Published:Updated:

KKR v MI: 30 ஓவர்கள் சொதப்பி 10 ஓவர்களில் ஆட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ்! | IPL 2021

கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கொல்கத்தா அணி எளிதாக வெல்லக்கூடிய நிலைதான் என்றாலும் மும்பை கம்பேக் கொடுத்து கொல்கத்தாவை காலி செய்தது அபாரமாக இருந்தது.

ரசிகர்களின் இரத்த அழுத்ததை உயர்த்திவிட்டு இரவு தூக்கத்தை காவு வாங்குவதே ஐபிஎல் அணிகளுக்கு வேலையாகிவிட்டது. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான நேற்றைய திரில்லருக்கு பிறகு, இன்று மீண்டும் ஒரு பரபர விறுவிறு போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தாவுக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போட்டி கடைசி நொடிவரை சுவாரஸ்யமாகச் சென்றது. இறுதியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் சில ஹைலைட்டான தருணங்கள் இங்கே...

ஏமாற்றிய ஹிட்மேன்:

ரோஹித் ஷர்மாவை பொருத்தவரை அவருக்கு கொல்கத்தா எப்போதுமே ஒரு ஸ்பெஷலான அணி. மற்ற அணிகளை காட்டிலும் கொல்கத்தாவுக்கு எதிராக மட்டும் கூடுதல் வெறியோடு ஆடுவார். இந்தப் போட்டிக்கு முன்புவரை கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் 939 ரன்களை அடித்திருந்தார். ஐபிஎல்-ல் ஓர் அணிக்கு எதிராக ஒரு தனிப்பட்ட வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே. இன்றைய போட்டியில் 61 ரன்களை எடுத்தால் ஓர் அணிக்கு எதிராக 1000 ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பட்டத்தை பெறுவார் என்ற நிலை இருந்தது. ரசிகர்களும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் என்பதால் ஹிட்மேன் வெளுத்தெடுப்பார் என்கிற மனநிலையிலேயே இருந்தனர். ஆனால், ரோஹித் ஷர்மா மெதுவான ஆட்டத்தை ஆடி ரசிகர்களை ஏமாற்றவே செய்தார்.

Rohit Sharma | KKR v MI
Rohit Sharma | KKR v MI

பவர்ப்ளேவில் 6 ஓவர்களில் 5 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே வீசினார் இயான் மோர்கன். ரோஹித் ஷர்மா ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாகவே ஆடுவார் என்பதால், இயான் மோர்கனின் இந்த மூவ் கொஞ்சம் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹித் ஷர்மா எதிர்பார்த்த அளவுக்கு ஸ்பின்னர்களை அடித்து ஆடவில்லை. வருண் சக்கரவர்த்தி வீசிய இரண்டு ஓவர்களில் மட்டும் தலா ஒரு பவுண்டரியை அடித்தார். மற்றபடி, ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்தார். வழக்கத்தை விட ரொம்பவே மெதுவாக பெரிய ஷாட் ஆடுவதற்கான எண்ணமே இல்லாமல் ஆடினார் ரோஹித் ஷர்மா.

10 ஓவர்கள் முடியும் போது 20 பந்துகளைச் சந்தித்திருந்த ஹிட்மேன் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். நன்கு செட்டில் ஆகிவிட்டதால் இன்னிங்ஸின் பிற்பாதியில் கொல்கத்தா பேட்ஸ்மேன்களை பஞ்சராக்குவார் என தோன்றியது. ஆனால், இதன்பிறகு ஒரு பவுண்டரியும் சிக்சரும் மட்டுமே அடித்தார் ரோஹித். 43 ரன்களில் இருந்தபோது பேட் கம்மின்ஸ் மெதுவாக வீசிய ஒரு பந்தை ஷாட் ஆட முயன்று எட்ஜ்ஜாகி விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் ரோஹித். 16-வது ஓவர் வரை க்ரீஸில் நின்று செட்டில் ஆகியிருந்த ரோஹித் கடைசி ஓவர்களிலும் நின்றிருந்தால் மும்பை பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்.

காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்:

சூர்யகுமார் யாதவ் | KKR v MI
சூர்யகுமார் யாதவ் | KKR v MI

மும்பை அணியின் ரன் மெஷினான சூர்யகுமார் யாதவ்தான் இந்தப் போட்டியிலும் மும்பை அணியை காப்பாற்றினார். க்ரீஸுக்குள் வந்தவுடனேயே ஹர்பஜன் சிங்கின் ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்தார் சூர்யகுமார். அந்த ஓவரில் ஒயிட் லைனுக்கு அருகில் வீசப்பட்ட பந்தை நகர்ந்து வந்து முட்டிப் போட்டு அட்டகாசமாக ஸ்வீப் ஆடியிருப்பார் சூரியகுமார் யாதவ். பிரசித் கிருஷ்ணாவின் ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் பறக்கவிட்டார். பேட் கம்மின்ஸ் வீசிய 10வது ஓவரில் 99 மீட்டருக்கு ஓர் இமாலய சிக்சரை பறக்கவிட்டு அரைசதத்தை கடந்தார். 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப்-அல்-ஹசனின் பந்துவீச்சில் சிக்சருக்கு முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார். சூர்யகுமார் யாதவ்வின் அரைசதம் மட்டும் இல்லையென்றால் மும்பை அணி இன்னும் மோசமான ஸ்கோரையே எட்டியிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெத் ஓவர் சொதப்பல்:

டெத் ஓவர்களில் அதிக ரன்களை அடிக்கும் அணி மும்பை இந்தியன்ஸ்தான். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், க்ரூணால் பாண்ட்யா என வரிசைகட்டி நின்று அசால்ட்டாக கடைசி 5 ஓவர்களில் 100 ரன்களை அடிப்பார்கள். ஆனால், இந்த சீசனில் மும்பை அணி டெத் ஓவர்களில் கடுமையாக சொதப்புகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் மட்டும் 16-20 ஓவர்களில் 13 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது மும்பை அணி. இந்த ஓவர்களில் ஒரு சிக்சரை கூட மும்பை அணியினர் அடித்திருக்கவில்லை. இந்த போட்டியிலும் கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ரூணால் பாண்டியா என பிக் ஹிட்டர்கள் எல்லாருமே சொதப்பினர்.

மிரட்டிய ரஸல்:

Andre Russell | KKR v MI
Andre Russell | KKR v MI

18 மற்றும் 20வது ஓவரை ரஸல் கையில் கொடுத்தார் இயான் மோர்கன். இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை மொத்தமாக சிதைத்தார் ரஸல். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிடாக வீசி பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார் ரஸல். மெதுவாக அவர் வீசிய இந்த ஒயிடு பந்துகளை மும்பையின் பிக் ஹிட்டர்களால் ஓங்கி அடிக்கவே முடியவில்லை. இந்த யுக்தியின் மூலம் பொல்லார்ட், க்ரூணால் பாண்ட்யா உட்பட 5 பேட்ஸ்மேன்களை காலி செய்து மும்பையை ஆல் அவுட் ஆக்கினார் ரஸல்.

ராணாவின் பொறுப்பான ஆட்டம்:

நிதிஷ் ராணா | KKR v MI
நிதிஷ் ராணா | KKR v MI

153 ரன்களை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது கொல்கத்தா அணி. ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே பவுண்டரியோடு தொடங்கினார் ஓப்பனரான நிதிஷ் ராணா. போல்ட் வீசிய அடுத்த ஓவரிலும் பவுண்டரியும் சிக்சரும் அசத்தினார். பொறுமையாக அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரியாக்கி அடித்து அரைசதத்தை கடந்து ஏறக்குறைய கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தார்.

மேட்ச்சை மாற்றிய ராகுல் சஹார்:

8 ஓவர்களில் மும்பை அணி 62 ரன்களை எடுத்து விக்கெட் இழக்காமல் இருந்தது. விக்கெட்டுகளோடு ரன்ரேட்டையும் கைக்குள் வைத்திருந்ததால் கொல்கத்தா எளிதாக வென்றுவிடும் எனத் தோன்றியது. ஆனால், ராகுல் சஹார் எல்லாருடைய எண்ணங்களையும் பொய்யாக்கினார். ஒரே ஸ்பெல்லில் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை மும்பை பக்கமாக திருப்பிவிட்டார். 9வது ஓவரில் ராகுல் சஹாரை முதல் ஓவரை வீச அழைத்தார் ரோஹித் ஷர்மா. அந்த ஓவரில் நன்கு செட்டில் ஆகியிருந்த ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார் ராகுல் சஹார். அடுத்த ஓவரில் ராகுல் திரிபாதியின் விக்கெட்டை வீழ்த்தியவர் அதற்கடுத்த ஓவரில் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனின் விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கெல்லாம் உச்சமாக தன்னுடைய கடைசி பந்தில் அரைசதம் கடந்திருந்த ராணாவை ஸ்டம்பிங் ஆக வைத்தார். ராகுல் சஹாரின் இந்த ஸ்பெல்தான் கேம் சேஞ்சிங் மொமன்டாக அமைந்தது.

ராகுல் சஹார் | KKR v MI
ராகுல் சஹார் | KKR v MI

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்:

கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கொல்கத்தா அணி எளிதாக வெல்லக்கூடிய நிலைதான் என்றாலும் மும்பை கம்பேக் கொடுத்து கொல்கத்தாவை காலி செய்தது அபாரமாக இருந்தது.

16வது ஓவரை க்ரூணால் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து ஷகிப்-அல்-ஹசனின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன்பின்னர் டெஸ்ட் மேட்ச் மாதிரி ஸ்லிப், சில்லி பாயின்ட், ஷார்ட் லெக் எல்லாம் வைத்து பேட்ஸ்மேனை கட்டம் கட்டி ரோஹித் ஷர்மா அட்டாக் செய்தார். இதே ஓவரில் ரஸல் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை க்ரூணாலே தவறவிட்டார். ஆட்டம் இன்னும் பரபரப்பானது. தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸல் க்ரீஸுக்குள் நிற்க, 4 ஓவர்களில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை. 17வது ஓவரில் பும்ரா ஒரு நோபாலுடன் பவுண்டரியும் கொடுத்து 8 ரன்களை வழங்கினார். 18வது ஓவரில் க்ரூணால் பாண்ட்யா மீண்டும் வந்து மிரட்டலாக வீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்துவிட்டு சென்றார்.

19வது ஓவரை பும்ரா வீசினார். இதுதான் வெறித்தனமான ஓவர். டீகே மற்றும் ரஸலால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நான்கு சிங்கிள்கள் மட்டுமே வந்தன. இதனால் கொல்கத்தா அணி கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை உருவானது. ட்ரென்ட் போல்ட் 20வது ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ரஸல் மற்றும் டீகே ஆளுகொரு சிங்கிள் எடுக்க, காலை குறி வைத்து வீசப்பட்ட மூன்றாவது பந்தில் போல்ட்டிடமே கேட்ச் கொடுத்து ரஸல் வெளியேறினார். அவ்வளவுதான் மும்பையின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அடுத்த பந்திலேயே பேட் கம்மின்ஸுக்கு ஸ்டம்புகளைத் தெறிக்கவிட்டு மும்பை அணியை வெற்றிக் களிப்பில் ஆழ்த்தினார் போல்ட். மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் பரபர வெற்றியை பதிவு செய்தது.

ட்ரென்ட் போல்ட் | KKR v MI
ட்ரென்ட் போல்ட் | KKR v MI

கொல்கத்தா அணி மிகச்சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை சராசரி ஸ்கோருக்கு குறைவாகவே ஆல் அவுட் ஆக்கியிருந்தது. பேட்டிங்கிலும் முதல் 10 ஓவர்களை அட்டகாசமாக ஆடியிருந்தது. ஒட்டுமொத்தமாக 40 ஓவர்களில் 30 ஓவர்களில் கொல்கத்தா அணியே ஆதிக்கம் செலுத்தியது. கடைசி 10 ஓவர்களில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் வெறித்தனமாக பந்துவீசி கொல்கத்தாவை காலி செய்துவிட்டது.

மும்பை இந்தியன்ஸ் என்றாலே கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய அலர்ஜியாகவே இருக்கிறது. இதுவரை 28 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா அணி வெறும் 6 முறை மட்டுமே வென்றுள்ளது. இன்றைய போட்டியில் எளிதில் வென்று இந்தக் கணக்கை கொஞ்சம் கூட்டலாம் என கொல்கத்தா அணி நினைத்திருந்தது. வட போச்சே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு