Ipl-2021 banner
Published:Updated:

IPL 2021 Exclusive: மும்பை, அகமதாபாத்தில் மட்டும் ஐபிஎல்; சென்னை வரும் தோனி... அவசரப்படுகிறதா பிசிசிஐ?!

ஐபிஎல்
ஐபிஎல்

"கொரோனா காரணமாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஹோட்டல், விமானம் என மாறி மாறிப் பயணிக்க வேண்டியிருக்கும். பயோபபுள் அமைப்பதும் சிரமம்."

ஐபிஎல் 2021 சீசனை ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது பிசிசிஐ. கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இம்முறை இந்தியாவிலேயே நடத்ததிட்டமிடப்படுகிறது. ஆனால், கொரோனா சூழல் இன்னும் முற்றிலும் சரியாகாததால் எந்தெந்த மாநிலங்களில் போட்டிகளை நடத்துவது என்கிற குழப்பம் பிசிசிஐ-ல் நீடிக்கிறது.

முதலில் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அஹமதாபாத் ஆகிய நகரங்களைத் தேர்வு செய்துவைத்திருந்தது பிசிசிஐ. ஆனால், இம்முடிவுக்கு ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. "சில ஊர்களில் மட்டுமே போட்டிகளை நடத்தினால் அது அந்தந்த ஹோம்கிரவுண்டு அணிகளுக்கு மட்டுமே சாதகமாக முடியும். இதை ஏற்றுகொள்ளமுடியாது" எனத் தங்கள் அதிருப்தியை அழுத்தமாகப் பதிவு செய்தன. இதனால் இப்போது இரண்டே மாநிலங்களில் போட்டிகளை நடத்துவது என்கிற முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

"கொரோனா காரணமாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஹோட்டல், விமானம் என மாறி மாறிப் பயணிக்க வேண்டியிருக்கும். பயோபபுள் அமைப்பதும் சிரமம். அதனால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் மட்டுமே போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது" என்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கியப்புள்ளி.

மகாராஷ்டிராவில் நான்கு சர்வதேச ஸ்டேடியம்கள் இருக்கின்றன. மும்பையில் வான்கடே, பாரபோர்னே ஸ்டேடியம், நாக்பூரில் விதர்பா ஸ்டேடியம், புனேவில் எம்சிஏ ஸ்டேடியம் என இந்த நான்கு ஸ்டேடியங்களில் மட்டுமே ஐபிஎல் லீக் போட்டிகளை நடத்ததிட்டமிடப்படிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குவாலிஃபையர், எலிமினேட்டர் உள்ளிட்ட நாக்அவுட் போட்டிகளை அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்றே தெரிகிறது.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்

இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 11-ம் தேதி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கயிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி மார்ச் 10-ம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் போட்டிகள் நடக்கவில்லை என்றால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள். இதனால் பிசிசிஐ பாதுகாப்பு என்கிற பெயரில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பது மற்ற அணிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.
Ipl-2021 banner
அடுத்த கட்டுரைக்கு