Published:Updated:

MI vs PBKS: அடி மேல் அடி வாங்கும் மும்பை இந்தியன்ஸ்; இந்த சீசனில் மீண்டுவர என்ன செய்யவேண்டும்?

Punjab ( IPL )

முக்கியமான பேட்டர்கள் ரன் அவுட் ஆகியிருக்கின்றனர். கேட்ச் ட்ராப்கள், மிஸ் ஃபீல்ட்கள். இது போக பௌலர்கள் 16 எக்ஸ்ட்ராஸை வீசியிருந்தனர். மும்பை தோற்றிருப்பதோ 12 ரன்கள் வித்தியாசத்தில்தான்!

MI vs PBKS: அடி மேல் அடி வாங்கும் மும்பை இந்தியன்ஸ்; இந்த சீசனில் மீண்டுவர என்ன செய்யவேண்டும்?

முக்கியமான பேட்டர்கள் ரன் அவுட் ஆகியிருக்கின்றனர். கேட்ச் ட்ராப்கள், மிஸ் ஃபீல்ட்கள். இது போக பௌலர்கள் 16 எக்ஸ்ட்ராஸை வீசியிருந்தனர். மும்பை தோற்றிருப்பதோ 12 ரன்கள் வித்தியாசத்தில்தான்!

Published:Updated:
Punjab ( IPL )
பங்காளிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் தோற்ற போது மும்பை இந்தியன்ஸும் முதல் போட்டியில் தோற்றது. சென்னை அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோற்ற போது மும்பையும் அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோற்றது. ஆனால், இப்போது சென்னை முதல் வெற்றியை பெற்று புள்ளிக்கணக்கை தொடங்கிவிட்டது. மும்பையோ தனிமரமாகி நிற்கிறது. பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் வெல்வதற்கு அத்தனை வாய்ப்புகள் இருந்தும் வம்படியாக கோட்டைவிட்டு நிற்கிறது மும்பை இந்தியன்ஸ்.

மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். எழுதப்படாத விதியின்படி சேஸிங்கையே தேர்வு செய்தார். நேற்றைய நாளில் மும்பை இந்தியன்ஸுக்கு நடந்த ஒரே நல்ல சம்பவம் இதுதான். இதன்பிறகு, எல்லாமே அடிதான்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் வலுவான பேட்டர்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் எல்லாருமே தனித்தனியாக ஆடக்கூடியவர்களாக இருந்தனர். நின்று ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து கூட்டாக ஆடும் வழக்கம் பஞ்சாப் பேட்டர்களிடம் அவ்வளவாக தென்படவே இல்லை. வருவார்கள்; சிக்சர் அடிப்பார்கள்; கிளம்பிவிடுவார்கள் இதுதான் அந்த அணியின் பேட்டர்களின் வழக்கமாக இருந்தது. இதை சரி செய்யும் வாய்ப்புடைய இரண்டு வீரர்கள் மயங்க் அகர்வாலும் தவானும் மட்டுமே.

Mayank
Mayank
Punjab

இவர்கள் இருவருமே நன்றாக ஆடி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி அதை பின்னால் இருக்கும் அந்த அதிரடியான வீரர்களின் கையில் கொடுத்தால் அதன்பிறகு நடக்க வேண்டியதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், மயங்க் அகர்வால் தொடர்ச்சியாக சொதப்பி வந்ததால் இதை செய்வதில் பஞ்சாபிற்கு பிரச்னை இருந்தது. ஃபார்முக்கு வருவதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் மும்பை இந்தியன்ஸ் நேற்று வசமாகச் சிக்கிக்கொண்டது.

மயங்க் அகர்வாலும் தவானும் மட்டுமே இணைந்து 9.3 ஓவர்களில் 97 ரன்களைச் சேர்த்திருந்தனர். பாசில் தம்பி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மயங்க் அகர்வால் பாசிட்டிவ்வாக தொடங்கியிருந்தார். அந்த பவர்ப்ளே முழுவதுமே மயங்க் அகர்வாலின் ராஜ்ஜியம்தான்.

மும்பை அணி நேற்று பவர்ப்ளேயில் மட்டுமே 5 பௌலர்களை பயன்படுத்தியிருந்தது. அந்த 5 பேரையுமே மயங்க் அகர்வால் அசால்ட்டாக டீல் செய்தார். பும்ராவின் நேர்த்தியான ஒயிடு டெலிவரிகளையும் பவுண்டரி ஆக்கியிருந்தார். முருகன் அஷ்வினையும் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் எனச் சிதறவிட்டிருந்தார். 'ரோஹித் சர்மாவின் ஃபீல்ட் ப்ளேஸ்மெண்ட்களோடு மயங்க் விளையாடிக்கொண்டிருக்கிறார். ரோஹித் அய்யோ பாவம்' என்பது போல கமென்ட்ரி பாக்ஸில் வருந்திக் கொண்டிருந்தனர். மயங்க் ஒரு பக்கம் புரட்டி எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் தவான் மறுமுனையில் விக்கெட்டை மட்டும் காத்துக்கொண்டு சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார். அருமையான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்த இந்தக் கூட்டணி முருகன் அஷ்வினின் 10 வது ஓவரில் பிரிந்தது. அரைசதம் அடித்த கையோடு மயங்க் அகர்வால் வெளியேறினார்.

தொடர்ந்து ஆடிய தவான் 17 வது ஓவர் வரை க்ரீஸில் நின்றார். முதலில் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தவர் பின்னர் கடைசிக்கட்டங்களில் 190+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். 50 பந்துகளில் 70 ரன்களை அடித்த நிலையில் பாசில் தம்பியின் ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
Dhawan
Dhawan
IPL

மயங்க் அகர்வாலும் தவானும் சேர்ந்து 10 ஓவர் வரை நின்றதும் தவான் தொடர்ந்து 17 வது வரை நின்றதும் அந்த அணிக்கு பெரிய பலமாக அமைந்தன. ஏனெனில், இது நிகழாமல்தான் கடைசி 10 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை விட்டு பஞ்சாப் Under Performance செய்திருந்தது. இதற்கு மும்பை பௌலர்களுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். பெங்களூருவிற்கு எதிரான கடந்த போட்டியிலும் பவர்ப்ளேயில் அவர்கள் விக்கெட்டே எடுக்கவில்லை. அதே வழக்கத்தை இங்கேயும் தொடர்ந்து பஞ்சாபிற்கு உதவிபுரிந்திருந்தனர். கடைசிக்கட்டத்தில் ஜித்தேஷ் சர்மா மற்றும் ஷாரூக்கான் இருவரும் அதிரடி காட்டியதால் அணியின் ஸ்கோர் 198-ஐ தொட்டது.

மும்பை அணிக்கு 199 ரன்கள் டார்கெட். ரோஹித் கொஞ்சம் அதிரடியான தொடக்கத்தையே கொடுத்திருந்தார். வைபவ் அரோரா மற்றும் ரபாடாவி பந்தில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்திருந்தார். நல்ல வேகமான தொடக்கமாக இருந்தாலும் பவர்ப்ளேக்குள்ளேயே ரபாடாவின் பந்தில் அவர் விக்கெட்டை இழந்தது ஏமாற்றமாகவே இருந்தது. இந்த ஒரு போட்டி என்றில்லை. கடந்த சில சீசன்களாகவே ரோஹித்தின் பெர்ஃபார்மென்ஸ் சுமாராகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் பென்ச்சில் வைக்கப்பட்டு ஃபார்ம் அவுட் ஆகி, அணிகள் மாறி தட்டுத்தடுமாறி நிற்கும் ரஹானேவின் செயல்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் ரோஹித்திற்கு இணையானதாக இருக்கின்றன. எனில், ரோஹித் எவ்வளவு சுமாராக ஆடியிருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ளலாம். இஷன் கிஷனும் நேற்று ஒன்றும் செய்யவில்லை.

உண்மையிலேயே கேம் சேஞ்சராக அமைந்தது பேபி ஏபிடிதான். டீவில்லியர்ஸ் பெங்களூருவை தனி ஆளாக தாங்கியதை போல, இங்கே ப்ரெவிஸ் ஒற்றை ஆளாக ஆட்டத்தையே மாற்றினார்.

க்ரீஸுக்குள் வந்து ஒரு நான்கு பந்துகளை பார்த்து ஆடியவர், அதன்பிறகு தொட்டதெல்லாம் எல்லைக்கோட்டை தாண்டியே சென்றது..ராகுல் சஹார், அபாயகரமான ஸ்பின்னர்களுள் ஒருவர். அவரின் மரபார்ந்த லெக் ப்ரேக்குகளை எதிர்கொள்ள பலரும் திணறும் நிலையில் ப்ரெவிஸ் ரொம்ப சாதாரணமாக அவரின் பந்தில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். கூடவே திலக் வர்மாவும் அதிரடி காட்ட போட்டி பஞ்சாபின் கையிலிருந்து நழுவுவதைப் போன்றே இருந்தது. ஆனால், ப்ரெவிஸ் அவுட் ஆன உடன் போட்டி மாறியது. ப்ரெவிஸ் 49 ரன்களில் பஞ்சாபிற்குப் பயத்தை காட்டிவிட்டு ஓடியன் ஸ்மித்தின் பந்தில் அவுட் ஆகியிருந்தார்.

ப்ரெவிஸ் அவுட் ஆன போது மும்பை இந்தியன்ஸ் 11 ஓவர்களில் 116 ரன்களை எடுத்திருந்தது. திலக் வர்மா, சூர்யகுமார், பொல்லார்ட் எல்லாம் இருக்க டார்கெட்டை எட்டிவிடலாம் எனும் சூழலே இருந்தது. ஆனால், ரொம்ப மோசமாக அடிப்படைகளிலேயே சரியாக இல்லாமல் மும்பை சில தவறுகளைச் செய்து சொதப்பியிருக்கிறது.

Brevis
Brevis
IPL
முக்கியமான கட்டத்தில் திலக் வர்மா ரன் அவுட் ஆகியிருந்தார். போட்டி டெத் ஓவர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில் பொல்லார்டும் சூரியகுமாரும் நின்றால் போட்டியை வெல்லலாம் என்ற சூழலில் பொல்லார்ட் ரன் அவுட் ஆகியிருந்தார்.

திலக் வர்மாவின் ரன் அவுட்டிற்கு சூர்யகுமார் பொறுப்பேற்க முடியாது என்றாலும் பொல்லார்டின் ரன் அவுட்டிற்கு அவர்தான் முழுப்பொறுப்பு. க்ரீஸ்களுக்கு இடையில் வேகமாக நடக்க மட்டுமே செய்யும் பொல்லார்ட் இருக்கும்போது மிஸ் ஃபீல்டுக்கு இரண்டாவது ரன்னை வம்படியாக எடுக்க முயன்றது அதிர்ச்சியாக இருந்தது. சூர்யகுமார் பொல்லார்ட்டுக்கு ஆப்பு வைத்தால் சூர்யகுமாருக்கு உனத்கட் ஒரு ஆப்பு வைத்தார்.

9 பந்துகளுக்கு 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில், ரபாடா வீசிய அந்த 19 வது ஓவரில் சூர்யகுமார் லாங் ஆனில் ஓடியன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவுட் ஆனதற்கு முந்தைய பந்தில் அதே லாங் ஆனில் பந்தை தட்டிவிட்டு சிங்கிளுக்கு முயன்றிருந்தார். ஆனால், 'நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்ற உனத்கட் அதெல்லாம் வேண்டாம் நீயே நின்னு ஆடு' என்பது போல சிங்கிள் எடுக்க மறுத்திருப்பார்.

'சூர்யகுமாரை விட சூர்யகுமாரின் மேல் உனத்கட்டிற்கு அதிக நம்பிக்கையிருக்கிறது போல' என கமென்ட்ரி பாக்ஸில் கலகலத்தனர்.

ஆனால், அடுத்த பந்தே சூர்யகுமார் அவுட். 20வது ஓவர் ஓடியன் ஸ்மித் வீசுவார் என்பதால் அந்த ஓவரில் பெரிதாக அடிக்கலாம், ரபாடாவிடம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என சூர்யகுமார் நினைத்திருக்கலாம். ஆனால், உனத்கட் அப்படி நினைக்கவில்லை என்பதுதான் சோகம். மேலும், ஓடியன் ஸ்மித்தை அட்டாக் செய்வதுதான் திட்டம் எனில் உனத்கட்டை எச்சரிக்கை செய்து சூர்யகுமார் அடுத்த பந்தில் சிங்கிள் தட்டியிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை.

Pollard runout
Pollard runout
IPL

சின்னச் சின்ன புரிதலற்ற தன்மைகளால் கடைசி சில ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் கோட்டைவிட்டுவிட்டது. அதுவும் அடிப்படைகளிலேயே தவறு செய்திருக்கின்றனர். முக்கியமான பேட்டர்கள் ரன் அவுட் ஆகியிருக்கின்றனர். கேட்ச் ட்ராப்கள், மிஸ் ஃபீல்ட்கள். இது போக பௌலர்கள் 16 எக்ஸ்ட்ராஸை வீசியிருந்தனர். மும்பை தோற்றிருப்பதோ 12 ரன்கள் வித்தியாசத்தில்தான்! பஞ்சாப் கொடுத்த எக்ஸ்ட்ராஸோ வெறும் 5 ரன்கள் மட்டும்தான்.

இப்படியாக அடிப்படையான விஷயங்களில் கூட மும்பை சொதப்புவதெல்லாம் அந்த அணியை இந்த சீசனிலிருந்து மேலும் மேலும் ஓரங்கட்டிக்கொண்டே இருக்கிறது. இது 5வது தோல்வி. நேரமே இல்லை. சீக்கிரம் மீண்டு வாங்க பல்தான்ஸ்!