Published:Updated:

கேஎல் ராகுல்: அவுட் ஆஃப் ஃபார்ம், குறைவான ஸ்ட்ரைக்ரேட்; சோதனை தாண்டி பஞ்சாபைக் காக்கும் ஒற்றை வீரன்!

'Strike rate is overrated' என்பது ராகுலின் கருத்து. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருக்கிறது. இதில் நியாயமும் இருக்கவே செய்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடும்பத்தின் பாரங்கள் அனைத்தையும் தாங்கும் பெரியண்ணனாக பஞ்சாப் அணிக்கு ராகுல் கலக்கி வருகிறார். கோலிப்படைக்கு எதிராக இன்னொருமுறை பட்டையைக் கிளப்பி 91 ரன்களையெடுத்து அணியை வெற்றிபெற செய்துள்ளார். இந்த சீசனில் இதுவரை நான்கு அரைசதங்களை அடித்துவிட்டார். ஆரஞ்சு கேப்பும் இதுதான் நமக்கேற்ற தலையென ராகுலைத் தேடி ஓடி வந்துவிட்டது.

கடந்த ஐபிஎல்-க்குப் பிறகு ராகுல் பெரியளவில் ஃபார்மில் இல்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கெதிரான டெஸ்ட் தொடர்களில் ஆடாமல் இருந்தார். கடைசியாக ஆடிய இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் நான்கு போட்டிகளில் இரண்டில் டக் அவுட் ஆகியிருந்தார். ஐந்தாவது போட்டியில் டிராப் செய்யப்பட்டு ராகுலுக்கு பதில் கோலியே ஓப்பனராக இறங்கிவிட்டார். இந்திய அணியில் தன்னுடைய இடமே சிக்கலுக்குள்ளாகியிருக்கும் சமயத்தில்தான் ஃபார்முக்குத திரும்பி இப்போது ஐபிஎல்-ல் அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார். ஆரஞ்சு கேப்பை தலையில் மாட்டிய பிறகும், ‘’அவர் அணிக்காக ஆடாமல் தனக்காக ஆடுகிறார். ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மோசமாக இருக்கிறது’’ போன்ற விமர்சனங்கள் ராகுலை துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றது. ராகுல் மீது இந்த விமர்சனங்கள் தேவைதானா என்கிற கேள்வியை கேட்டாகவேண்டிய நேரம் வந்துவிட்டது.

KL Rahul
KL Rahul
AP

கே.எல்.ராகுல் முதலில் ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாகத்தான் அறியப்பட்டார். 2014 ஆஸ்திரேலியா சீரிஸிலேயே இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகிவிட்டார். அந்தச் சமயங்களில் ராகுலிடம் இப்போது இருப்பதைப்போன்ற ஸ்லாக் ஷாட்கள் இருந்ததில்லை. அந்தச் சமயத்தில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டிருந்தார். ஒரு டி20 பேட்ஸ்மேனாக பெரியளவில் அவரால் கவனம் ஈர்க்க முடியவில்லை. ராகுல் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே ஆடியதால், அவர் இனிமேல் முரளி விஜய் மாதிரி முழுக்க முழுக்க டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாறிவிடுவார் என்றுதான் தோன்றியது. ஆனால், நவயுக கிரிக்கெட்டர்களையே கவர்ந்திழுக்கும் டி20 மோகம் ராகுலையும் இழுத்தது. அதற்கென தனியாக பிரத்யேக பயிற்சிகளில் ஈடுபட்டார். 2016-ல் இந்திய அணியிலும் ஷார்ட்டர் ஃபார்மேட்டுக்கு அறிமுகமான சமயத்தில் பெங்களூரு அணியிலும் இடம்பிடித்தார்.

சில போட்டிகளில் ஓப்பனர், சில போட்டிகளில் நம்பர் 4 என கோலி பேட்டிங் ஆர்டரில் ராகுலைக் குழப்பிவிட்டாலும் சில நல்ல இன்னிங்ஸ்களை இந்த சீசனில் ஆடியிருந்தார். ராகுல் டி20 போட்டிகளுக்கும் தன்னை தகவமைக்கத் தொடங்கிவிட்டார் என்பதை இந்த சீசன் வெளிக்காட்டியது. ஆனாலும், பெங்களூர் அணி ராகுலை தக்கவைத்துக் கொள்ளவில்லை. ஏலத்தில் விட பஞ்சாப் அணி ராகுலை அள்ளிச் சென்றது. கடந்த நான்கு சீசன்களாக ராகுலை மட்டுமே வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறது பஞ்சாப்.

2018-ல் 659 ரன்களை எடுத்திருப்பார் ராகுல். ஐபிஎல்-ன் அதிவேக அரைசதத்தை வெறும் 14 பந்துகளில் இந்த சீசனில்தான் எடுத்தார். 2019-ல் 593 ரன்கள், 2020-ல் 670 ரன்கள் என பஞ்சாப் அணியின் ரன்மெஷினாக இருந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் இருந்த போதும், இப்போது பஞ்சாப் அணிக்காக மிரட்டி வருகிறார். 7 போட்டிகளில் 331 ரன்களை எடுத்திருக்கிறார். 4 அரைசதங்கள். அதில் இரண்டு 90+ ஸ்கோர்களும் அடக்கம்.

Rahul | PBKS
Rahul | PBKS

'Strike rate is overrated' என்பது ராகுலின் கருத்து. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருக்கிறது. இதில் நியாயமும் இருக்கவே செய்கிறது. பஞ்சாப் அணியின் ஒரே நம்பிக்கை ராகுல் மட்டுமே. பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த ரன்களில் 25% க்கு மேலான ரன்களை ராகுல் மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரு போட்டியில் அவர் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டால் பஞ்சாபின் கதை முடிந்துவிட்டது என்று அர்த்தம். அப்படியிருக்கையில் எப்படி யோசிக்காமல் பெரிய ஷாட்களை ஆட முடியும்?

‘’ராகுல் இந்திய அணிக்கு ஆடும்போது ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுகளை ஆடுவார். ஆனால், பஞ்சாப் அணிக்கு அப்படி செய்யமாட்டார். காரணம், அவர் அவுட் ஆகிவிட்டால் பஞ்சாப் அணி 130 ரன்களைக் கூடத் தாண்டாது’’ என கம்பீர் ராகுல் குறித்து கூறியிருந்தார். இது 100 சதவிகிதம் உண்மை. இந்த சீசனில் பஞ்சாப் ஆடியுள்ள போட்டிகளை பார்த்தாலே இதை உணர முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7 போட்டிகளில் ஆடியிருக்கும் பஞ்சாப் மூன்று போட்டிகளில் வென்றிருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்திருக்கிறார் ராகுல். அதிலும் இரண்டு 90+ ஸ்கோர்கள். பஞ்சாப் தோற்றுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் ராகுல் சீக்கிரமே அவுட் ஆகியிருப்பார். ராகுல் அவுட் ஆனபிறகு அந்தப் போட்டிகளில் பஞ்சாப் ஆடியவிதம் பரிதாபமாக இருக்கும். சென்னைக்கு எதிராக 5 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார் ராகுல். அந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 106 மட்டுமே. சன்ரைசர்ஸுக்கு எதிராக 4 ரன்களில் அவுட் ஆகியிருப்பார் ராகுல். அந்தப் போட்டியில் பஞ்சாப் 120 க்கு ஆல் அவுட். கொல்கத்தாவுக்கு எதிராக 19 ரன்களில் ராகுல் அவுட். பஞ்சாப் வெறும் 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதுவே ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்களுக்கு பதில் என நினைக்கிறேன். ராகுல் இல்லையென்றால் பஞ்சாப் இல்லவே இல்லை.

ராகுல்
ராகுல்

ஐபிஎல்-ன் அதிவேக அரைசதத்தை அடித்திருக்கும் ராகுலுக்கு கண்ணை மூடிக்கொண்டு அதிரடி காட்டுவது ஒன்றும் தெரியாத விஷயமில்லை. ஆனால், பஞ்சாப் அணிக்கு அது தேவையில்லையே! அப்படி ஒரு இன்னிங்ஸை ஆடத்தான் கெய்ல், பூரான், ஷாருக்கான், ஹூடா ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால், ராகுலின் இன்னிங்ஸை ஆட ராகுல் மட்டுமே இருக்கிறார். ராகுலால் 20 ஓவரும் ஒரு எண்ட்டில் விக்கெட் விழாமல் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆட முடியும். இதை பஞ்சாப் அணியில் வேறு எந்த பேட்ஸ்மேன்களாலும் செய்ய முடியாது.

மற்ற பேட்ஸ்மேன்கள் அவரவர் ரோல்களை செய்ய தவறும்போது, ஓப்பனிங், மிடில் ஆர்டர், ஃபினிஷிங் என மூன்று ரோல்களிலும் ராகுலே ஆட வேண்டியிருக்கிறது. இது சில சமயங்களில் சொதப்பவும் செய்கிறது. ஆனால் அதற்காக அதிரடி காட்டுகிறேன் என ராகுலும் பேட்டை வீசத் தொடங்கினால் கம்பீர் சொன்ன மாதிரி பஞ்சாப் அணி ஒரு போட்டியில் கூட 130 ஐ தாண்டாது.
Rahul, Rohit | PBKS vs MI
Rahul, Rohit | PBKS vs MI
IPL

‘’உங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் அதிக பந்துகளை ஆடியாக வேண்டும்’’ என கவாஸ்கர் அடிக்கடி சொல்வார். பஞ்சாபைக் காப்பாற்றும் ஒன் மேன் ஆர்மி ராகுல் மட்டுமே. ஆக, அவர் அதிக பந்துகளைச் சந்திப்பதும் க்ரீஸில் அதிக நேரம் நிற்பதும் பஞ்சாப் அணிக்கு நன்மையையே பயக்கும். மற்ற வீரர்களும் ராகுலுக்கு உறுதுணையாக நிற்கும்பட்சத்தில் அவரிடமிருந்து இன்னும் பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள் வெளிப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு