Election bannerElection banner
Published:Updated:

கோலி 17 கோடி, தோனி 15 கோடி, ஆனால், பாவம் சஞ்சு சாம்சன்... ஐபிஎல் கேப்டன்களின் சம்பளம் என்ன?! #IPL

தோனி - கோலி
தோனி - கோலி

ஐபிஎல் மூலமாக மட்டுமே கடந்த 13 சீசன்களில் மொத்தமாக 140 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றிருக்கிறார் கோலி. ஆனால், இவர் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

2008-ல் தொடங்கிய ஐபிஎல் வெற்றிகரமாக 14வது சீசனை எதிர்நோக்கியிருக்கிறது. பொதுத்தேர்தல், கொரோனா என எவ்வளவு அச்சுறுத்தல்கள் வந்தபோதும் ஓர் ஆண்டுகூடத் தடைபடாமல் ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது பிசிசிஐ. 2021 சீசனுக்கான ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தற்போதைய 8 அணிகளின் கேப்டன்களின் சம்பளம் என்ன?!

விராட் கோலி - 17 கோடி

விளம்பர ஒப்பந்தங்கள் இல்லாமல் அணி நிர்வாகத்திடம் இருந்து மட்டும் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஐபிஎல் வீரர் மற்றும் கேப்டன் விராட் கோலி. 2008-ல் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் இருக்கும் கோலிக்கு தற்போதைய சம்பளம் ஓர் ஆண்டுக்கு 17 கோடி ரூபாய். ஐபிஎல் மூலமாக மட்டுமே கடந்த 13 சீசன்களில் மொத்தமாக 140 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றிருக்கிறார் கோலி. ஆனால், இவர் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

ரோஹித் ஷர்மா - 15 கோடி

ஐபிஎல் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் ஷர்மா. இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியனாகியிருக்கிறது. இவரது தற்போதைய சம்பளம் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய். விளம்பர வருமானம் இல்லாமல் ரிலையன்ஸிடம் இருந்து பெற்ற ரோஹித்தின் சம்பளம் மட்டுமே 150 கோடியைத் தொடுகிறது.

David Warner
David Warner

டேவிட் வார்னர் - 12.5 கோடி

சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் கேப்டனான ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 12.5 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் டாப் 10 ரன்னர்ஸ் லிஸ்ட்டில் இடம்பிடித்துவிடுவார் டேவிட் வார்னர். ஸ்மித்துக்கு ராஜஸ்தான் அணி டாட்டா காட்டியபோதும், வார்னரை விடாமல் வாரி அணைத்துக்கொண்டிருக்கிறது சன் ரைசர்ஸ்.

லோகேஷ் ராகுல் - 11 கோடி

கடந்த ஆண்டுதான் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆனார் லோகேஷ் ராகுல். கேப்டன்ஸியில் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறியவர், அதன்பிறகு கொஞ்சம் வேகம் எடுத்து தொடர்ந்து வெற்றிகள் பெற்றுத்தந்து அசத்தினார். ஆனாலும், பஞ்சாப்பால் ப்ளே ஆஃபுக்குள் நுழையமுடியவில்லை.

மோர்கன்
மோர்கன்

இயான் மோர்கன் - 5.4 கோடி

கடந்த சீசனின் பாதியில் தினேஷ் கார்த்திக்கைக் கழற்றிவிட்டு மோர்கனை கேப்டன் ஆக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கனுக்கு, ஐபிஎல் கேப்டன்கள் வரிசையில் குறைவான கட்டக்கடைசி சம்பளம்தான். ஆனால், அடுத்த மெகா ஏலத்தில் மோர்கனின் சம்பளம் சில பல கோடிகள் உயரும் என எதிர்பார்க்கலாம்.

ஷ்ரேயாஸ் ஐயர் - 7 கோடி

கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு முழுவதுமாகத் தலைமையேற்று மாற்றம் முன்னேற்றம் கண்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரின் சம்பளமும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. தற்போது 7 கோடியாக இருக்கும் இவரின் சம்பளம் டெல்லி கோப்பையை வென்றால் கோலி, ரோஹித்தின் அளவுக்கு உயர்ந்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.

சஞ்சு சாம்சன் - 7 கோடி

ஐபிஎல் கேப்டன்கள் லிஸ்ட்டில் புதுவரவு சஞ்சு சாம்சன். ஸ்டீவ் ஸ்மித்தைக் கழற்றிவிட்டு இந்திய கேப்டன்தான் வேண்டும் என சஞ்சு சாம்சனை கேப்டனாக்கியிருக்கிறது ராஜஸ்தான் அணி. ஒரு போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடுவது, ஒரு போட்டியில் டக் அவுட் ஆவது என இவரின் பேட்டிங்கில் ஒரு ஸ்டெபிளிட்டி இருக்காது என்பதுதான் பிரச்னை. கேப்டனாக ராஜஸ்தான் அணிக்கு எப்படி சிறப்புகள் செய்கிறார் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்திய கேப்டன்களில் குறைவான சம்பளம் சஞ்சு சாம்சனுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது!

தோனி
தோனி
twitter.com/ChennaiIPL

மகேந்திர சிங் தோனி - 15 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸின் சூப்பர் கேப்டன். கடந்த ஆண்டு மட்டுமே இவரின் கேப்டன்ஸி சொதப்பியது. மற்றபடி தொடர்ந்து 12 ஆண்டுகளாக ஒரு அணியை ஃப்ளே ஆஃபுக்குள் கொண்டுபோன ஒரே கேப்டனாக சாதனைப்படைத்துவருகிறார் மகேந்திர சிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் மூலமாக மட்டுமே 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுவருகிறார் தோனி. இதுத்தவிர இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றுவதால் அதற்கான சம்பளம் தனி. ஐபிஎல் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்திடம் இருந்து மட்டுமே இதுவரை 155 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெற்று அதிக சம்பளம் வாங்கிய ஐபிஎல் வீரர் என்கிற பெருமையைப் பெற்று முதலிடத்தில் தொடர்கிறார் தோனி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு