Published:Updated:

ரஷீத் கான்: மாயமில்லை மந்திரமில்லை... எதிர்பாராததை எதிர்பாருங்கள்! டி20-யின் சிறந்த பௌலரானது எப்படி?

ரஷீத் கான்

சாதனை நாயகர்களுக்குக் களங்கள் மாறினாலும், அவர்கள் எட்டும் உயர் தளங்களும், மகுடம் சூடும் காட்சிகளும் மாறுவதில்லை. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸில் ரஷித் இருக்கிறார் என்பதே அவர்களது பௌலிங் படைக்கு பூரணத்துவம் கொடுத்தது.

Published:Updated:

ரஷீத் கான்: மாயமில்லை மந்திரமில்லை... எதிர்பாராததை எதிர்பாருங்கள்! டி20-யின் சிறந்த பௌலரானது எப்படி?

சாதனை நாயகர்களுக்குக் களங்கள் மாறினாலும், அவர்கள் எட்டும் உயர் தளங்களும், மகுடம் சூடும் காட்சிகளும் மாறுவதில்லை. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸில் ரஷித் இருக்கிறார் என்பதே அவர்களது பௌலிங் படைக்கு பூரணத்துவம் கொடுத்தது.

ரஷீத் கான்
"வெல்வதற்காக வந்திருக்கிறோம்" என 83 திரைப்படத்தில், கபில்தேவ் கூறுகையில் எதிர்கொண்ட அதே கேலியைச் சந்தித்திருந்தாலும், முதல் ஆளாக ப்ளேஆஃப் எக்ஸ்பிரஸில் ஏறிவிட்டது குஜராத். தனது மேஜிக் ஸ்பெல்களால் அதனை ஏற்றிவிட்ட ரஷீத் கானின் ஐபிஎல் பங்களிப்போ, ஆண்டுக்கு ஆண்டு மெருகேறி வருகிறது.

டி20 களம் - பேட்டுக்கும், பந்துக்குமான யுத்தம் பெரும்பாலும் சமநிலையை எட்டாத போர்க்களம். காரணம், என்னதான் ஃபீல்டர்களோடு கை கோத்து, பௌலர்கள் போராடினாலும் பேட்டர்கள்தான் பெரும்பாலான ஆட்டங்களில் கோலோச்சுகிறார்கள். ரன்கள் கசியாமல் தடுக்கவே பௌலர்கள் போராட வேண்டிய நிலைதான், போட்டி முழுவதும் நீடிக்கும்.

அத்தகைய ஒரு ஃபார்மெட்டில், "ரன்களைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம், விக்கெட்டைப் பாதுகாத்துக் கொண்டாலே போதும்" என இவரது ஓவர்களை மட்டும் சாய்ஸில் விட வைக்கும் சர்வைவல் தியரியை பேட்ஸ்மேன்களை இயற்ற வைத்த பௌலர்தான் ரஷித் கான்.

கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் இருந்து வரவில்லை, ஆனால், உலக உருண்டையில் ஆடப்படும் அத்தனை கிரிக்கெட் லீக்குகளிலும், இன்றியமையாத பேராக அவருடைய பெயர் எப்போதோ மாறி விட்டது. செயற்கரிய பல சாதனைகள் ஏற்கெனவே அவரைத் தேடி வந்து அடைந்தும் விட்டன.

GT - Rashid Khan
GT - Rashid Khan

கடந்த அக்டோபரில் சர்வதேச டி20 களத்தில் 100 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த போதே கொண்டாடப்பட்டார் ரஷீத். ஏனெனில், முன்னதாக 76 போட்டிகளில், மலிங்கா செய்திருந்த அதே சாதனையை ரஷீத், 53 போட்டிகளில் நிகழ்த்தியிருந்தார். அதுதான் அவரை ஆல்டைம் கிரேட்டாகவும் கொண்டாட வைத்து வருகிறது. அதனை அடைந்த இளம் வீரர் அவர்தான் என்பதோடு அவரது குறைவான எக்கானமி எப்போதுமே அவரை கூடுதல் ஸ்பெஷல் ஆக்குகிறது.

சர்வதேச டி20-ல் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டின் லீக் தொடர்களிலும் அவரது சாதனையைப் பதிவு செய்ய பல பக்கங்கள் தேவைப்படுகின்றன. ஐபிஎல்லைப் பொறுத்தவரை, 2017-ல் இருந்து கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸுக்காக ஆடிய ரஷீத், ஒவ்வொரு கட்டத்திலும் அணிக்கான வெற்றிப் பாதையை வகுத்துக் கொண்டே இருந்தார். அவர்களுக்காக 76 போட்டிகளில் 93 விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமல்ல, 6.33 எக்கானமியோடு, 19.5 ஸ்ட்ரைக் ரேட்டோடு அவர் பந்து வீசியதும்தான் எவ்வளவு குறைவான ஸ்கோரையும் டிஃபெண்ட் செய்யும் அணியாக அவர்களை மாற்றியது.

அதனால்தான் ரஷீத் கான் கடந்த ஏலத்திற்காக தன்னைத் தானே விடுவித்துக் கொண்டிருந்தாலும் என்ன விலை கொடுத்தேனும் அவரைத் தக்க வைக்க அவர்கள் முயன்றிருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டிருந்தனர்‌. வார்னரின் பேட்டிங்கும் ரஷீத்தின் பௌலிங்கும்தான் இந்த சீசனில் அவர்கள் தவறவிட்ட பொக்கிஷங்கள்.

சாதனை நாயகர்களுக்குக் களங்கள் மாறினாலும், அவர்கள் எட்டும் உயர் தளங்களும், மகுடம் சூடும் காட்சிகளும் மாறுவதில்லை. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸில் ரஷித் இருக்கிறார் என்பதே அவர்களது பௌலிங் படைக்கு பூரணத்துவம் கொடுத்தது. அந்த நிலையிலிருந்து சற்றும் பிறழாமல்தான் இந்த சீசனும் அவருக்குத் தொடர்கிறது. தொடர்ச்சியாக ஆறு சீசன்களில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமல்ல, எல்லா சீசன்களிலும் 7-க்கும் குறைவான எக்கானமியோடே அவர் வலம் வந்திருப்பதும்தான் கன்சிஸ்டன்ஸி என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

PBKS vs GT | Rashid Khan
PBKS vs GT | Rashid Khan

பொதுவாக எல்லா மிஸ்ட்ரி பௌலர்களுக்கும் ஹனிமூன் பீரியட் உண்டு. அவர்களது பௌலிங்கை டீகோடிங் செய்து அக்குவேறு ஆணிவேராக டேட்டா அனலிஸ்டுகள் அதைப் பற்றி பகுப்பாய்ந்து, உள்ளே உள்ள மிஸ்ட்ரியை கட்டவிழ்க்க வைக்க ஆகும் காலம்தான் அவர்களது பிரைம் டைம். ஆனால், அந்தக் கால கட்டம் எல்லாம் முடிந்தும் இன்னமும் ரஷீத்தின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஸ்பின்னர்களுக்குரிய வேகத்திற்கும் சற்றே அதிகத்தில் பந்துகளைச் சுழல வைப்பதும், அதைத் திரும்ப வைப்பதும், எந்த ஒரு பௌலருக்கும் சவாலான விஷயம்தான். ஆனால், அது ரஷீத்துக்குக் கடினமில்லை, பேட்ஸ்மேனுக்குத்தான் பேராபத்து. கூக்ளிகளின் ராஜா என்றாலும் அதனைக் கணித்தறிய பேட்ஸ்மென்கள் திணறுகிறார்கள் என்றாலும், அவரது ஸ்டாக் டெலிவரிகளும் அச்சுறுத்தவே செய்கின்றன.

லைன் அண்ட் லெந்த்தான் அவரது பௌலிங்கின் முக்கிய கூறுகள். சரியான லெந்தில் தொடர்ச்சியாக வீசும்போது, பேட்ஸ்மென்களின் கவனத்தோடு கண்ணாம்பூச்சியும் ஆடலாம், விக்கெட்டுகளையும் வீழ்த்தலாம். இதுதான் தனது சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ் எனப் பலமுறை கூறியிருக்கிறார் ரஷீத். அவர் ஐபிஎல்லில் அறிமுகமான போட்டியில் இருந்து கணக்கிட்டால் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் கணக்கில் முதலிடத்திலுள்ள பும்ராவுக்கு (114) அடுத்தபடியாக ரஷீத்தான் (106) இருக்கிறார்.

இந்த சீசனில், நடுவில் ஓரிரு போட்டிகளில், அவரது பந்துகள் பேட்ஸ்மென்களால் பந்தாடப்பட்டதற்கே ரஷீத்தின் நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டது. பிரைன் லாரா, "அவருடைய குறைந்த எக்கானமியைப் பாராட்டினாலும், அவருக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் டிஃபெண்டிங் மோடுக்குப் போய் விடுவதால், அவரை விக்கெட் எடுக்கும் பௌலராகப் பார்க்க முடிவதில்லை" எனக் கூறியிருந்தார்.

அதற்கு, ரஷீத்தும், "விக்கெட்டுகளை விட, ரன்களைக் கட்டுப்படுத்துவதுதான் டி20-க்கு முக்கியம்" என சூசகமாகக் கூறியிருந்தார். உண்மையில், லாராவின் கருத்தை முழுமையாக ஒதுக்க முடியாதென்றாலும், ரஷீத்தின் கருத்தும் ஆழமானதுதான். 20 ஓவர்கள் மட்டுமே உள்ள போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயிக்கவோ துரத்தவோ தேவையுள்ள கட்டத்தில், ஒரு பௌலரது நான்கு ஓவர்கள் பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்புக்கு வேகத்தடை இடும் பட்சத்தில் பேட்ஸ்மென்களது ரிதம் தவறுவது மட்டுமல்ல, எகிறிவிடும் தேவைப்படும் ரன்ரேட்டும் அழுத்தமேற்றும். அவரை விட்டு அடுத்த பௌலரை அவர்கள் தாக்க முயலும் போது தவறுகள் வெகு இயல்பாக நிகழும். பலூனில் ஒரு இடத்தில் தரப்படும் அழுத்தம் எல்லா இடத்திற்கும் சமமாகப் பரவுவதைப் போல், மிடில் ஓவரில் அவரது மிரட்டும் ஸ்பெல், பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை எல்லா இடத்திற்கும் பரவும். இந்தத் தாக்கமும் பயமும்தான் ரஷித்தை கேம் சேஞ்சராக மாற்றியுள்ளது.

Hardik Pandya, Rashid Khan, Pollard
Hardik Pandya, Rashid Khan, Pollard
IPL

இந்த சீசனில் ஏற்கெனவே கேகேஆருக்கு எதிரான போட்டியில் 100 ஐபிஎல் விக்கெட்டுகளை ரஷீத் எட்டினார். மலிங்கா, புவனேஷ்வர் உள்ளிட்டோர் எட்டியிருந்த இந்த இடத்தை, ஐந்தாவது வீரராக, ரஷீத் எட்டியிருந்தாலும், அதனைச் செய்த வீரர்களில் குறைந்த எக்கானமி (6.35) இவருடையது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேலும் ஒரு சாதனையாக ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் என்னும் மைல்கல்லையும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் ரஷீத் எட்டியுள்ளார். அந்தப் பட்டியலின் உச்சத்தில் பிராவோ 587 விக்கெட்டுகளோடு இருக்கிறார்.

சமீபத்திய போட்டியில் பும்ராவின் வேகம் தெறிக்க விட்டதென்றால், அடுத்த நாளில் ரஷீத்தின் சுழல், லக்னோவின் பேட்டிங் லைன் அப்பை சுருட்டிக்கொண்டு போனது. வெறும் 144 ரன்களை எடுத்து விட்டு, எதிரணி இலக்கை எட்ட தடையுத்தரவு இடுவதென்பது ரஷீத் போன்ற மேஜிக் மேன்களும் அவர்களது மேஜிக் ஸ்பெல்களும் இருந்தால் மட்டுமே சாத்தியமாவது.

"குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்ய வேண்டுமா நானிருக்கிறேன்" என ஹுடா, ஹோல்டர், க்ருணால் பாண்டியா ஆகிய தூண்களைச் சாய்த்தது மட்டுமின்றி, தனது ஓவரில், இரண்டு சிக்ஸர்களை அடித்து ஆட்டங்காட்டிய ஆவேஷ் கானின் விக்கெட்டையும் எடுத்து, அந்தப் பந்தையே போட்டியின் கடைசிப் பந்தாகவும் மாற்றினார். வெறும் 6.3 என்ற எக்கானமியோடு, லக்னோவை ஆல் அவுட் ஆக வைத்து, கம்பீரமாக தனது அணியை ப்ளே ஆஃப்புக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

"இங்கே வெல்வதற்காக வந்திருக்கிறோம்" என 83 திரைப்படத்தில், கபில் தேவ் சொல்லும் போது வேற்று நாட்டவர்களிடம் சிரிப்புச் சத்தம் எதிரொளித்திருக்கும். குஜராத்கூட தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இப்படித்தான் கணிக்கப்பட்டது. ஆனால், முதல் ஆளாக ப்ளே ஆஃப் எக்ஸ்பிரஸில் ஏறிவிட்டது. இது குழு முயற்சிதான் என்பதனை ஆட்டநாயகன் விருதை ஒவ்வொரு போட்டியிலும் பெற்று அணியிலுள்ள ஒவ்வொருவரும் நிருபித்திருந்தாலும், ரஷீத்தின் ஆல்ரவுண்டிங் திறமையும் அதற்கு முக்கிய காரணம் என்பதற்கு சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் அவர் அடித்த 31 ரன்களும் சாட்சியம் சொல்லும்.

ஃபிளிப்பர் உள்ளிட்ட பல வேரியேஷன்கள் அவர் கைவசமிருந்தாலும், ஸ்டாக் பாலை விட கூக்ளிகளை அதிகம் வீசக் கூடியவர் என்றாலும், லெக் பிரேக்குகளும் கூக்ளியையும் மாற்றி மாற்றி வீசுவதுதான் பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காடச் செய்கின்றது. லக்னோவுக்கு எதிரான ஸ்பெல்லில் கூக்ளியை எதிர்நோக்கிய ஹோல்டருக்கு வீசப்பட்ட லெக் பிரேக்கும், க்ருணாலுக்கு வந்து சேர்ந்த கூக்ளியும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றுதான் சொல்ல வைத்தன. அவருடைய வேரியேஷன்கள் ஒவ்வொன்றுக்குமான அவரது க்ரிப், உடலசைவுகள், பந்து விடுவிக்கப்படும் புள்ளி என ஒவ்வொன்றிலும் சற்றே வேறுபாடுகள் இருந்தாலும், அவரது வேகம் அதனைக் கணிக்கும் கால அவகாசத்தைத் தருவதில்லை. அங்கேதான் ரஷீத்தின் வெற்றியுள்ளது. ரன் அப்பில் தொடங்கி, களத்தில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வரை எல்லாவற்றையும் தனக்குச் சாதகமாக்குக்கி விடுகிறார்.

லக்னோவுக்கு எதிரான ரஷீத்தின் அந்த ஸ்பெல்லில் கூடுதலாக ஒரு சிறப்பும் உண்டு. இவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், ஐபிஎல்லில் நான்கு விக்கெட் ஹாலினை ரஷீத் எடுப்பது இதுவே முதல்முறை. அவரது தி பெஸ்ட் பௌலிங் ஸ்பெல் இதுதான் (4/24).
ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான்
ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான்

டி20-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் (451) உள்ள இம்ரான் தாகீரை எட்டித் தொட ரஷித்துக்கு இன்னமும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. ஸ்பின் பௌலர் என்பதால், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையாவது எஞ்சியுள்ள நிலையில், பிராவோவினையும் தாண்டி 1000 விக்கெட்டுகள் என்ற இடத்தில்கூட ரஷீத்தின் விமானம் லேண்ட் ஆகலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் நடத்திய ராஜாங்கத்தை, சக்ரவர்த்தியாக ரஷீத் கான் டி20-ல் கட்டிக் கொண்டு வருகிறார்.