Published:Updated:

DC vs MI: 'கேம் இன்னும் முடியல' மோடில் அக்சர், லலித்; சோக ஸ்மைலியுடன் பும்ரா, சாம்ஸ் மற்றும் மும்பை!

DC vs MI

26 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்று அசத்தியது டெல்லி. உபயம் லலித் மற்றும் அக்சரின் பார்ட்னர்ஷிப்பில் வந்த 75 ரன்கள். அதுவும் ஐந்தே ஒவர்களில்!

Published:Updated:

DC vs MI: 'கேம் இன்னும் முடியல' மோடில் அக்சர், லலித்; சோக ஸ்மைலியுடன் பும்ரா, சாம்ஸ் மற்றும் மும்பை!

26 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்று அசத்தியது டெல்லி. உபயம் லலித் மற்றும் அக்சரின் பார்ட்னர்ஷிப்பில் வந்த 75 ரன்கள். அதுவும் ஐந்தே ஒவர்களில்!

DC vs MI
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கப்பட்ட வேகத்துக்கு இப்படியானதொரு முடிவை நோக்கி இந்தப் போட்டி நகரும் என யாரும் யூகித்திருக்க முடியாது. ஐபிஎல்லின் முதல் போட்டியை சாமிக்கு எழுதிவிட்டு தோற்பது மும்பை இந்தியன்ஸ் வழக்கம் என்பதைத் தவிர டெல்லி எப்படி இதை வெல்லப்போகிறது என எல்லோருக்குள்ளும் நிறைய கேள்விகள் இருந்தன. அதிரடியாக ஆரம்பித்து, சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுக்களை இழந்து பின் வருபவர், செல்பவர் எல்லாம் அடித்து வெளுத்து, விசித்திரமான முடிவை நோக்கி நகர்ந்தது. இந்த சீசன் ஐபில்லில் 'முதல்' அமர்க்களமான போட்டியே இதுதான் என்று சொல்லும் அளவுக்கு சுவாரஸ்யமாகச் சென்றது இரண்டாவது இன்னிங்ஸ்.
DC vs MI
DC vs MI

ஒரு பக்கம் சூர்ய குமார் யாதவ் என்கிற SKYயும் இல்லை ஆர்ச்சரும் இல்லை எனப் புலம்பினால், இன்னொரு பக்கமோ நிலைமை இன்னும் மோசம். டெல்லி அணியில் வார்னர், நார்க்கியா, இங்கிடி, ரஹ்மான், மிச்சல் மார்ஷ் என யாருமே அணியில் இடம்பெற முடியாத நிலை. டெல்லி தன் முதல் போட்டியிலேயே இரண்டு வெளிநாட்டு வீரர்களைத்தான் பயன்படுத்தவிருக்கிறது எனச் செய்திகள் காற்றில் பறக்க ஆரம்பித்தன. "டாஸ் வெல்ல வேண்டும் என நினைத்தேன், வென்றுவிட்டேன், பந்துவீச்சைத் தேர்வு செய்கிறேன்" என்றார் ஜாலி கேப்டனான ரிஷப் பண்ட். "நாங்கூட பௌலிங்தான் தேர்வு செய்ய வேண்டும்" என நினைத்திருந்தேன் என்றார் ரோஹித் ஷர்மா.

இன்றைய போட்டியை இந்தியாவின் தற்போதைய கேப்டன் வெர்சஸ் வருங்கால கேப்டனுக்கானது என்றும் சொல்லலாம். போட்டிக்கு முந்தைய நாள்தான், "ரிஷப் பண்ட்டின் வெற்றிகள், ரோஹித்தின் கேப்டன்ஸியை பல விஷயங்களில் ஒத்திருக்கிறது" என ஒரு ஒப்பீட்டு லாஜிக்கை பேசியிருந்தார் பாண்டிங். சரி போட்டிக்கு வருவோம்.

மும்பை இந்தியன்ஸ் XI : இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, திலக் வர்மா, அன்மோல்ப்ரீத் சிங், பொல்லார்டு, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், மில்ஸ், பும்ரா, பஸில் தம்பி
டெல்லி கேப்பிடல்ஸ் XI : பிருத்வி ஷா, டிம் செய்ஃப்ரெட், மந்தீப் சிங், ரிஷப் பண்ட், ரோவ்மேன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அஹமத், கம்லேஷ் நாகர்கோட்டி.

ரோஹித்தும், இஷான் கிஷனும் ஓப்பனிங் இறங்கினார்கள். இரண்டு ஸ்லிப்களுடன் பந்துவீச வந்தார் ஷர்துல் தாகூர். மூன்றாவது பந்தை, ஃபைன் லெக் திசை நோக்கி பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ரோஹித். ஆறாவது பந்தில் லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸ். அடுத்த ஷர்துல் ஓவரில் கிஷன் ஒரு சிக்ஸ். ஷர்துல் தான் விசிய இரண்டு ஒவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

DC vs MI
DC vs MI

கொல்கத்தாவுக்காக 2018ம் ஆண்டு 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் கம்லேஷ் நாகர்கோட்டி. ஆனாலும் ஒரு போட்டியில்கூட அவர் ஆடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், பெரிய அளவில் சோபிக்கவில்லை. நிறைய காயங்கள், விலகல்கள் எனத் தொடர்ந்த நாகர்கோட்டியை இந்த சீசனில் டெல்லி அணி எடுத்திருக்கிறது. ஷர்துல், கலீல், அக்சர் என யார் பந்துவீசியும் விக்கெட் விழாததால், நாகர்கோட்டியை பந்துவீச அழைத்தார் ரிஷப் பண்ட். முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி வரவேற்றார் ரோஹித் ஷர்மா. ஷார்ட் பால் என்றாலே சிக்ஸ் அடிப்பேன் எனத் தெரியாதா என்பது போல, மூன்றாவது பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாசினார் ரோஹித். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் வந்துசேர, பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது மும்பை.

குல்தீப் பந்துவீச்சில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார் ரோஹித். குல்தீப்பின் முதல் ஓவரிலும் ரன்கள் பெரிதாக அடிக்கமுடியவில்லை. தொடர்ச்சியாக மூன்றாவது ஓவரை வீசினார் குல்தீப். இந்த ஓவரில் அன்மோல்ப்ரீத்சிங் விக்கெட்டை வீழ்த்தினார். கம்லேஷ் நாகர்கோட்டி வீசிய 13வது ஓவரில் 13 ரன்கள். திலக் வர்மா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாச, இஷான் கிஷனும் எக்ஸ்டிரா கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்து ரன் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டார். குல்தீப்பின் கடைசி ஓவரில், பொல்லார்டின் விக்கெட்டையும் முடித்துக்கட்டிவிட்டு விடை பெற்றார். ஆனால், இந்த விக்கெட்டுக்கான கிரெடிட்டை செய்ஃப்ரெட்டுக்குத்தான் கொடுக்க வேண்டும். அசுரத்தனமான கேட்ச் அது.

கடந்த சில சீசன்களாக சிறப்பாகச் செயல்படாத குல்தீப்புக்கு இந்த சீசனின் முதல் போட்டியே 'ஓம் லாபம்' தான். 4-0-18-3
DC vs MI
DC vs MI

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், அதிரடியாய் ஆடுவதை நிறுத்தவில்லை இஷான் கிஷன். அக்சர் பந்தில் சிக்ஸர் அடித்து அரை சதத்தை நிறைவு செய்தார். மும்பையின் கடைசி நான்கு ஓவர்களில் ஓவருக்கு பத்து ரன்கள் குறைவில்லாமல் வந்ததில், இஷான் பங்கு அதிகம். கலீல் அஹமது வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்திருப்பார் கிஷன். ஆனால், அதை லாகவமாகத் தடுத்துவிட்டார் செய்ஃப்ரெட். பந்து எல்லைக் கோட்டுக்கு முன்னாலேயே விழுந்து எகிறி பவுன்ஸ் ஆகியது. பறந்துகொண்டே அதைத் தன் இடது கையால் தடுத்து அசத்தினார்.

இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது மும்பை. 11 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் இஷான் கிஷன்.

டார்கெட் அதிகம் என்பதால், முதல் ஓவரில் இருந்தே அடித்து ஆட ஆரம்பித்தது டெல்லி கேபிடல்ஸ். டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார் செய்ஃப்ரெட். மூன்று ஓவர் முடிவில் முப்பது ரன்கள் எடுத்தது டெல்லி. நான்காவது ஓவரை வீசினார் முருகன் அஷ்வின். முருகன் வீசிய மூன்றாவது பந்து ஒரு அட்டகாசமான கூகுளி. போல்டானார் செய்ஃப்ரெட். அடுத்து வந்த மந்தீப்புக்கு ஃபுல் டாஸ் வீசினார் முருகன் அஷ்வின். ஓங்கி அடித்தார் மந்தீப். ஆனால், அது நேராக நின்றுகொண்டிருந்த திலக் வர்மாவின் கைகளில் சென்று விழுந்தது. அடுத்து மில்ஸ் வீசிய ஓவரில், அதிரடியாக பேட்டைச் சுழற்றி கேப்டன் ரிஷப்பும் ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது டெல்லி.

DC vs MI
DC vs MI

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த ப்ருத்வி ஷாவும் பசில் தம்பி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரோவ்மேன் பவல்லும் டக் அவுட். மூன்று ஓவருக்கு முப்பது என அதிரடியாய் ஆரம்பித்த டெல்லியாய் அடுத்த ஏழு ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்டர்களும் மொத்தமாய் பெவிலியன் திரும்பிவிட்டார்கள். அப்போது பும்ராவுக்கே மூன்று ஓவர்கள் பாக்கி இருந்தன. இனி எதுக்கு போட்டியைப் பார்த்துக்கொண்டு என நினைத்த தருணத்தில், பும்ரா வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசினார் ஷர்துல் தாக்கூர். பும்ராவின் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து, ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பதை நினைவுபடுத்தினார் 'லார்டு' ஷர்துல் தாகூர்.

11 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்திருந்த தாக்கூரை அவுட்டாக்கினார் பசில் தம்பி. இன்னொரு ட்விஸ்ட். சரி, இந்த முறை கண்டிப்பாக முடிந்தது என நினைத்தால், அதே ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசினார் லலித் யாதவ். 36 பந்துகளில் 65 ரன்கள் எடுக்க வேண்டும். டி20யில் இது சாதாரணம் என்றாலும், ஆறு விக்கெட் இழப்பில் பேட்டர்கள் யாரும் இல்லாத நிலையில் எடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
DC vs MI
DC vs MI

ஷர்துல்லாவது பரவாயில்லை பும்ரா வீசிய முதல் பந்தை பவுண்டரிக்குத்தான் விளாசினார். அக்சர் படேல் ஒருபடி மேலே முதல் பந்தை சிக்ஸராக்கினார். இதென்னடா பும்ராவுக்கு வந்த சோதனை எனச் சோகத்தில் மூழ்கினர் மும்பை ரசிகர்கள். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுத்தது டெல்லி. 18 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் டேனியல் சாம்ஸ் மீண்டும் பந்துவீச வந்தார். அந்த ஓவர் அவர் நாளில் மறக்க வேண்டியதொரு ஓவராய் இருக்கும் என அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது. டீப் ஸ்கொயர் லெக்கில் அக்சர் இரண்டு சிக்ஸ், லலித் ஒரு சிக்ஸ், பவுண்டரி என ஒரே ஓவரில் 24 ரன்கள். மீண்டும் உயிர்ப்பெற்றது டெல்லி கேபிடல்ஸ்.

DC vs MI
DC vs MI
26 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்று அசத்தியது டெல்லி. உபயம் லலித் மற்றும் அக்சரின் பார்ட்னர்ஷிப்பில் வந்த 75 ரன்கள். அதுவும் ஐந்தே ஒவர்களில்! சில வரலாறுகளை மாற்ற வேண்டியது அவசியம். 2012ல் இருந்து ஒரு சீசனில்கூட மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியை வென்றதில்லை. இந்த சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. அடுத்த சீசனிலாவது நிறைய கோப்பைகளை வெல்லும் அணி முதல் போட்டியை வெல்லும் என வேண்டிக்கொள்வோம்.