Published:Updated:

ராஜஸ்தான் ராயல்ஸ் சூப்பர் டீம்தான்... ஆனால், ஏன் முதல் சீசனோடு மயங்கிவிட்டார்கள்? LEAGUE லீக்ஸ் - 2

#RR | ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தானைப் பொறுத்தவரை, அவசரத்தேவையாக இருப்பது, ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரே! ஆர்ச்சருக்குப் பக்கபலமாக இருக்க பும்ரா, புவ்னேஷ்வர் போன்ற ஒரு வீரருக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறது ராஜஸ்தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சூப்பர் டீம்தான்... ஆனால், ஏன் முதல் சீசனோடு மயங்கிவிட்டார்கள்? LEAGUE லீக்ஸ் - 2

ராஜஸ்தானைப் பொறுத்தவரை, அவசரத்தேவையாக இருப்பது, ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரே! ஆர்ச்சருக்குப் பக்கபலமாக இருக்க பும்ரா, புவ்னேஷ்வர் போன்ற ஒரு வீரருக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறது ராஜஸ்தான்.

Published:Updated:
#RR | ராஜஸ்தான் ராயல்ஸ்

வார்னேயின் வார்ப்பாக வளர்க்கப்பட்ட ராஜஸ்தான், இளைஞர்களை இறக்குமதி செய்து அப்டேட்டட் வெர்சன்களாக அவர்களை இந்திய அணிக்கே அனுப்பி வைக்கும் பணியை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஆனாலும், சாம்பியன்களாக மகுடம்சூடி, முதல் சீசனை அமர்க்களமாக ஆரம்பித்த ராஜஸ்தானுக்கு, அதற்கடுத்த ஆண்டுகள் சறுக்குமரப் பயணமாகவே அமைந்து வருகின்றன. சென்ற வருடம் புள்ளிப் பட்டியலின் தரையைத் தொட்டதனால் அதிரடி மாற்றங்களை அணிக்குள் புகுத்தியுள்ளது அணி நிர்வாகம். ராஜஸ்தானின் பலம் என்ன, பலவீனங்கள் என்னென்ன?! மாற்றும் ஏற்றம் தருமா?! அலசுவோம்...

பலவீனம் - 1: அயல்நாட்டு வீரர்கள் ஆதிக்கம்

Jos Buttler | RR
Jos Buttler | RR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஷேன் வார்னேயில் தொடங்கி பட்லர் வரை, 'இங்கிலாந்து ஆஸ்திரேலிய ஏ' அணி என கேலி செய்யும் அளவிற்கு, அவர்களது ஆதிக்கம் மிகுதியாகவே இருந்து வருகிறது. அந்த வீரர்களே மொத்தப் போட்டியின் போக்கையும் நிர்ணயிப்பதாக இருப்பது ராஜஸ்தானுக்கு ஒரு பெரிய பின்னடைவு. கடந்த ஐபிஎல்லில், 14 போட்டிகளிலும் சேர்த்து, உதிரிகள் தவிர்த்து, மொத்தம், 2197 ரன்களை ராஜஸ்தான் எடுத்திருந்தது‌. இதில், 48 சதவிகிதம் ரன்கள் மட்டுமே, இந்திய வீரர்களின் பேட்டில் இருந்து வந்திருந்தன. மீதம் 52 சதவிகிதம் ரன்களை, அயல்நாட்டு வீரர்களே அடித்திருந்தனர். இதிலும் குறிப்பாக, தொடரில் பாதியில் இணைந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர். இவர்கள் இருவரும் எடுத்த ரன்களின் கூடுதல் 613. மொத்த அணியின் ஸ்கோரில் 30 சதவிகிதம் இது! மும்பையைப் போல், இந்தியத் திறமைகளை நம்பி இருக்காமல் வெளிநாட்டு வீரர்களின் தோளிலேயே பயணம் செய்வதுதான் அவர்களை எட்ட வேண்டிய இலக்கை நோக்கிச் செல்லவிடாமல் தடுக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பலவீனம் - 2: ஓப்பனிங் மற்றும் பேட்டிங் ஆர்டர் குழறுபடிகள்

ஓப்பனர்களாய் யாரை இறங்க வைப்பது என்ற குழப்பம், ராஜஸ்தானில் காலங்காலமாக இருந்து வருகிறது. மற்ற அணிகளைப் போல் இல்லாமல் போட்டிக்குப் போட்டி ஓப்பனர்களை மாற்றி, எதிரணியைக் குழப்புவதற்குப் பதில் தாங்களே குழம்பிப் போவதுதான் அவர்களது தனித்தன்மை. போன சீசனில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு ஓப்பனிங் காம்பினேஷன்களை முயன்றுப் பார்த்திருந்தது ராஜஸ்தான். பின்வரிசை வீரரான பட்லரைப் புதுப்பந்தைச் சந்திக்கச் செய்து சொதப்புவார்கள், ஸ்மித்தை ஒரு போட்டியில் ஓப்பனிங், ஒரு போட்டியில் ஒன்டவுன் இறக்கி, பரிட்சித்துப் பார்ப்பார்கள். டாம் கரணை திடீரென ஏழாவது இடத்தில் ஆட வைப்பார்கள், பின் ஒன்பதாவது வீரராக மாற்றுவார்கள். இப்படிப்பட்ட நிச்சயமற்றதன்மைக்கான விலையைத்தான் கடந்த சீசனில், ராஜஸ்தான் கொடுத்தது. ஒரு நிரந்தர அணியாக தங்களையே உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களால், எதிரணியை வீழ்த்தும் வியூகங்களை எப்படி வகுக்க முடியும்?

Ben Stokes | RR
Ben Stokes | RR

பலவீனம் - 3: ஆர்ச்சரே அபயம்!

போனமுறை ஒட்டுமொத்த ராஜஸ்தான் பௌலிங் சுமையையும், ஆர்ச்சரே தூக்கிச் சுமந்தார் என்றே சொல்ல வேண்டும். 14 போட்டிகளில், எதிரணியின் 65 விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீழ்த்தியிருந்தது. இதில் 20 விக்கெட்டுகளை ஆர்ச்சரே வீழ்த்தி இருந்தார் என்பது சொல்லும் ஆர்ச்சரின் ஆதிக்கத்தை! போன ஐபிஎல் தொடரில், ஆர்ச்சரின் எக்கானமி, 6.56, திவேதியாவுடையதோ, 7.09. இவர்களைத் தவிர்த்து மற்ற பௌலர்களில் கோபாலுடையது மட்டுமே, 9.6 க்குக் கீழ் (8.5 ஆக) இருந்தது. இவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்களின் எக்கானமியின் கூடுதலின் சராசரி, 11.34ஆக இருந்தது. எதிரணி இவர்களுக்கு எதிராக ரன்களை வாரிக் குவித்தனர். இதன் காரணமாகவே சென்ற சீசனில், 4 போட்டிகளில், 3-ல் ஸ்கோரை டிஃபெண்ட் செய்ய முடியாமல் மண்ணைக் கவ்வியது ராஜஸ்தான். இப்படி முழுமையாக ஒருவீரரை மட்டும் நம்பி இருப்பது, அணியைச் சாம்பியனாக உருவெடுக்கவிடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பலவீனம் - 4: டெத் ஓவர் குறைபாடுகள்

அச்சுறுத்தும் ஆர்ச்சராலேயே சரிசெய்ய முடியாத ஒன்று, அவர்களது டெத்ஓவர் பரிதாபங்கள். கடந்த ஐபிஎல்லில், டெத் ஓவரில் (16-20) ஆர்ச்சரின் எக்கானமி 10.08. மற்ற அத்தனை பௌலர்களின் எக்கானமி எல்லாம் 12ஐ தாண்டி பயமுறுத்தியது. ராஜஸ்தான் டிஃபெண்ட் செய்து தோற்ற போட்டிகளில், கிட்டத்தட்ட எல்லா முறையும் வெற்றி பெறுவதைப் போல் தொடங்கி பின்னர் தோல்வியோடு முடிந்திருந்தது.

பலவீனம் - 5: வேண்டும் வேண்டும் இந்திய வேகம்!

ராஜஸ்தானைப் பொறுத்தவரை, அவசரத்தேவையாக இருப்பது, ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரே! ஆர்ச்சருக்குப் பக்கபலமாக இருக்க பும்ரா, புவ்னேஷ்வர் போன்ற ஒரு வீரருக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறது ராஜஸ்தான். அதேபோல், ஸ்பின்னைப் பொறுத்தவரை, ஓர் உயர்தரமுள்ள வெளிநாட்டு வீரர் இல்லாததும் அவர்களுக்குக் குறையாகவே உள்ளது.

2021 சவால்கள்:

Chris Morris | RR
Chris Morris | RR

மோரிஸ் என்னும் மாயாவி:

ஸ்மித்தை வெளியேற்றி அதிர்ச்சி அளித்த ராஜஸ்தானுக்கு, அதன்மூலம், கணிசமான தொகை கைக்குள்வர, 37.85 கோடியை ஏலத்துக்காக வைத்திருந்தது. அதில், 16.25 கோடியை வாரி இறைத்து, கிறிஸ் மோரிஸ் என்னும் துருப்புச்சீட்டை வாங்கியுள்ளது ராஜஸ்தான். போன தொடரில், ஆர்சிபிக்காக, 9 போட்டிகளில், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த அவரது எக்கானமி 7.69 மட்டுமே. ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சுப் பிரச்னை, ஆர்ச்சருக்குத் தோள்கொடுத்து சரிசெய்வதுடன், கேமியோ ஆட்டங்கள் வாயிலாக, தனிஒருவனாக சில போட்டிகளையும் வென்று கொடுப்பார் என்பதால், இந்த விலைக்குத் தகுதியானவர்தான் அவர். அதே சமயம், மோரிஸுக்கும் காயங்களுக்குமான உறவு அனைவரும் அறிந்ததே. ஏற்கெனவே, காயமடைந்த ஆர்ச்சர், முதல் சில போட்டிகளில், பங்கேற்க மாட்டார் என்று சொல்லப்பட்டாலும், எப்போது திரும்புவார் என்பது ஊர்ஜிதமாகாத நிலையில், மாரீஸுக்குக் காயமேற்பட்டால், அது அணிக்கு பலத்த பின்னடைவாய் மாறிவிடும்.

சர்ப்ரைஸ் தருவாரா சாம்சன்?

இளமைத்துடிப்புள்ள தலைமை வேண்டுமென, சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி உயர்வு கொடுத்திருக்கிறது, ராஜஸ்தான். கேரள அணிக்கு டொமெஸ்டிக் போட்டிகளில் தலைமையேற்ற அனுபவம், கை கொடுக்கும் என்றாலும், ஐபிஎல் என்பது வேறொரு மேடை என்பதால், அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சென்றமுறை கே எல் ராகுல், சீசனின் தொடக்கத்தில், கேப்டனாகத் தடுமாறினாலும், அதன்பின் சிறப்பாகச் செயல்பட்டார். ஏற்கனவே, அணியுடன் ஆறு ஆண்டுகள் பயணித்து அவர்களது பல, பலவீனங்களை அறிந்துவைத்திருக்கும், அனுபவமும் கைகொடுக்குமென்பதால், சாம்சன் சிறப்பாகச் செயல்பட சாத்தியக்கூறுகள் அதிகம்‌.

Liam Livingstone | RR
Liam Livingstone | RR

வேகமெடுக்குமா வேகப்பந்து வீச்சு?!

வேகப்பந்துவீச்சை இன்னும் பலப்படுத்த முஸ்தஃபிஸுர் ரஹ்மானை, 1 கோடிக்கும், சௌராஷ்ட்ரா அணிக்காக ஆடிவரும் சேத்தன் சகாரியாவை 1.20 கோடிக்கும் வாங்கியுள்ளது ராஜஸ்தான். இதில் முஸ்தஃபிஸுர் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் அணியில் தான் இடம்பெற்றால், மே மாதத்தில், ஐபிஎல்லுக்கு விடைகொடுப்பேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டார். சகாரியா, சயத் முஸ்டாக் அலி தொடரில், 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருப்பதால், ஐபிஎல்லிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பலாம். இவர்களைத் தவிர்த்து, 2018-ம் ஆண்டின் பர்பிள் கேப்பை வாங்கியவரான ஆன்ட்ரூ டையும் அணியில் இருக்கிறார். அவரை போன சீசனில், ஒரு போட்டியில் மட்டுமே ஆட வைத்தது ராஜஸ்தான். மூன்று வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பாலிசியை, கொஞ்சம் விட்டுக்கொடுத்து, இரு வெளிநாட்டு பேட்ஸ்மென்களுடன், மோரிஸையும் டையையும் வைத்து ஆரம்பப் போட்டிகளை ராஜஸ்தான் முயன்றுப் பார்க்கலாம்‌.

பலம்பெறுமா லோயர் மிடில் ஆர்டர்?!

இதேபோல், லோயர் மிடில் ஆர்டரைச் சரிசெய்வதற்காக, சிவம் துபே 4.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபியில், சரியாகப் பயன்படுத்தத் தவறிய வாய்ப்பை, இந்தமுறை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பௌலிங்கிற்கு அவரைப் பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதில்லை என ராஜஸ்தான் அறிவித்திருக்கும் நிலையில், பின்வரிசை பேட்டிங்கில், அவரது பங்களிப்பு அதிகமாக எதிர்பார்க்கப்படுவது தெளிவாகிறது. மேலும், ராஜஸ்தான், பட்லர், ஸ்டோக்ஸை மட்டுமே முழுமையாக நம்பாமல், கடந்த ஐபிஎல்லில் வாய்ப்பளிக்கப்படாத மில்லரையும், புதிதாக வாங்கப்பட்டுள்ள டி20 ஸ்பெஷலிஸ்டான லிவிங்ஸ்டோனையும் போட்டிக்கொருவராய்ப் முயன்று பார்க்கலாம்.

முழுக்க முழுக்க ஸ்டார்ஸ்!

Rahul Tewatia | RR
Rahul Tewatia | RR

தற்போதைய ராஜஸ்தானின் பேட்டிங் லைன் அப், ஆர்ச்சர் இல்லாத நிலையில் கூட, எட்டாவது வீரர்வரை எட்டி நீள்கிறது. பௌலிங்கிற்கோ, ஆறு ஆஃப்ஷன்கள் கைவசமுள்ளன. மூன்று பேட்டிங் ஆல் ரவுண்டர்கள், மூன்று பௌலிங் ஆல் ரவுண்டர்கள், மூன்று விக்கெட் கீப்பர்கள் என எல்லாம் பொருந்தி அமைந்துள்ள அணியாகவே காணப்படுகிறது‌.

உத்தேச பிளேயிங் லெவன்

ஜெயஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், சிவம் துபே, திவேதியா, ரியான் பராக், கிறிஸ் மாரிஸ், ஆன்ட்ரூ டை/ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், தாகி/உனத்கட்

புதுக்களங்கள் கை கொடுக்குமா?!

ஜெய்ப்பூர் ராஜஸ்தானின் கோட்டை! கடந்த காலங்களில் நிறைய போட்டிகளை ஹோம் கிரவுண்டில் வைத்தே வென்றிருக்கிறது. இந்த முறை நியூட்ரல் மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பது அவர்களுக்குச் சற்று சவாலானதாகவே இருக்கும்.

சங்ககரா அணியின் டைரக்டராக்கப்பட்டது, சாம்சன் கேப்டனாக்கப்பட்டது, ஸ்மித் வெளியேற்றப்பட்டது, மோரிஸ் வாங்கப்பட்டது என எல்லாமே வெற்றிக்கான காய் நகர்வுகளாகவே பார்க்கப்பட்டு, புள்ளிகள் இணைக்கப்பட்டு, இடைவெளிகள் ஓரளவு நிரப்பப்பட்டுள்ளன. எனினும் நாளின் முடிவில், களச்செயல்பாடுதானே எல்லாவற்றையும்விட முக்கியம். எல்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில், "ஹல்லா போல்" சொல்லி, இரண்டாவது கோப்பையை இந்த வருடம் ராஜஸ்தான் தூக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism