Published:Updated:

RCB v KKR: இது கனவா... நனவா... உயரே பறக்கும் ஆர்சிபியின் கொடி!

RCB v KKR
RCB v KKR

RCB v KKR: ஆர்சிபி ரசிகர்களின் இத்தனை வருட கனவுகள் இப்போதுதான் படிப்படியாக நனவாகத் தொடங்கியிருக்கின்றன.

எல்லா அணிகளும் 4 வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டில் யாரை இறக்குவது எனத் தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்க, ஆர்சிபி மட்டும் மூன்றே வெளிநாட்டு வீரர்களை இறக்கி கெத்து காட்டுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் 150 ரன்களை தாண்டுவதற்கே மற்ற அணிகள் தலைகீழாக நின்று தவமிருக்க ஆர்சிபி மட்டும் 200 ரன்களை அசால்ட்டாக அடிக்கிறது. அதுவும் கிங் கோலி ஐந்தே ரன்களில் ஆட்டமிழந்த பிறகு! டெத் ஓவர்களில் ரஸல் க்ரீஸில் நிற்க ஸ்கோரை டிஃபண்ட் செய்கிறது. 'என்னென்ன சொல்றான் பாருங்க... கம்பி கட்டுற கதையெல்லாம்...' என ட்ரெண்டிங் மீம் டெம்ப்ளேட்டுக்கு ஏற்ற கண்டெண்ட் போல இது இருந்தாலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் அத்தனையையும் நிஜமாகவே சாத்தியப்படுத்தியிருக்கிறது ஆர்சிபி.

வெறித்தனமான ஆர்சிபி ரசிகர்களே இதெல்லாம் கனவா... நனவா என்கிற மெய்மறந்த நிலைக்கு செல்லுமளவுக்கு இன்று கொல்கத்தாவை சம்பவம் செய்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கிறது ஆர்சிபி.

RCB v KKR
RCB v KKR

சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கிறது, ஆட்டம் போக போக பிட்ச் மெதுவாகிறது என்ற காரணத்தால் டேன் கிறிஸ்டியனை பென்ச்சில் வைத்துவிட்டு மூன்றே வெளிநாட்டு வீரர்களோடு களமிறங்கினார் கோலி. கோலியின் இந்த மூவே ரொம்பவே சர்ப்ரைஸாக இருந்தது. ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கிறது என்பதற்காக ஆடம் ஷம்பாவை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வராமல் கூடுதலாக ஒரு இந்திய பேட்ஸ்மேனை அழைத்து வந்தது கோலியிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத முடிவு.

கொல்கத்தா அணி எந்த மாற்றங்களையும் செய்யாமல் கடந்த போட்டியில் ஆடிய அதே ப்ளேயிங் லெவனுடனேயே களமிறங்கியது.

கோலி டாஸை வென்று சேப்பாக்க சம்பிரதாயப்படி பேட்டிங்கை தேர்வு செய்தார். படிக்கலுடன் ஓப்பனிங் இறங்கிய கோலி ஹர்பஜன் சிங் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி அடித்து பாசிட்டிவாகத் தொடங்கினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி பெரிய ஷாட்டுக்கு முயன்று எட்ஜ் ஆக அதை ராகுல் திரிபாதி அட்டகாசமாக கேட்ச் செய்தார். கோலி ஐந்தே ரன்களில் வெளியேறினார். இதே ஓவரில் இன்னொரு கூக்ளியில் ரஜத் படிதரின் விக்கெட்டையும் காலி செய்தார் வருண் சக்கரவர்த்தி. ஒரு வெளிநாட்டு வீரரை பென்ச்சில் வைத்துவிட்டு வாய்ப்புக் கொடுக்கும் அளவுக்கு ரஜத் படிதர் மீது கோலி நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை அடுத்தடுத்த போட்டிகளிலாவது அவர் காப்பாற்றியாக வேண்டும்.

RCB v KKR
RCB v KKR
இரண்டாவது ஓவரிலேயே கிங் கோலி அவுட். அடுத்து என்ன?! ஏபிடி வருவார். அவரும் சீக்கிரமே அவுட் ஆகிவிட்டால் ஆர்சிபி அவ்வளவுதான். இதெல்லாம் பழைய கதை. ஆர்சிபியின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கென்றே அழைத்து வரப்பட்ட மேக்ஸ்வெல் இப்போது இருக்கிறார். கோலி, ஏபிடி மட்டுமில்லை ஆர்சிபியை சரிக்க வேண்டுமானால் மேக்ஸ்வெல்லையும் தாண்டிதான் ஆக வேண்டும். ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை என்பதை இன்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் மேக்ஸ்வெல்.

வேகமாக இரண்டு விக்கெட் விழுந்திருக்கிறது என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல், தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார் மேக்ஸ்வெல். அவருக்கு உறுதுணையாக இன்னொரு முனையில் தேவ்தத் படிக்கல் விக்கெட் விடாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார்.

மூன்று ஸ்பின்னர்கள் அணியில் இருந்ததால், அவர்களையே பிரதானமாக பயன்படுத்த முயன்றார் மோர்கன். ஆனால், மேக்ஸ்வெல் வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்களைத்தான் நாலாபுறமும் பறக்கவிட்டார். வருண்சக்கரவர்த்தி மற்றும் ஷகிப்-அல்-ஹசன் வீசிய ஓவர்களில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் என ஒரு செட்டாக அடித்துக்கொண்டிருந்தார். இடையிடையே பிரஷித் கிருஷ்ணாவின் ஓவரிலும் பவுண்டரிகளைச் சிதறவிட்டார்.

10 ஓவர்கள் முடிந்த பிறகு, தேவ்தத் படிக்கல் நானும் மேக்ஸ்வெல்லை போன்று பேட்டை வீசுகிறேன் என கியரை மாற்றினார். ஹர்பஜனின் ஓவரில் மேக்ஸ்வெல் போன்றே கார்பன் காப்பியாக ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை ஆடி பவுண்டரி அடித்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே பிரஷித் கிருஷ்ணா ஷாட்டுக்கு இடம் கொடுக்காமல் ஸ்டம்ப் லைனில் உடம்புக்குள் வீசிய ஒரு பந்தைத் தூக்கியடிக்க முயன்று கேட்ச் ஆகி 25 ரன்களில் வெளியேறினார்.

RCB v KKR
RCB v KKR

நம்பர் 5-ல் டிவில்லியர்ஸ் களமிறங்கினார். அதிரடியாக அரைசதத்தை கடந்து மிரட்டிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல் இப்போது பேட்டனை டிவில்லியர்ஸுக்குக் கைமாற்றிவிட்டார். பேட் கம்மின்ஸ் வீசிய 17வது ஓவரில் மேக்ஸ்வெல் டைமிங் மிஸ்ஸாகி ஹர்பஜனிடம் கேட்ச் கொடுத்து 78 ரன்களில் வெளியேறினார்.

ஏப்ரல் மாதம் யாராவது தீபாவளி கொண்டாடுவார்களா?! டெத் ஓவரில் சேப்பாக்கத்தில் ஏபிடி கொண்டாடினார். 1000 வாலாவாக வெடித்து சிதறிய டிவில்லியர்ஸால் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 56 ரன்கள் கிடைத்தது. கடந்த போட்டியில் 18 மற்றும் 20வது ஓவரை வீசி 5 விக்கெட் ஹால் எடுத்த ரஸலுக்கு இந்தப் போட்டியில் வாணவேடிக்கை காட்டினார். ரஸல் வீசிய இரண்டு ஓவர்களில் மட்டும் 38 ரன்கள் வந்திருந்தது. டிவில்லியர்ஸின் அலட்சியமான அதிரடியால் ஆர்சிபி 20 ஓவர்களில் 204 ரன்களை சேர்த்தது. 34 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஏபிடி நாட் அவுட்டாக இருந்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் 200 ரன்கள் சேஸெல்லாம் நெவர் என நினைத்திருக்க, கொல்கத்தாவும் ஒரு கை பார்த்துவிடுவோம் என களமிறங்கியதால் ஆட்டம் பரபரப்பானது. ஜேமிசன் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி மட்டும் இரண்டு சிக்ஸர்களைத் தொடர்ந்து அடித்த கில் அடுத்த பந்தையும் பவுண்டரியாக்க முயன்று மிட் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். நம்பர் 3-ல் உள்ளே வந்த திரிபாதி அடுத்த பந்தையே பவுண்டரியாக்கினார். இதிலிருந்தே டார்கெட்டை சேஸ் செய்வதில் கொல்கத்தா உறுதியோடு இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. எல்லா பேட்ஸ்மேன்களுமே அதிரடியாக ஆட முயன்று ரன்ரேட்டை கொஞ்சம் மெயிண்டெயின் செய்திருந்தாலும் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விட்டுக்கொண்டே இருந்தனர். செட்டில் ஆகி நின்ற திரிபாதி, மோர்கன், ஷகிப்-அல்-ஹசன் மூவருமே நின்று பெரிதாக அடித்து கொடுக்கவில்லை.

RCB v KKR
RCB v KKR

கடைசிக்கட்டத்தில், ரஸல் மட்டுமே நின்று கொஞ்சம் பயமுறுத்தினார். சஹால் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகளை அடித்து 20 ரன்களைச் சேர்த்தார். கடைசி 2 ஓவர்களில் 44 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ரஸல் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் சிராஜ் 19வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் வைடு யார்க்கர்களாக வீசி ரஸலை பெரிய ஷாட்டே ஆட விடாமல் அட்டகாசமாகக் கட்டுப்படுத்தினார் சிராஜ். 19வது ஓவரில் ரஸலுக்கு 5 டாட் பால்களை வீசி வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸிங்கின் போது சிறப்பாக வீசப்பட்ட 19வது ஓவர்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இந்த ஓவரிலேயே தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில், 20வது ஓவரின் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியும் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

IPL 2021: இதோ புதிய RCB உருவாகிறது - சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

கொல்கத்தா அணி தனது பந்துவீச்சை சிறப்பாகவே தொடங்கியிருந்தது. ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தியது. ஆனால், இதன்பிறகு மேக்ஸ்வெல் விஷயத்தில்தான் சொதப்பிவிட்டது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தியை தொடர்ந்து வீச வைக்காமல் ஒரே ஓவரோடு கட் செய்தார் மோர்கன். வருணை டிவில்லியர்ஸ்க்கு எதிராக வீச வைக்க வேண்டும் என்பதே மோர்கனின் ப்ளான். டிவில்லியர்ஸ் லெக் ஸ்பின்னர்கள் வீசும் கூக்ளிக்கு எதிராக திணறுவார். கடந்த போட்டியில் கூட ரஷித்கானின் ஒரு கூக்ளியில்தான் டிவில்லியர்ஸ் வீழ்ந்திருப்பார். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் வருணின் ஓவர்களை டிவில்லியர்ஸுக்காக சேவ் செய்து வைத்தார் மோர்கன்.

RCB v KKR
RCB v KKR

ஆனால், எலி வாலை விட்டு புலி வாலை பிடித்த கதையாக மேக்ஸ்வெல்லுக்கு இந்த ப்ளான் வசதியாக அமைந்துவிட்டது. விக்கெட் டேக்கராக இருந்த வருண் வீசாததால் சிரமமேயின்றி மேக்ஸ்செல் செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு, வருணை அழைத்து வந்தபோதும் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போனது. மோர்கன் சறுக்கிய இந்த இடம்தான் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸின் அதிரடி இன்னிங்ஸ்களுக்கு காரணமாக அமைந்தது.

ஆர்சிபி ரசிகர்களின் இத்தனை வருட கனவுகள் இப்போதுதான் படிப்படியாக நனவாகத் தொடங்கியிருக்கின்றன.

மேக்ஸ்வெல் ஆரஞ்சு கேப்பை வைத்திருக்கிறார். ஹர்ஷல் படேல் பர்ப்பிள் கேப்பை வைத்திருக்கிறார். ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதை விட வேற என்ன வேணும்?! பண்டிகைய கொண்டாடுங்க கோலியன்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு