Published:Updated:

IPL 2022: மீண்டெழுந்து அக்னி நட்சத்திரமாகத் தகிக்கும் சன்ரைசர்ஸின் சக்சஸ் சீக்ரெட் என்ன?

RCB vs SRH

குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி ஆடியிருக்கும் 7 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருக்கிறது. குஜராத்தைத் தோற்கடித்திருக்கும் அந்த ஒரு அணி சன்ரைசர்ஸ் மட்டுமே!

Published:Updated:

IPL 2022: மீண்டெழுந்து அக்னி நட்சத்திரமாகத் தகிக்கும் சன்ரைசர்ஸின் சக்சஸ் சீக்ரெட் என்ன?

குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி ஆடியிருக்கும் 7 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருக்கிறது. குஜராத்தைத் தோற்கடித்திருக்கும் அந்த ஒரு அணி சன்ரைசர்ஸ் மட்டுமே!

RCB vs SRH
நடப்பு சீசனின் மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்திருப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இருக்கிற இடமே தெரியாமல் இருந்த அந்த அணி இப்போது புள்ளிப்பட்டியலில் குஜராத்துடன் முதல் இடத்திற்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. வில்லியம்சன் கேப்டனாக இருப்பதாலோ என்னவோ நியூசிலாந்தை போன்றே ஒரு அண்டர்டாகாக பெரும் திமிங்கலங்களை எல்லாம் சத்தமே இல்லாமல் விழுங்கிக் கொண்டிருக்கிறது சன்ரைசர்ஸ். அந்த அணியின் விஸ்வரூப வெற்றி எப்படிச் சாத்தியப்பட்டது?

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற முன்னாள் சாம்பியன்களையெல்லாம் தாண்டி அறிமுகமான தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் ஆகியிருந்தது. ஆனால், சாம்பியன் பட்டத்திற்கு உண்டான தகுதியோடு சீரான பெர்ஃபார்மென்ஸ்களைத் தொடர்ந்து கொடுக்கவில்லை. 2018-ல் ரன்னர் அப்பாக வந்த சன்ரைசர்ஸ் அணி, 2019-ல் வெறும் 6 வெற்றிகளோடு ப்ளே ஆஃப்ஸிற்கு தொற்றிக்கொண்டு அத்தோடு வெளியேறியது. 2020-ல் 7 வெற்றிகளோடு கடைசி நொடியிலேயே ப்ளே ஆஃப்ஸிற்குத் தகுதிப்பெற்றிருந்தது. 2021 சீசன் சன்ரைசர்ஸ் அணியின் வரலாற்றிலேயே மோசமான சீசனாக அமைந்தது. தொடர்ந்து தோற்றது. ஆடிய 14 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தனதாக்கிக் கொண்டது. தோல்விகள் போக டேவிட் வார்னரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி அணியை விட்டே ஓரங்கட்டி, ஸ்டாண்ட்ஸில் உட்கார வைத்து கொடியை ஆட்டவிட்டு பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

உம்ரான் மாலிக்
உம்ரான் மாலிக்

சமீபத்தில் நடந்த மெகா ஏலம் மற்றும் அதற்கு முன்பான ரீட்டெய்ன்களில் கூட சன்ரைசர்ஸ் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் செயல்பட்டிருந்தது.

வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமத் என எதிர்பார்த்திடாத வீரர்களைத் தக்கவைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது.

மெகா ஏலத்தில் கடந்த சீசனின் மிடில் ஆர்டர் பிரச்னைகள் மற்றும் பந்துவீச்சு பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் ஒரு அணியை தேர்வு செய்திருந்தது. ஆனால் அதிலும் சர்ச்சை எழுந்தது.

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்த சைமன் கேடிச் `முறையாக ஆலோசிக்காமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்துவிட்டார்கள்' என அதிருப்தி குரலை வெளிப்படுத்தி அணியிலிருந்து வெளியேறினார். இது சர்ச்சையாகவே பயோ பபிள் காரணமாகத்தான் அவர் வெளியேறினார் என ஒரு காரணம் கூறப்பட்டது.

இப்படியாக இந்த சீசன் தொடங்குவதற்கு முன் சன்ரைசர்ஸ் அணியின் மீது விமர்சனங்களும் சர்ச்சைகளும்தான் இருந்ததே ஒழிய ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே இல்லை. முதல் இரண்டு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஆடியவிதமும் இது கடந்த சீசனின் நீட்சியாக இருக்குமோ என்கிற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 200+ ரன்களை வாரி வழங்கினர். அந்தப் போட்டியில் பவர்ப்ளேக்கு உள்ளாக மட்டுமே சன்ரைசர்ஸின் பௌலர்கள் 4 நோ-பால்களை வீசியிருந்தனர். புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் மட்டுமில்லை ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தருமே நோ-பால்களை வீசியிருந்தார்.

டி20 போட்டிகளில் நோ-பால் வீசுவதே குற்றம். அதிலும் இப்படித் தொடர்ச்சியாக ஒரு ஸ்பின்னரும் இணைந்து கொண்டு நோ-பால் வீசுவது மகா குற்றம். டேல் ஸ்டெய்ன், முத்தையா முரளிதரன் போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக இருக்கும் அணியின் வீரர்கள் இப்படி செயல்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்
IPL

கிட்டத்தட்ட அன்றைக்கு அந்தப் போட்டியில் கமென்ட்ரி செய்து கொண்டிருந்தவர்கள் அத்தனை பேருமே சன்ரைசர்ஸின் பௌலர்களை Indisciplined என்றே விமர்சித்திருந்தனர். ராஜஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டி மட்டுமில்லை. லக்னோவிற்கு எதிரான அடுத்த போட்டியிலுமே சன்ரைசர்ஸின் தோல்வி தொடர்ந்தது. சென்னை மற்றும் மும்பை அணிகளின் மீதே அத்தனை பேரின் கவனமும் இருக்க, சன்ரைசர்ஸை யாரும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.

இந்நிலையில்தான், சென்னைக்கு எதிராக மூன்றாவது போட்டியின் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. சென்னை அணி புள்ளிக்கணக்கைத் தொடங்குவதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது எனக்கூறி சன்ரைசர்ஸை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால், கணிப்புகளையெல்லாம் மீறி சன்ரைசர்ஸ் வென்றது. முதல் வெற்றியை பதிவு செய்தது. அங்கிருந்து இப்போதுவரை தோல்வியே இல்லை. தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. வேறெந்த அணியும் இந்த சீசனில் தொடர்ச்சியாக இத்தனை வெற்றிகளை பெறவே இல்லை.

குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி ஆடியிருக்கும் 7 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருக்கிறது. குஜராத்தைத் தோற்கடித்திருக்கும் அந்த ஒரு அணி சன்ரைசர்ஸ் மட்டுமே!

சன்ரைசர்ஸ் அணியின் இந்தத் தொடர் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதன் பந்துவீச்சு படையே. முதல் போட்டியில் பவர்ப்ளேக்குள்ளாக 4 நோ-பால்களை வீசி ஒழுங்கீனமான பந்துவீச்சு என பெயரெடுத்து 200+ ரன்களுக்கு மேல் வாரிக்கொடுத்த அதே சன்ரைசர்ஸின் பௌலர்கள்தான், அதற்கடுத்த 6 போட்டிகளிலும் எதிரணிகளை 175 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கின்றனர். கடைசியாக, நல்ல ஃபார்மில் இருந்த பெங்களூரு அணியையும் 68 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியிருந்தனர். கட்டுக்கோப்பாக பந்துவீசிய இந்த 6 போட்டிகளில் ஐந்தில் சன்ரைசர்ஸ் அணி வென்றிருக்கிறது. ஏறக்குறைய இது சன்ரைசர்ஸ் அணியின் பழைய ஃபார்முலாதான். நல்ல பௌலிங் அட்டாக்கோடு எதிரணிகளை சராசரியை விட குறைவான ஸ்கோருக்குள் முடக்கிவிட்டு சீரான பேட்டிங்கின் மூலம் எளிதாக வெல்வது. சன்ரைசர்ஸின் சக்சஸ் சீக்ரெட்டே இதுதான். இதை கடந்த இரண்டு மூன்று சீசன்களாக அந்த அணி தவறவிட்டிருந்தது. இந்த சீசனில் அதை மீண்டும் கைக்கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அணி சன்ரைசர்ஸ் என்பதே இதற்கான சாட்சி.
RCB vs SRH
RCB vs SRH

சன்ரைசர்ஸ் அணியின் கலவையான வேகப்பந்து வீச்சு கூட்டணியே அந்த அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எல்லாவிதமான பௌலர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மிரட்டுகிறது. 6 அடி 8 அங்குல உயரத்தோட தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன் ஸ்விங்குடன் தனது உயரத்தின் மூலம் கிடைக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் டு ப்ளெஸ்ஸி, கோலி, அனுஜ் ராவத் என பெங்களூருவின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் வீழ்த்தி தன்னுடைய முழுத்திறனையும் வெளிக்காட்டியிருந்தார்.

கடந்த சீசனில் ஆட முடியாமலே போய் காயங்களிலிருந்து மீண்டு வந்திருக்கும் நடராஜன் மீண்டும் தனது துல்லியமான யார்க்கர்களை இறக்க ஆரம்பித்திருக்கிறார். பவர்ப்ளேயிலிருந்து டெத் ஓவர் வரை எல்லா இடங்களிலும் வீசுகிறார். பெரும்பாலான போட்டிகளில் வீசுகின்ற முதல் ஓவரிலேயே விக்கெட்டையும் வீழ்த்தி விடுகிறார்.

நடராஜன் | SRH vs LSG
நடராஜன் | SRH vs LSG
இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்தான். 15 விக்கெட்டுகளோடு பர்ப்பிள் கேப்பிற்கான ரேஸிலும் சஹாலுக்கு அடுத்தப்படியாக முன்னணியில் இருக்கிறார்.

புவனேஷ்வர் குமாரும் எக்கச்சக்கமான காயங்களில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார்.

கடந்த இரண்டு சீசன்களிலும் சேர்த்தே 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த புவி, இந்த சீசனில் இதுவரை மட்டுமே 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 7.5 க்கும் கீழ்தான் இருக்கிறது. பழைய புவனேஷ்வர் குமாராக மீண்டும் தடதடக்கத் தொடங்கியிருக்கிறார்.

போட்டிக்கு போட்டி சன்ரைசர்ஸ் அணி வலுவடைந்து கொண்டே செல்வதை போல உம்ரான் மாலிக்கும் வலுவாகிக்கொண்டே செல்கிறார். முதல் ஒரு சில போட்டிகளில் 150+ கி.மீ வேகத்தை மட்டுமே நம்பிய உம்ரான், அதன்பிறகான போட்டிகளில் துல்லியமான லைன் & லெந்த்திலும் கவனம் செலுத்தி நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார். ரஸலை ஸ்ட்ரைக்கில் வைத்துக்கொண்டு ஒரே ஓவரி 5 டாட்களை வீசுகிறார். 20வது ஓவரில் ஒரு ரன்னை கூட கொடுக்காமல் 4 விக்கெட்டுகள் வீழ காரணமாக அமைகிறார். பெங்களூருவிற்கு எதிராக 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இப்படியாக அவரின் வேகமும் அணிக்கு பெரியளவில் உதவிபுரிய தொடங்கியிருக்கிறது.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்
IPL

வேகப்பந்து வீச்சு இத்தனை பலமாக இருப்பதால்தான் காயத்தில் சிக்கியிருக்கும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இல்லாத குறை பெரிதாக தெரியவில்லை. அவர் வந்துவிட்டால் பந்துவீச்சு இன்னும் பலப்படும்.

எதிரணிகளை சராசரிக்கும் குறைவான ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தி விடுவதால் பெரும்பாலும் டார்கெட்டை ரொம்பவே சௌகரியமாக சேஸ் செய்து விடுகின்றனர். வென்றிருக்கும் 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சேஸிங்கைக் கடைசி ஓவர் வரை இழுத்து சென்றனர். மற்ற போட்டிகளிலெல்லாம் சில ஓவர்களை மீதம் வைத்தே வென்றிருக்கின்றனர். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தை விட சன்ரைசர்ஸின் ரன்ரேட் அதிகமாக இருப்பதற்கு இதுதான் காரணம்.

ஆடியிருக்கும் 7 போட்டிகளிலுமே டாஸை வென்றிருப்பது சன்ரைசர்ஸின் கேப்டன் வில்லியம்சன்தான். இந்த ராசியும் அந்த அணிக்கு பெரியளவில் உதவுகிறது. ஏனெனில், அத்தனை போட்டியிலும் சன்ரைசர்ஸ் தங்கள் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் சேஸிங்கே செய்திருக்கிறது.

அணியின் வெற்றிக்கு வீரர்களைத் தாண்டி பயிற்சியாளர் குழுவிற்கும் க்ரெடிட் கொடுத்தே ஆக வேண்டும். ஏனெனில், உம்ரான் மாலிக் போன்றதொரு பௌலரை வருங்காலத்திற்கான வாய்ப்பாக பார்த்து தக்கவைத்ததோடு, அவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகளையும் வழங்கினர். டேல் ஸ்டெய்னின் வழிகாட்டுதலில் அவர் செட்டில் ஆகும் வரை பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அவருக்கு ஓவரே கொடுக்காமல் தவிர்த்தனர். மிடில் ஓவர்களில் வீசி அவர் தவறு செய்து திருத்திக் கொள்வதற்கான அவகாசத்தை அவருக்கு வழங்கினர்.

SRH
SRH

அதற்கான பதில் பலனையும் உம்ரான் மாலிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அபிஷேக் சர்மாவை கடந்த சீசனின் கடைசிக்கட்டத்தில் வில்லியம்சனுடன் ஓப்பனிங் இறக்கியிருந்தார்கள். இந்த சீசனிலும் அதே முடிவை தொடர்ந்தார்கள். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா திணறினார். ஒன் டவுனில் இறங்கும் ராகுல் திரிபாதி நன்றாகத்தானே ஆடுகிறார்? அவரை ஓப்பனிங் இறக்கலாமே என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால், பயிற்சியாளர் டாம் மூடி அபிஷேக்தான் ஓப்பனர் என்பதில் தெளிவாக இருந்தார். உம்ரான் மாலிக்கை போன்றே அபிஷேக் சர்மாவும் பிக் அப் ஆகி பெர்ஃபார்ம் செய்ய தொடங்கிவிட்டார்.

அனுபவமற்ற மிடில் ஆர்டர் கடந்த சீசனில் பெரிய தொல்லையாக இருந்தது. இந்த சீசனில் பூரன், மார்க்ரம் போன்றவர்கள் மூலம் சன்ரைசர்ஸ் அந்த பிரச்னையையும் தீர்த்திருக்கிறது.

ஒரு அண்டர்டாக் அணி வெல்வது எப்போதுமே ஒரு தொடரின் சுவாரஸ்யத்தை இன்னும் இன்னும் அதிகமாக்கிக் கொடுக்கும். சன்ரைசர்ஸின் வெற்றி இந்த சீசனில் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. இதோடு நின்றுவிட வேண்டாம். அக்னி நட்சத்திரமாக தகிக்கட்டும்!