Published:Updated:

DC v KKR: கால்போன போக்கில் கரகாட்டம் ஆடிய கொல்கத்தா... ஒர்க்அவுட்டான பாண்டிங் - பண்ட் மேஜிக்!

டெல்லியின் புலிப்பாய்ச்சலுக்கு முன்பாக கொல்கத்தா பௌலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடைசியில் ஆறுதலாக பேட் கம்மின்ஸ் மட்டுமே மூன்று விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.

'கண்போன போக்கிலே கால் போகலாமா...mகால் போன போக்கிலே மனம் போகலாமா?' என ஒரு திட்டமிடலே இல்லாமல் ஆடிக்கொண்டிருக்கும் கொல்கத்தாவும், கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கேவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிபி மாத்திரைகளுக்கு டிமாண்ட் ஏற்றி விட்டுக்கொண்டிருக்கும் டெல்லி கேப்பிடல்ஸும் இன்று நேருக்கு நேர் மோதியுள்ளன. டெல்லிக்கு இரண்டு பாயிண்டுகளை கொடுத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு கொல்கத்தா ஆடியதால் டெல்லி கேப்பிடல்ஸ் சுலபமாக வெற்றியை பதிவு செய்துள்ளது.

தோனி பாணியில் பனியின் தாக்கத்தை காரணம் காட்டி டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார் பண்ட். காயம் காரணமாக அமித் மிஷ்ராவை பென்ச்சில் வைத்துவிட்டு லலித் யாதவை அணியில் சேர்த்திருந்தார்.

DC v KKR
DC v KKR

கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் அந்த ப்ளேயிங் லெவனை மாற்றாமல் அப்படியே ஆடப்போவதாக மோர்கன் அறிவித்தார். இந்தப் போட்டியில் மோர்கன் எடுத்த முதலும் கடைசியுமான நல்ல முடிவு இது மட்டுமே.

டெஸ்ட் மேட்ச் ஹேங் ஓவரிலிருந்து இன்னும் மீளாத சுப்மன் கில்லும் நிதிஷ் ராணாவுமே ஓப்பனர்களாகக் களமிறங்கினர். ரஞ்சி போட்டியில் பெங்கால் அணிக்கு ஓப்பனிங் இறங்குகிறோம் என இருவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல! நியுபால் சைனிங் போகிற வரை உருட்டிவிட்டு ரஸலிடம் ஆட்டத்தை ஒப்படைத்து விடுவோம் என்கிற மனநிலையிலேயே இருவரும் இருக்கின்றனர். நின்று நிதானமாக உருட்டுகிறார்கள் அல்லது வந்த வேகத்தில் நடையைக் கட்டிவிடுகிறார்கள். இன்றைய ஆட்டத்தில் ராணா வந்த வேகத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி வெளியேற, சுப்மன் கில் கண்ணுக்கு ஒயிட் பால் ரெட் பாலாகத் தெரிய தொடங்கிவிட்டது.

இஷாந்த் சர்மாவையும் ரபாடாவையும் வைத்தே ஓப்பனிங் ஸ்பெல்லைத் தொடங்கினார் பண்ட். இவர்கள் இருவரும் விக்கெட் எடுக்க தவறவே, சுதாரித்துக் கொண்டு உடனே அக்ஷர் படேலை அழைத்து வந்தார் பண்ட். இடக்கை பேட்ஸ்மேனுக்கு இடக்கை ஸ்பின்னர் என்றவுடன் குஷியான ராணா ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸரைப் பறக்கவிட்டார். அடுத்த பந்திலேயே இறங்கிவந்து சிக்ஸருக்கு முயல பண்ட் அற்புதமாக ஸ்டம்பிங் செய்து ராணாவை வெளியேற்றினார். ராணா இறங்கி வருவதைக் கணித்த அக்ஷர் படேல் ஒரு ஆர்ம் பாலை வைடாக வீசி நேர்த்தியாக விக்கெட்டை வீழ்த்தினார்.

நம்பர் 3-ல் ராகுல் திரிபாதி களமிறங்கினார். கில்லும் திரிபாதியும் ஒருநாள் போட்டியில் பார்ட்னர்ஷிப் பில்ட் செய்வது போல நிதானமாக தட்டிவிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். இந்நேரத்தில் டைம் அவுட் விடப்பட்டது. இது டி20 மேட்ச் என டைம் அவுட்டில் மெக்கல்லம் நினைவுப்படுத்த கொஞ்சம் உஷாரானார் திரிபாதி.

DC v KKR
DC v KKR

இவர்கள் நிச்சயம் பெரிய ஷாட்டுக்கு செல்வார்கள் என்பதை உணர்ந்த பண்ட், ரபாடாவை கொண்டு வந்து ரன்னை கட்டுப்படுத்த முயலாமல் ஸ்டாய்னிஸிடம் ஓவரைக் கொடுத்தார். இது ஒரு நல்ல திட்டமாக இருந்தது. இந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த திரிபாதி, அடுத்த பந்திலேயே இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார். ரபாடா, ஆவேஷ்கான் போன்றோர் இந்த ஓவரை வீசியிருந்தால் திரிபாதி நிச்சயமாக ரிஸ்க் எடுத்திருக்கமாட்டார். ஸ்டாய்னிஸை வைத்து பண்ட் செய்த கேம்பிள் வெற்றிகரமாக அமைந்தது.

அடுத்த ஓவரையும் பார்ட் டைமரான லலித் யாதவ்க்கு கொடுத்தார் பண்ட். இதுவுமே ஒரு கேம்பிள்தான். புதிதாக க்ரீஸுக்குள் வந்திருக்கும் இயான் மோர்கனை செட்டில் ஆகாமல் பெரிய ஷாட்டுக்கு செல்ல வைப்பதற்காக போடப்பட்ட ஸ்கெட்ச் இது. பண்ட்டின் இந்த மூவ்க்கு இரண்டு லட்டுகள் பரிசாக கிடைத்தன. கேப்டன் இயான் மோர்கனும் சுனில் நரைனும் லலித் யாதவின் ஓவரில் வெளியேறினர். மோர்கன் பெரிய ஷாட்டுக்கு முயன்று லாங் ஆஃபில் கேட்ச் ஆக, நரைன் ஸ்டம்பைப் பறிகொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்பர் 6-ல் ரஸல் உள்ளே வந்தார். இப்போது தன்னுடைய முழுபலத்தையும் பிரயோகிக்கத் தொடங்கினார் பண்ட். ரபாடா, ஆவேஷ் கான் இருவருக்கும் தொடர்ந்து ஓவர்களை கொடுத்தார். ஷார்ட் பால்களுக்கும் ஸ்லோயர் பந்துகளுக்கும் கடுமையாகத் திணறினார் ரஸல். பாப்பம்பட்டி அணியின் பேட்ஸ்மேன்கள் போல கண்ணை மூடிக்கொண்டு கன்னாபின்னாவென பேட்டை சுற்றினார். அடிக்கிற வெயிலுக்கு ஜோராகக் காற்று வீசியதைபோல இருந்ததே தவிர பந்துகள் ஒன்றும் பேட்டில் மீட் ஆகவே இல்லை. இடையில் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்று அத்தனை களேபரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கில் சத்தமின்றி 38 பந்துகளில் 43 ரன்களை எடுத்து வெளியேற்றினார். பந்தின் சைனிங்கை போக்கிக் கொடுத்து தன்னுடைய வேலையை திறம்பட செய்ததற்காக கில்லுக்கு தனி பாராட்டுகள்!

பர்த்டே பேபியான ரஸல் பேட்டில் பந்து படாததை கண்டு மனமுருகி போன டெல்லி பௌலர்கள், கடைசி 3 ஓவரில் ஃபுல் டாஸாக வீசி ரஸலுக்குப் பிறந்தநாள் பரிசை அளித்தனர். தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த ரஸல், ரபாடா, ஆவேஷ் கான் வீசிய 19 மற்றும் 20 வது ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்களையும் இரண்டு பவுண்டரிகளையும் சிதறடித்தார்.

DC v KKR
DC v KKR

டெல்லி பௌலர்கள் ரஸலுக்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசின் விளைவாக கொல்கத்தா அணி ஒரு வழியாக 150 ரன்களை கடந்தது. ரஸல் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இரவு நேர ஊரடங்குகள் இருப்பதால் சீக்கிரமே ஹோட்டல் ரூமில் போய் செட்டில் ஆக வேண்டும் என்கிற அவசரம் டெல்லி ஓப்பனர்களிடையே வெளிப்பட்டது. குறிப்பாக, ப்ரித்வி ஷா 10 மணிக்குள் ஆட்டத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் சிவம் மவி வீசிய முதல் ஓவரின் 6 பந்துகளையுமே பவுண்டரியாக்கினார். கவர்ஸில் மூன்று, பாயிண்ட், லாங் ஆஃப், மிட் விக்கெட் ஆகிய திசைகளில் தலா ஒன்று என அத்தனை திசைகளிலும் பவுண்டரியை அடித்து மிரட்டினார். முதல் ஓவரில் மட்டும் 25 ரன்கள் வர, தொடர்ந்து பேட்டை வீசிக்கொண்டே இருந்தார் ப்ரித்திவி ஷா. நரைனையெல்லாம் சிக்ஸருக்குத் தூக்கினார்.

MI v RR: மிடில் ஆர்டரை அப்பறம் பார்ப்போம், முதல்ல மேட்சை ஜெயிப்போம்... ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை!

இதன் விளைவாக 3.4 ஓவர்களிலேயே டெல்லி அணி 50 ரன்களை கடந்தது. இந்த இடத்திலேயே கொல்கத்தா தோல்வியை ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதன்பிறகு கொல்கத்தா வீரர்களிடம் ஒரு துடிப்பையே பார்க்க முடியவில்லை. கருணையின்றி ப்ரித்வி ஷா தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார். மெயின் பௌலரான பேட் கம்மின்ஸை 6வது ஓவரில்தான் பந்துவீச அழைத்தார் மோர்கன். "ஐபிஎல்-ல் இப்படியொரு மோசமான பௌலிங் அட்டாக்கை பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. பௌலர்களை குறை சொல்வதைவிட, கேப்டன்சியின் மீது நாம் கேள்வி கேட்டாக வேண்டும். எதிரணியினர் அடித்து வெளுக்கும் போது உங்களுடைய மெயின் பௌலரை அழைக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என டக் அவுட் கமெண்ட்ரியில் மோர்கனின் கேப்டன்சியை கிழித்து தொங்கவிட்டார் ஸ்காட் ஸ்டைரிஸ்.

DC v KKR
DC v KKR

டெல்லியின் புலிப்பாய்ச்சலுக்கு முன்பாக கொல்கத்தா பௌலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடைசியில் ஆறுதலாக பேட் கம்மின்ஸ் மட்டுமே மூன்று விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். இந்த விக்கெட்டுகளும் டெல்லி அணிக்கு இம்மியளவு சிரமத்தை கூட ஏற்படுத்தவில்லை. சிறப்பாக ஆடிய ப்ரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்களை அடித்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய ஷார்ட் பாலில் எட்ஜ் ஆகி ராணாவிடம் கேட்ச்சானார். 16வது ஓவரில் வீசப்பட்ட இந்த ஷார்ட் பால் முதல் ஓவரில் வீசப்பட்டிருந்தால் போட்டியின் முடிவே கூட மாறியிருக்கலாம். ப்ச்..!

இந்தச் சுலபமான வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளி டெல்லி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அஷ்வின் இல்லை... மிஷ்ரா இல்லை... ரபாடா ஃபார்மில் இல்லை... அப்படியிருந்தும் அசத்துகிறார்களே! பாண்ட்டிங் - பண்ட் மேஜிக்?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு