Published:Updated:

PBKS v CSK: `இதத்தான் இவ்ளோ நேரமா ஒட்டிகிட்டு இருந்தீங்களா!?' பஞ்சாபை காலி செய்த சிஎஸ்கே!

இந்த வெற்றியை விட சிஎஸ்கே வென்றவிதம்தான் ரொம்பவே முக்கியம். கடந்த சீசன் முழுக்க மிஸ்ஸான ஒரு எனர்ஜி சிஎஸ்கேவிடம் இந்தப் போட்டியில் வெளிப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வீரம் படத்தில் 'அண்ணன் கண்ணாடியெல்லாம் பார்க்குறாருடா' என விநாயகம் ப்ரதர்ஸ் அஜித்தை பார்த்து வியப்பதை போல, "டைரக்ட் ஹிட்லாம் அடிக்குறாங்கடா... சஹார் ஸ்விங்லாம் பன்றாருடா... இதெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு" என சிஎஸ்கே ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அதிசயமே வியந்து போகும் அதிசயமாக நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னை அணி மிகவும் சௌகரியமாக பழைய சிஎஸ்கேவாக ஆடி ஒரு போட்டியை வென்றிருக்கிறது.

கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 220+ ரன்களை வெளுத்தெடுத்திருந்தது. அப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் போட்டி அட்டவணையை புரட்டி பார்த்துவிட்டு பஞ்சாப் அடுத்த போட்டியில் சிஎஸ்கேக்கு எதிராக ஆடவிருக்கிறது என்றவுடன் 'ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு' மோடுக்கு சென்றிருந்தனர். ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் பயந்த அளவுக்கு பஞ்சாப் அணி டஃப் கொடுக்கவில்லை. ரொம்பவே சுலபமாக பஞ்சாப் அணியை பஞ்சராக்கிவிட்டது சிஎஸ்கே.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் டாஸை வென்று முதலில் பந்து வீசுவதையே அணிகள் விரும்பும். தோனியும் அதேயே விரும்பினார். தோனி விரும்பியதை போன்றே டாஸை வென்று பந்துவீச்சையே தேர்வு செய்தார்.

PBKS v CSK | IPL 2021
PBKS v CSK | IPL 2021

இம்ரான் தாஹீர் மற்றும் லுங்கி இங்கிடி இருவரையும் ப்ளேயிங் லெவனில் கொண்டு வர தோனி முயல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது வழக்கமான பாணியிலேயே ப்ளேயிங் லெவனை மாற்றாமல் கடந்த போட்டியில் ஆடிய அதே ப்ளேயிங் லெவனோடு களமிறங்கினார் தோனி.

இதே வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் தீபக் சஹாரால் ஸ்விங் செய்யவே முடியவில்லை. ஆனால், இன்று பஞ்சாபுக்கு எதிராக அநாயசமாக ஸ்விங் செய்தார். தோனியும் இரண்டு ஸ்லிப்களை வைத்து சஹாரின் ஸ்விங்குக்கு ஊக்கம் கொடுத்தார். சஹார் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே மயங்க் அகர்வாலை ஒரு அவுட் ஸ்விங்கரில் வீழ்த்தினார். மிடில் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு அட்டகாசமாக ஸ்விங் செய்து வெளியே எடுத்து ஸ்டம்பை தகர்த்தார்.

PBKS v CSK | IPL 2021
PBKS v CSK | IPL 2021

இதே ஸ்பெல்லின் அடுத்த ஓவரில் கெய்ல் ஒரு சிங்கிள் தட்டிவிட்டு ஓட, கவர்ஸ் திசையில் நின்ற ஜடேஜா அதை அட்டகாசமாக பிடித்து டைரக்ட் ஹிட்டாக ராகுலை ரன் அவுட் ஆக்கினார். பஞ்சாப் அணியின் ஓப்பனர்கள் இருவரையும் மூன்றாவது ஓவருக்குள் வீழ்த்தி சென்னை அணி மிரட்டியது. கே.எல்.ராகுலை வெளியேற்றிவிட்டாலும் கெய்ல் இன்னமும் க்ரீஸில் இருந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் கொஞ்சம் கிலியுடனேயே இருந்தனர்.

கெய்லுக்காக மொயீன் அலியை தோனி அழைத்து வருவார் என எதிர்பார்க்க, சர்ப்ரைஸாக சஹாரையே தொடர்ந்து வீச வைத்தார் தோனி. இந்த ஐடியாவுக்கு ஒன்றல்ல... இரண்டு லட்டுகள் சென்னை அணிக்கு சுலபமாக கிடைத்தது. சஹார் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை கெய்ல் பவுண்டரிக்கு முயற்சி செய்து தட்டிவிட பாயிண்ட்டில் நின்ற ஜடேஜா பாய்ந்து பிடித்து கெய்லை அவுட் ஆக்கினார். அடுத்து க்ரீஸுக்குள் வந்த நிக்கோலஸ் பூரனையும் இரண்டே பந்தில் வெளியேற்றினார் சஹார். முதல் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட்டாக வீசிவிட்டு இரண்டாவது பந்தை லெக் ஸ்டம்ப் லைனில் ஷார்ட்டாக வீசுவார் சஹார். அந்தப் பந்தில் பெரிய ஷாட் முயன்று தூக்கியடித்து ஃபைன் லெக்கில் ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார் பூரன்.

PBKS v CSK | IPL 2021
PBKS v CSK | IPL 2021

பவர்ப்ளேக்குள்ளாகவே பஞ்சாப் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் காலி. ஆனாலும், சஹாரை ஒரேடியாக 4 ஓவர்களை வீச வைத்துவிட தோனி முடிவு செய்தார். அந்த ஓவரிலும் தீபக் ஹூடாவின் விக்கெட்டை வீழ்த்தி கெத்து காட்டினார் தீபக் சஹார். முதல் 7 ஓவருக்குள்ளாகவே தனது 4 ஓவர் ஸ்பெல்லை முடித்திருந்தார் சஹார். இதில் மயங்க் அகர்வால், கெய்ல், பூரன், தீபக் ஹூடா என பஞ்சாபின் பேட்டிங் ஆர்டர் மொத்தத்தையுமே சிதைத்துவிட்டார். 4 ஓவரில் ஒரு மெய்டனோடு 18 டாட்களையும் வீசி தனது கரியரில் ஆகச்சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாக இந்த ஸ்பெல்லை முடித்தார் சஹார்.

பஞ்சாபின் கதை முடிந்தது என நினைக்கும் போது சிஎஸ்கேவின் தொப்புள் கொடி உறவான ஷாருக்கான் மட்டும் நிலைத்து நின்று ஒற்றை ஆளாக அந்த அணிக்காக போராடினார். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அடித்துவிட்டு மற்ற பந்துகளை பார்த்து நிதானமாக பொறுப்போடு ஆடினார் ஷாருக்கான். டெத் ஓவர்களில் ஷாருக்கானின் விக்கெட்டை எடுக்க முயலாமல் வைடு லைனில் வீசி அவருக்கு பவுண்டரி கொடுக்காமல் இருப்பதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியிருப்பார் ஷர்துல் தாகூர். பௌலரை இப்படி ஒரு தற்காப்பு மனநிலைக்கு தள்ளியதே ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றிதான்.

ஷாரூக்கான் | PBKS v CSK | IPL 2021
ஷாரூக்கான் | PBKS v CSK | IPL 2021

நன்றாக ஆடிக்கொண்டிருந்தவர் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கையில், சாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் சிக்சருக்கு முயன்று ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஷாருக்கான் 47 ரன்களை அடித்திருந்தார். இந்த 47 ரன்கள்தான் பஞ்சாப் அணி எதோ சொல்லிக்கொள்ளுமளவுக்கு மூன்று இலக்க ஸ்கோரை எட்ட உதவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'இதத்தான் இவ்ளோ நேரமா ஒட்டிகிட்டு இருந்தீங்களா' என பஞ்சாபின் பேட்டிங்குக்கு கொடுக்கப்பட்ட பில்டப்களையெல்லாம் பஞ்சு பஞ்சாக்கியது சிஎஸ்கே.

சிறிய டார்கெட்தானே சீக்கிரமே அடித்து முடித்தால் ரன்ரேட் உயரும். அது பிற்பகுதியில் ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிபெற உதவும் என கால்குலேட்டர் கணக்குகளில் சிஎஸ்கே ரசிகர்கள் மூழ்க, அதுதான் தவறான விஷயம் என சிஎஸ்கே கொஞ்சம் ட்விஸ்ட் கொடுக்க முயன்றது. முதல் 3 ஓவர்களில் பவுண்டரியே அடிக்காமல் கடுப்பேற்றியிருந்தது சிஎஸ்கே. அந்த நொடியில் 2020 சீசன் ஒரு நிமிடம் ஃப்ளாஷ் அடித்துவிட்டு சென்றது. ஆனால், ருத்ராஜ் கெய்க்வாட் அவுட் ஆனவுடன் கொஞ்சம் ஸ்கோர் கூட தொடங்கியது.

PBKS v CSK | IPL 2021
PBKS v CSK | IPL 2021

ருத்ராஜ் 16 பந்துகளை சந்தித்து 5 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். கடந்த போட்டியிலும் சொதப்பவே செய்தார். ஸ்பார்க் இல்லையென்று பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டால் ஒரு மாமாங்கத்துக்கு பென்ச்சிலேயேதான் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார் போலும்!

நம்பர் 3 இல் மொயீன் அலி களமிறங்கினார். கடந்த போட்டியில் வெளிக்காட்டிய அதே ஃபார்மை இங்கேயும் தொடர்ந்தார். டூ ப்ளெஸ்சிஸ்-மொயீன் அலி கூட்டணி ஏறக்குறைய டார்கெட்டை நெருங்கியிருந்த நிலையில் 'ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை ஈஸியாகவே ஜெயித்தால் என்ன கிக் இருக்கிறது?!' என்ற லாஜிக்படி மொயீன் அலி, ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடர்ந்து அவுட் ஆகி, தங்களால் முடிந்தவரை இந்தப் போட்டியை சுவாரஸ்யமாக்க முயன்றனர். கடைசியாக ஒரு வழியாக, மெரிடித்தின் ஓவரில் சுட்டிக்குழந்தையான சாம் கர்ரன் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வை முதல் வெற்றியை பெற வைத்தார்.

PBKS v CSK | IPL 2021
PBKS v CSK | IPL 2021
இந்த வெற்றியை விட சிஎஸ்கே வென்றவிதம்தான் ரொம்பவே முக்கியம். கடந்த சீசன் முழுக்க மிஸ்ஸான ஒரு எனர்ஜி சிஎஸ்கேவிடம் இந்தப் போட்டியில் வெளிப்பட்டது. 'இதுதாண்டா சிஎஸ்கே' எனக் கர்ஜனை செய்திருப்பது போல இருக்கிறது இந்த வெற்றி. இது அப்படியே தொடர வேண்டும் என்பதே யெல்லோ ஆர்மியின் விருப்பம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு