Ipl-2021 banner
Published:Updated:

CSK v RR: மொயின் அலி மேஜிக்; திரும்பிய பக்கமெல்லாம் ஜட்டு... தோனிக்கு இது ஸ்வீட் 200! | IPL 2021

கார்த்தி
Jadeja
Jadeja ( IPL )

கடைசி கேட்ச்சை பிடித்த போது, ஜட்டு மொபைல் சைகை காட்டினார். அவர் எதிர்பார்த்தது போலவே அவருக்கு மொபைல் பரிசாக வழங்கப்பட்டது.

போன சீசனில் கடைசி இரண்டு இடங்களுக்குப் போட்டிப் போட்ட சென்னையும், ராஜஸ்தானும் மோதும் போட்டி. தோனியும் சரி, சஞ்சுவும் சரி எங்கள் டீமில் நாங்கள் முழு நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அதனால் அதே டீம் என்றனர். செயற்கையாக வரும் ரசிகர்களுக்கு ஒலிக்குப் பதிலாகச் சிறிது நேரம் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் ஒலிபரப்பட்டது. சஞ்சு டாஸ் வென்றதும் ஃபீல்டிங் என்றார்.
CSK v RR
CSK v RR

ருத்ராஜ் கெய்க்வாட்டும், டூப்ளெஸ்ஸியும் ஓப்பனிங் இறங்கினார்கள். உனத்கட் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகியிருக்க வேண்டியது. திவேதியாவின் மெத்தனத்தால் அந்த பந்து பவுண்டரி சென்றது. 16 பந்துகளில் 5 ரன்கள், 8 பந்துகளில் 5 ரன்கள் என முந்தைய போட்டிகளில் சறுக்கிய கெய்க்வாட்டுக்கு இந்தப் போட்டியிலும் மாற்றம் முன்னேற்றம் அமையவில்லை. 13 பந்துகளில் 10 பந்துகள் எடுத்த நிலையில் ஷிவம் டூபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆட்டத்தின் ஆரம்பத்தில் கெய்க்வாட் மேல் நம்பிக்கையுடன் பேசினார் தோனி. ஆனாலும் கெய்க்வாட்டால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. அடுத்த உனத்கட் ஓவரில் எல்லாவற்றுக்கும் சேர்த்து அடித்தார் டுப்ளெஸ்ஸி. ஷார்ட் ஃபைன் லெக்கில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸ் என அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தில் பராகிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டுப்ளெஸ்ஸி. பவர் பிளே இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்திருந்தது சென்னை.

மொயின் அலி மட்டும் ஓவருக்கு ஒரு சிக்ஸ், இல்லையேல் பவுண்டரியாவது அடிப்போம் என அடித்துக்கொண்டிருந்தார். அவரும் திவேதியா பந்தில் அவுட்டாக அடுத்துக் களமிறங்கினார் அம்பதி. விக்கெட் விழுந்தால் ரிவ்யூ கேட்கலாம், பந்து வீசும் போதே, இந்தப் பந்து ரிவ்யூவுக்கு போகுமே என்னும் அளவுக்கு சைடு வாக்காகப் பந்து வீசும் ரியான் பராக் பந்து வீச வந்தார். அம்பதி லாங் ஆஃப் பக்கம் ஒரு சிக்ஸ் அடிக்க, பராக் அவரின் ஃபேவரைட்டான லோ ஆர்ம் வீசினார். ஒய்டு என்றார் அம்பயர். ரெய்னா அவர் பங்குக்கு டீப் விக்கெட் திசையில் ஒரு இமாலய சிக்ஸ் அடித்தார். ஓவர் இறுதியில் 16 ரன்கள். அடுத்த திவேதியா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார் அம்பதி. அட பிட்ச் நல்லா இருக்கும் போலயே, யார் அவுட்டானாலும் தோனி இறங்கிடுவார்ல என்றது மைண்டு வாய்ஸ். போன மேட்ச் வின்னிங் ஷாட்டுக்கூட வரவில்லை என்பதால், மனதளவிலேயே அந்த எண்ணத்தை அழித்துவிட்டு, ஆட்டத்தைக் கவனித்தோம்.

CSK v RR
CSK v RR

சக்காரியா வீசிய பந்தில் அம்பதி அவுட். அதே ஓவரில் ரெய்னாவும் அவுட். 30 ரன்னைத் தாண்டினால், சிஎஸ்கே அணி நிர்வாகம் பெரிய அளவில் விசாரணை நடத்துவார்கள் போல. அந்த அளவுக்கு 30க்குள் அவுட்டாக வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர் சென்னையன்ஸ். டுப்ளெஸ்ஸிக்கு மட்டும் வார்னிங் கொடுத்திருப்பார்கள். தோனி உள்ளே வந்தார். 'பண்டிகைய கொண்டாடுங்களே' என்றனர் சென்னை ரசிகர்கள். திவேதியா ஓவரில் தோனியால் எந்தப் பந்தையும் பெரிதாக கனெக்ட் செய்ய முடியவில்லை. 'ஆனது ஆச்சு இன்னிக்கு ஒரு கை பார்த்துடுவோம்' எனக் கடைசி பந்தில் சிங்கிள் அடித்து, அடுத்த ஓவருக்கும் ஆயத்தமானார் தோனி. முஸ்தஃபிஸர் சிறப்பாகப் பந்துவீசினார் என்றாலும், தோனியால் ஏன் அடிக்க முடியவில்லை என்றுதான் மூளைக்குள் கேள்வி எழுந்தது. கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தில் முதல் பவுண்டரி அடித்தார் தோனி. பெரிய மனதோடு அந்த ஏரியாவில் ஃபீல்டர் யாரையும் செட் செய்யவில்லை சஞ்சு. சக்காரியா பந்தில் அடுத்த பவுண்டரி. அடேங்கப்பா! 'ரொம்ப நாள் கழிச்சு பெட்ரோமேக்ஸ் வாடகைக்குப் போகப்போகுது' என ஏகபோக குஷியாகினர் சென்னை ரசிகர்கள். 'அட இதுல எப்படிண்ணே எரியும்' என அடுத்த பந்திலேயே அவுட் ஆக்கினார் சக்காரியா. ரொம்பவே சுலபமான கேட்ச். தோனி வெறுமனே பேட்டைத்தான் சுழற்றிக்கொண்டு இருந்தார். அவர் இவ்வளவு நேரம் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம் எனப் பின்னர்தான் மூளைக்கு உறைத்தது.

அடுத்த வந்த வீரர்களும், கொள்கைக்குக் கட்டுப்பட்டு 30 ரன்களுக்குள் அடித்து அவுட்டாகினர். இறுதியாகச் சென்னை 188 ரன்கள் 9 விக்கெட் இழந்து, 189 என்கிற டார்கெட்டை செட் செய்தது. இதெல்லாம் கிறிஸ் மோரிஸுக்கே பத்தாதே, சரி வேடிக்கை பார்ப்போம், என அடுத்த இன்னிங்ஸுக்கு ஆயத்தமானார்கள்.
IPL 2021: மிஸ்டர் 360... ஏபி டிவில்லியர்ஸின் பேட்டிங்கில் எப்போதும் அனல் தெறிப்பது எப்படி?! #ABD

மனன் வோஹ்ராவும், பட்லரும் ஆளுக்கொரு பவுண்டரி அடித்து தீபக் சஹாரின் ஓவரை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தனர். சாம் கர்ரன் பந்தில் வோஹ்ரா டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார். ஜட்டு நீ போய் அங்க நில்லு என்பது போல், அந்த இடத்தில் ஜடேஜாவை அமர்த்தினார் தோனி. தோனி எதிர்பார்த்தது போலவே ஜட்டுவின் கைகளுக்கு லட்டு போல் கேட்ச் கொடுத்துவிட்டு நகர்ந்தார் வோஹ்ரா. இன்று ஜட்டு சாப்பிடப்போகும் எல்லாமே லட்டுதான் என அப்போது அவருக்குத் தெரிந்து இருக்காது. பட்லர் சஹார் பந்தில் ஒரு சிக்ஸ், பவுண்டரி என அடித்துக்கொண்டிருக்க, சாம் கர்ரன் பந்தில் ஒரு ரன்னுக்கு அவுட்டானார் கேப்டன் சஞ்சு. இந்த சீசனுக்கு அடிக்க வேண்டிய மொத்த ரன்னையும் முதல் போட்டியிலேயே அடித்துவிட்டதால், அடுத்தடுத்த போட்டிகளில் சிங்கிள் டிஜிட் மோடுக்கு வழக்கம் போல் மாறிவிட்டார் சஞ்சு.

பத்து ஓவர் இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் அடித்திருந்தது ராஜஸ்தான். ஜட்டு வீசிய நோ பாலில் பட்லர் சிக்ஸர் அடித்தாலும், ஃப்ரீ ஹிட் பாலில், பட்லரால் எதுவும் செய்யமுடியவில்லை. இதற்குப் பின்பு நடந்ததுதான் கொடுமை.

CSK v RR
CSK v RR

ஐம்பது ஓவர் விளையாடுவதாக நினைத்து, ரன் ரேட் பற்றி கிஞ்சித்தும் யோசிக்காமல் விக்கெட் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசிக்க ஆரம்பித்தது ராஜஸ்தான். பிரேவோவும் அவர் பங்குக்கு அடுத்த ஓவரில் நான்கு ஒய்டு வீசினார். ஆனாலும், ரன்கள் என்னவோ ம்ஹூம். ஜடேஜாவின் அடுத்த ஓவர் சிம்ப்ளி சூப்பர்ப். குட் லெந்த்தில் அட்டகாசமான ஒரு பந்து, லெக் சைடில் அதை அடிக்க முயன்ற பட்லர் ஸ்டம்புகளை மிஸ் செய்தார். அதே ஓவரில் கூடமாட ஒத்தாசைக்கு சிங்கிள் தட்டிக்கொண்டிருந்த ஷிவம் டூபேவும் அவுட். எல்பிடபிள்யூவுக்கு ரிவ்யூ கேட்டார் டூபே, ஆனாலும் நோ யூஸ்!

அடுத்து மொயின் அலியின் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார் மில்லர். டூபே போல் ரிவ்யூ எல்லாம் கேட்டு நேரத்தை வீணடிக்கவில்லை மில்லர். இன்னொன்று அம்பயர் அவுட் சொல்லிய பிறகு, அதை ஓவர்டர்ன் பண்ணும் அளவுக்கு அந்தப் பந்தில் எதுவுமே இல்லை. 'எப்படியும் ரிவ்யூ ரீட்டெய்ன் ஆகும், நாம பெவிலியன் போகணும்' என நடையைக் கட்டினார் மில்லர். ரியான் பராகும், திவேதியாவும் களத்திலிருந்தனர்.

CSK v RR
CSK v RR

'திவேதியா அன்னிக்கு அடிச்சார் தெரியும்ல?' எனப் பழம்பெருமை பேசிக்கொண்டிருக்க, மொயின் அலி பந்தில் விக்கெட்டை இழந்தார் பராக். டீப் மிட் விக்கெட் திசைக்குத் தூக்கி அடிக்க, அங்கிருந்த ஜட்டு அதை எளிதாக கேட்ச் பிடித்தார். 'பந்து சிக்ஸ் போயிருக்கும்ல' என நக்கல் வேறு அடித்தார். அதே ஓவரில் கிறிஸ் மோரிஸும் அவுட். இதுவும் ஜட்டு வசம்தான். 17 ஓவர் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான். தோனியின் ஃபீல்டர்கள் பெரிதாக எங்குமே நகரவில்லை. அவர்கள் நிற்கும் பக்கம் மட்டும் ராஜஸ்தான் வீரர்கள் பந்துகளை அனுப்பினர்.

அதிலும் 12ம் ஓவரிலிருந்து விழுந்த ஐந்து விக்கெட்களுமே ஸ்பின் சுழலுக்குப் பலியானவை. அனைத்துமே குட் லெந்த் பந்துகள். டக் அவுட்டில் இருந்த ஸ்காட் ஸ்டைரிஸ் அழகாகச் சொன்னார். ஸ்பின் பந்தை ஸ்பின் ஆவதற்கு முன்னர் அடிக்க வேண்டும், இல்லையெனில் ஸ்பின் ஆன பின் அடிக்க வேண்டும். வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், இதுதான் கதி என்று! அதை அப்படியே மெய்ப்பித்தது ராஜஸ்தான். மேட்சை இனி வெல்வது மிகவும் கடினம் எனத் தெரிந்த பின்னர் திவேதியா ஆசைக்கு இரண்டு சிக்ஸர் அடித்து அவுட்டானார். ஒவ்வொரு விக்கெட்டுக்கும் துள்ளிக் குதித்தது கிருஷ்ணப்ப கௌதம்தான். தாகூர் வீசிய கடைசி ஓவரில் ஜட்டுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் உனத்கட். 2.0 படத்தின் மைதானக் காட்சி போல், திரும்பிய பக்கமெல்லாம் நின்றுகொண்டிருந்தார் ஜட்டு. ராஜஸ்தானால் இறுதியில் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 45 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்டமாக வென்றது சென்னை.

ஆட்டநாயகனான மொயின் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தாலும் ஜட்டுவுக்குக் கொடுத்திருக்கலாம். கடைசி கேட்ச்சை பிடித்த போது, ஜட்டு மொபைல் சைகை காட்டினார். அவர் எதிர்பார்த்தது போலவே மொபைல் பரிசாக வழங்கப்பட்டது.

தனது ஆட்டம் குறித்து இறுதியில் தோனி பேசுகையில், "24 வயதிருக்கும்போதும் என்னால் நன்றாக ஆட முடியும் என்று கியாரன்டி கொடுத்தது இல்லை. கொடுக்கவும் முடியாது. 40 வயதிலும் அதேதான். ஆனால் அதே சமயம், இவருக்கு வயதாகிவிட்டது, ஃபிட்டாக இல்லை என்று என்னை யாரும் கைகாட்டி விட முடியாது என்பது எனக்குப் பெரிய பாசிட்டிவ்வான விஷயம். இன்றைய இளைஞர்களுடன் போட்டிப்போட வேண்டும். அவர்கள் வேகமானவர்கள். இது ஒரு ஆரோக்கியமான போட்டி!" என்றார்.

தனது பலம் பலவீனம் என்ன என்பதை தோனி தெரிந்து வைத்திருக்கிறார் என்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம். கேப்டனாக விளையாடும் 200வது போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்!
Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு