Published:Updated:

‘’சாம்பியன்னா ஓரமா போங்கப்பா''...ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸை போகிற போக்கில் அடித்த கொல்கத்தா!

அரபு வெர்ஷனில், விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது கேகேஆர். அதுவும் புள்ளிப் பட்டியலில், டாப் 4-ல் இருந்த அணிகளையே வீழ்த்தி, புள்ளிப் பட்டியலை புரட்டிப் போட்டதுதான் அவர்கள் எப்படி ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்கள் என்பதற்குச் சான்று.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிஃபெண்டிங் சாம்பியன்கள் என்பதற்குரிய அங்க அடையாளங்கள் எதுவும் இல்லாமல், ஆடுவது பிரதான அணியா பி அணியா எனுமளவுக்கு மோசமாக ஆடி வருகிறது மும்பை இந்தியன்ஸ்.

அபுதாபி, மும்பை இந்தியன்ஸுக்கு இன்னொரு வான்கடே எனச் சொல்லுமளவு 60 சதவிகிதத்துக்கு மேல் வின்னிங் ரெக்கார்டை வைத்துள்ள மைதானம். மும்பை இங்கே, 180 ரன்களைச் சராசரியாக்கிக் கொள்ளுமளவு, சரமாரியாக ரன்வேட்டை ஆடியுள்ளது. இவையெல்லாம் மும்பைக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்பட்டாலும், ஆர்சிபி-ஐ ஒன்றும் இல்லாமல் செய்த கெத்தோடு வந்திருந்தது கொல்கத்தா.

டாஸை மும்பை தோற்றிருந்தாலும், ரோஹித் அணிக்குள் திரும்பியதே ரசிகர்களுக்கு, குதூகலத்தை ஏற்படுத்தி இருந்தது. போன போட்டியில், வருணைக் கொண்டு தொடங்கிய மார்கன், இம்முறை பார்ட் டைம் பௌலர் ராணா கையில், முதல் ஓவரைக் கொடுத்தார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை, இந்த சீசனில் பவர்பிளே ஓவர்களில் 48 சதவிகித ஓவர்களை மார்கன், ஸ்பின்னர்களையே வீச வந்திருந்தார். வேறு எந்த ஐபிஎல் அணியும், இந்தளவுக்கு பவர்பிளேயில், ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியதில்லை. அதுவும் ஓவருக்கொருவர் என ராணா, வருண் மற்றும் நரைனை முதல் மூன்று ஓவர்களில் இறக்கினார் மார்கன். அது தொடக்கத்தில் கை கொடுத்து, ரன்ரேட்டைக் கட்டுக்குள் வைத்தாலும், மும்பை ஓப்பனர்கள், ஒரு கட்டத்தில், தகவமைத்துக் கொண்டு, தாக்கத் தொடங்கினார்கள். மூன்றாம் மற்றும் நான்காவது ஓவர்களில் வந்த தலா இரண்டு பவுண்டரிகள், மார்கனை வேகப்பந்து வீச்சுக்கு மாற வைத்தது.

IPL
IPL

கேகேஆருக்கு எதிராக என்றாலே, ரோஹித்துக்கு உற்சாகம் மிகும். பௌலர்களை உருட்டி மிரட்டி விடுவார். இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, ஐபிஎல்-ல் ஒரே அணிக்கு (கேகேஆர்) எதிராக அதிக ரன்களைச் சேர்த்த சாதனை (982) ரோஹித் வசம்தான் இருந்தது. அதையும் தாண்டி, இப்போட்டியில், அக்கணக்கில், 1000 ரன்களை ரோஹித் கடந்தார். பவர்ப்ளே ஓவர்களில் மட்டும், 56 ரன்களை, விக்கெட் இழப்பின்றி குவித்த மும்பை, கேகேஆரை கதிகலங்கச் செய்தது. ரசலைக் கொண்டு வந்து, ஏபிடிக்கு வீசியதைப் போன்றதொரு அற்புத யார்க்கரை மார்கன் வீச வைப்பார் என முன்னோக்கப்பட, ஒன்பதாவது ஓவரில்தான், அவர் கொண்டு வரப்பட்டார். எனினும், ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தியது, ரசல் இல்லை. அவரது விக்கெட்டை, டி20-ல் ஏற்கனவே, எட்டு முறை வீழ்த்தியுள்ள நரைன்தான்.

33 ரன்களோடு ரோஹித் வெளியேற, அனல் பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட, சூர்யகுமார் நுழைந்தார். ஆனால், போகும் போதே, ரன்ரேட் கணிப்பானை கையோடு ரோஹித் எடுத்துச் சென்று விட்டார் போலும். அடுத்த சில ஓவர்கள் ரன்கள் ஏறவே இல்லை. அடுத்த 16 பந்துகளில், 11 ரன்களை மட்டுமே, மும்பை அடிக்கும்படியாக, கட்டுக்கோப்பாக மத்திய ஓவர்களில் பந்து வீசியது கேகேஆர்.

முதல் 12 ஓவர்களில், ஒன்பது ஓவர்கள், ஸ்பின்னரையே வீச வைத்திருந்தார் மார்கன். அது ஓரளவு கைகொடுக்கவும் செய்தது. இச்சமயத்தில் 89 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. அதே சமயத்தில், ஆபத்தான சூர்யகுமாரின் விக்கெட்டையும், பிரசித் வீழ்த்தி, இன்னொரு திருப்பு முனையையும் கொண்டு வந்தார். சூர்யாவின் ஆட்டமிழப்பு, மும்பை ரசிகர்களை மட்டுமன்றி, இந்திய ரசிகர்களையும் டி20 உலகக் கோப்பையை மனதில் நிறுத்தி புலம்ப வைத்தது. இஷான் உள்ளே வந்தார்.

எக்ஸ்ட்ரா இத்யாதிகளை வாரி வழங்கி, தனது எக்கானமியை எகிற வைத்தாலும், விக்கெட் எடுக்கும் பௌலராக உலா வருவதுதான் பிரசித்தின் ப்ளஸ் பாயின்ட். அது இப்போட்டியிலும் தொடர, அடுத்த ஓவரை வீச வந்தபோதே, நெடுநேரமாக களத்தில் நின்ற டி காக்கையும் காலி செய்தார். 131 ஸ்ட்ரைக் ரேட்டோடு, அரை சதத்தையும் கடந்திருந்த குவின்டன் டி காக் வெளியேறியது, அந்நிலையில் மும்பைக்கு பின்னடைவானது.

எனினும், கேகேஆரின் பௌலிங்கில், 11 - 15 ஓவர்களில் இருந்த கட்டுப்பாடு, அதன்பின் சற்றே கட்டுக்குலைந்தது. குறிப்பிட்ட அந்த ஓவர்களில் மொத்தமே 26 ரன்களே வந்திருக்க, இறுதி ஐந்து ஓவர்களில் 49 ரன்கள் வாரி வழங்கப்பட்டது.

IPL
IPL

18-வது ஓவரில் மட்டும், 18 ரன்களை அள்ளிக் கொடுத்திருந்தார் பிரசித். ஆனால், மொத்தமாகப் பார்க்கும்போது 155 என்பது மும்பையின் பேட்டிங் ஆர்டருக்கு மிகவும் குறைவான ஸ்கோரே.

170-க்கு மேல் என்றாலும் சேஸ் செய்யக்கூடிய பிட்ச், பனிப்பொழிவு ஆகிய எல்லாம் சேர்ந்து, மும்பைக்கு எதிராக நிகழ்வுகள் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்றே தோன்ற வைத்தது. நினைத்தவைதான் நடந்தேறின. 156 என்பது பெரிய இலக்கில்லை என்பதால், கேகேஆர், தொடக்க ஓவர்களில் அடக்கி வாசித்து, விக்கெட்டைக் காப்பாற்றி, பின் அதிரடி முகம் காட்டும் என அனுமானிக்கப்பட, "அந்தப் படம் இன்று இல்லை" என அச்சுறுத்தும் மும்பை பௌலிங் லைன் அப்பையே பதம் பார்க்கத் தொடங்கினர். உண்மையில் மும்பையின் பேட்டிங்கில் மட்டுமல்ல பௌலிங்கிலும், அதிரடி எனும் வார்த்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே, கில், இறங்கி வந்து, ஓவர் டீப் மிட் விக்கெட்டில் ஃப்ளிக் ஷாட்டில் ஒரு சிக்ஸரைத் தூக்க, வெங்கடேஷோ தான் சந்தித்த முதல் பந்தையே, ஓவர் டீப் ஸ்கொயருக்கு சிக்ஸராக்கினார். மில்னேயின் பந்துகளோ அழாத குறையாக, சிறப்பாக வைத்துச் செய்யப்பட்டன. அவரது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடிக்கப்பட இரண்டு ஓவரிலேயே 30 ரன்கள் வந்துவிட்டது. கில், பும்ரா வீசிய ஓவரில், பேட்டுக்கும் பேடுக்கும் நடுவில், பந்துக்கு ‘போய்க்கோ’ என பல அடி இடைவெளி விட, அது ஸ்டம்பைக் காவு வாங்கியது. மும்பைக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இது மட்டுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு விக்கெட் விழுந்தது, கேகேஆரின் ஆட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், ஏதோ 200+ ஸ்கோரை சேஸ் செய்வது போல, வெங்கடேஷும், திரிபாதியும் போட்டியை முடித்துக் கிளம்பும் எண்ணத்தோடு, அரக்கப்பறக்க ரன் சேர்த்துக் கொண்டிருந்தனர். ஃபாஸ்ட் பௌலர்களின் பந்துகள் அடிவாங்குகின்றன என ஸ்பின்னர்களைக் கொண்டு வந்தால் அவர்களது ஒவர்கள் இன்னும் வாங்கியது. குறிப்பாக ராகுல் சஹார் பந்தில், ஸ்வீப் ஷாட்டில், பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார் திரிபாதி. ரோஹித்தும் பௌலர்களை மாற்றி மாற்றிப் பார்த்தார். ஆனால், இந்தக் கூட்டணி, எல்லோருக்கும் ராஜ மரியாதை செய்தது.

IPL
IPL

25 பந்துகளில், வெங்கடேஷ் அரைசதம் அடிக்க, அடுத்த சில நிமிடங்களிலேயே, 29 பந்துகளில், திரிபாதி அரைசதம் கடந்தார். எல்லா ஓவர்களும், ஒன்றோ ரெண்டோ என ஏதோ ஒரு பெரிய ஷாட்டோடே முடிவுக்கு வந்தது. மும்பையும், கேகேஆரும், பரஸ்பரம், கூடு விட்டு கூடு பாய்ந்து விட்டார்களோ என்றுதான் தோன்ற வைத்தனர். இடையில் சில கேட்சுகளை நழுவ விட்டதன் காரணமாக, ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருந்த அணுவளவு வாய்ப்பையும், கேகேஆருக்கு தாரைவார்த்தது மும்பை. ரசலுக்கு எல்லாம் வேலை வைக்க மாட்டோம், 15 ஓவருக்குள் முடித்து விடுவோம் என்ற முடிவோடு, கொலைப்பசியோடு, ரன்களைக் குவித்தனர். வெங்கடேஷை அனுப்பி வைத்து பும்ரா ஆறுதல்பட்டுக் கொண்டாலும், திரிபாதி எடுத்த பணியை, தொடர்ந்து கொண்டேதான் இருந்தார். ஆக, இலக்கு மிக அருகில் வந்துவிட்டது. நடுவில் மார்கன் வந்த வேகத்தில் வெளியேறினார்.

16-வது ஓவரில், பந்துகள் பல மீதமிருந்த நிலையில், மூன்றே விக்கெட்டுகளை இழந்து, மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது கேகேஆர். அரபு வெர்ஷனில், விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது கேகேஆர். அதுவும் புள்ளிப் பட்டியலில், டாப் 4-ல் இருந்த அணிகளையே வீழ்த்தி, புள்ளிப் பட்டியலை புரட்டிப் போட்டதுதான் அவர்கள் எப்படி ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்கள் என்பதற்குச் சான்று.

அதுவும், டிஃபெண்டிங் சாம்பியன்களை வீழ்த்தி, அவர்களது நான்காவது இடத்தைத் தட்டிப் பறித்து, தான் அந்த இடத்தில் ராஜ கம்பீரத்துடன் உட்கார்ந்திருக்கிறது கேகேஆர்.

புதுமுக வீரரான வெங்கடேஷின் அதிரடி ஆட்டத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்பட ஹீரோக்களைப் போல், நான்கு அடி வாங்கி விட்டு, திரும்ப அடிப்பதுதானே, மும்பையின் பாணி. அடுத்த போட்டி, ஆர்சிபியுடன். உள்ளுறை வெப்பம் ஏற்கனவே தகித்துக் கொண்டுள்ள அந்த இரு கேப்டன்களுக்கிடையே என்ன நடக்கும் என்பதைக் காண ரசிகர்கள் இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டனர். மிகப்பெரிய சம்பவங்கள் வார இறுதியில் காத்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு