Published:Updated:

MI v SRH: `ஏது ஜெயிக்கிறதா? நெவர்!' மீண்டும் மிடில் ஆர்டர் சொதப்பல்... மும்பையிடம் வீழ்ந்த ஐதராபாத்!

MI v SRH | IPL 2021
MI v SRH | IPL 2021

MI v SRH: போல்ட் புண்ணியத்தில் ஒரே ஓவரில் மும்பைக்கு இரண்டு விக்கெட்கள் கிடைக்க, 'ஆல் அவுட் ஆயிடக்கூடாது ஆண்டவா' என சடாரென பிரேயரை மாற்றினார்கள் ரசிகர்கள்.

ஐபிஎல் என்றாலே பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கும். ஆனால் இந்தமுறை தொடக்கம் முதலே பெரும்பாலான ஆட்டங்களில் வாளேந்திய கர்ணன் போல பௌலர்களின் கையே ஓங்கி நிற்கிறது. முதல் இன்னிங்க்ஸில் தங்கள் அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் அதை இரண்டாவது இன்னிங்க்ஸில் ஞாபகம் வைத்து, 'இந்தா வாங்கிக்கோ... வாங்கிக்கோ' என வைத்து செய்கிறார்கள் பௌலர்கள். அதுவும் சன்ரைஸர்ஸ் ஆட்டம் எல்லாம் ஒரே ஹைலைட்ஸை திரும்பத் திரும்பப் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. இந்த ஆட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.
MI v SRH | IPL 2021
MI v SRH | IPL 2021

டாஸ் ஜெயித்த மும்பை கேப்டன் ரோஹித் அதிசயமாக பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஜென்சனை கழட்டிவிடுவார்கள் என எதிர்பார்த்த மாதிரியே அவருக்கு பதில் மில்னேவை அணிக்குள் அழைத்து வந்திருந்தார்கள் மும்பை தரப்பில். ஹைதராபாத் அணியோ தொடர் தோல்விகள் காரணமாக கிட்டத்தட்ட பாதி அணியையே மாற்றியிருந்தது. அது சகஜம்தான். ஆனால் நல்ல பார்மில் இருந்த ஹோல்டரையும் நடராஜனையும் ஜெயித்தே ஆகவேண்டிய ஆட்டத்தில் வெளியே உட்காரவைத்ததுதான் புதிர். சாஹாவை வெளியே உட்கார வைத்திருந்தார்கள். சபாஸ் நதீமும் வெளியே. முஜீப், விராட் சிங், கலீல் அகமது, அபிஷேக் சர்மா நால்வரும் அணிக்குள். ஆனாலும் இந்த மாற்றங்களில் அணியின் பெரிய பிரச்னையான மிடில் ஆர்டர் சொதப்பலை தீர்ப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை என்பதுதான் சோகம்.

MI v SRH | IPL 2021
MI v SRH | IPL 2021

முதல் பாலையே மங்களகரமாக பவுண்டரிக்கு அனுப்பித் தொடங்கிவைத்தார் டி காக். புவியின் அந்த ஓவரில் மட்டும் எட்டு ரன்கள். அதன்பின் வந்த கலீல், முஜீப் இருவரின் ஓவர்களும் அதே ரீதியில் வெளுக்கப்பட பவர்ப்ளே முடிவில் 53 ரன்களைக் குவித்திருந்தது மும்பை. நடுவே ஆச்சர்ய அறிமுகமாய் விஜய் ஷங்கரும் பந்தைத் தூக்க, 'அட மிலிட்டரி... நீ எங்க இங்க?' என புருவம் உயர்த்தினார்கள் ரசிகர்கள். அதனினும் ஆச்சர்யமாய் இரண்டு விக்கெட்களையும் தூக்கினார் விஜய். 'வந்துட்டோம்னு சொல்லு... திரும்ப வந்துட்...' என மும்பை ரசிகர்கள் கெத்தாய் தோளைத் தூக்குவதற்குள் நடையைக் கட்டினார் ரோஹித் ஷர்மா. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்கைவாக் சூர்யாவும் பின்னாலேயே நடையைக் கட்ட, கட்டுக்குள் வந்தது மும்பையின் ரன்ரேட்.

மிடில் ஓவர்களின் தாதா ரஷித் இறுக்கிப் பிடிக்க, சிங்கிள் சிங்கிளாய் தேற்றிக்கொண்டிருந்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். ஒருபக்கம் விக்கெட்கள் விழ, மறுபக்கம் குறையும் ரன்ரேட்டை டீசன்ட்டாக உயர்த்தும் பொறுப்பு பொலார்ட் தலையில் விழுந்தது. 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஸ்கோரை சரியாக 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்களில் கொண்டுவந்து நிறுத்தினார் அவர். பவர்ப்ளேயில் வாரி வழங்கிய சன்ரைஸர்ஸ் பவுலர்கள் அதன்பின் சாட்டையைச் சுழற்றியதில் மீதி 84 பந்துகளில் 97 ரன்களே வந்தன.

MI v SRH | IPL 2021
MI v SRH | IPL 2021

மீண்டும் ஒருமுறை எட்டுவதற்கு எளிய இலக்கோடு களமிறங்கினார்கள் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள். 'மிடில் ஆர்டர் வரை போனாத்தானய்யா முடிச்சு முடிச்சு விடுறீங்க!' என ஒரு முடிவோடுதான் உள்ளே வந்தார் பேர்ஸ்டோ. போல்ட் போட்ட மூன்றாவது ஓவரில் மட்டும் 18 ரன்கள். மில்னேயின் அடுத்த ஓவரில் 19 ரன்கள். க்ருணாலில் அதற்கடுத்த ஓவரில் 13 ரன்கள். எங்கேயும் நிற்காத சதாப்தி எக்ஸ்பிரஸ் போலத்தான் ஸ்கோர் ஏறியது ஹைதராபாத் அணிக்கு. பவர்ப்ளே முடிவில் 57 ரன்கள். அடுத்த ஓவரில் இன்னும் 10 ரன்கள் வர, கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்கிற ஸ்டேஜை எட்டியது சன்ரைஸர்ஸ்.

MI v SRH | IPL 2021
MI v SRH | IPL 2021

'ஏது ஜெயிக்கிறதா? நெவர்' என ஹிட் அவுட்டாகி பெவிலியனுக்கு நடந்தார் பேர்ஸ்டோ. சீக்கிரமே மனிஷ் பாண்டேவும் நடையைக் கட்ட, 'இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல' எனத் தலையைச் சொறிந்தார்கள் சன்ரைஸர்ஸ் ரசிகர்கள். ஒண்டி ஹெர்குலிஸாக அணியைத் தூக்கிச் சுமந்துகொண்டிருந்த வார்னரும் தேவையே இல்லாமல் ரன் அவுட்டாக, 'இது அதுல' என கடந்த மேட்ச் கண் முன் வந்து போனது பார்ப்பவர்களுக்கு. அதன்பின்னர் ஷங்கரும் விராட் சிங்கும், 'யாரு ரொம்ப பந்தைத் தொடாம இருக்காங்களோ அவங்கதான் வின்னர்' என அவர்களுக்குள் மேட்ச் ஆட, விதியும் தன் பங்கிற்கு விளையாடியது.

ஒருகட்டத்தில் விராட்டுக்கே வெறுப்பு வந்து வீட்டுக்குக் கிளம்ப, வழியனுப்ப உடன்போனார் அடுத்து வந்த அபிஷேக். 'எப்பயாவதுதான் அப்படி நடக்கும், எப்பவுமே தோப்போமா என்ன' என கொஞ்சம் தைரியமாய் இருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார் ஷங்கர். ஆனால் போல்ட் புண்ணியத்தில் ஒரே ஓவரில் மும்பைக்கு இரண்டு விக்கெட்கள் கிடைக்க, 'ஆல் அவுட் ஆயிடக்கூடாது ஆண்டவா' என சடாரென பிரேயரை மாற்றினார்கள் ரசிகர்கள். ஆனாலும் விடாமல் தன் அடுத்த ஓவரிலும் இரண்டு விக்கெட்களைக் கழட்டி மொத்தமாய் முடித்துவைத்து ஸ்க்ரீனைத் தொங்கவிட்டார் போல்ட். 137 ரன்களுக்கு சன்ரைஸர்ஸ் ஆல் அவுட்டாக 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை.

டிரென்ட் போல்ட் | MI v SRH | IPL 2021
டிரென்ட் போல்ட் | MI v SRH | IPL 2021

கடைசி ஐந்து விக்கெட்களை வெறும் எட்டு ரன்களுக்கு இழந்து மீண்டுமொரு முறை தன் மிடில் ஆர்டர் ஓட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது ஹைதராபாத் அணி. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால் மிடில் ஆர்டர் பிரஷரை முழுக்க அவர்கள் தலையில் இறக்கினால் எப்படி தங்கள் முழுத்திறனில் அவர்கள் விளையாட முடியும்? பார்மில் இருக்கும் கேதார் ஜாதவ், ஆல்ரவுண்டர் ஹோல்டர் போன்றவர்களை உள்ளே கொண்டுவந்து தொடரின் உஷ்ணத்துக்கு பழக்கினால் மட்டுமே அந்த அணி ப்ளே ஆப்பை நெருங்க வாய்ப்பிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு