Published:Updated:

RR v PBKS: சாம்சன் சென்சுரி... ஆனாலும் வெற்றிகரமான தோல்வியை ராஜஸ்தான் ஏன் சந்தித்தது?

RR v PBKS | சஞ்சு சாம்சன்

பஞ்சாப், ராஜஸ்தான் மோதல் இரண்டு கேப்டன்களின் மோதலாகி ராகுல், சஞ்சு இரண்டுபேரையும் ஃபுல் ஃபார்மோடு சீசனைத் தொடங்க வைத்திருக்கிறது.

RR v PBKS: சாம்சன் சென்சுரி... ஆனாலும் வெற்றிகரமான தோல்வியை ராஜஸ்தான் ஏன் சந்தித்தது?

பஞ்சாப், ராஜஸ்தான் மோதல் இரண்டு கேப்டன்களின் மோதலாகி ராகுல், சஞ்சு இரண்டுபேரையும் ஃபுல் ஃபார்மோடு சீசனைத் தொடங்க வைத்திருக்கிறது.

Published:Updated:
RR v PBKS | சஞ்சு சாம்சன்
கேஎல் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தாலும், ஹூடாவின் மெகாசைஸ் கேமியோவாலும் இமாலய இலக்கை நிர்ணயித்து பஞ்சாப் மிரட்ட, கடைசி நொடிவரை போராடி, வெற்றியின் விளிம்புவரை சென்று தோல்வியைத் தொட்டுள்ளது ராஜஸ்தான். எனினும், புள்ளிப் பட்டியலின் இரண்டு புள்ளிகளுக்கெல்லாம் ஈடாகாத ஒரு வாழ்நாள் ஆட்டத்தை ஆடிச் சென்றுள்ளார், சஞ்சு சாம்சன்.

‌பேட்ஸ்மேன்களுக்கு ரன்வரம் வழங்கும் வான்கடே ஸ்டேடியத்தில், புது கேப்டன் சாம்சனோடு ராஜஸ்தான் களம் காண, எதிர்பக்கம் பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிரீத்தியின் பதினோரு பருத்திவீரர்களும் புதுப்பொலிவுடன் களமிறங்கினர். சமீபத்தில் நடந்துமுடிந்த சிஎஸ்கே டெல்லி போட்டியோடு, கெயிலின் முகமும் நினைவில் வந்துபோக, 200+ ரன்கள் இருபக்கமும் உறுதியென்ற உற்சாகத்தோடே தொடங்கியது போட்டி. டாஸை வென்று சேஸ்செய்து கொள்கிறோம் என்றார் சாம்சன்.

RR v PBKS | சகாரியா
RR v PBKS | சகாரியா

ஓப்பனர்களாக, கேஎல் ராகுலும் மயாங்க்கும் இறங்கினர். சயத்முஷ்தாக் தொடரில் அசத்தலாகப் பந்து வீசி, பவர்ப்ளே ஓவர்களில் ஃபயர்பவர் காட்டிய சகாரியாவை வைத்துப் பந்துவீச்சைத் தொடங்கினார், சாம்சன். எதிரணிக்குப் பழக்கமில்லாத, ஒரு புது பௌலரோடு ஓப்பனர்களை அட்டாக் செய்தது, சாம்சனின் ஸ்மார்ட் மூவாகவே பார்க்கப்பட்டது. பத்து ரன்களோடு தனது ஓவரைத் தொடங்கினார் சகாரியா.

இரண்டாவது ஓவரை, முஸ்தாபிசுரை வைத்து சாம்சன் தொடர, அவர் வீசிய இரண்டாவது பந்தே இன்ஸ்விங்காகி, பேட்ஸ்மேனின் பேடைப் பதம் பார்த்தது. ராஜஸ்தான் ரிவ்யூக்குச் செல்லத்தவறியதால், தப்பிப் பிழைத்தார் மயாங்க். இருப்பினும் அதிர்ஷ்டம் அதிகநேரம் அவருடனில்லை. அதற்கடுத்த ஓவரிலேயே, அவுட்சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில், சகாரியா வீசிய பந்தை மயாங்க் அடிக்கமுயல, பந்து எட்ஜாகி கீப்பர்கேட்சாக, 14 ரன்களுடன் வெளியேறினார். கடந்த வருடத்தில் மிக வெற்றிகரமான கூட்டணியாக இருந்த இந்த இருவரணியைப் பிரித்ததன் மூலம், பஞ்சாபின்மேல், முதல் தாக்குதலை ராஜஸ்தான் நிகழ்த்தியது. 2017-ம் ஆண்டு ஐபிஎல்லுக்குப்பிறகு ஒரு லெஃப்ட் ஆர்ம் ஃபாஸ்ட் பௌலர் மயாங்க்கின் விக்கெட்டை வீழ்த்தியது இதுவே முதல்முறை.

அடுத்ததாக யுனிவர்சல் பிக்பாஸ் கெயில் களமிறங்க, எத்தனை பந்து இன்று பூமியைத் தாண்டி வெளியே பறக்கப் போகிறதோ, என அணிப்பாகுபாடின்றி, ரசிகர்களின் கண்களில் நட்சத்திரம் மின்னியது‌. ஐபிஎல்லில் மூன்றுமுறை மோரீஸால் கெய்ல் ஆட்டமிழந்தார் என்பதால் அவரைக்கொண்டே கெயில் புயலைத் தாக்கினார் சாம்சன். ஒருபக்கம் மிகநிதானமாக ராகுல் ஆட, மறுபுறம் கெயிலும் சந்தித்த முதல் 14 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்திருக்க, பவர்ப்ளே முடிவில், 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப்.

மூன்று ஓவர்கள் நின்றுவிட்ட இந்தக் கூட்டணி, இனியும் தொடர்ந்தால், நிலைமை படுமோசமாகி விடுமென்பதால், கேஎல் ராகுலின் பலவீனமான லெக் ஸ்பின்னைக் கொண்டு அவருக்கு வலைபின்னினார் சாம்சன். ஆனால், அது கெயிலுக்குச் சாதகமாக, ஸ்ரேயாஸ் கோபால், திவேதியாவின் பந்துகளையும் பறக்கவிட்டார். அந்த இரு ஓவர்களிலும் சேர்த்து 18 ரன்களை விளாசி, நடுவில் வந்த ஸ்டோக்ஸ் பந்துகளையும் ஒரு கை பார்க்க, பத்தை நெருங்கியது ரன்ரேட்! இரு கேட்ச்களை டிராப் செய்திருந்த ராஜஸ்தான், அதற்கான விலையைக் கொடுத்தது‌.

RR v PBKS | கிறிஸ் கெயில்
RR v PBKS | கிறிஸ் கெயில்

லெக் ஸ்பின்னரால் முடியாததை ஆஃப் ஸ்பின்னராவது முடித்துக் காட்டுவார் என பராக்கை சாம்சன் கொண்டுவர, 40 ரன்களைத் தொட்டிருந்த கெயிலின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். 143 ஸ்ட்ரைக் ரேட்டோடு வேண்டிய சேதாரத்தைச் செய்துவிட்ட திருப்தியில் கெயில் வெளியேறினார். புயலடித்து ஓய்ந்ததென மகிழ்ந்தவர்களுக்குத் தெரியவில்லை வருவது சூறாவளி என்று. ஹூடா இறங்கினார்.

வேகப்பந்து சுழல்பந்தென்ற பாகுபாடின்றி சகலவிதப் பந்துகளையும் இலகுவாக எதிர்கொண்ட ராகுல், சந்தித்த 30-வது பந்தை சிக்ஸருக்குத்தூக்கி, அரைச்சதம் கடந்து அசத்தினார்.

மறுமுனையில், கெயில் மிதவேகத்தில் எடுத்துச் சென்ற போட்டியை அதிவேகத்தில் மாற்றத் தொடங்கினார் ஹூடா. ஷிவம் துபேயின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களைத் தூக்கிய ஹூடா, அடுத்ததாக கோபாலின் ஒரே ஓவரில், மூன்று சிக்ஸர்களையும் தூக்கி, லைவ்கம்பியாக, மின்சாரத்தைப் பாய்ச்சினார். ரன்ரேட் 11ஐ நெருங்கியது. 40 ரன்களை எடுத்திருந்த ஹூடாவின் கேட்சை பட்லர் தவறவிட்டு கடைசி வாய்ப்பையும் நழுவவிட்டார். சுழலுக்கு விடைகொடுத்த சாம்சன் வேகப்பந்துவீச்சைத் திரும்பக் கொண்டுவந்தார்.

முஸ்தாபிசுரோடு, டெத்ஓவருக்காக ரிசர்வில் வைத்திருந்த க்றிஸ் மோரிஸைக் கொண்டுவந்தார். கொஞ்சமும் அசராமல், 20 பந்துகளிலேயே, ஆறு சிக்ஸர்களோடு, அரைசதத்தைத் தொட்டார் ஹூடா. சகாரியா வந்தும் எடுபடவில்லை. 45 பந்துகளிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்தப் பார்ட்னர்ஷிப். ஒருவழியாக ஹூடாவின் விக்கெட்டை மோரிஸ் வீழ்த்த, அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது. பூரானுக்குமுன் சர்ப்பிரைஸாக இறக்கப்பட்ட ஹூடா, ராஜஸ்தானுக்கு ஷாக் பிரைஸைக் கொடுத்துவிட்டார். அதுவும் மோரிஸ் பந்தில் அவரடித்த 'நோ லுக் சிக்ஸ்' அனல்பறக்க வைத்தது.

RR v PBKS | ராகுல், ஹூடா
RR v PBKS | ராகுல், ஹூடா

கடந்த காலங்களில், ராஜஸ்தானின் முக்கிய பலவீனமான, டெத்ஓவர்களில் ரன்ரேட்டை ராக்கெட்டில் அனுப்புவதை, இன்று போட்டி முழுவதிலும் செய்ய, ரன் வேட்டையாடிய பஞ்சாப், 200 ரன்களைக் குவித்தது. இதன்பின் உள்ளேவந்த பூரணையும், சகாரியா பிடித்த அற்புதகேட்ச் மூலமாக, மோரிஸ் கோல்டன் டக்காக்கி வெளியேற்றினார்.

ஷாருக்கான் உள்ளேவர, ரன்களும் ஏறிக்கொண்டே இருந்தது. கடைசிஓவரை வீசவந்த சகாரியா, பவுண்டரியோடு தொடங்கினாலும், அடுத்த பந்திலேயே 91 ரன்களிலிருந்த ராகுலை வெளியேற்றினார். முதலில் பொறுமையாக ஆடிய ராகுல் பின்னர் டாப் கியரில் சென்று, கடைசியாகச் சந்தித்த 27 பந்துகளில் 56 ரன்களைக் குவித்தார். சகாரியா, அதற்கடுத்த நான்கு பந்துகளையும் அசத்தலாக வீசி, ஒரு ரன் மட்டுமே கொடுத்து, ரிச்சர்ட்சனின் விக்கெட்டையும் கடைசிப்பந்தில் வீழ்த்த, 221 ரன்களோடு முடித்தது பஞ்சாப். ராஜஸ்தானின் பௌலிங் யூனிட்டின் பலவீனத்தைப் படம்போட்டுக் காட்டியதோடு, ஆர்ச்சர் இல்லா வெற்றிடத்தின் விளைவாகவும் இது இருந்தது.

ராகுல் | RR v PBKS
ராகுல் | RR v PBKS

221 ரன்கள் பஞ்சாப்புக்கான வெற்றிக்குரிய எண்ணாய்ப் பார்க்கப்பட்டாலும், கடந்த வருடம், அவர்கள் வைத்த 222 ஸ்கோரையே ராஜஸ்தான் எட்டியதென்ற விஷயம் போட்டியை சுவாரஸ்யமாக்கியது. மறுபக்கம், கடைசியாக எட்டுமுறை 200+ ரன்களைச் சேஸ்செய்த சந்தர்ப்பங்களில், இரண்டில் மட்டுமே ராஜஸ்தான் வென்றுள்ளது என்ற புள்ளிவிபரம் பயமுறுத்தியது.

அதிர்ச்சித் தொடக்கமாக, வோஹ்ராவோடு ஓப்பனிங் இறங்கிய ஸ்டோக்ஸை ஷமி காட் அண்ட் பௌலில் வெளியேற்ற, சாம்சன் உள்ளே வந்தார். ரிச்சர்ட்சனின் ஓவரில், ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடித்த வோஹ்ரா அந்த ஓவரின் கடைசிப்பந்தில் தந்த கேட்ச் வாய்ப்பை முருகன் அஷ்வின் தவறவிட்டார். கேம் சேஞ்சிங் மொமண்டாக இதுமாற வாயப்பிருக்கிறதென்ற எண்ணம்வர, வோஹ்ராவை காட் அண்ட் பௌலில் வெளியேற்றி, அர்ஷ்தீப்சிங் அசத்த, 25 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது ராஜஸ்தான்.

விக்கெட் விழுந்தாலும் அசரவில்லை புதிதாக இணைந்த சாம்சன் - பட்லர் கூட்டணி. குறிப்பாக மிரிடித்தின் ஓவரில், பட்லர் வரிசையாக நான்கு பவுண்டரிகளைப் பறக்கவிட, பவர்ப்ளே ஓவர்களில் 59 ரன்களை எட்டியது ராஜஸ்தான். இதைத் தொடர்ந்து, அடுத்துவந்த அர்ஷ்தீப்பின் பந்துகளும் அடிவாங்க, ரிச்சர்ட்சனை மறுபடி கொண்டுவந்தார் ராகுல். மணிக்கு 145+ கிமீ வேகத்தில் பந்துவீசும் ராட்சசன் ரிச்சர்ட்சன், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மணிக்கு 105 கிமீ வேகத்தில் வீச, ஸ்லோபால் பொறியில் சிக்கினார் பட்லர். பந்து ஸ்டெம்பைத் தகர்க்க, 25 ரன்களோடு பட்லர் வெளியேறினார்.

ரிச்சர்ட்சன், பட்லர் | RR v PBKS
ரிச்சர்ட்சன், பட்லர் | RR v PBKS

முதல் ஓவரை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுத்துக் கொண்ட ரிச்சர்ட்சன், இரண்டாவது ஓவரிலேயே, ஆபத்தான பட்லரை வெளியேற்றினார். எனினும், அந்தக் கட்டத்திலும், அணியின் ஸ்கோர் 70 ஆகவும், ரன்ரேட் கிட்டத்தட்ட, 10ஆகவும் இருந்ததால், போட்டியின்போக்கு எப்படியும் மாறலாம் என்றே சென்றது. எனினும் அதுவரை கிட்டத்தட்ட ஆறு கேட்ச்களைக் கோட்டைவிட்டது பஞ்சாப் தரப்பு. இதில் இரண்டு கேட்ச்கள் சாம்சனுக்குரியது.

சாம்சனோ, அச்சத்தின் அரிச்சுவடியே அறியாததைப்போல் ஆடிக்கொண்டிருந்தார். குறிப்பாக, மிரிடித்தின் ஓவரைச் சிறப்பாகக் கவனிக்க, அவரது ஓவரிலேயே பவுண்டரியுடன், அரைசதம் 33 பந்துகளில் வந்துசேர்ந்தது. அதற்கடுத்த பந்திலேயே சாம்சன் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்ததாகச் சொல்லப்பட, நானோநொடி கூடத்தாமதிக்காது, தன்னம்பிக்கையோடு ரிவ்யூக்குப்போய், அதில் வெல்லவும் செய்தார். மறுபுறம் சிவம் துபே கேப்டனுக்கு சப்போர்ட்டிங் ரோலைச் சிறப்பாக செய்துகொண்டிருக்க, அவரை, 23 ரன்களுடன் பவுண்டரி லைனில் ஹூடா பிடித்த கேட்சால், அர்ஷ்தீப் வெளியேற்ற, பராக் உள்ளே வந்தார்.

RR v PBKS
RR v PBKS

இந்தக் கூட்டணி, ஓவருக்கு ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடித்ததன் மூலமாக, ரன்ரேட் வீழ்ச்சியடையாமல் பார்த்துக்கொண்டு போட்டியை உயிரோட்டத்தோடு வைத்துக் கொண்டது. குறிப்பாக முருகன் அஷ்வினின் ஓவரில் மூன்று சிக்ஸர்களைத் தூக்கி, இலக்கை நெருங்கத் தொடங்கியதோடு, 19 பந்துகளில் அரைசதமடித்தது இவர்களது பார்ட்னர்னர்ஷிப். இந்தக் கூட்டணியை உடைக்கும் எண்ணத்தில், சமியை ராகுல் உள்ளே கொண்டுவர, அவரது பந்தில் புல்ஷாட் ஆட முயன்று 11 பந்துகளில் 25 ரன்களைக் குவித்த பராக் வெளியேற திவேதியா உள்ளே வந்தார்.

விக்கெட் விழுந்தாலும், மும்பைபோல அடித்துக்கொண்டே இருந்தது ராஜஸ்தான். சாம்சன் 54 பந்துகளில் சதத்தைக் கடந்து, கேப்டன் நாக் ஆடிக் காட்டினார். ஐபிஎல்லில் இது அவருடைய மூன்றாவது சதமாகும். இறுதியில் இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என வந்து நின்றது ராஜஸ்தான். திவேதியாவின் விக்கெட் முதல் பந்திலேயே விழ, எட்டு ரன்களை மிரிடித்தின் ஓவரில் எடுத்தது ராஜஸ்தான்.

வெற்றிக்கு 13 ரன்கள் ராஜஸ்தானுக்குத் தேவையென்ற நிலையில் பந்துவீசவந்தார் அர்ஷ்தீப். முதல் பந்து டாட் பால். இங்குதான் தவறு செய்தார் சாம்சன் லெக் ஸ்டெம்பில் நின்று கொண்டிருந்த சாம்சன் 6வது ஸ்டெம்ப் லைனில் விசிய பந்தை அடிக்கத் தவற மேட்ச் மாறிய தருணம் இதான். இரண்டாவது பந்து சிங்கிளாக, ஸ்ட்ரைக் மோரீஸிடம் போனது. மூன்றாவது பந்தில் சிங்கிள், சாம்சன் ஆன் த ஸ்ட்ரைக் மறுபடியும். மூன்றே பந்துகள், தேவை 11 ரன்கள் என்ற நிலையில், சிக்ஸரைத் தூக்கினார் சாம்சன்.

சஞ்சு சாம்சன் | RR v PBKS
சஞ்சு சாம்சன் | RR v PBKS

இறுதியாக இரண்டே பந்துகள், ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில், ஐந்தாவது பந்தில், ஸ்ட்ரைக்கைத் தக்கவைத்துக் கொள்ள ரன் ஓடவில்லை சாம்சன். ஒரே பந்து, ஐந்து ரன்கள் தேவை, சிக்ஸரடித்தால் ராஜஸ்தானுக்கு வெற்றி, பவுண்டரி சூப்பர்ஓவருக்கு இட்டுச்செல்லும், மிச்ச ரன்கள் பஞ்சாப்புக்குச் சாதகமாகும் என்னும் நிலையில், ரசிகர்கள் இதயத்துடிப்பு எகிற, நகக்கண்கள் கடித்துத்துப்பப்பட, சந்தித்த கடைசிப்பந்தை சிக்ஸருக்குத் தூக்கி, பவுண்டரிலைனில் கேட்ச் கொடுத்து, சாம்சன் ஆட்டமிழக்க, தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப்.

ராஜஸ்தானுக்காக ஆடிய பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர், இன்று சாம்சன் அடித்ததுதான். ஐபிஎல்லில், கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஒரு வீரர் சதமடித்திருப்பது இதுவே முதல் முறை. பஞ்சாப்பின் வெற்றியைப்பற்றி பேசுபவர்களைவிட, அதிகமானவர்களைத் தன்னைப்பற்றிப் பேச வைத்துட்டார் சாம்சன். அனைவரும் சமபங்காற்றி, கடைசிப்பந்து வரை போராடித் தோற்ற இது, ராஜஸ்தானுக்கு ஒரு வெற்றிகரமான தோல்விதான்.