Published:Updated:

PBKS v KKR: கொல்கத்தாவின் 3D பெர்ஃபாமன்ஸ்... பம்மி பதுங்கிய பஞ்சாப்!

PBKS v KKR

நான்கு போட்டிகளில் தோல்வியைக் கண்டு, மனரீதியாக மிகுந்த பாதிப்பை அடைந்திருந்த கேகேஆருக்கு, இது மிகப்பெரிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

PBKS v KKR: கொல்கத்தாவின் 3D பெர்ஃபாமன்ஸ்... பம்மி பதுங்கிய பஞ்சாப்!

நான்கு போட்டிகளில் தோல்வியைக் கண்டு, மனரீதியாக மிகுந்த பாதிப்பை அடைந்திருந்த கேகேஆருக்கு, இது மிகப்பெரிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Published:Updated:
PBKS v KKR
சென்னை, மும்பையில் சுழன்று அடித்துக் கொண்டிருந்த ஐபிஎல் புயல், வடக்கு மற்றும் மேற்கில் நகர்ந்து, டில்லி மற்றும் அகமதாபாத்தை ஆக்கிரமித்துள்ளது. மும்பையையே சென்னை மண்ணைக் கவ்வவைத்த மமதையோடு பஞ்சாப்பும், புள்ளிப்பட்டியலின் பாதாளத்திலிருந்து மேலேறும் எண்ணத்தோடு கேகேஆரும் களமிறங்கின.

டாஸ் வென்ற மோர்கன், இரண்டாவது பாதியில் மைதானம் பேட்ஸ்மேனுக்கு நன்றாகவே ஒத்துழைக்கும் என்பதால், பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். என்னவானாலும் பரவாயில்லை என அதே பிளேயிங் லெவனோடு கேகேஆர் களமிறங்க, பஞ்சாப்கிங்ஸ், ஃபேபியன் ஆலனுக்கு விடைகொடுத்து, ஜோர்டனை இறக்கி இருந்தது.

PBKS v KKR
PBKS v KKR

ஷிவம் மவி வீசிய முதல் ஓவரில், இரண்டு ரன்களோடு பம்மிய பஞ்சாப், கம்மின்ஸைப் பார்த்ததும் குஷியாகியது. ரெட்பால் கிரிக்கெட் ஆடுகிறார் என எழுந்த கேலிகளைப் பொய்யாக்க வந்துள்ளேன் என்பதைப் போல், கேஎல் ராகுல், கம்மின்ஸுக்கு ஒன்று, நரேனுக்கு இன்னொன்று என பவுண்டரிகளை அடித்ததோடு, கம்மின்ஸின் ஒரு பந்தை தேர்ட் மேன் திசையில் சிக்ஸருக்கு அனுப்ப, பழிக்குப் பழியாக, ராகுலுக்கு வீசிய அடுத்த பந்தை, மிட் ஆஃபில் இருந்த நரேனிடம் கேட்ச் கொடுக்கவைத்து, 20 ரன்களோடு வெளியேற்றினார் கம்மின்ஸ். 'கடைசில என்னையும் அடிச்சு ஆடவச்சு அவுட் ஆக்கிட்டீங்களேடா!' என்பதைப்போல முதல்வன் அர்ஜுன் முகபாவனையோடு வெளியேறினார் ராகுல். முதல் விக்கெட்டாக ராகுல் கிடைப்பதெல்லாம் நூற்றாண்டுக்கொருமுறை நடப்பதெனக் கொண்டாடியது கேகேஆர்.

PBKS v KKR
PBKS v KKR

பவர்பிளேயில் வெறும் 37 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது பஞ்சாப். புயலாய் வந்த கெயிலை, அதைவிட வேகமாக வெளியே செல்லவைத்தார் ஷிவம் மவி. கோல்டன் டக்காக கெயில் கிடைப்பதெல்லாம், யார் செய்த புண்ணியமோ எனக் கூத்தாடியது கொல்கத்தா கேம்ப்‌. சுற்றித்தாக்கும் தந்திரத்தோடு, ஷிவம் மவியின் மொத்த ஓவரையும் வீச வைத்தார் மோர்கன். 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர், தனது மேஜிக் ஸ்பெல்லால், பஞ்சாப்பின் ரன்ரேட், ராக்கெட்டேறாமல் பார்த்துக் கொண்டார். நடப்பு ஐபிஎல்லின் இரண்டாவது எக்கானாமிக்கல் ஸ்பெல் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பூரனுக்கு முன்னதாக, வரிசை மாற்றிவந்த ஹுடாவையும், வீசிய மூன்றாவது பந்திலேயே, வெளியேற்றினார் பிரஷித் கிருஷ்ணா. மோர்கன் பிடித்த அந்த அருமையான கேட்சோடு, மூன்று ஓவர்களில், வரிசையாக, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதம் நிகழ்த்தியது கேகேஆர்.

இந்தத் தொடரில் இதுவரை, 17 விக்கெட்டுகளை மட்டுமே கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள், அணிக்கு அதுவும் பின்னடைவானது என்பதை மூன்றே ஓவரில் மாற்றி எழுதியுள்ளனர் இந்த மூவரும்‌.

PBKS v KKR
PBKS v KKR

மறுபுறம் மயாங்க் மட்டும் போக மாட்டேன் என அடம்பிடிக்க, அவரை அனுப்பிவைக்க, ரசல், பிரஷித் என ஒவ்வொருவராய் மோர்கன் வீசவைத்தார். ஆனால், வேலைக்காகவே இல்லை. ஆஃப் பிரேக்கால் அவருக்கு பிரேக் போட நரைனைக் கூப்பிட, நினைத்தபடியே நடந்தது. டீப் மிட் விக்கெட்டில் இருந்த திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து, நம்பிக்கையளித்துக் கொண்டிருந்த மயாங்கும் வெளியேறினார்‌. பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் கலக்கியது கேகேஆர். அதே வேகத்தில், ஹென்ரிக்ஸின் விக்கெட்டையும் நரைன் வீழ்த்த, 75/5 எனப் பதுங்கியது பஞ்சாப்.

வருணுக்கும் மோர்கனுக்கும் என்ன வாய்க்கால்வரப்புத் தகராறோ, பவர்பிளேயில் சிறப்பாகப் பந்துவீசும் அவரை, இன்றும் தாமதமாகவே கொண்டு வந்தார். கோலி, பட்லர் உள்ளிட்ட காஸ்ட்லி விக்கெட்டுகளை வீழ்த்தியும் இன்னும் அவர்மேல் நம்பிக்கை வரவில்லை. தன்னுடைய முந்தைய ஓவரில், பேக் டு பேக் சிக்ஸரையும் பவுண்டரியையும் அடித்த பூரனை, வீசிய மூன்றாவது ஓவரில், வருண் க்ளீன் போல்டாக்க, இந்த சீசனில், இரட்டை இலக்கத்தை முதல்முறையாக எட்டிவிட்ட சந்தோஷத்தோடு போனார் பூரன்.

PBKS v KKR
PBKS v KKR

அடுத்தடுத்த ஓவர்களில், ஷாருக்கானை பிரஷித்தும், ரவி பிஷ்னாயை கம்மின்ஸும் காலிசெய்து அனுப்ப, சதமாவது அடிக்குமா ஸ்கோர்போர்ட் என்ற நிலை இருந்தது. திடீரென கம்மின்ஸ் உடம்புக்குள் புகுந்ததைப் போல் ஜோராக ஆடத்தொடங்கினார் ஜோர்டன். ஒரு பவுண்டரி மற்றும் ஓவர் ஃபைன் லெக்கில் அடித்த சிக்ஸரோடு, 109க்குப் போனது பஞ்சாப். இறுதிஓவரிலும் இரண்டு சிக்ஸர்களோடு ஜோர்டன் சிறப்பிக்க, நான்காவது பந்திலேயே, அவரைக் க்ளீன் போல்டாக்கி ஆறுதல்தேடிக் கொண்டார், பிரஷித். ஜோர்டன் தனது தேர்வுக்கான நியாயத்தை 30 ரன்களோடு கற்பித்திருக்க, இறுதியில், கேஜிஎஃப்பாக அதிரடி காட்ட வேண்டிய ஸ்கோர்போர்டு, 123 என கேஜி புத்தகத்தில் இருக்கும் எண்களோடு முடிவுக்கு வந்திருந்தது.

மெக்கல்லம் ஒருகொயர் நோட்டில் எழுதி வைத்ததை எல்லாம் வைத்து, பௌலிங் ஃபீல்டிங் என அத்தனை டிபார்ட்மெண்டிலும் முன்களப்பணியை முனைப்போடு செய்திருந்தது கேகேஆர். பஞ்சாப்போ, ஹோம்வொர்க்கே செய்யாமல், கேம் பிளானே இல்லாமல், சென்னை டு அகமதாபாத் வந்து சேர்ந்த அலுப்பில் தூங்கி எழுந்ததும் கண்கூடாய்த் தெரிந்தது.

'வென்றாகவேண்டுமென்றால் விக்கெட்டுகள் வேண்டும்' என்ற உறுதியோடு தொடங்கியது, பஞ்சாப். சென்ற போட்டியைப் போன்றே ஹென்ரிக்ஸை வைத்து ராகுல் ஆரம்பிக்க, கில் பவுண்டரியோடு தொடங்கினார். அதே ஓவரில், ஃபுல் டாஸ் பாலோடு ராணாவுக்கு ஹென்ரிக்ஸ் ஆசைகாட்ட, பவுண்டரிக்குப் போகவேண்டிய பந்து கவரில் கேட்சானது, ஷாருக்கான் கையில். டக்அவுட்டாகி வெளியேறினார் ராணா.

PBKS v KKR
PBKS v KKR

எழ விடாமல் அடிக்க, அடுத்த ஓவரில் ஷமியை ராகுல் பந்துவீச வைக்க, தவறான ஷாட்டுக்குத் தனது விக்கெட்டை விலையாகக் கொடுத்து, கில் வெளியேறினார். 2018-ல் 40.60ஆக இருந்த கில்லின் ஆவரேஜ் நடப்புத்தொடரில், 14.83 ஆக இருக்கிறது. தொடர்ந்து ஏமாற்றி வருகிறார், கில்.

நரைன் உள்ளே வந்தார். பிளேயிங் லெவனில்கூட மாற்றம் வேண்டாம், பேட்டிங் ஆர்டரையாவது மாற்றினால்தான் வெற்றிவசமாகும் என்பதை மறுபடி மறந்திருந்தார் மோர்கன். வேகப்பந்து வீச்சாளர்கள் ஓய்வெடுக்கச் சென்றபின் வரவேண்டிய நரைனை முன்கூட்டியே களமிறக்கினார்.

PBKS v KKR
PBKS v KKR

ஷார்ட் பால்தானே நரைனின் பரமவிரோதி என, ஷார்ட் பால், பிறகு அவுட்சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் ஒரு பால் என வகைக்கொன்றாய் அர்ஷ்தீப் முயல, "நல்லாப் போடறியேப்பா தம்பி, உனக்குத்தான் என் விக்கெட்!" என்னும் ரீதியில், டைமிங் மிஸ்ஸான அவரது ஷாட், டீப் மிட் விக்கெட்டில் கேட்சானது. ரவி பிஷ்னாயின் நம்பவேமுடியாத ஒரு கேட்சின் மூலமாக, ரன்கணக்கைத் துவங்காத நரைனை வெளியேற்றினார். மெக்கல்லம் எழுதிய நோட்டில், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என பேட்டிங் பற்றியவை மட்டும் காணாமல் போனதோ என ரசிகர்கள் நொந்து போயினர். மோர்கன் உள்ளே வந்தார்.

நடுவில் திரிபாதியின் ஒரு ரன்அவுட் வாய்ப்பு, நானோவிநாடியில் தவறவிடப்பட, ரசிகர்களின் படபடப்பு படமெடுத்தாட, நானோசெகண்டில், 'போன உசுரு வந்துடுச்சே!' பாடாத குறைதான்.

எனினும், அதன்பின், மோர்கன் - திரிபாதி கூட்டணி, சற்று பக்குவமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ரவி பிஷ்னாயின் கூக்ளிகளுக்குக் கட்டுப்பட்ட ரன்ரேட்டை, ஜோர்டனின் ஓவரிலடித்த மூன்று பவுண்டரிகளினால் சரிக்கட்டினர். "பார்டன்ர்ஷிப்லாம் பில்ட் பண்றாங்கப்பா, எங்க கேகேஆரா இது!?", என ரசிகர்கள் வியக்கும்வகையில், அரைசதத்தை எட்டியது இந்தப் பார்ட்ர்னர்ஷிப்.

PBKS v KKR
PBKS v KKR

மோர்கனைக் குறிவைத்து, ஆஃப் ஸ்பின்னர் ஹுடாவை, ராகுல் கொண்டுவர, எதிர்பாராத வகையில், 32 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்த திரிபாதி ஆட்டமிழந்தார். "ரசலப்பா! ரொம்ப நேரம் எடுத்துக்காத, சீக்கிரம் முடிச்சு விட்டுடு" என ஒருவழியாக, ரசலை அனுப்பிவைத்தனர். அவர் சந்தித்த முதல் ஓவரை, ஷமியை வைத்து ராகுல் வீச வைத்தார். ஷமிக்கு எதிராக மட்டும் ரசலின் ஸ்ட்ரைக்ரேட், 285க்கும் மேல் என்பதால், சம்பவம் இருக்கென காத்திருந்தனர் ரசிகர்கள். ஷமியின் ஸ்பெல்லின் கடைசி ஓவரில், இரண்டு பந்துகளில் ரசல் ரன் எடுக்கத்தவறி, தான் சந்தித்த மூன்றாவது பந்தை, பவுண்டரிக்கு அனுப்பினார். "இம்முறை என்முறை!", என்பதைப்போல, கடைசிபந்தில் அற்புதமான ஒரு யார்க்கரை ஷமி வீச, அதைச் சமாளித்த ரசல், "வெல் பௌல்ட்!" என்பதைப்போல், சிரிப்புடன், பார்வைப் பரிமாற்றம் செய்தது, சுவாரஸ்யமான தருணமாக இருந்தது.

ரசல் வந்தும் ரன்கள் ஏறவிடாதபடி கட்டுக்கோப்பாகப் பந்துவீசியது பஞ்சாப். குறிப்பாக, ரவி பிஷ்னாய், தான்வீசிய மூன்றாவது ஓவரில், வெறும், மூன்று ரன்களை மட்டுமே தந்தார். ரசலின் வெறியாட்டத்தைக் காணக் காத்திருந்த ரசிகர்களுக்குக் காணக்கிடைத்ததோ அவரது ரன்அவுட்! ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல என்பதுபோல், "எதையும் தாங்கும் இதயம், இதையும் தாங்கும்!", 35 பால் இருக்கு, 26 ரன்தானே தேவை, தினேஷ் - மோர்கன் பார்த்துப்பாங்க என்று சற்றே ஆறுதல்படுத்திக் கொண்டனர்.

விட்டால் இந்தப் போட்டியிலும் தியாகியாக மாறி, இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொடுக்க வேண்டியதிருக்கும் என பயந்த மோர்கன், ஹுடா ஓவரில், அடுத்தடுத்து ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை அடித்து ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைக்க, 17-வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்து, வின்னிங் ஷாட்டாக இன்னொரு பவுண்டரியையும் அடித்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணியை வெல்ல வைத்தார் தினேஷ் கார்த்திக்.

PBKS v KKR
PBKS v KKR

நான்கு போட்டிகளில் தோல்வியைக் கண்டு, மனரீதியாக மிகுந்த பாதிப்பை அடைந்திருந்த கேகேஆருக்கு, இது மிகப்பெரிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என 3D பெர்ஃபாமன்ஸ் கொடுத்த கேகேஆர், பஞ்சாப்பை கீழிறக்கி, ஐந்தாவது இடத்தில் ஜம்மென அமர்ந்துள்ளது.

கடைசி நான்கு இடங்களுக்கு அணிகள் மியூசிக்கல் சேர் ஆடிக்கொண்டிருக்கும் இன்னுமொரு போட்டியில், அடிமட்டத்தில் இருண்டு கிடந்த, கேகேஆர், பஞ்சாப்பிற்கெதிரான போட்டியில் எழுச்சி பெற்று, மீண்டெழுந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சறுக்குமரமாக அணிகள், மேலேறுவதும், கீழிறங்குவதும்தானே ஐபிஎல்லின் அழகே!