Published:Updated:

IPL 2021: சுரேஷ் ரெய்னா... தொடர் சம்பவங்கள் செய்வாரா... CSK ரீ என்ட்ரி எப்படியிருந்து?!

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

அணியில் காணாமல் போயிருந்த ஓர் உத்வேகமும், மகிழ்ச்சியும் ரெய்னாவின் வரவால் திரும்ப வந்திருக்கிறது. இரண்டுவருட இடைவெளி அவரின் ஆட்டத் திறனில் எந்தக் குறைபாடுகளையும் கொண்டு வரவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

32 அரை சதங்களை சிஎஸ்கேவுக்காக ஆடிய பத்து சீசன்களில் ரெய்னா அடித்திருந்தாலும் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக இந்த சீசனின் முதல் போட்டியில் அடித்த அரைசதம் கொண்டாட்டத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இருளில் மூழ்கியிருந்த CSK பேட்டிங் லைன்அப்புக்குள் மறுபடியும் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறார் ரெய்னா.

அன்புக்குரிய அர்ச்சுனன்!

'சின்ன தல...' சிஎஸ்கே ரசிகர்களைப் பொறுத்தவரை இது வெறும் வார்த்தையில்லை. மிகவும் உணர்வுப்பூர்வமான வடிவாக்கம்! முழுதாகப் பத்து ஆண்டுகள் சிஎஸ்கேவுக்காக ஆடியபோது மட்டுமின்றி, இரண்டாண்டுகள் சிஎஸ்கேவின் தடைக்காலத்தின்போதும், குஜராத் லயனுக்காக அவர் ஆடியபோதும்கூட அவருடனான சிஎஸ்கே ரசிகர்களின் பிணைப்பு அற்றுப் போகவில்லை. ஏனெனில், சிஎஸ்கேவில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்புப் பங்காற்றி எல்லாமுமாகி அவர் நின்றதுதான். மூன்றுமுறை சிஎஸ்கே வெற்றிச் சரித்திரத்தைக் கோப்பையில் எழுதிய போதும் சரி, சின்னச் சின்ன சரிவுகளைச் சந்தித்த போதும் சரி, எல்லாச் சந்தர்ப்பங்களிலும், சிஸ்கேவின் பக்கம் தோனிக்குத் தோள்கொடுத்து நின்றவர் ரெய்னா. முக்கியமாக, அழுத்தம் தரும் சூழ்நிலையில் இந்த இணை, எத்தனையோ முறை அணியை இக்கட்டிலிருந்து மீட்டெடுத்திருக்கிறது.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

முந்தைய சாதனைகள்!

2019 சீசன்வரை, சிஎஸ்கேவுக்காக மட்டுமே 164 போட்டிகளில், 4527 ரன்களை, சராசரியாக 137.34 என்கின்ற ஸ்ட்ரைக் ரேட்டோடு குவித்திருந்தார் ரெய்னா. இதில், 32 அரை சதங்களும், ஒரு சதமும் அடக்கம். இதைத் தவிர்த்து, 24 விக்கெட்டுகள், 91 கேட்சுகளோடும் பலவாறாக சிஎஸ்கே-வின் வெற்றியில் முக்கியப் பங்காற்றி இருந்தார். சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சேர்த்து, 188 போட்டிகளில், 5369 ரன்களை 139.38 ஸ்ட்ரைக் ரேட்டோடு குவித்திருந்தார். இதுதவிர 5,000 ரன்களை ஐபிஎல்-ல் கடந்த முதல் வீரர், 100 சிக்ஸர்களை ஐபிஎல்-ல் கடந்த முதல் இந்தியர், ஏழு சீசன்களில் தொடர்ச்சியாக 400+ ரன்களை எடுத்த முதல் மற்றும் ஒரே வீரர் என ஒரு பத்தியில் அடக்கமுடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். இந்த மிரள வைக்கும், எண்கள்தான் ரெய்னா இல்லையென்றால் சிஎஸ்கேவே இல்லை என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதின் ஆழத்த்தில் விதைத்திருந்தது. 2018-க்குப் பிறகு, இந்தியாவுக்காக எந்தப் போட்டியிலும் விளையாடாமல் போனாலும், சிஎஸ்கேயுடனான அவரது பயணம் மட்டும் தங்குதடையின்றித் தொடர்ந்தது.

2020 விலகல்!

கடந்தாண்டு துபாயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ரெய்னா திடீரென அணியில் இருந்து விலகினார். ரெய்னா இல்லாததால் ப்ளேயிங் லெவனுக்குள் வெளிநாட்டு வீரரை விளையாட வைக்க வேண்டிய நிலை சிஎஸ்கே-வுக்கு உருவானது. அதனால், பௌலிங்கில் அதற்கு முந்தைய சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இம்ரான் தாஹிரை வெளியே உட்கார வைத்தது. அதன் முடிவாக, பல போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது சிஎஸ்கே.

2021 ரீ என்ட்ரி!

அணியில் ரெய்னா தொடர்வார் என்ற தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், ரெய்னாவின் ஆட்டத்திறன் எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஏனெனில், 2019 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, ரெய்னா எந்தவொரு முக்கியப் போட்டியிலும் பங்கேற்கவே இல்லை. சிஎஸ்கேவுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில், மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி பெற்ற, அந்த ஃபைனல் மற்றும் இரண்டு ப்ளே ஆஃப் போட்டியிலும் சேர்த்து, ரெய்னா சேர்த்திருந்த ரன்கள் 24 மட்டுமே. இதைத் தவிர்த்து, தனது ஃபார்ம் குறித்து தனக்கே நிரூபித்துக் கொள்வதற்காக, சமீபத்தில் நடந்துமுடிந்த, சையத் அலி முஷ்தாக் தொடரில், உத்தரப்பிரதேசத்தின் சார்பில், ஐந்து போட்டிகளில் பங்கேற்ற ரெய்னா, திரிபுராவுக்கு எதிரான ஒரு போட்டியில், அரை சதம் அடித்தார் அவ்வளவே!

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

ஆனால், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், சிஎஸ்கே ஜெர்ஸியில், டெல்லி கேபிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில், ரெய்னாவை முதல்முதலாகப் பார்க்க, ரசிகர்கள் காத்திருந்தனர்‌. முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே இறங்க, கெயிக்வாட்டும் டுப்ளெஸ்ஸியும் முதலில் களமிறங்கினர்‌. கெயிக்வாட்டின் விக்கெட் விழ, ரெய்னாவின் வரவையே அனைவரும் எதிர்பார்க்க, மொயின்அலி வந்தார். எனினும், ரெய்னா வர ரசிகர்கள் வெகுநேரம் காத்திருக்கவில்லை‌. டுப்ளெஸ்ஸி விக்கெட்டும் உடனே விழ, ரெய்னா ரீ என்ட்ரி. வோக்ஸின் ஓவரில் சந்தித்த முதல் நான்கு பந்துகளிலும் ரெய்னா ரன் சேர்க்கத்தவற, பழைய ரெய்னாவை கண்கள் தேட, சந்தித்த ஐந்தாவது பந்தை, பவுண்டரிக்கு அனுப்பி, வெல்கம் பவுண்டரி மூலமாக, 'வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என அழுத்தம் திருத்தமாக நிரூபித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

IPL 2021 : மொமன்ட்டம், ப்ராசஸ், பாசிட்டிவிட்டி... பழைய தோனியா வாங்க, விசில் போட CSK ரசிகர்கள் ரெடி!

அதன்பின் ஓவர் த மிட் விக்கெட் மற்றும் எக்ஸ்ட்ரா கவரென பேக் டு பேக் என இரண்டு பவுண்டரிகளையும் விளாசினார். இரண்டாண்டு இடைவெளியே தெரியாது, பேட்டிங்கில் முதிர்ச்சியும் பக்குவமும் நிரம்பி வழிந்தன. குறிப்பாக, சுழல்பந்தை இலகுவாக எதிர்கொண்டு, அதில் 20 பந்துகளில், 37 ரன்களைக் குவித்து வின்டேஜ் ரெய்னாவை நினைவுக்குக் கொண்டு வந்தார்.

32 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்த ரெய்னா, ஐபிஎல்-ல் அதிக அரைசதங்களை அடித்தவர்கள் பட்டியலில், 39-வது அரைசதத்தோடு, மூன்றாமிடத்தைக் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் பகிர்ந்து கொண்டார்.
சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா
நான்கு சிக்ஸர்களை இந்த இன்னிங்ஸில் அடித்ததன் மூலம், அதிக சிக்ஸர்களை ஐபிஎல்-ல் அடித்தவர்கள் பட்டியலில், 198 சிக்ஸர்களுடன் ஆறாம் இடத்தை, பொல்லார்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இறுதியில், 54 ரன்களை எடுத்திருந்த போது ரன்அவுட் ஆன ரெய்னா 150 ஸ்ட்ரைக் ரேட்டோடு வெளியேறி இருந்தார்.

அணியில் காணாமல் போயிருந்த ஓர் உத்வேகமும், மகிழ்ச்சியும் ரெய்னாவின் வரவால் திரும்ப வந்திருக்கிறது. இரண்டுவருட இடைவெளி அவரின் ஆட்டத் திறனில் எந்தக் குறைபாடுகளையும் கொண்டு வரவில்லை. டைமிங், பேலன்ஸ் என அத்தனையும் அப்படியேதான் இருக்கின்றன, அசுரபலத்தோடு ரசிகர்களின் கண்களில், ரெயின்போ வண்ணம் காட்டிய ரெய்னாவின் ஆட்டத்தில்‌. இதே ஃபார்ம் இப்படியே தொடர்ந்தால், நடப்பு ஐபிஎல்-ல், கடந்த சீசனில் தவறவிட்டதற்கும் சேர்த்துச் சாதிப்பார் ரெய்னா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு