Published:Updated:

PBKS v MI: இது சாம்பியன் அணியா சாதா அணியா... மும்பையை ஜாலியாக வீழ்த்தி முன்னேறிய பஞ்சாப்!

PBKS v MI

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை முதல் ஆளாக தொடரை விட்டு நடையைக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் ஆடுவதைப் போல் ஆடி, மற்றொரு தோல்வியைப் பரிசாக பெற்றிருக்கிறது.

PBKS v MI: இது சாம்பியன் அணியா சாதா அணியா... மும்பையை ஜாலியாக வீழ்த்தி முன்னேறிய பஞ்சாப்!

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை முதல் ஆளாக தொடரை விட்டு நடையைக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் ஆடுவதைப் போல் ஆடி, மற்றொரு தோல்வியைப் பரிசாக பெற்றிருக்கிறது.

Published:Updated:
PBKS v MI
பாயிண்ட்ஸ் வரமளிக்கும் பஞ்சாப்பிடமிருந்து, இரண்டு புள்ளிகளை கபளீகரம் செய்யும் நோக்கோடு, மும்பை களமிறங்க, தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்தோடு, பஞ்சாப்பும் இறங்கியது.

மும்பைதான் வெல்லும், முன்னோக்கிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி, சுலபமாய்ப் பணிந்து, சாம்பியன் அணி, சராசரி அணி போல, பஞ்சாப்பிடம் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

சென்னையில் நடந்துள்ள போட்டிகளில், ஏழில், நான்கில் முதல் பேட்டிங் செய்த அணியே வென்றிருந்தாலும், பனியைக் கணக்கில் கொண்டு, டாஸ்வென்ற கேஎல் ராகுல் பந்துவீச முடிவுசெய்தார். ஹாட்ரிக் தோல்வி பஞ்சாப்பைப் பதறச் செய்து, பிளேயிங் லெவனில், பல்லாங்குழி ஆடச்செய்யும் என நினைத்தால், முருகன் அஸ்வினுக்குப் பதிலாக, கடந்தசீசனில், ஓரளவு நம்பிக்கையளித்த ரவி பிஷ்னாயை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். மும்பையோ, வழக்கம் மாறாமல், அதே பிளேயிங் லெவனோடே களமிறங்கியது.

PBKS v MI
PBKS v MI

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போன சீசனின், இரட்டை சூப்பர்ஓவர்கள் நினைவுக்குவர, அப்படியொரு இழுபறி இன்னிங்ஸுகளை எதிர்நோக்கியே போட்டி ஆரம்பித்தது.

டி காக்கோடு நாளைத் தொடங்கிய ரோஹித்துக்கு, ஹென்ரிக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே, பந்து லெக்சைடில் கேட்ச்ஆக, அம்பயர் அவுட் என அறிவிக்க, மூன்றாவது அம்பயரின் வக்காலத்தோடு, 'நாட்அவுட்' என நிரூபித்தார் ரோஹித். அடுத்த ஓவரை, ஹுடாவை வீச வைத்தார் ராகுல். பலனாக, ஆரம்பம் முதலே திணறிக் கொண்டிருந்த டி காக், ஆட்டமிழக்க, சூர்யக்குமாருக்கு முன்னதாக, இஷானை இறக்கியது மும்பை.

இந்தச் சமயத்தில், ரோஹித் அடித்த பந்து, ராகுலின் கைகளில் தஞ்சம்புக, ரிவ்யூ எடுக்கத் துணியாததால், ரோஹித்தை வெளியேற்றும் வாய்ப்பைக் கோட்டைவிட்டது பஞ்சாப். ரீப்ளேயில், பேட்டில் பந்துபட்ட ஒலி தெளிவாகக் கேட்க, "விக்கெட் போச்சே" என்றனர் பஞ்சாப் ரசிகர்கள். ஆனாலும் இந்தவொரு விக்கெட்டின் விலை, ஓர் அரைசதம் என்பது அப்போதைக்குப் புரியவில்லை பஞ்சாப் தரப்புக்கு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இஷான் ஆஃப் ஸ்பின்னுக்குத் திணறுவார் என்பது வரலாறு என்பதால், ஹுடாவையே தொடர்ந்து வீச வைத்தார், ராகுல். ஆனால், பந்துகளை வீணடித்துக் கொண்டிருந்த இஷான், ஆஃப் ஸ்பின்னில் விழுவார் என நினைத்தால், லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாயிடம் வீழ்ந்தார் அவர். ஏழு ஓவர்களில், 26/2 என முனங்கியது மும்பை. பவர்பிளே ரன்கள், "சென்னையில் சிஎஸ்கேயாக மாறிய மும்பை" என தலையங்கம் எழுதின.

லெஃப்ட்ஆர்ம் ஆஃப் ஸ்பின்னை எதிர்நோக்க ரோஹித் சமீபகாலமாகத் திணறிவருவதால், ஃபேபியன் ஆலனைக் கொண்டு அவரைத் தாக்கினார் ராகுல். ரோஹித்தோ, 'அதை மாற்றி எழுதவே இன்று வந்துள்ளேன்!' என்பது போல், இரண்டு பேக் டு பேக் பவுண்டரிகளோடு அவருக்கு நல்வரவு சொல்லி, 200 ஸ்ட்ரைக்ரேட்டோடு, அவரது பந்துகளை மட்டும் சிறப்பாக கவனித்தார். அவர் வீசிய ஃபுல்டாஸ் பாலையும், ஓவர் த டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸருக்கு அனுப்பிவைத்தார்.

PBKS v MI
PBKS v MI

இதன்பின் பஞ்சாப்பும் போராடிப்பார்த்தது, விக்கெட் விழவில்லை, மும்பையும் முட்டிமோதிப்பார்த்தது, ரன்கள் ஏறவில்லை. எனினும், ரோஹித் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடி, நாற்பது பந்துகளில் அரைசதத்தை அடைந்தார்.

14 ஓவர்களின் முடிவில், வெறும், 88 ரன்களை மட்டுமே மும்பை அடித்திருந்தாலும், கையிலுள்ள எட்டு விக்கெட்டுகள், டெத்ஓவர்களில், அவர்களை டெவில்களாக மாற்றும் என்பதை அறிந்திருந்தது பஞ்சாப். இருந்தும் ஷமி மீதுகூட வைக்காத நம்பிக்கையை, பிஷ்னாய் மீதுவைத்து, "களம் உனதே!" என அவரது கையில் பந்தை மறுபடியும் தந்தார் ராகுல். இம்முறை, செட்டில் ஆன குதூகலத்துடன், பெரிய ஷாட்டுகளுக்குப் போகத் தொடங்கிய சூர்யக்குமாரை, பிஷ்னாய் வெளியேற்றினார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடமுயன்று, கெய்லிடம் கேட்ச் கொடுத்து, 33 ரன்களோடு அவர் வெளியேற, பொல்லார்டு உள்ளே வந்தார்.

மறுபுறம் அடித்து ஆடும் மோடுக்கு மாறியிருந்த ரோஹித்தை, ஷமி, லோ ஃபுல்டாஸ் மூலமாக ஆசைகாட்டி, ஃபெபியனிடம் பவுண்டரிலைனில், கேட்ச் கொடுக்கச்செய்ய, இரண்டு பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து இழந்தது மும்பை. அதேபோல் அடுத்த பத்து ரன்களைத் சேர்ப்பதற்குள், ஹர்தீக் பாண்டியாவின் விக்கெட்டையும் இழந்துவிட்டது.

15 பந்துகளுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 17 ரன்களை மட்டுமே கொடுத்த பஞ்சாப் பௌலர்கள், போட்டியை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்தனர். ஷமி வீசிய கடைசி ஓவரிலும், பூரன் பிடித்த ஓர் அற்புதமான கேட்சால் க்ருணால் வெளியேறினார். கடைசி ஓவரில், 6 ரன்களை மட்டுமே கொடுத்து, 131 ரன்களடித்த மும்பையைச் சுருட்டி, சட்டைப்பையில் வைத்துக் கொண்டது பஞ்சாப்.

லெக்ஸ்பின்னர் மேட்ச் வின்னராக, கடைசி ஐந்து ஓவர்களில், 26 ரன்களை மட்டுமே கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பஞ்சாப்பின் பந்துவீச்சு மிகக் கட்டுக்கோப்பாக இருந்தது. மும்பையின் பக்கமோ, ரோஹித் மற்றும் சூர்யக்குமார் மட்டுமே நம்பிக்கை அளித்திருந்தனர்.

PBKS v MI
PBKS v MI

119 ரன்களை ஜிம்பாப்வேவே பாகிஸ்தானுக்கு எதிராக டிஃபெண்ட் செய்துவிட்டது. அதேபோல் 120 ரன்களையே, புனேவுக்கு எதிராக டிஃபெண்ட் செய்தவர்கள் இந்த டிஃபெண்டிங் சாம்பியன்கள். அதனால் எந்த ஸ்கோரையும் டிஃபெண்ட் செய்வார்கள் என்பதால், பஞ்சாப்புக்கு வெற்றி அவ்வளவு சுலபமாகக் கிட்டிவிடாது என்ற நம்பிக்கையோடே போட்டியைத் தொடர்ந்து பார்த்தனர் மும்பை ரசிகர்கள்.

ஆனால், அரங்கேறிய காட்சிகள் வேறு மாதிரியாக இருந்தன. போல்டின் முதல் ஓவரில் மட்டும் பணிந்த பஞ்சாப் ஓப்பனர்கள், க்ருணால் வீசிய இரண்டாவது ஓவரை நையப்புடைத்து, 15 எக்கானமியோடு அனுப்பி வைக்க, பௌலிங் மாற்றத்தை, போல்ட் மற்றும் பும்ராவை வைத்து நடத்திப் பார்த்தார் ரோஹித். எனினும் ரன்ரேட் எட்டைத் தாண்டி எகிற, ஆஃப் ஸ்பின்தானே நமக்கு ஆப்பானது, ஏன் லெக் ஸ்பின்னை பரிசோதிக்கக் கூடாதென, ராகுல் சஹாரைக் கொண்டு வந்தார். ரன்ரேட் மட்டுப்பட்டதே ஒழிய, விக்கெட் விழவில்லை. விக்கெட்டுகள் மட்டுமே வெற்றிக்கான சாவி என்பதால், சென்னை மண் கருணை காட்டும் என்னும் நம்பிக்கையில், க்ருணால் மற்றும் ராகுல் சஹாரை, இருபக்கமும் வீசவைத்தார் ரோஹித்.

கைமேல் பலனாக, 50-ஐ கடந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை, ராகுல் சஹார் முறித்துக்காட்ட, கெய்ல் வந்து ராகுலுடன் இணைந்தார். காட்டாறு கெய்லைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு ஜெயந்தையும் ரோஹித் கொண்டு வந்து, சுழல் பந்துகளின் மூலம் சுருட்ட நினைத்தார்.

ஓவர்கள் இருக்கின்றன, விக்கெட்டுகளும் இருக்கின்றன, என்பதால் நிதானமாக ஆடிய இவர்கள், ஸ்டரைக்கை மட்டும் சரியாக ரொட்டேட் செய்து, தவறான பந்துகளை மட்டும் பவுண்டரிகளாக்கிக் கொண்டிருந்தனர். பின் ஒருகட்டத்தில், ஜெயந்தின் ஓவரில், பேக் டு பேக் பவுண்டரியோடு, அதிரடி ஆயுதத்தைக் கையிலெடுத்தார் கெய்ல்.

மும்பை மொத்தமாகப் பணிந்து விட்டதாகவே தெரிந்தது. அவர்களிடம் வழக்கமாய் காணப்படும் இறுதிவரை போராடும் குணம் இன்று சற்றுமே இல்லாதது போலவே இருந்தது.

PBKS v MI
PBKS v MI

விக்கெட்டுகள் வீழாததால், ஒருபக்கமாகவே சென்று கொண்டிருந்த போட்டி, ஒரு சிட்டிகை சுவாரஸ்யம் கூட இல்லாமல் நகர்ந்தது. ஒருகட்டத்தில், "பஞ்சாப் கூட ஜெயிச்சுக்கட்டும், போட்டியை முடிச்சுவிடுங்கப்பா!" என மும்பை ரசிகர்களையே சொல்ல வைக்குமளவிற்குச் சென்று கொண்டிருந்தது.

போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் முக்கியமான கடைசி நான்கு ஓவர்களோடு, மும்பையின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டுகளான பும்ராவும், போல்டும் வந்து சேர்ந்தனர். கேஎல் ராகுலின் அரைசதமும் ஒருவழியாக வந்து சேர்ந்தது, 50 பந்துகளில்! பிட்சில் பாய் போட்டு படுத்துத் தூங்கிய போட்டியை, போல்ட் வீசிய பந்துகளில் அடித்த தலா ஒரு சிக்ஸர் மூலமாகத் தட்டி எழுப்பினர் கெய்லும் ராகுலும். இறுதியில், வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18-வது ஓவரின் நான்காவது பந்தையே, பவுண்டரிக்கு ராகுல் அனுப்ப, ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்.

புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருந்த பஞ்சாப், இந்த ஒரு வெற்றியின் மூலமாக, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, புள்ளிக் கணக்கில், நடப்புச் சாம்பியன் மும்பைக்குச் சமமாய் சம்மணமிட்டு அமர்ந்துள்ளது. மத்திய, பின்வரிசை வீரர்கள் மீண்டும் சொதப்பியதால், இன்னமும் 20 - 30 ரன்களைச் சேர்க்கத் தவறிய மும்பை, அதற்குரிய விலையாக, ஒரு தோல்வியைப் பெற்றுக் கொண்டதோடு, இரண்டு புள்ளிகளையும் விட்டுக் கொடுத்துள்ளது. மும்பைக்கு சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.