் லெவனில் வருவாரென்றாலும், எவ்விதத் தாக்கத்தையும் அவரிடம் ரசிகர்களோ வல்லுநர்களோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த சீசனின் முதல் போட்டியில் ஓப்பனிங் ஓவரிலேயே சிஎஸ்கேவின் நம்பிக்கைக் கீற்றான கெய்க்வாட்டை அவர் ஆட்டமிழக்கச் செய்து, பின் கான்வேயினையும் காலி செய்தபோதுதான் அவரின் பக்கம் கண்கள் திரும்பின.

உமேஷ் யாதவ் | KKR vs MI
உமேஷ் யாதவ் | KKR vs MI

பஞ்சாப்புக்கு எதிரான அவரது 4/23 மேஜிக் ஸ்பெல், ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆரை அபார வெற்றி பெற வைத்தது. அங்கிருந்து புதுப் பந்தை பேராயுதமாக்கி எதிரணியை பவர்பிளேயிலேயே முடக்கிப் போடும் வித்தகத்தைத் தொடர்ந்து கேகேஆருக்காக நிகழ்த்தி வருகிறார் உமேஷ்.

பேட்ஸ்மென்களுக்குத் துணைநிற்கும் வான்கடேயில்கூட அவரது பேக் ஆஃப் லெந்த்தில் வந்த பந்துகள் விக்கெட் வாடை பார்த்தன. ஸ்ரேயாஸும் அவரை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த, டி20-ல் தனது இரண்டாவது அவதாரத்தை எடுத்துள்ளார் உமேஷ். சர்வதேச டி20 போட்டியில் அவர் பங்கேற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அவரது 140+ கிமீ/மணி வேகம், அனுபவம், நியூபால் விக்கெட் டேக்கர் என்னும் புதுப் பரிமாணம் இவையெல்லாம் கேகேஆருக்கு பலம் சேர்க்கின்றன. அவர் இந்திய அணிக்குள் செல்லும் வாயிலை இது அகலப்படுத்துமோ இல்லையோ, உமேஷின் தனிப்பட்ட சாதனையாக, இது நிச்சயம் கொண்டாடப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சஹால்:

ஆர்சிபியின் ஆஸ்தான ஸ்பின்னரை ஏலத்தில் அவர்கள் புறக்கணித்தது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே கவலை தந்தது. கடந்த ஐபிஎல்லின் முதல் பாதியில் சோபிக்கத் தவறியதால், பிசிசிஐ கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பையே அவரிடமிருந்து தட்டிப் பறித்தது.

"5 ஆண்டுகளாக எந்தப் போட்டியிலும் நான் விலக்கி வைக்கப்பட்டதில்லை" என வேதனையுடன் தெரிவித்திருந்தார் சஹால். ஆர்சிபியும் ஏலத்தில் அவரைக் கைகழுவியது. மறுக்கப்படும் வாய்ப்புகள்தான், ஒருவரைச் செதுக்கிச் சிற்பமாக்கும். சஹாலுக்கும் தனது திறனின் எல்லைகளைக் காட்டும் இடமாக ராஜஸ்தான் கிடைத்துள்ளது. வெறும் 6 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வேட்டையாடியுள்ளார், வேட்கை தணியாமல்!

லக்னோவுக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதே வியப்போடு பார்க்கப்பட்ட நிலையில், கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஒரு ஹாட்ரிக் உள்ளடங்கிய அவரது ஐந்து விக்கெட் ஹால், ராஜஸ்தானின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பாட வைத்தது.

RR vs KKR | சஹால், வெங்கடேஷ்
RR vs KKR | சஹால், வெங்கடேஷ்

அந்தப் போட்டியில் ராணா மற்றும் வெங்கடேஷின் விக்கெட்டுகள் கூக்ளியால் வீழ்ந்திருந்தாலும், அது அவரிடமிருந்து இப்போதெல்லாம் எப்போதாவதுதான் வெளிப்படுகிறது. அவரது ஸ்டாக் பாலான லெக் பிரேக்கை நன்றாக டர்ன் செய்ய வைப்பதோடு, வார்னேயின் வாரிசாக ஸ்ட்ரெய்ட் பாலாக அதிவேகமாக ஸ்லைடரையும் வீசி, பேட்ஸ்மேன்களைக் கலங்கடிக்கிறார்.

டெத்ஓவரில் வேகப்பந்து வீச்சே கைகொடுக்கும் என்ற நடைமுறையை கேகேஆரை மிரட்டிய அவரின் அந்தவொரு ஸ்பெல் மாற்றியுள்ளது. அந்த ஹாட்ரிக்கிற்குப் பின், முன்னதாக மீம் டெம்ப்ளேட்டாகப் பயன்படுத்தப்பட்ட, சஹால் சாய்ந்து படுத்திருந்த 2019 உலகக்கோப்பை காட்சியை, மீண்டுமொரு முறை களத்தில் செய்து காட்டி அதனையே தனது வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றி, அதகளப்படுத்தினார் சஹால். பர்ப்பிள் கேப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கம்பேக், இந்திய அணிக்குள்ளான ரத்தினக் கம்பள வரவேற்பையும் உறுதி செய்கிறது.

தினேஷ் கார்த்திக்:

ஆண்டுக்கணக்கிலான ஐபிஎல் அனுபவம், உள்ளூர் போட்டிகளில் கோலோச்சியது எனத் தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை அவர் கைவசம் வைத்திருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக தினேஷ் கார்த்திக் பெரிதாக சாதிக்கவில்லை. காரணம், எல்லோரும் அறிந்ததுதான்; விக்கெட் கீப்பராக இருக்காமல் பேட்ஸ்மேனாக மட்டும் இருந்திருந்தால்கூட அவர் இன்னமும் அதிக உயரங்களை இந்திய அணியில் எட்டியிருப்பார். அவர் நினைத்திருந்தால், 36 வயதில் 'சாதித்தது போதும், சம்பாதிக்கப் பார்ப்போம்' என கமென்டேட்டர் வேலையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், 'இந்திய அணிக்குள் திரும்பி வருவேன்' என சில மாதங்களுக்கு முன் சொல்லி, அதற்கான பயிற்சியையும் மணிக்கணக்கில் மேற்கொண்டு, அதன் முன்னோட்டத்தை ஆர்சிபியில் காட்டிக் கொண்டிருக்கிறார் தினேஷ்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

ஏபிடி இல்லாத குறையே தெரியாத அளவு, ஃபினிஷர் ரோலில் பொருந்திப் போனதோடு, 209.57 என்னும் நம்ப முடியாத ஸ்ட்ரைக் ரேட்டோடு மிரட்டுகிறார். ஸ்பின்னர்களுக்கேனும் சற்றே அடங்குகிறார், வேகப்பந்து வீச்சுக்கெல்லாம் அவரது பேட்டெனும் வாள்வீச்சால் பதிலளிக்கிறார். குறிப்பாக, இந்த சீசனில் இதுவரை டெத்ஓவர்களில் 61 பந்துகளில், 140 ரன்களை அவரது பேட் விளாசியுள்ளது. அதில் 12 பவுண்டரிகளும், 11 சிக்ஸர்களும் அடக்கம். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினே அவரது 360°-யிலும் ஆடும் திறனைப் பாராட்டியுள்ளார். அக்மார்க் மேட்ச் வின்னராக அவர் மாறியிருப்பது ஆர்சிபிக்கான விடியலைக் காட்டி வருகிறது. அதிக அரைச் சதங்களில் அவரது பெயர் எழுதப்படவில்லை என்றாலும், ஆர்சிபியின் வெற்றிகளில் அவரது பெயர் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் இந்திய அணியில் வரும் டி20 உலகக் கோப்பையில் இடம்பெறும் அவரது ஆசை நிச்சயம் நிறைவேறும்.

இவர்களது தற்போதைய ஃபார்மினை இந்திய அணி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா என்பது இன்னும் விடைதெரியா கேள்விதான். அறிமுக வீரர்களின் வெற்றிகள், நாளை மீதான நம்பிக்கையை நம் கண்முன் காட்டுகிறதென்றால், முடிந்ததாகக் கடந்தவர்கள் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து சாதிப்பது, நிகழ்கால வாழ்க்கை மீதான பிடித்தத்திற்கே உத்திரவாதம் அளிக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism