Published:Updated:

இயான் மார்கனின் இங்கிலாந்து தலைமை.. ரஸல், நரைனின் கரீபிய கடமை... வெல்லுமா கொல்கத்தா?! #KKR #IPL2021

இயான் மார்கன் #KKR

மார்கன், இம்முறை முதலிலிருந்தே கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியை, டி20-ல் நம்பர் 1 அணியாக மாற்றி இருக்கும் மார்கன், அதே மாயத்தை இங்கேயும் நிகழ்த்தலாம்.

இயான் மார்கனின் இங்கிலாந்து தலைமை.. ரஸல், நரைனின் கரீபிய கடமை... வெல்லுமா கொல்கத்தா?! #KKR #IPL2021

மார்கன், இம்முறை முதலிலிருந்தே கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியை, டி20-ல் நம்பர் 1 அணியாக மாற்றி இருக்கும் மார்கன், அதே மாயத்தை இங்கேயும் நிகழ்த்தலாம்.

Published:Updated:
இயான் மார்கன் #KKR

கம்பீரின் தலைமையில், இருமுறை கோப்பையை வென்ற கம்பீரத்தை, திரும்ப மீட்டெடுக்க, ஆண்டுக்கணக்காய் போராடி வருகிறது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

கடந்தாண்டு, ப்ளே ஆஃப் வாய்ப்பை ரன்ரேட் அடிப்படையில் தவற விட்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ், இம்முறை, தவறுகளை நேர்செய்து, தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு களமிறங்குகிறது. சென்ற ஆண்டு அவர்கள் சறுக்கியதற்கான காரணங்கள் என்னென்ன, இந்தாண்டு அவர்களது வெற்றி வாய்ப்பு எப்படி?

பலவீனம் - 1 : ஓப்பனிங் வீக்னஸ்!

2020 சீசனில் கில்லை மட்டும் நிரந்தர ஓப்பனராக வைத்துக் கொண்டு, மறுமுனையில் உள்ள வீரரை மாற்றிக்கொண்டே இருந்தது கொல்கத்தா. முதல் நான்கு போட்டிகளில், நரைனை இறக்கிய கொல்கத்தா, அவர் ஷார்ட் பால்களை எதிர்கொள்ளத் திணறியதால், அடுத்ததாக திரிபாதியை, நடுவில் ஒருபோட்டியில் பான்டனை, இறுதியாக, பவர்ப்ளே ஓவர்களில், அதிரடியாக ரன் குவிக்க வேண்டுமென, ராணாவை என மாற்றிமாற்றிக் கொண்டு வந்தது. இந்த எல்லாப் போட்டிகளையும் சேர்த்து ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் வந்த ரன்கள் 271 மட்டுமே. அதாவது 14 போட்டிகளில் சராசரியாக, 19 ரன்களை மட்டுமே, ஓப்பனர்கள் இருவரும் இணைந்து எடுத்திருந்தனர்.

இதில் பெரும்பாலான ரன்கள் கில்லிடமிருந்தே வந்திருந்தன. இந்த 14 முறைகளில், 4 முறை மட்டுமே, ஓப்பனிங் பார்னர்ஷிப்பை உடைத்து, கில் ஆட்டமிழந்திருந்தார். இன்னொரு ஓப்பனர், 25 ரன்களுக்கு மேல் சேர்த்தது, மொத்தமே மூன்று தருணங்களில் மட்டுமே. சரி... இன்னொரு ஓப்பனர்தான் சோபிக்கவில்லை கில், கில்லியாக ஆடினாரா என்று கேட்டால், விடை, 'ஆம்' மற்றும் 'இல்லை'. ஏனெனில், லீடிங் ரன் ஸ்கோரராக, கில், மூன்று அரைச்சதங்களோடு, 440 ரன்களை 33.8 எனும் சராசரியோடு குவித்திருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 117.96 மட்டுமே.

ஓப்பனராக இறங்கும் வீரருக்கு இது மிகவும் குறைவானதே. இது பின்வரிசையில் இறங்கும் வீரர் மீதான அழுத்தத்தை அதிகரித்து விடும். இதுதான், போன சீசனிலும் நடந்தது. ஓப்பனர் உள்ளிட்ட டாப் 3 வீரர்கள், பவர்ப்ளே ஓவர்களைச் சரியான பயன்படுத்தாமல் போக, அது பின்வரிசை வீரர்களின் பணியை இரட்டிப்பாக்கியது.

பலவீனம் - 2 : ரசல் மற்றும் நரைனின் ஃபார்ம்!

கொல்கத்தாவின் இருதூண்களாக, இருப்பவர்கள் ரசல் மற்றும் நரைன். இவர்களது வரவுக்குப்பின்தான் அணி, இருமுறை கோப்பையை வென்றது. அதில் இவர்களது பங்கு மிக அதிகம். அதன்பிறகு தொடர்ந்து, மேட்ச் வின்னர்களாக எத்தனையோ போட்டியை இக்கூட்டணி, கொல்கத்தாவுக்காகக் கையகப்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவிற்காக அதிக விக்கெட்டுகளை (145) எடுத்தவர், அதிகமுறை (ஏழு) நான்கு விக்கெட் ஹால்களை எடுத்தவர் நரைன். அதேபோல், ரசல் அவர்களது டாப் பௌலராக மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார். அந்த அணியின் சார்பாக அதிகபட்சமாக 131 சிக்ஸர்கள் அடித்தவரும் ரசலே. குறிப்பாக, 2019-ம் ஆண்டு 510 ரன்களைக் குவித்திருந்த ரசல் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அந்த வருடத்திற்கான கொல்கத்தாவின் டாப் பௌலராகவும், டாப் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார்.

#KKR
#KKR

ஆனால், சென்ற வருடம் எல்லாமே தலைகீழானது. தன்னுடைய பௌலிங் ஆக்ஷனில் தவறில்லை என நிரூபித்து, நான்கு போட்டிகளுக்குப் பின்தான் அணியில் இணைந்தார் நரைன். அதன் பின்னும்கூட வழக்கமான நரைனை எந்தத் தருணத்திலும் பார்க்க முடியவில்லை. காயத்தினால் சில போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போன ரசலும் அப்படித்தான். எந்தக் குறிப்பிடும்படியான இன்னிங்ஸையும் அவர் ஆடவில்லை. இப்படி கேம் சேஞ்சர்களான இருவரும், ஒரேநேரத்தில் ஃபார்மை இழந்து தவித்தது, அணிக்குப் பின்னடைவாக அமைந்து போனது.

பலவீனம் - 3 : கேப்டன் மாறியும், மாறாத காட்சிகள்!

கடந்த சீசனில், ஏழு போட்டிகளுக்குத் தலைமையேற்று, நான்கில் வெற்றி பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டுமென கேப்டன்ஷிப்பிலிருந்து விலக, அது மார்கனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது அணியின் ஒருங்கிணைப்பைச் சற்றே அசைத்துப் பார்த்து, சிறு குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, மீதமிருந்த ஏழு போட்டிகளில், மூன்றில் மட்டுமே கொல்கத்தா வென்று ஐந்தாவது இடத்தில் முட்டிநின்றது. உண்மையில் புள்ளிக்கணக்கில் 3, 4 இடத்திலுள்ள அணிகளுடன் சமமாக இருந்தாலும், வெறும் 0.042 ரன்ரேட் வேறுபாட்டால், ஐந்தாவது இடத்தில் முடித்தது கொல்கத்தா அணி.

பலவீனம் - 4 : வேகப்பந்து வீச்சு!

கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சு, முழுவதுமாக கம்மின்ஸை நம்பியே இருந்தது. அணிக்குப் பெரிய குறைபாடாக ஆனது. இவருக்கு உறுதுணையாக, ஃபெர்குசனைக் கொண்டுவந்த கொல்கத்தா, கடந்தாண்டு, அவரை இறுதிக் கட்டப் போட்டிகளில் பயன்படுத்தியது. 5 போட்டிகளில், 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், சன்ரைஸர்ஸுக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா சூப்பர்ஓவரில் வெல்வதற்குக் காரணமாக இருந்தார். இது அணிக்கு பக்கபலமாக இருக்கிறது என்றாலும், அனுபவமற்ற, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால், ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. தோனி, பொல்லார்டு போன்ற ஃபினிஷர்களிடம் இவர்களது பந்துகள் அளவுக்கதிகமாகவே அடிவாங்கின. இந்தக் காரணத்தினாலேயே, கடந்த சீசனில் கம்மின்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள், சராசரியாக, 8.56 எக்கானமியோடு, 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களோ, சராசரியாக, 9.4 எக்கானமியோடு, 18 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தனர்.

பலவீனம் - 5 : ஸ்பின் டு வின்?!

கடந்த சீசனில், வருண் சக்கரவர்த்தி அற்புதமாக பந்துவீசி, 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், சுழலுக்கு ஒத்துழைக்கும் அரபு மைதானங்களில்கூட, வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை, சுழல்பந்து வீச்சாளர்களால் ஏற்படுத்த முடியவில்லை. அந்தத் தொடரில், வேகப்பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக, 42 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, ஸ்பின் பௌலர்கள் 22 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருதார்கள்.

2021-ல் காத்திருக்கும் சவால்கள் : ஓப்பனிங் அதிரடி?!

திரிபாதி மற்றம் ராணவால் ஒரு நிலைப்புத்தன்மைமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போவதனால், ஷாருக்கான் போன்ற ஒரு இந்திய பவர் ஹிட்டரை கொல்கத்தா மினிஏலத்தில் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கைவசமிருந்த பணம் குறைவாக இருந்தததால் பெரிய தொகைக்கு யாரையும் வாங்கமுடியவில்லை.

#KKR
#KKR

ஷகிப் பென் கட்டிங்!

ஷகிப் அல் ஹசனையும், பென் கட்டிங்கையும், முறையே நரைன் மற்றும் ரசலுக்கு பேக்கப்பாக எடுத்து வந்துள்ளது கொல்கத்தா. ஷகிப், ஆறுவருடங்கள் அணியோடு ஏற்கெனவே பயணித்திருக்கிறார். கொல்கத்தா அணி கோப்பையை வென்ற அந்த இரண்டு ஆண்டுகளிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஷகிப் தற்சமயம், டி20 ஃபார்மேட்டில் தலைசிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார். எனவே இவர்களது தேர்வு, கொல்கத்தாவின் அட்டகாசமான நகர்வு!

மேஜிக் செய்வாரா மார்கன்!

மார்கன், இம்முறை முதலிலிருந்தே கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியை, டி20-ல் நம்பர் 1 அணியாக மாற்றி இருக்கும் மார்கன், அதே மாயத்தை இங்கேயும் நிகழ்த்தலாம்.

பேட்டிங் பலவான்கள்!

கொல்கத்தாவைப் பொறுத்தவரை 4,5,6 பேட்டிங் பொசிஷன்களில், தினேஷ் கார்த்திக், ரசல், மார்கன் ஆகிய மூவரும், எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு களமிறங்கலாம். இதில் மார்கன் கடந்தாண்டு 418 ரன்களை 41.8 எனும் ஆவரேஜுடன் அடித்திருக்க, ரசலின் ஃபார்ம் திருப்திகரமாக இல்லை. அதே நேரத்தில், தினேஷ் கார்த்திக்கும் சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடினார். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அடித்தளத்தை அமைத்தாலும், இந்த மூவரணிதான் ஸ்கோர் போர்டில் எவ்வளவு ரன்கள் இருக்கப்போகிறதென்பதை முடிவுசெய்யும். குறிப்பாக, பேட்டிங்கிற்கு ஆதரவளிக்கும், பெங்களூரு பிட்சில் ஐந்து போட்டிகள் நடக்கின்றன. எனவே இம்மூவரும், மிகச் சுலபமான ரன்குவிப்பில் ஈடுபட்டு, அணியைக் கரைசேர்க்கலாம்.

சரியாகுமா ஸ்பின் பிரச்னை ?!

சுழல்பந்து பிரச்னையைச் சரிசெய்யத்தான், கொல்கத்தா ஹர்பஜனை வாங்கியுள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேசப் போட்டிகளில், பங்கேற்பதற்கான வாய்ப்பை, காயத்தால் இழந்த வருண் காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வருவாரா என்பது சந்தேகமே. இவரைத் தவிர குல்தீப்பின் ஃபார்மும் கவலையளிக்க, கடந்த முறை ஜொலிக்காத நரைனையே முழுவதுமாக நம்பி இருக்கிறது கொல்கத்தா. எனவே எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்தே, ஹர்பஜனை உள்ளே கொண்டு வந்துள்ளது கொல்கத்தா. இந்த வீரர்கள், இம்முறை சிறப்பான பங்களிக்காவிட்டால், சென்னையில் நடக்கும் முதல் மூன்று போட்டிகளை இவர்கள் கைப்பற்றி, தொடரில் கோலோச்சுவதற்கான வாய்ப்புகள் குறைந்து போகும்.

இயான் மார்கனின் இங்கிலாந்து தலைமை.. ரஸல், நரைனின் கரீபிய கடமை... வெல்லுமா கொல்கத்தா?! #KKR #IPL2021

உத்தேச ப்ளேயிங் லெவன்!

கில், திரிபாதி, ராணா, மார்கன், தினேஷ் கார்த்திக், ரசல், நரைன், கம்மின்ஸ், நாகர்கோதி, மவி/ பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி

கைநழுவிக் கொண்டே இருக்கும் கனவுக் கோப்பையைக் கைப்பற்றுவதற்காக முழுமூச்சில் இறங்குகிறது கொல்கத்தா. இப்போது இருக்கும் அணியின் பலம், பலவீனங்கள் அவர்களுடைய ப்ளேஆஃப் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகின்றன. எனினும் சாம்பியன் என்பது கொல்கத்தாவுக்கு, வெகு நீண்ட பயணமாகவே இருக்கப்போகிறது. ஓப்பனிங் சவால்களைச் சரிசெய்து, பந்துவீச்சையும் சிறப்பாக மாற்றி அமைத்தால், இந்தவருடம் மூன்றாவது முறையாக, கொல்கத்தா சாம்பியனாகலாம். கப்பை வெல்வார்களா, குட்பை சொல்லுவார்களா?!