Published:Updated:

SRH v RCB: திஸ் ஹர்ட்ஸ் ~ வார்னர்; ஐ எம் வெரி ஹேப்பி ~ மேக்ஸி... ஆர்சிபி ஆன் டாப்!

கார்த்தி

ஆகாய கேப்டன்ஸி, அசகாய கேப்டன்ஸி என டக் அவுட்டில் எக்ஸ்பெர்ட்டுகள் கோலியை புகழ்ந்து தள்ளினர். எல்லா விக்கெட்டையும் மென்று விழுங்கி கமுக்கமாக சிரித்துக்கொண்டிருந்தது சென்னை மைதானம்.

முதல் போட்டியில் கொல்கத்தாவுடன் தோற்ற ஐதராபாத், முதல் போட்டியிலேயே இமாலய மும்பையை வென்ற பெங்களூரு இரண்டும் மோதிக்கொண்ட தினம் இன்று. டாஸ் வென்றால் பேட்டிங் என்றார்கள் எக்ஸ்பெர்ட்டுகள். சென்னை மைதானத்தில் கடைசி ஓவர்கள் ரத்தகாவு எல்லாம் வாங்குமே என்ன செய்யலாம் என எக்ஸ்பெர்ட்டுகள் யோசிக்கவில்லை. டாஸ் ஜெயித்த வார்னரும் யோசிக்கவில்லை. எக்ஸ்பெர்ட்டுகள் சொற்படி, டாஸ் வென்று பேட்டிங் என்றார் வார்னர். நபி, சந்தீப் ஷர்மா பதிலாக ஜேசன் ஹோல்டரும், சபாஷ் நதீமும் விளையாடினார்கள்.
SRH v RCB
SRH v RCB

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட படிக்கல், விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தாலும், படிக்கலுக்கு இன்னும் பேட்டிங் சரியாக கைவரவில்லை. புவி வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் நதீமிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் 41 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு. கோலி 19 ரன்களுடனும், சபாஷ் அஹமத் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஏற்கெனவே நதீமின் முந்தையை ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்திருந்த அஹமது, மீண்டும் ஒருமுறை தூக்கியடிக்க, ரஷீத் அதை அபாரமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். கடந்த போட்டியில் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் ஆடிய மேக்ஸி மீண்டும் களமிறங்கினார். முதல் பத்து ஓவர்களில் பெரிய அளவிலான ரன்கள் இல்லை.

SRH v RCB
SRH v RCB

'நான் இருக்கிறேன்' என மீண்டும் பந்துவீச வந்தார் நதீம். நதீம் எந்த அணிக்கு விளையாடுகிறாரோ எதிரணி எப்போதும் குஷியாகிவிடும். அது இன்றும் நடந்தது. மேக்ஸி டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ். கவர் திசையில் ஒரு பவுண்டரி, மீண்டும் டீப் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் என பீஸ்ட் மோடுக்கு ஸ்விட்ச் ஆனார் மேக்ஸி. சிங்கிள் அடித்து, கோலியை அழைக்க, கோலியும் ஒரு பவுண்டரி. முதல் பெரிய ஓவர், 22 ரன்கள். அடுத்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நட்டி கட்டுக்குள் கொண்டு வந்தார். கோலி மீண்டும் சிக்ஸுக்கு ஆசைப்பட்டு ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு ரன்னில் ஏபிடியையும் காலி செய்தார் ரஷீத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹிட்டர் கிறிஸ்டியனுக்கு முன்பாக வாஷிங்டன் சுந்தரை பேட்டிங் செய்ய அனுப்பினார் கோலி. ட்விஸ்டாம்! 11 பந்துகளை வீணடித்துவிட்டு ரஷீத்திடம் விக்கெட்டை இழந்து கிளம்பினார் வஷி. அடுத்து நட்டு ஓவரில் ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட்டானார் கிறிஸ்டியன். உலகெங்கிலும் விளையாடும் டி20 போட்டிகளில் கிறிஸ்டியனின் ஸ்டிரைக் ரேட் 160க்கு மேல். ஆனால், பெங்களூருவுக்கு விளையாடும் போது மட்டும் இஞ்சின் சீஸ் ஆன பழைய லாரி போல் ஆகிவிடுகிறது. 15 கோடி ரூபாய்க்கு எடுத்ததற்கு, புவி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார் பௌலர் ஜெய்மிசன்.

SRH v RCB
SRH v RCB

150 ரன்கள் கூட எட்டமுடியாத நிலையில் தத்தளித்தது பெங்களூரு. வந்தார் ஜேசன் ஹோல்டர். மூன்று ஒய்டுகள், போட்டு 150 என்கிற இலக்கை அவர் அணிக்கு அளித்துச் சென்றார். மேக்ஸியும் அவர் பங்குக்கு 2016ல் இருந்து அடிக்க முடியாத அவரது அரை சதத்தையும் அடித்துவிட்டார். மேக்ஸ்வெல் அவ்வளவு பொறுப்புடன் 200 அடித்தாலே, அதை அப்படியே வாரி வழங்கும் பெங்களூரு எப்படி வெறும் 149 ரன்களை கட்டுப்படுத்தும் என்பதுதான் எல்லோரது கேள்வியாகவும் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில், 150க்கு குறைவான ஸ்கோரை பெங்களூரு டிஃபெண்டு செய்ததே இல்லை. சென்னையின் மேல் பாரத்தைப் போட்டு களமிறங்கியது பெங்களுரு.

வார்னரும், சாஹாவும் களமிறங்கினார்கள். முதல் ஓவரில் சாஹாவால் எதையும் பெரிதாக கனெக்ட் செய்ய முடியவில்லை. 'போதும்டா யப்பா' என 9 பந்துகள் பிடித்து ஒரு ரன்னில் அவுட்டானார் சாஹா. பவர் பிளேயில் ஐம்பது ரன்கள் என வலுவான நிலையில் இருந்து ஐதராபாத். அதிலும், ஜெய்மிசன் வீசிய நான்காவது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி என 17 ரன்கள் அடித்து நொறுக்கியது வார்னர், பாண்டே ஜோடி.

SRH v RCB
SRH v RCB

அப்படியே சிறுக சிறுக சேர்த்து போஸ்ட் ஆபீஸில் போடுவது போல் ரன்களைச் சேர்த்தனர் வார்னரும், மணிஷ் பாண்டேவும். 13வது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது ஐதராபாத். அரைசதம் கடந்த வார்னரை அவுட்டாக்கினார் ஜெய்மிசன். பேர்ஸ்டோ 12 பந்துகளுக்கு 12 ரன்களும், மணிஷ் பாண்டே 38 பந்துகளுக்கு 38 ரன்களும் எடுத்திருந்தனர். 24 பந்துகளில் 34 ரன்கள் தேவை. 'சோ ஈஸில, இதுல எப்படி தோற்க முடியும்?' என்பது போலத்தான் எல்லோரும் பார்த்தனர்.

ஆனால், டெத் ஓவர்கள் ஸ்பெஷலிட்டான சென்னை மைதனாம் விழித்துக்கொண்டது. ஷபாஷ் அஹமதுக்கு இரண்டாவது ஓவர் வீச வாய்ப்புத் தந்தார் கோலி. ஜெய்மிசனுக்கு ஒரு ஓவரும், வஷிக்கு இரண்டு ஓவரும் மீதம் இருந்தன. எப்படியும் வஷிக்கு ஓவர் கொடுக்க மாட்டார் என்றாலும், சரி, என சபாஷ் அஹமது பந்து வீச வந்தார். வந்த வேகத்தில் பேர்ஸ்டோ அவுட். தூக்கியடித்து கீப்பர் ஏபிடியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பேர்ஸ்டோ. அடுத்த பந்தில் மணிஷ் பாண்டேவும் அவுட். 'இது அதுல்ல' என்பது போலத்தான் இருந்தது மைதானம்.

SRH v RCB
SRH v RCB

ஹர்ஷல் படேல், ரஸல் போலவே சபாஷ் அஹமதுக்கும் ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு இந்த சீசனில் இன்னும் அமையவில்லை. ஓவரின் கடைசி பந்தில் அப்துல் சமாதும் டக் அவுட். வித் அவுட்ல போலாம்னு வந்தவனுக்கு ஃபர்ஸ்ட் கிளாஸில் சீட் கிடைத்தது போல் துள்ளிக்குதித்தார் அஹமது. அதிலும் அப்துல் அடித்த பந்துக்கெல்லாம், யாரும் கிட்ட வராதீங்க என்பது போல் பந்தை அவரே பிடித்தார். ஆகாய கேப்டன்ஸி, அசகாய கேப்டன்ஸி என டக் அவுட்டில் எக்ஸ்பெர்ட்டுகள் கோலியை புகழ்ந்து தள்ளினர். எல்லா விக்கெட்டையும் மென்று விழுங்கி கமுக்கமாக சிரித்துக்கொண்டிருந்தது சென்னை மைதானம்.

அடுத்த ஹர்ஷல் பட்டேல் ஓவரில் விஜய் ஷங்கர் அவுட். சோகத்தின் விளிம்பில் உட்கார்ந்து இருந்தார் வார்னர். 54 ரன்கள் அடித்தவரல்லவா! கடைசி ஓவர் ஹர்ஷல் பட்டேலுக்கு வழங்கப்பட்டது. 16 ரன்கள் தேவை. ரஷீத் மட்டும்தான் பேட்டிங் தெரிந்த ஒரே பிளேயர். முதல் பால் புவி சிங்கிள். இரண்டாவது பால் ரஷித் இரண்டு ரன்கள். மூன்றாவது பந்தில் வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு ஃபுல் டாஸை எறிந்தார் ஹர்ஷல் பட்டேல். அதை பவுண்டரிக்கு ரஷீத் அனுப்ப, அது நோ பால் + ஃப்ரீ ஹிட் என்றார் அம்பயர்.

SRH v RCB
SRH v RCB

அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க ஆசைப்பட, மீண்டும் வேகமாக ஓடி வந்தார் ரஷீத். கூலாக ரன் அவுட் செய்தார் ஏபிடி. மீண்டும் ரஹீத் ஓடியதை ஜூம் செய்து பார்த்ததில், முதல் ரன்னையும் அவர் ஒழுங்காக ஓடவில்லை. அதனால், அந்த ரன்னும் கழிக்கப்பட்டது. அடுத்த பந்தில் நதீம் அவுட். அதற்கும், நதீம் அந்தப் பந்தை சிறப்பாகவே அடித்தார். தேர்ட் மேன் திசையிலிருந்து, பின்னோக்கி ஓடி பந்தை அசால்ட்டாகப் பிடித்தார் சபாஷ் அஹமது. 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஐதராபாத்.

திஸ் ஹர்ட்ஸ் என்றார் வார்னர். நேத்து இதைத்தான் ஷாருக்கும் சொன்னார் என்றது மைண்ட் வாய்ஸ்.

ஆட்டநாயகன் விருதை வென்றார் மேக்ஸி. இருந்தாலும் சபாஷ் அஹமதுக்கு கொடுத்திருக்கலாம். ஒருவேளை சபாஷ் கூட விரைவில் வாங்கிவிடுவார், மேக்ஸி மீண்டும் வாங்க ஆண்டுகள் பிடிக்கும் என விழாக்குழு நினைத்திருக்கலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு