Published:Updated:

GT vs LSG: ஷமி வீசிய பவர்புல் பவர்ப்ளே ஸ்பெல்; கேப்டன் கே.எல்.ராகுல் சொதப்பிய இடம் எது?

ஷமி | GT vs LSG

'பேப்பர் பலமெல்லாம் பெயர் அளவிற்கே, களத்தில் காட்டும் பலமே கம்பீரம்' என லக்னோவை வீழ்த்தி நிருபித்துவிட்டது குஜராத்.

Published:Updated:

GT vs LSG: ஷமி வீசிய பவர்புல் பவர்ப்ளே ஸ்பெல்; கேப்டன் கே.எல்.ராகுல் சொதப்பிய இடம் எது?

'பேப்பர் பலமெல்லாம் பெயர் அளவிற்கே, களத்தில் காட்டும் பலமே கம்பீரம்' என லக்னோவை வீழ்த்தி நிருபித்துவிட்டது குஜராத்.

ஷமி | GT vs LSG
ஷமியின் ஷாக்கடிக்கும் ஸ்பெல் முதல் திவேதியாவின் மீட்டெடுக்கும் இன்னிங்க்ஸ் வரை என பல சுவாரஸ்யமான காட்சிகளை உள்ளடக்கி, டாப் 10-ல் முக்கிய இடம்பிடித்து விட்டன இந்த இரு புதுவரவு அணிகளும்.

பவர்பிளே ஓவர்களும், புதுப்பந்தும் சவாலையும் வாய்ப்பையும் ஒரு பௌலருக்கு ஒருங்கே அளிப்பவை. இந்த ஆடுபுலி ஆட்டத்தில் விக்கெட் வேட்டையாடும் அணிகள் மட்டுமே கூடுதல் பலத்தோடு முன்னேறும். நியூபாலோடு ஷமி இறங்கியபோது கே.எல்.ராகுல் ஆங்கர் ரோலில் ஆட, டீ காக் அவரது அபிமான வான்கடேயில் ஷமி உட்பட பௌலர்களை வறுத்தெடுக்கப் போகிறார் என்பதே பலரது கணிப்பாக இருந்திருக்கும்‌. பிட்ச் ரிப்போர்ட்டும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பாதகமாகவே கூறப்பட்டிருந்ததால், "ஷமியால் என்ன செய்துவிட முடியும்?" என குஜராத் ரசிகர்களேகூட மைண்ட் வாய்ஸில் பேசியிருக்கலாம். ஆனால், அரங்கேறிய காட்சிகள் வேறு.

ஷமி | GT vs LSG
ஷமி | GT vs LSG

பும்ரா டெஸ்டில் டி20 லைன் அண்ட் லெந்த்தில் வீசி, டெய்ல் எண்டர்களைச் சுருட்டிப் பார்த்திருக்கிறோம். ஆனால், டி20-ல் டெஸ்ட் லெந்த்தில் பந்துகளை வீசி விக்கெட் வேட்டையாடினார் ஷமி. மூன்று ஓவர்கள் மூன்று விக்கெட்டுகள் என உலகத்தரம் வாய்ந்த இரண்டு ஓப்பனர்களோடு, மத்திய வரிசையை பலப்படுத்தும் மணீஷ் பாண்டேவையும் வெளியேற்றி, லக்னோ அணியின் முதுகுத் தண்டையே அடித்து உடைத்தார்.

ஃபுல் லெங்க்த்தில், ஆஃப் ஸ்டம்புக்கு சற்றே வெளியே வீசப்பட்ட பந்தை டிஃபெண்ட் செய்து ஆட கேஎல் ராகுல் முன்வர, அது எட்ஜாகி கீப்பர் கேட்ச் ஆனது. தனது ஐபிஎல் கேப்டன்ஷிப் கரியரில் கேட்ட முதல் டிஆர்எஸ்ஸே ஹர்தீக்கிற்கு முதல் விக்கெட்டை அதுவும் எதிரணியின் கேப்டனின் விக்கெட்டைப் பெற்றுத் தந்தது. தனது 50-வது டி20 அரைசதத்தை அடிப்பார் என எதிர்நோக்கப்பட்ட ராகுல், கோல்டன் டக்கில் வெளியேற கொஞ்சமாக வெளிறத் தொடங்கியது லக்னோவின் முகம்.

தனது ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரை ஷமி வீசவர, இம்முறை பலியானது டீ காக். இடக்கை ஆட்டக்காரரான டீ காக்கிற்கு ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஷமி வீசிய இன்ஸ்விங்கர் மிடில் ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்தன இந்த இரு விக்கெட்டுகளும். நடுவில் வருண் ஆரோன் விரித்த வலையில் லூயிஸ் சிக்கினார். லூயிஸைப் பொறுத்தவரை, அவர் மேற்கிந்தியத் தீவின் ஒரு ரோஹித். புல் ஷாட்டுகளின் மீதான அவரது காதல், டைமிங், லைன் எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் அவரை அவசரப்பட வைக்கும். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி அவருக்கு ஷார்ட் பால்களை ஸ்டம்புக்கு வெளியே வீசிக் கொண்டிருந்தார் வருண். அதில் புல்ஷாட் ஆட அவர் முயல அதை மிட்விக்கெட்டில் இருந்து பின்நோக்கி ஓடிவந்து நம்பமுடியாத வகையில் கேட்ச் ஆக்கினார் கில்.

மூன்று விக்கெட்டுகளை இழந்த லக்னோ ரசிகர்கள் 'நோ லக்' என நொந்து கொள்ளத் தொடங்கினர். டெத் ஓவருக்காக வைத்திருக்காமல் மூன்றாவது ஓவரையும் ஷமிக்குக் கொடுத்தது ஹர்தீக்கின் புத்திசாலித்தனமான நகர்வு. இம்முறை அவரிடம் விழுந்தது மணீஷ். குட் லெந்தில் சற்றே வெளியே நகர்ந்த பந்து, மணீஷின் பேட் மற்றும் பேடுக்கு இடையே இருந்த இடைவெளியில் முன்னேறி ஸ்டம்பைத் தகர்த்தது.

GT vs LSG
GT vs LSG
சீம் மூவ்மண்ட் + வேகம் + பவுன்ஸ் + ஸ்விங் என அத்தனை வேகப்பந்து வீச்சுக் கூறுகளையும் ஆயுதமாக்கி, விக்கெட்டு(களை) எடுத்தார் ஷமி. பவர்பிளேயில் வீசப்பட்ட மிகச்சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாக இதைக் கண்டிப்பாக இணைக்கலாம். ரஷித் கான்தான் வில்லனாவார் என எதிர்பார்த்தால் ஷமி வில்லாதி வில்லன் அவதாரமெடுத்திருந்தார்.

அப்போதிருந்த நிலைக்கு லக்னோ 100-ஐத் தொடுமா என்ற நிலையே இருந்தது. ஆனால், ஹூடா ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார். முன்பொருமுறை ராஜஸ்தான் ராயல்ஸுக்காக தனது பிறந்த நாளன்று அற்புதமான ஒரு கேமியோவை அவர் ஆடியிருந்தார். இப்போட்டியில் அவர் ஆடியது ரன் கணக்கில் பார்த்தால் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது.

ஹூடாவுக்கும் ஆயுஷ் பதோனிக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப்தான், அணியை கௌரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தியது. 68 பந்துகள் நீடித்த இக்கூட்டணி, 87 ரன்களைக் குவித்தது. ஃபெர்கூசனின் மிரளவைக்கும் வேகத்துக்கு மடங்காததோடு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பந்துவீசிய ஹர்தீக்கின் எக்கானமியையும் எகிற வைத்தனர். குறிப்பாக, ஆயுஷ், ஹர்தீக் வீசிய ஓவரில் சந்தித்த நான்கு பந்துகளில் 15 ரன்களைக் குவித்து தனது தன்னம்பிக்கை அளவுமானியை சற்றே உயிர்க்க வைத்தார். அங்கிருந்து இக்கூட்டணி பின்வாங்கவே இல்லை. இறுதியாக, ரஷித்தின் ஸ்லைடர், ஸ்டம்ப் லைனில் முன்னேறி சத்தமில்லாமல் ஹூடாவை எல்பிடபிள்யூவாக்கியது.

அழுத்தத்தால் நொறுங்காமல் 41 பந்துகளில் 55 ரன்களை ஹூடாவும், அவர் வெளியேறிய பின் அதே 41 பந்துகளில் 54 ரன்களைக் குவித்த ஆயுஷும், சர்வதேச அனுபவமுள்ள சீனியர் பிளேயர்கள் கூடச் செய்யத் தவறியதை சுவடின்றிச் செய்திருந்தனர். க்ருணாலின் இறுதிநேரப் பங்களிப்பும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 158-க்கு எடுத்துச் சென்றது. இக்கட்டான நிலையில் அறிமுகப் போட்டியில் களமிறங்கி அதனை தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி அரைசதம் கடந்து இளம்நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் ஆயுஷ்.

ஆயுஷ் பதோனி | GT vs LSG
ஆயுஷ் பதோனி | GT vs LSG

159 என்பது எட்டக்கூடியதேயெனினும், லக்னோவின் வேகமும் ஸ்பின்னும் கலந்துறவாடும் பலமான பௌலிங்படை விட்டுக் கொடுக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதிவேக எக்ஸ்பிரஸான அவேஷ் கான்தான் கணக்கைத் தொடங்குவார் என அனைவரும் நினைக்க, ஷமீரா மிரட்டலான தொடக்கம் கொடுத்தார். ஃபுல் லெந்த்தில் ஆஃப் சைடுக்கு மிக வெளியே அவர் வீசிய மூன்றாவது பந்தினை கில் அடிக்க முயல, அது ஹூடாவிடம் சென்று அடைக்கலம் புக, ரன் எதுவும் எடுக்காமல் அவர் கிளம்பினார். இதைக்கூட மறந்து இருபக்க ரசிகர்களும் கொண்டாடிய காட்சி, சில மாதங்களாக பரம விரோதத்தோடு வலம் வந்து கொண்டிருந்த க்ருணாலும், ஹூடாவும் அதையெல்லாம் மறந்து, ஆரத்தழுவிக் கொண்ட காட்சிதான். விளையாட்டின் அழகே அதுதானே... பகைமையையே மறக்க வைக்கும்.

முதல் விக்கெட்டை இழந்த குஜராத்துக்கு அடுத்த பேரிடியாக இறங்கியது முப்பரிமாண வீரர் விஜய் ஷங்கரின் விக்கெட். ஷமீராவிடம் மலிங்காவை நினைவுபடுத்தும் அம்சம் அவருடைய காலைத் தாக்கும் யார்க்கர்கள்தான். விஜய் ஷங்கருக்கு அவர் வீசியதும் அப்படி ஒரு அட்டகாசமான இன்ஸ்விங்கிங் யார்க்கர்தான். அவரால் தகர்ந்தது ஸ்டம்ப்புகள் மட்டுமல்ல, குஜராத் ரசிகர்களின் நம்பிக்கையும்தான்.

அதை மறுபடி கட்டமைக்கப் போராடியது புதிதாக இணைந்த ஹர்தீக் - வேட் கூட்டணி. 'நிதானமே பிரதானம், விக்கெட் இழப்பிற்கு மட்டும் 'தடா' போட்டு விட்டால், இறுதி ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம்' என இருபக்கமும் நங்கூரத்தை ஆழமாகவே நட்டது இந்தக் கூட்டணி. வாய்ப்புக் கிடைத்த போது மட்டும், அவ்வப்போது ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் கண்ணில் காட்டிவிட்டு, மொத்த ஆற்றலையும் சேர்த்து வைத்தனர். ஆனால், விதி ஹர்தீக்கிற்கு க்ருணால் வடிவில் வந்தது. வான்கடே மைதானத்தில் இதே கூட்டணி ரன்களைக் குவித்துள்ளது, விக்கெட் வீழ்த்தி அதனை பரஸ்பரம் கொண்டாடியுமுள்ளது. ஆனால், இப்போட்டியில் அக்னி நட்சத்திரம் சகோதரர்களாக ஐபிஎல் இவர்களை மாற்றி விட்டிருந்தது. 33 ரன்களோடு களத்தில் நின்றிருந்த ஹர்தீக், க்ருணாலின் சுழலில் சிக்கி வெளியேறினார். அதற்கடுத்த ஓவரே ஹூடா, வேடை அனுப்ப, ரவி பிஷ்னாய் செய்வார் எனக் கணிக்கப்பட்டதை இந்த பார்ட் டைம் ஸ்பின்னர்கள் செய்து முடித்தனர்.

க்ருணால், ராகுல் | GT vs LSG
க்ருணால், ராகுல் | GT vs LSG

மீதமுள்ள 49 பந்துகளில் 81 ரன்கள் தேவை என்ற கடினமான கட்டத்தை அணி எட்ட, மீட்டெடுக்க இணைந்தனர் மில்லரும், திவேதியாவும். இருவருக்குமுள்ள ஒற்றுமை, நிலைப்புத்தன்மை இல்லாததும், அதிசயமாக ஏதோ ஒரு நாளில் அவர்கள் ஆடும் வெறித்தனமான கேமியோக்களும். எனவே இருவரில் ஒருவர், பௌலர்களை நொறுக்கத் தொடங்கினாலும் கடந்த இரண்டு போட்டிகளில் நடந்ததை மீண்டுமொரு முறை ஓட்டிப் பார்க்கலாம் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், க்ருணால் - ஹூடா - ரவி பிஷ்னாய் என மும்முனைத் தாக்குதலை ராகுல் முடுக்கிவிட்டார்.

அதில் சில ஓவர்கள், சற்றே அடக்கி வாசித்த இக்கூட்டணி, "இப்போதில்லையெனில் எப்போதுமில்லை" என ஹூடா வீசிய போட்டியின் 16-வது ஓவரில் 22 ரன்களை அடித்து நொறுக்கி, 'பேக் டு தி கேம்' என வந்து அமர்ந்தது. ஸ்பின்னர்களுக்கு விட்டுக் கொடுப்பது போல் போக்குக் காட்டி, ரன்களைத் திரும்பவும் அடித்து வாங்கிவிட்டனர்.

இறுதி நான்கு ஓவர்களில் 46 ரன்கள் வேண்டும் என்பது, போட்டியின் வெற்றி முள், குஜராத்தின் பக்கம் கைகாட்டத் தொடங்கியதைக் காட்டினாலும் நடுவில் ஸ்லோ பாலினால், அவேஷ் வீழ்த்திய மில்லரின் விக்கெட், கேம் சேஞ்சிங் மொமண்டாக மாறுமோ என அச்சுறுத்தியது. ஆனால், திவேதியா கைப்பற்றிய மொமெண்டத்தை அப்படியே கையில் வைத்திருந்து இறுதிவரை கொண்டு சென்றார்.

கடைசி ஓவர் வரை போட்டி நகர, 11 ரன்கள் வெற்றிக்கும் குஜராத்துக்கு நடுவில் நிற்க, மூன்று பவுண்டரிகளை நான்கு பந்துகளில் அடித்து, இரு பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே வெற்றி பெற்றது குஜராத். திவேதியா இன்னுமொரு நினைவு கொள்ளத்தக்க இன்னிங்ஸை ஆடினார்.
திவேதியா, டேவிட் மில்லர் | GT vs LSG
திவேதியா, டேவிட் மில்லர் | GT vs LSG

ஹர்தீக் ஸ்கோர் செய்த இடத்தில்தான், கேஎல் ராகுல் கோட்டை விட்டிருந்தார். இரண்டு விக்கெட் விழுந்ததும், மூன்றாவது ஓவரையும் ஷமியின் கையில் கொடுத்து, அழுத்தத்தை அதிகரித்து விக்கெட் விழ வைத்தார் ஹர்தீக். ஆனால், ராகுலோ அதற்கு மாறாக, பவர் பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமீராவுக்கு அவரது நான்கு ஓவர்களைக் கூட முழுதாகக் கொடுக்கவில்லை. டெத் ஓவரில் அவரைக் கொண்டு வரத் தாமதித்து ஹூடாவிடம் பந்தைக் கொடுத்த இடத்திலேயே லக்னோவின் கதை முடிந்தது.

அனுபவமற்ற கேப்டன், அணிக்கு உருவாரமே இல்லை எனப் பல விமர்சனங்களும் குஜராத் பக்கம் படிந்திருக்க, லக்னோவோ கோப்பையை வெல்லும் அமைப்புள்ள அணி என புகழப்பட்டது.

ஆனால், குஜராத் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி வென்றுவிட்டது.

முதல் சந்திப்பையே சுவாரஸ்யம் நிறைந்ததாக மாற்றி, மற்ற அணிகளுடனான அடுத்தடுத்த மோதல்களுக்கும் ஆயத்தமாயுள்ளதை அறிவித்துள்ளன இரு அணிகளும்!