Ipl-2021 banner
Published:Updated:

டெக்னிக்கல் அப்டேட், பொறுப்பான ஆட்டம்... மேக்ஸ்வெல் 2.0-வின் கேம் ப்ளான் இதுதானோ?!

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

நேற்றைய போட்டியில் கூட க்ரீஸுக்குள் வந்தவுடன் ஷபாஸ் நதீமின் ஓவரில் அவர் சந்தித்த நான்கு பந்துகளையும் டாட் ஆக்கியிருப்பார். ஆனால், அதே ஸ்பெல்லில் ஷபாஸ் நதீம் வீசிய அடுத்த ஓவரில் 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்திருப்பார்.

கோலி, டீவில்லியர்ஸ் மிரட்டினால் ஆர்சிபியும் மிரட்டும். கோலி, டீவில்லியர்ஸ் சொதப்பினால் ஆர்சிபியும் சொதப்பும். ஆர்சிபி அணியின் வரமும் அதுதான், சாபமும் அதுதான். ஆனால், இதெல்லாம் நேற்றைய நிலைமை. இன்று எல்லாமே மாறியிருக்கிறது. கோலி, டீவில்லியர்ஸ் என இருவரும் சொதப்பினாலும் ஆர்சிபி மிரட்டுகிறது. காரணம், க்ளென் மேக்ஸ்வெல்!

ஐபிஎல்-இல் மேக்ஸ்வெல் காட்டிய ருத்ரதாண்டவம் என்பது மறந்து போன பழைய வரலாறாக மாறிவிட்டது. 2014க்கு பிறகு, ஒவ்வொரு சீசனிலும் மங்காத்தா க்ளைமேக்ஸில் அஜித் கோடிகோடியாக கொள்ளையடித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறப்பதை போன்றே மேக்ஸ்வெல் சித்திரிக்கப்பட்டார். அவரின் பெர்ஃபார்மென்ஸும் அவ்வளவு மோசமாகத்தான் இருந்தது.

2013-ம் ஆண்டு மும்பை அணியால் ரூ.5.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அந்த சீசனில் அவருக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அடுத்ததாக, 2014 சீசனுக்காக பஞ்சாப் அணியால் 6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மேக்ஸ்வெல் பாட்ஷா பாய் ஆக மிரட்டிய ஒரே சீசன் இதுதான். இந்த சீசனில் மட்டும் 552 ரன்களை வெளுத்தெடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 187.75.

கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியில்...
கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியில்...

ப்ளேஆஃப்ஸ்க்கு செல்வதற்கே முக்கிக் கொண்டிருந்த பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது இந்த ஒரு சீசனில்தான். 'கப் அடிக்கிறதுக்கு எதுக்குய்யா 11 பேரு. எங்காளு மேக்ஸ்வெல் ஒருத்தன் போதாதா?' என இருமாப்புடனே அடுத்தடுத்த சீசன்களில் களமிறங்கியது பஞ்சாப் அணி. ஆனால், 2014 சீசனுக்கு பிறகு அத்தனை சீசன்களிலும் முரட்டுத்தனமாக ஃப்ளாப் ஆனார் மேக்ஸ்வெல்.

2015 - 145 ரன்கள், 2016 -179 ரன்கள், 2017 - 310 ரன்கள். இதன்பிறகும் மேக்ஸ்வெல்லை வைத்துக் கொண்டு சாம்பியன் கனவை காண பஞ்சாப் அணி தயாராக இல்லாததால் அவரை விடுவித்தது. பஞ்சாப்பை போன்றே ஐபிஎல் கோப்பைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு அணியான டெல்லி அணி 2018-ல் மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனிலும் 169 ரன்கள் மட்டுமே எடுத்தார். உலகக்கோப்பையை காரணம் காட்டி 2019 சீசனில் மேக்ஸ்வெல் ஆடவில்லை.

ஆஸ்திரேலியா அணிக்காக உலகக்கோப்பையிலும் மேக்ஸ்வெல்லால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. உலகக்கோப்பை முடிந்திருந்த அந்த சமயத்தில்தான் ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்தார் மேக்ஸ்வெல். கிரிக்கெட்டர்கள் வெளிப்படையாக பேசத் தயங்கும் மனரீதியான அழுத்தங்கள் குறித்து பேசினார். மனரீதியாக தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் கிரிக்கெட்டிலிருந்து கொஞ்ச காலம் ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார். சில மாத ஓய்வுக்குப் பிறகுதான் மீண்டும் கிரிக்கெட் ஆட வந்தார். ஓய்வுக்குப் பிறகு 2019-20 பிக்பேஷ் சீசனில் சிறப்பாக ஆட, மீண்டும் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி ரூ.10.75 கோடி கொடுத்து வாங்கிப் போட்டது.

ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடியிருந்தார் மேக்ஸ்வெல். ஐபிஎல்-க்கு ஒருவாரம் முன்பு நடைபெற்ற இங்கிலாந்து சீரிஸில் கூட மிகச் சிறப்பாக ஒரு சதம் அடித்துவிட்டே வந்திருந்தார். ஆனாலும், பஞ்சாப் அணிக்காக அவரால் பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை. கடந்த சீசனில் வெறும் 108 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். இந்த மோசமான சீசனுக்கு பிறகு பஞ்சாப் அணி அவரை மீண்டும் கழட்டிவிட்டது.

மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியில்...
மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியில்...
இந்தியாவுக்கு எதிரான சீரிஸில் மேக்ஸ்வெல் வெளுத்துக்கட்ட இந்த முறையும் ஏலத்தில் அவருக்கான மதிப்பு உயரவே செய்தது. சென்னை அணியும் பெங்களூர் அணியும் போட்டி போட்டுக் கொண்டு அவருக்கான ஏலத்தொகையை உயர்த்தின. கடைசியில் பெங்களூர் அணி ரூ.14.25 கோடி ரூபாய் கொடுத்து மேக்ஸ்வெல்லை கோலி & கோ வின் உறுப்பினராக்கியது.

தொடர்ச்சியாக மேக்ஸ்வெல் சொதப்புவதும், அதை துரும்பாக கூட சட்டை செய்யாமல் ஐபிஎல் அணிகள் அவருக்கு கோடிகளை கொட்டுவதும், அத்தனை கோடிகளையும் அள்ளிபோட்டுக் கொண்டு மேக்ஸ்வெல் மீண்டும் சொதப்புவதும் ஒரு சங்கிலித் தொடர்போல தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த முறையும் அப்படித்தான் ஆர்சிபியை காவு வாங்க போகிறார் என அனைவரும் நினைத்திருக்க நடந்திருப்பது என்னவோ எல்லாருக்கும் சர்ப்ரைஸ்தான்.

ஆர்சிபி தாங்கள் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலுமே மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார் மேக்ஸ்வெல். மும்பை அணிக்கு எதிராக 160 சேஸிங்கில் 28 பந்துகளில் 39 ரன்கள். சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 41 பந்துகளில் 59 ரன்கள்.

இந்த இரண்டு இன்னிங்ஸ்களில் சன்ரைசர்ஸுக்கு எதிரான மேக்ஸ்வெல்லின் நேற்றைய இன்னிங்ஸ் ரொம்பவே முக்கியமானது. 13.4 ஓவர்களிலேயே ஆர்சிபி அணி கோலி - டீவில்லியர்ஸ் என இரண்டு தூண்களையும் இழந்துவிட்டது. அணியின் ஸ்கோர் 95-4. கடந்த சீசன்களில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அடுத்த 2-3 ஓவர்களில் ஆர்சிபி மொத்தமாக காலியாகியிருக்கும். 100 ரன்களை கூட எட்டியிருப்பார்களா என்பதே சந்தேகம்தான். ஆனால், நேற்றைய போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடி முடித்தது. எதிரணிக்கு சவாலளிக்கும் வகையில் 149 ரன்களை எடுத்தது. எல்லாவற்றுக்கும் மேக்ஸ்வெல்லே காரணம். அவசரப்படாமல் மேக்ஸ்வெல் ஆடிய பொறுப்பான ஆட்டம்தான் ஆர்சிபியை கரை சேர்த்தது.

மேக்ஸ்வெல் ஆர்சிபி-யில்...
மேக்ஸ்வெல் ஆர்சிபி-யில்...

அந்த சில மாத ஓய்வுக்குப் பிறகு, மேக்ஸ்வெல்லின் ஆட்டத்திலும் அணுகுமுறையிலும் நிறைய மாற்றங்களை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் க்ரீஸுக்குள் வந்தவுடனேயே பரபரப்பாக ஷாட் ஆட முயல்வார். இப்போது அதை முற்றிலுமே தவிர்க்கிறார். நின்று நிதானமாக பார்த்து ஆடவே விரும்புகிறார். நேற்றைய போட்டியில் கூட க்ரீஸுக்குள் வந்தவுடன் ஷபாஸ் நதீமின் ஓவரில் அவர் சந்தித்த நான்கு பந்துகளையும் டாட் ஆக்கியிருப்பார். ஆனால், அதே ஸ்பெல்லில் ஷபாஸ் நதீம் வீசிய அடுத்த ஓவரில் 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்திருப்பார். ஒரே பௌலர்தான். ஆனால், முதல் 4 பந்துகளில் 0 ரன்கள். அடுத்த 4 பந்துகளில் 17 ரன்கள். இதே அணுகுமுறையைதான் புவனேஷ்வர்குமார், நடராஜன் ஆகியோருக்கு எதிராகவும் வெளிக்காட்டினார். கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக மேக்ஸ்வெல் சொதப்பியதன் காரணமும் இதனுள்தான் ஒழிந்திருக்கிறது.

IPL 2021 : கோலி ரசிகர்களே உயிர்கொள்ளுங்கள்... ஈ சாலா எல்லாமே மாறப்போகிறது!

ஆரம்பத்தில் அவர் செட்டில் ஆவதற்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பஞ்சாப் அணி கொடுக்கவே இல்லை. கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கெய்ல் இவர்களே பெரும்பாலான ஓவர்களை முடித்துவிட, கடைசிக்கட்டத்தில் பூரனுடன் போட்டி போட்டுக் கொண்டு மேக்ஸ்வெல்லால் அதிரடியாக ஆட முடியவில்லை. ஆர்சிபிக்காக கடந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே 69 பந்துகளைச் சந்தித்திருக்கிறார் மேக்ஸ்வெல். கடந்த சீசன் முழுவதும் பஞ்சாப் அணிக்காக 106 பந்துகளை மட்டுமே சந்தித்திருக்கிறார். இதிலிருந்தே எல்லாவற்றையும் புரிந்துக்கொள்ள முடியும்.

ஆர்சிபி அணியை பொறுத்தவரைக்கும் கோலியை ஓப்பனிங்கிலும் ஏபிடியை ஃபினிஷர் ரோலிலும் ஆட வைக்கவே விரும்புகிறது. இதற்கு வலுவான காரணங்களும் இருக்கவே செய்கின்றன. கோலி ஐபிஎல்-இல் அடித்துள்ள 5 சதங்களும் அவர் ஓப்பனராக இறங்கி அடித்தவை. முதல் 10 ஓவர்களில் ஏபிடி இறங்கியுள்ள ஆட்டங்களில் எல்லாம் அவர் பெரிதாக சோபித்ததில்லை. ஏபிடி இன்னிங்ஸின் பிற்பகுதியில்தான் முரட்டுத்தனமான சம்பங்களைச் செய்கிறார். இந்த இருவரும் அவர்களின் சௌகரியமான இடங்களில் ஆடுவதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாததே ஆர்சிபி அணியின் பெரும் குறையாக இருந்தது. இப்போது மேக்ஸ்வெல் மூலம் அதுவும் நிவர்த்தி ஆகியிருக்கிறது.

விருதுடன் மேக்ஸ்வெல்...
விருதுடன் மேக்ஸ்வெல்...
கோலி தனக்கு பிடித்த ஓப்பனர் ரோலிலும் ஏபிடி தனக்கு பிடித்த ஃபினிஷர் ரோலிலும் மேக்ஸ்வெல் அவருக்கு நேரமெடுத்து ஆட தேவைப்படும் மிடில் ஆர்டரிலும் என பக்காவாக செட் ஆகியிருக்கிறது ஆர்சிபியின் லைன் அப்.

இப்போது மேக்ஸ்வெல் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் முறையை அவரின் கடந்த சீசனோடு ஒப்பிட்டுக் காட்டி, 'மேக்ஸ்வெல் டெக்னிக்கலாகவும் தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார். ஒரு முழுமையான கிரிக்கெட்டர் ஆடுவதைப் போன்ற ஷாட்களை இப்போதுதான் ஆடுகிறார். அதனாலேயே இந்த சீசன் மேக்ஸ்வெல்லுக்கு வெற்றிகரமானதாக அமையும் என நம்புகிறேன்' என ப்ரையன் லாரா கமெண்ட்ரியில் கூறியிருந்தார்.

மேக்ஸ்வெல் வெர்ஷன் 2.0 வாது 'ஈ சாலா கப் நம்தே' வை உண்மையாக்குமா?!
Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு