Published:Updated:

பவர்ப்ளே அணுகுமுறை, சர்ப்ரைஸ் முடிவுகள்... ரோஹித் எங்கே சறுக்கினார், ராகுல் எப்படிச் சாதித்தார்?

ரோஹித் சொதப்பியிருந்தாலும் பஞ்சாப் அணியின் கேப்டனான ராகுல் சின்ன சின்ன விஷயங்களையும் சரியாக செய்து கவனம் ஈர்த்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பஞ்சாபுக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணி மோசமாகத் தோற்றிருக்கிறது. கேப்டன்கள் எடுக்கும் சிறுசிறு முடிவுகளும் அணியின் வெற்றி தோல்வியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி, நேற்றைய போட்டியில் ரோஹித்தும் ராகுலும் எடுத்த சில முடிவுகள் எப்படி ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பற்றி பார்ப்போம்.

மும்பை அணிக்கும் சரி ரோஹித்துக்கும் சரி, எந்த பௌலரை அட்டாக் செய்ய வேண்டும் எந்த பௌலரிடம் அடக்கி வாசிக்க வேண்டும் என்கிற தெளிவான கேம் ப்ளான் எப்போதும் இருக்கும். ஆனால், நேற்றைய போட்டியில் ரோஹித்திடம் ஒரு கேம் ப்ளானே இல்லை.

ரோஹித் ஷர்மா | PBKS vs MI
ரோஹித் ஷர்மா | PBKS vs MI

ஐந்தாவது பௌலரான ஹென்றிக்ஸையும் பார்ட் டைமரான தீபக் ஹூடாவையும் வைத்துதான் பௌலிங்கை தொடங்கினார் ராகுல். இவர்கள் இருவரும்தான் முதல் 5 ஓவர்களை வீசினார்கள். மும்பையிடம் ஒரு கேம்ப்ளான் இருந்திருந்தால் இவர்களை நிச்சயம் அட்டாக் செய்திருப்பார்கள். ஷமியையும் பிஷ்னோயையும் அர்ஷ்தீப்பையும் அடிப்பதை விட இவர்களை அடிப்பது சுலபம். அதுவும் பவர்ப்ளேயில் இரண்டு பீல்டர்கள் மட்டுமே வெளியில் நிற்கையில் நிச்சயம் அடித்திருக்க முடியும். ஆனால், 5 ஓவர்களையும் உருட்டவே செய்தனர். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே வந்திருந்தது. அதுவும் ஃபுல் டாஸாக வீசப்பட்ட பந்திலேயே வந்தது. முதல் 5 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. ஒட்டுமொத்தமாக பவர்ப்ளேயில் 21 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. 'பந்து சைனிங் போயி பழசான உடனே செகண்ட் செஷன்ல இருந்து அடிப்பாங்க போல' என ரசிகர்கள் கன்னத்தில் கை வைக்கும் அளவுக்கு மோசமாகவே இருந்தது ரோஹித்தின் பவர்ப்ளே அணுகுமுறை.

மும்பையின் மிடில் ஆர்டர் சொதப்புவதாலும், சேப்பாக்கம் பிட்ச்சில் டெத் ஓவர்களில் ஸ்கோர் செய்வது சிரமமாக இருப்பதாலும் கடந்த இரண்டு போட்டிகளிலுமே தன்னால் முடிந்த அளவுக்கு பவர்ப்ளேயில் அதிரடியாக ஆட முயன்றிருப்பார் ரோஹித். கடந்த இரண்டு போட்டியிலும் மும்பை அணியின் பவர்ப்ளே ஸ்கோரை பார்த்தாலே இது புரியும். சன்ரைசர்ஸ்க்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 53 ரன்களையும் டெல்லிக்கு எதிராக ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 55 ரன்களும் எடுத்திருக்கும். அணியின் மிடில் ஆர்டர் மற்றும் சேப்பாக்கத்தின் டெத் ஓவர் ஸ்கோரிங் பிரச்னைகளை மனதில் வைத்து கடந்த போட்டிகளில் ஆடியது போன்றதொரு இன்னிங்ஸை நேற்றைய போட்டியில் ஏன் ஆடவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி.

PBKS vs MI
PBKS vs MI

நம்பர் 3 ஸ்லாட்டில் எப்போதும் சூர்யகுமார் யாதவ்தான் களமிறங்குவார். ஆனால், நேற்று இஷன் கிஷன் களமிறங்கியிருந்தார். ஒரு இடக்கை பேட்ஸ்மேன் இருக்கிறார் என்றுதான் மேட்ச் அப் எல்லாம் பார்த்து ஆஃப் ஸ்பின்னரான தீபக் ஹூடாவை வீச வைத்தார் ராகுல். அதற்கு பலனும் கிடைத்து டீகாக்கும் இரண்டாவது ஓவரிலேயே தன் விக்கெட்டை கொடுத்து நடையைக் கட்டினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் ஒரு இடக்கை பேட்ஸ்மேனை அதுவும் ஃபார்மில் இல்லாதவரை மேலே கொண்டு வந்து இறக்கியது ஏன் எனப் புரியவில்லை.

பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா போன்றோர் சொதப்புவதால் சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் கீழே இறங்கி வந்தால் நன்றாக இருக்கும் என ரோஹித் யோசித்திருக்கலாம். ஆனால், இது மும்பை அணிக்கு பின்னடைவாகவே அமைந்தது. சந்திக்கும் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்ட நினைப்பவர் சூர்யகுமார் யாதவ். அதுவும் பவர்ப்ளேயில் என்றால் சொல்லவே வேண்டாம். டீகாக் அவுட் ஆன பிறகு பவர்ப்ளேயில் முழுதாக நான்கு ஓவர்கள் இருந்தன. சூர்யகுமார் யாதவ் இறங்கியிருந்தால் நிச்சயமாக உருட்டியிருக்க மாட்டார். ஒரு 20-30 ரன்களை வேகமாக எடுத்து பவர்ப்ளேயை சிறப்பாக பயன்படுத்தியிருப்பார். அணியின் ஸ்கோரும் 150 வரை சென்றிருக்கும். சூர்யகுமார் யாதவ்க்கு பதிலாக நம்பர் 3 இல் வந்த இஷன் கிஷன் 17 பந்துகளில் வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்து பயங்கர அழுத்தத்தை உண்டாக்கிவிட்டார். இந்த இரண்டு விஷயங்களையும் ரோஹித் சரியாக செய்திருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரோஹித் சொதப்பியிருந்தாலும் பஞ்சாப் அணியின் கேப்டனான ராகுல் சின்ன சின்ன விஷயங்களையும் சரியாக செய்து கவனம் ஈர்த்தார்.

சேப்பாக்கம் பிட்ச்சில் அணிகள் ஸ்கோரை டிஃபண்ட் செய்வதையே விரும்பும். ஆனால், கே.எல்.ராகுல் டாஸை வென்று சேஸ் செய்ய போவதாக அறிவித்தார். இதுவே மிகப்பெரிய சர்ப்ரைஸ்.

ஹூடா | PBKS vs MI
ஹூடா | PBKS vs MI

பௌலிங்கில் முதல் ஸ்பெல்லையே ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் பார்ட் டைமரிடம் கொடுத்தது இன்னொரு சர்ப்ரைஸ். இதற்கு பின்னால் சின்ன மேட்ச் அப் காரணமும் இருக்கிறது. ரோஹித் ஷர்மா மெதுவான பந்துகளுக்கு எதிராக இந்த சீசனில் 54 என்கிற குறைவான ஸ்ட்ரைக் ரேட்டையே வைத்திருக்கிறார். அதற்காகவே ஷமிக்கு முதல் ஸ்பெல்லை கொடுக்காமல் ஹென்றிக்ஸுக்குக் கொடுத்தார் ராகுல். அடுத்து இடக்கை பேட்ஸ்மேனான டீகாக்கை டேக்கிள் செய்ய ஆஃப் ஸ்பின்னரான ஹூடாவை அழைத்து வந்தார். இந்த இரண்டு மூவ்களுமே ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

அதேமாதிரி, பேட்டிங்கிலும் பவர்ப்ளேயில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக ரன்களை எடுக்க முடியும் என்றே பார்த்தார். ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்களை ஆட முற்பட்டார் ராகுல். வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டம்ப் லைனில் வீசும்போது ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 100 ஐ சுற்றியே இருக்கிறது. ஆனால், நேற்று பும்ரா ஸ்டம்ப் லைனில் வீசிய டெலிவரியையெல்லாம் ஃபைன் லெகில் ரிஸ்க் எடுத்து சிக்ஸராக்கினார். மயாங்க் அகர்வாலும் இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடி பவுண்டரிகளை அடித்தார். இதன்மூலம், பவர்ப்ளேயில் விக்கெட்டே விடாமல் 45 ரன்களை சேர்த்தது பஞ்சாப் அணி. ஓவர் செல்ல செல்ல ஸ்கோர் செய்ய சிரமமான போது பவர்ப்ளேயில் அடித்த இந்த 45 ரன்கள்தான் ரன்ரேட்டை கட்டுக்குள் வைக்க உதவியது. 'ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் ஒரு விஷயமே இல்லை' என ராகுல் பவர்ப்ளேயில் உருட்டியிருந்தால் ஆட்டம் கடைசி பந்து வரை சென்றிருக்கும். முடிவு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாதகமாகியிருக்கும்.

ராகுல் | PBKS vs MI
ராகுல் | PBKS vs MI
டாஸ் முடிவு... பவர்ப்ளே அணுகுமுறை... சில சர்ப்ரைஸ் மூவ்கள் என கேப்டன் ராகுல் செய்த அத்தனையுமே ஆட்டத்தில் எடுபட்டது. 'Defending low score at anyday...' என நம்பிக்கையாக பேசும் ரோஹித் ஷர்மாவும் மும்பை அணியும் தொடர்ந்து குறைவான ஸ்கோரை எடுப்பதும் அதை டிஃபண்ட் செய்யமுடியாமல் தவிப்பதும் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு