Published:Updated:

RR vs KKR: பேட்டிங்கிற்கு பட்லர், சுழலுக்கு சஹால், த்ரில்லுக்கு மெக்காய்; இறுதிவரை போராடிய கேகேஆர்!

RR vs KKR | சஹால், வெங்கடேஷ்

ராஜஸ்தானின் ஆயுதமாக பட்லரும், கேடயமாக சஹாலும், ஐபிஎல் யுத்த களத்தில் ராஜஸ்தானின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

RR vs KKR: பேட்டிங்கிற்கு பட்லர், சுழலுக்கு சஹால், த்ரில்லுக்கு மெக்காய்; இறுதிவரை போராடிய கேகேஆர்!

ராஜஸ்தானின் ஆயுதமாக பட்லரும், கேடயமாக சஹாலும், ஐபிஎல் யுத்த களத்தில் ராஜஸ்தானின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

Published:Updated:
RR vs KKR | சஹால், வெங்கடேஷ்
இரண்டு அணிகளும் தலா ஆறு புள்ளிகளைப் பெற்றிருந்ததாலும், இருவரும் சமபலத்தோடே இருந்ததாலும், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட, கடைசி ஓவர் வரை நீடித்த போட்டி, பங்குச் சந்தையாக பல மாற்றங்களைச் சந்தித்தது. பட்லரது அதிவேக சதம், ஸ்ரேயாஸின் பதிலடி, சஹாலின் ஹாட்ரிக்கை உள்ளடக்கிய ஐந்து விக்கெட் ஹால் எனப் பல சுவாரஸ்ய அம்சங்கள் போட்டிக்குச் சுவை சேர்த்தன.

எந்த ஒரு பேட்ஸ்மேனின் திறனும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான். வீசும் பௌலர்கள், ஆடும்களம் என பல காரணிகள் அதனை நிர்ணயிக்கும். ஆனால், வரைமுறைக்குள் அடங்காதவர் பட்லர். சோபிக்கத் தவறிய ஜெய்ஸ்வால், தனது இடத்திற்கு நியாயம் கற்பிக்க முயன்று வரும் படிக்கல் என மற்ற ஓப்பனர்களது ஆட்டம் மேடுபள்ளங்களைச் சந்திப்பினும் பட்லரது கைங்கர்யத்தால் ராஜஸ்தான் தொடர்ந்து பவர்பிளே ஓவர்களில் எதிரணி பௌலர்களைப் பந்தாடுகிறது. அவரது விக்கெட்தான் வெற்றிக் கோட்டைக்கான கடவுச்சொல் என்பதை ஒட்டுமொத்த கேகேஆர் குழுமமும் அறிந்தே வைத்திருந்தது.

RR vs KKR | பட்லர், படிக்கல்
RR vs KKR | பட்லர், படிக்கல்

உமேஷ் இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் ஐந்து பவர்பிளே விக்கெட்டுகளை எடுத்திருந்ததால் பட்லருக்கு எதிராக அவரைக் கொண்டு வியூகம் வகுத்தது கேகேஆர். ஆனால், வீசிய முதல் ஓவரில் மட்டுமே அவரால் கடினமான லைன் அண்ட் லெந்த்தில் வீசி பட்லருக்கு சிரமம் ஏற்படுத்த முடிந்தது. அடுத்த ஓவரிலேயே மிட்ஆன் பவுண்டரி, லாங் ஆன் சிக்ஸர் என்றுதான் அவரை வரவேற்றார் பட்லர். ஐபிஎல்லின் முதல் 'ஆல் ரன் ஃபோரும்' அவரால் அந்த ஓவரின் இறுதியில் பதிவு செய்யப்பட்டது.

புதுப்பந்திற்கே துணைப்பந்து கேட்க வைக்கும் பட்லரது சிங்காரமான சிக்ஸர்களின் பவனி, இப்போட்டியிலும் தொடர்ந்தது. ஸ்பின்னால் வலைபின்ன ஷ்ரேயாஸ் வருணை நான்காவது ஓவரிலேயே கொண்டுவர, அசராமல் பேக் ஃபுட்டில் பட்லர் அடித்த அந்த ஸ்ட்ரெய்ட் சிக்ஸர் கேகேஆரைக் கலங்கடித்ததோடு, ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தது. இந்த சீசனில், இதுவரை 14 சிக்ஸர்களை அவர் பவர்பிளேயில் அடித்துள்ளார். புதுப்பந்தோடு ஆதிக்கம் செலுத்தக்கூடிய உமேஷுக்கே அந்தக்கதி என்றால், 11.2 எக்கானமியோடு இந்த சீசனில், பவர்பிளேயில் உதைவாங்கியுள்ள கம்மின்ஸை ஷ்ரேயாஸ் பந்துவீச வைக்க அவரும் எடுபடவில்லை. 6 ஓவர்களில் 60/0 என்பதே கேகேஆர் படையை பலமிழக்க வைத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்லரை வெளியேற்ற பத்து ஓவர்களுக்குள் ஆறு பௌலர்களை, கேகேஆர் பரிட்சித்துப் பார்த்தது; உமேஷை 9-வது ஓவரில் திரும்பக் கொண்டு வந்ததோடு, எப்போதும் தாமதமாக இறக்கப்படும் நரைனை 10-வது ஓவரிலேயே கொண்டு வந்து தாக்குதல் நிகழ்த்தியது. விளைவாக, சற்றே நம்பிக்கை அளிக்கத் தொடங்கியிருந்த படிக்கல்லின் விக்கெட் நரைனின் நக்குல் பாலால் வீழ்த்தப்பட்டது.

RR vs KKR | நரைன், ஷெல்டன்
RR vs KKR | நரைன், ஷெல்டன்

அவருக்கு அடுத்தபடியாக உள்ளே வந்த சாம்சன், பட்லரிடமிருந்து கொஞ்சம் இன்ஷ்பிரேஷன் எடுத்து வந்தது போல் ஆடினார். முதல் போட்டிக்குப்பின், பேட்ஸ்மேனாக அவரது தாக்கம் பெரிதாக இல்லை. முதலிரு போட்டிகளில், முறையே 55, 30 ரன்களைச் சேர்த்திருந்தாலும் அடுத்த மூன்று போட்டிகளில் அவரது சராசரி வெறும் 10.2தான். ஆனால், இப்போட்டியில், ஃபார்முக்குத் திரும்பி, பட்லருக்கு துணைநிற்கும் இன்னிங்ஸை சாம்சன் ஆடினார். 30 பந்துகள் நீடித்த இக்கூட்டணி, அதில் 67 ரன்களைச் சேர்த்தது. அதில் 57 சதவிகிதம் ரன்கள் சாம்சனுடையதே.

எனினும், கடந்து செல்லும் மேகமாக மற்றவர்கள் வந்து செல்ல, பட்லர் என்னும் பெருமழை மட்டும் ஓயாமல் கேகேஆரை அடித்து நொறுக்கி, 59 பந்துகளில் சதம் வந்து சேர்ந்தது. ஆடியுள்ள ஆறு போட்டிகளில் இரண்டு சதங்களையும் இரண்டு அரை சதங்களையும் பட்லரது பேட் விளாசியுள்ளது. ராஜஸ்தானின் பேட்டிங் மொத்தமும் பட்லர் என்னும் ஒற்றை ஆளுமையின் முதுகிலேயே பயணிக்கிறது. கெய்லுக்கு அடுத்தபடியாக ஐபிஎல்லில் ஒரு சீசனில் முதல் ஆறு போட்டிகளில் இரு சதங்களை அடித்துள்ள ஒரே வீரராகவும் பட்லர் வலம் வருகிறார்.

கம்மின்ஸின் ஷார்ட் பாலில் பட்லர் வீழ்ந்து 16 - 19 இடைவெளியில், ஓவருக்கொரு விக்கெட்டை வீழ்ந்து, கேகேஆர் போட்டியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றிருந்தாலும் பட்லர் ஏற்படுத்திய சேதாரத்தை அவர்களால் ஈடுசெய்யவே முடியவில்லை. அதனை இன்னமும் இடிபாட்டுக்குள் தள்ளுமாறு அமைந்தது ஹெட்மெயரின் மினி கேமியோ.

RR vs KKR | சாம்சன், பட்லர்
RR vs KKR | சாம்சன், பட்லர்
அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ச்சியால் சற்றே குறைந்த ரன்ரேட்டை அவரது 200 ஸ்ட்ரைக்ரேட்டோடு வந்த 26 ரன்கள் மறுபடியும் மேடேற்றியது. கேகேஆரின் டெத்ஓவர் பௌலிங் பலவீனம் மீண்டுமொரு முறை காட்சிப்படுத்தப்பட, 217 என இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரை ராஜஸ்தான் பதிவு செய்தது.
கேகேஆரின் தரப்பில் ஒரே ஆறுதல், எப்போதுமே ஜொலிக்கத் தவறாத நரைனின் சுழல் மாயம்தான். கேகேஆருக்கான தனது 150-வது போட்டியிலும், இரண்டு விக்கெட்டுகளை 5.2 எக்கானமியோடு எடுத்த நரைன், 'ஆஃப் டே என்பதே எனது அகராதியில் இல்லை' என மறுபடியும் நிருபித்தார்.

தொடக்கம் எப்படி இருக்கும் என்ற கணிப்பை மொத்தமாகப் பொய்யாக்கியது கேகேஆர். நடப்பு சீசனில் பவர்பிளேயில் மட்டும் 12 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது கேகேஆர்‌, ராஜஸ்தானோ பவர்பிளேயில் சிறந்த பௌலிங் ஆவரேஜை கைவசம் வைத்திருந்தது. இந்த இரண்டையும் அடித்துத் திருத்தி எழுதவைத்தன தொடக்க ஓவர்கள்.

RR vs KKR, சஹால், ஹெட்மெயர்
RR vs KKR, சஹால், ஹெட்மெயர்

அணுகுமுறையை மாற்றி ஃபின்ச்சோடு நரைனை அனுப்பி பவர்பிளேயில் அனல்தெறிக்க வைக்க கேகேஆர் முயல, நடந்தது வேறு. சந்தித்த முதல் பந்தே கடைசிப் பந்தாகி கோல்டன் டக்கில் வெளியேறி இருந்தால்கூட நரைனுக்கு மனது ஆறியிருக்கும். ஆனால், அவர் ஆனது டைமண்ட் டக்! பந்தையே சந்திக்காதவரை போட்டியின் முதல் பந்தோடே ரன்அவுட்டில் வெளியேறக் காரணமாக ஃபின்ச் இருந்தார். ஹெட்மயரின் அற்புதமான டைரக்ட் ஹிட் கொஞ்சமும் தப்பாமல் நரைனை வெளியேற்றியது. சிங்கிளுக்காக விக்கெட்டை பவர்பிளேயில் பறிகொடுக்கும் பெருங்குற்றத்தை இந்த சீசன் முழுவதும் ஏதோ ஒரு பேட்ஸ்மேன் செய்து கொண்டே இருக்கின்றனர்.

விக்கெட்டுகளை வரிசைகட்டி ராஜஸ்தான் வீழ்த்தும் என்ற நினைப்பையே மொத்தமாகப் பொய்யாக்கியது ஃபின்ச் - ஷ்ரேயாஸ் இருவரணி. பவுண்டரியோடு கணக்கைத் தொடங்கும் தனது புதிய பாணியை இப்போட்டியிலும் கடைபிடித்தார் ஷ்ரேயாஸ். ராஜஸ்தானுடையது ஒன் மேன் ஷோ என்றால் இவர்கள் இருமுனை யுத்த உத்தியைக் பின்பற்றினர். போல்ட் இல்லாததுதான் போன போட்டியில் அவர்களது கையை பௌலிங்கில் ஓங்க விடாமல் செய்தது எனச் சொல்லப்பட, அவர் இருந்தும் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த ராஜஸ்தானால் முடியவில்லை. ஃபின்ச் க்ரீஸுக்கு வெளியே நின்று வேகப்பந்துகளைத் திறன்பட எதிர்கொண்டார்.

RR vs KKR | ஸ்ரேயாஸ், ஃபின்ச்
RR vs KKR | ஸ்ரேயாஸ், ஃபின்ச்

ஷ்ரேயாஸ் ஸ்பின் பந்துகளைச் சின்னாபின்னமாக்கி விடுவார் என்பதால் சாம்சன் துணிந்து போன போட்டியைப் போல, சஹாலைக்கூட முதல் ஐந்து ஓவர்களில் கொண்டு வரவில்லை. ரன்கள் ஓரளவு கட்டுப்பட அஷ்வின், சஹாலைக் கொண்டு இரண்டு பக்கமும் சுருட்ட சாம்சன் முயன்றார். ஆனால், ரன்கள் துரிதகதியில் வந்ததுதான் மிச்சம். முதல் 5 ஓவர்களில் 43 ரன்கள் வந்திருக்க, அடுத்த 4 ஓவர்களில் 64 ரன்களை ஜெட் வேகத்தில் எடுத்து, இலக்கை நோக்கி பாயத் தொடங்கியது கேகேஆர்.

ஆனால், ஒரே ஆறுதலாக வொய்டாகச் சென்ற பிரஷித்தின் ஷார்ட் பாலை அப்பர் கட்டாக்க முயன்று, அதைச் சரியாக டைமிங் செய்யாமல் ஃபின்ச் வெளியேறினார். நரைனின் விக்கெட்டை விழவைத்தற்குப் பரிகாரமாக அவருக்கும் சேர்த்து ரன்களை அடித்திருந்தார். 28 பந்துகளில் 58 ரன்களைக் குவித்து அணிக்குத் தேவையான உந்துதலை அளித்ததோடு, தேவைப்படும் ரன்களின் ரேட்டையும் குறைத்து 66 பந்துகளில் 111 ரன்கள் என ஓரளவு நெருங்கக் கூடியதாக இலக்கை மாற்றினார்.

RR vs KKR | ஸ்ரேயாஸ்
RR vs KKR | ஸ்ரேயாஸ்

ஃபின்ச் ஆட்டமிழந்த போது 41 ரன்களோடு ஷ்ரேயாஸ் களத்தில் இருந்தார். அங்கிருந்து மொத்த பொறுப்பையும் அவர்தான் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது‌. ராணா நடுவில் வந்து ஒன்றிரண்டு கண்கவர் ஷாட்களை அடித்தார். ஸ்பின் பந்துகளை எதிர்கொள்வதில் அவருக்குள்ள நிபுணத்துவத்தை சஹாலின் பந்துகளையே சிதறடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால், சஹாலின் கூக்ளி, சத்தமில்லாமல் அவரது விக்கெட்டைக் காவு வாங்கியது. அதற்கடுத்த ஓவரில, அஷ்வினும் தன் பங்கிற்கு ரசலின் விக்கெட்டை வீழ்த்தி ஆர்ப்பரிக்க, ராஜஸ்தானுக்கு மறுபடியும் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது.

ஷ்ரேயாஸ் மட்டுமே அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் விதமாக ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், கேகேஆரின் பக்கம் நகர்ந்து கொண்டிருந்த போட்டியை யூ டர்ன் போட வைத்தது ராஜஸ்தானின் ஸ்பைடர் மேனான சஹாலின் அந்த நம்பமுடியாத ஒரு ஓவர். தனது ஸ்பெல்லின் கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹாட்ரிக் மற்றும் ஐந்து விக்கெட் ஹாலோடு கேகேஆரை சுழற்றி அடித்தார் சஹால்.

RR vs KKR, சஹால், சாம்சன்
RR vs KKR, சஹால், சாம்சன்

அந்த அசாத்தியமான ஓவரின் முதல் பந்து கூக்ளியாக மாற, அதை வெங்கடேஷ் தவறவிட, சாம்சன் சற்றும் தயங்காமல் ஸ்டம்பைத் தகர்த்தார். அடுத்ததாக இரண்டு பந்துகளில் ஜாக்சன் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஷ்ரேயாஸிடம் கொடுக்க, லைனை மிஸ் செய்த சஹால், நான்காவது பந்தை வொய்டாக வீசினார். ஆனால், அதற்கடுத்த பந்து ஃபுல் லெந்த்தில் வந்து ஷ்ரேயாஸை எல்பிடபிள்யூ ஆக்கியது. அதற்கடுத்த பந்தை ஷிவம் மவி தூக்கியடிக்க, அது லாங் ஆனில் கேட்ச் ஆனது. ஆச்சரியத்திற்கு அதோடு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தனது ஸ்பெல்லின் கடைசிப் பந்தில் கம்மின்ஸின் விக்கெட்டையும் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார் சஹால்.

இறுதி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் இலக்கு, களத்தில் புதிதாக வந்த பேட்ஸ்மேன்கள் என்றாலும் ராஜஸ்தானின் பௌலர்களின் டெத் ஓவர் குறைபாடு தெரிந்த கதையென்பதால் போட்டி எந்தப் பக்கமும் முடியலாம் என்றே அனுமானிக்கப்பட்டது. போல்ட்டின் காஸ்ட்லி 20 ரன்கள் ஓவர், பிரஷித்தின் அதிஅட்டகாசமான ஏழு ரன்கள் எல்லாம் சேர்ந்து, கேகேஆர் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் வேண்டும் என்று வந்து நின்றது.

மெக்காயின் ஓவரின் முதல் பந்தில் ஜாக்சன் இரண்டு ரன்களை அடித்திருந்தாலும் ஒரு ஸ்லோ பால் அடுத்த பந்தில் அவரை வெளியேற்றியது. மூன்றாவது பந்தில் வருண் சிங்கிள் தட்ட, அடுத்த பந்தில் ஒரு மைக்ரோ கேமியோவை ஆடியிருந்த உமேஷின் ஸ்டம்பைக் கழறச் செய்து கேகேஆரை ஆல்அவுட் செய்தார் மெக்காய். ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான். மெக்காயின் ஸ்பெல்லும் நினைவு கூரத்தக்கதாக மாறியது.

RR vs KKR | சஹால்
RR vs KKR | சஹால்

ஹை ஸ்கோரிங் கேம்களில் ஏற்படும் பதற்றத்தால் விக்கெட்டைப் பறிகொடுக்கும் அதே தவறுதான் திரும்பவும் நடந்தேறியது. ஷ்ரேயாஸ் - ஃபின்ச் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தி வைத்திருந்த அடித்தளத்திற்கு மேல் நிதானமாக அடுத்தடுத்த பார்ட்னர்ஷிப்களைக் கட்டமைத்திருந்தாலே கேகேஆர் தங்களின் சரிவைத் தவிர்த்திருக்கலாம்.

ஆரஞ்ச் மற்றும் பர்ப்பிள் கேப்களோடு இன்னுமொரு வெற்றியோடு இரண்டாவது இடத்திற்கு ஜோராக முன்னேறியது ராஜஸ்தான். நடப்பு சீசனில் அவர்களது வெற்றித்தடம், கோப்பையை நோக்கி நீளுவதற்கான சாத்தியக்கூறுகளை ஒவ்வொரு போட்டியும் அதிகரித்து வருகிறது.