Published:Updated:

RR v SRH: வார்னர் இல்லாத சன்ரைசர்ஸ் சரியான முடிவா... பட்லரின் சதத்தால் முன்னேறிய ராஜஸ்தான்!

RR v SRH
RR v SRH

2016-ம் ஆண்டு, கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் அதற்குப் பிறகு, பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டதே இல்லை. இந்த இடத்திலிருந்து மீண்டெழுவது சன்ரைசர்ஸுக்குச் சவாலாகவே இருக்கப் போகிறது.

பிரச்னையின் ஆணிவேரை ஆராய்ந்து களைந்தெறியாமல், கேப்டனை மாற்றுவதை மட்டுமே தீர்வாகக் கருதிய சன்ரைசர்ஸ், முன்னிலும் மோசமானதொரு தோல்வியைப் பதிவு செய்துள்ளது. பட்லர் கொளுத்திய பட்டாசில், 200 ரன்களை எளிதாக எட்டிய ராஜஸ்தான், சுலபமான வெற்றியை பெற்றுள்ளது.

டாஸை வென்ற வில்லியம்சன், நேற்று மும்பை செய்த சேஸிங்கை மனதில் வைத்து ஃபீல்டிங் என்றார். வார்னரிடமிருந்து பறித்த கேப்டன் பதவியை கேனிடம் கொடுத்த அதிர்ச்சி அடங்கும் முன்பே, உத்தேசங்களை உண்மையாக்கி, வார்னரை வெளியே உட்கார வைத்திருந்தது சன்ரைசர்ஸ். மேலும், சுசித், கௌலுக்குப் பதிலாக, நபி, புவ்னேஷ்வர் மற்றும் சமத் சேர்க்கப்பட்டிருந்தனர். ராஜஸ்தானிலோ, உனத்கட், ஷிவம் துபேக்குப் பதிலாக, தாகியும், புதுமுகம் அனுஜும் சேர்க்கப்பட்டிருந்தனர்‌.

பட்லர், ஜெய்ஸ்வாலுடன் ராஜஸ்தான் தொடங்க, புதுப்பந்தை ஆயுதமாக்கும் புவனேஷ்வரைக் கொண்டு தொடங்கினார் வில்லியம்சன். ஃபுல்லர், இன்ஸ்விங் எனக் கட்டுக்கோப்பாக வீசிய புவி, இரண்டு ரன்களை மட்டுமேதர, அடுத்த ஓவரில் அர்ஷ்தீப்பும், நக்குல் பாலெல்லாம் வீசி நெருக்கடிதர, இரண்டு ஓவர்களில், ஐந்து ரன்களை மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்.

RR v SRH
RR v SRH

பட்லரின் விக்கெட்டை, நான்குமுறை ரஷித்கான் வீழ்த்தி இருக்கிறார் என்பதால், மூன்றாவது ஓவரிலேயே அவரை வில்லியம்சன் கொண்டுவர, மூன்று பவுண்டரிகளை அவரது ஓவரில் அடித்த மகிழ்வோடு எல்பிடபிள்யூவில் வெளியேறினார், ஜெய்ஸ்வால். வில்லியம்சனின் ஸ்மார்ட்மூவுக்கு கைமேல் பலன் கிடைத்தது, எனினும், பட்லருக்கு வைத்த குறியில், ஜெய்ஸ்வால் வீழ்ந்தார்.

உள்ளேவந்து சிக்ஸரோடு சாம்சன் தொடங்கினார். சன்ரைசர்ஸ் வரலாற்றில் முதல்முறையாக, ரஷித்துக்கு பவர்ப்ளேயில் இன்னொரு ஓவர் கொடுத்தார் வில்லியம்சன். அந்த ஓவரில், கூக்லியால் ரஷித் பட்லரை மிரட்ட, எல்பிடபிள்யூவில் அவர் அவுட்! கள அம்பயர் இல்லை என மறுக்க, ரிவ்யூ மீதமில்லாததால், அந்த ஒரு விக்கெட்டை விலையாய்த் தந்தது சன்ரைசர்ஸ். அந்த ஓவரின் கடைசிப்பந்தில் பட்லர் தந்த கேட்ச் வாய்ப்பையும் விஜய்சங்கர் கோட்டைவிட்டார். இந்த ஒரு விக்கெட்டின் விலை, மொத்த ஸ்கோரின் 56 சதவிகித ரன்களென்பது, அப்போதைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. பவர்பிளேயில், வெறும் 42 ரன்களை மட்டுமே தந்திருந்தது சன்ரைசர்ஸ்.

ராஜஸ்தானின் ரன்கள் குறைவாக இருக்கிறதென்ற கவலையில், கருணைகூர்ந்து, விஜய் சங்கருக்கு, வில்லியம்சன் ஒரு ஓவர்தர, தலா இரண்டு ஒய்டுகள், சிக்ஸர்களுடன், 18 ரன்களை வாரிவழங்கினார் அந்த வள்ளல். அவ்வப்போது, பால் பாய் போல, பவுண்டரி லைனுக்கு அருகே அமர்ந்திருக்கும் வார்னரை வேறுகாட்டி கண்கலங்கவைத்தார் கேமராமேன். 'தொடர் தோல்விக்குக் கேப்டனை மாற்றுவதே தீர்வா?!' என்ற கேள்வியை சன்ரைசர்ஸ் கேட்கவைத்து விட்டது. ஏற்கெனவே பேட்டிங் குறைபாடுள்ள அணியில், 500+ ரன்களைத் தொடர்ச்சியாக ஆறு சீசன்களில் எடுத்துள்ள ஒரு வீரரை, வெளியே உட்காரவைத்து, நபியைக் கொண்டுவந்தது, எந்தவகையில் சரியான முடிவென்ற வினா எழுந்தது.

RR v SRH
RR v SRH

மறுபக்கம், 50 ரன்களுடன் பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைக்கத் தொடங்கினர் சாம்சனும் பட்லரும். லாங்ஆஃபில் நின்றிருந்த மணீஷ் சாம்சனின் கேட்சைவிட்டு சமூகப் பணியாற்றினார். விக்கெட் விழுந்தேயாக வேண்டுமென ரஷித்துக்கு நான்காவது ஓவரும் கொடுக்கப்பட, "நீ போனபிறகு பார்த்துக்கொள்கிறோம்" என்பதைப்போல், வெறும் 6.00 எக்கானமியோடு, அவரை ராஜஸ்தான் அனுப்பிவைத்தது. பட்லரின் ஒற்றை விக்கெட்டுக்காக, தனது துருப்புச்சீட்டை, ஆட்டத்தின் பாதியிலேயே இழந்ததுபோலிருந்தது சன்ரைசரஸ்.

கேட்க யாருமில்லை என்பதைப்போல், புகுந்துவிளையாடத் தொடங்கியது இந்தக் கூட்டணி. சந்தீப்பின் கட்டர், யார்க்கர் என எல்லா வேரியேஷன்களுக்கும் விடைவைத்திருந்தது, இக்கூட்டணி. 39 பந்துகளில், பட்லரின் அரைச்சதமும்வர, 111/1 என ஸ்கோர்போர்டு காட்ட, அதன்பின், "ஸ்பீடு ஏத்து மாமூ", என அடித்தாடத் தொடங்கினர்.

RR v SRH
RR v SRH

நபியின் பௌலிங்கை, டி20-ல் சாம்சன் சந்தித்ததில்லை என்பதால், அவரையும் முயன்று பார்த்தார் வில்லியம்சன். சந்தித்த அவரது ஐந்துபந்துகளில், 20 ரன்களை விளாசினார், பட்லர். "வாங்கோ, வாங்குறதுக்கு வாங்கோ!", என்பதை போல், எல்லா பௌலர்களையும் பாகுபாடின்றி கவனித்தனர். ஒருவழியாக, விஜய் வீசிய பந்தில், பவுண்டரி லைனுக்கு அருகே, சமத் பிடித்த ஒரு அற்புத கேட்சால், சாம்சன் 48 ரன்களோடு ஆட்டமிழந்தார்.

'நான் ஒருத்தன் இருக்கேன்டா!' என்பதைப்போல், விக்கெட்டுக்கு பவுண்டரியால் பதில் சொன்ன பட்லர், 56 பந்துகளில், தனது முதல் ஐபிஎல் சதத்தை எட்டினார். 18.5 ஓவர்களிலேயே இரட்டைச்சதமடித்தது ராஜஸ்தான். அந்த ஓவரின் கடைசிப்பந்தில், சந்தீப்பின் பந்தில் போல்டான பட்லர், எட்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, 124 ரன்களைச் சேர்த்து, அற்புதமான ஒரு ஆட்டத்தை ஆடிய திருப்தியோடு வெளியேறினார். இறுதியாக, 221 என கடின இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான். ஒருகாலத்தில், சன்ரைசர்ஸின் பலமாகக் கொண்டாடப்பட்ட பௌலிங்யூனிட், தற்போது, துருப்பிடித்து மோசமான நிலையிலிருப்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.

RR v SRH
RR v SRH

நடந்துமுடிந்துள்ள இன்னிங்ஸ்வரை, டெல்லி பிட்சின் ரன்ரேட், 9.8 என்பதால், 'வெற்றிக்கு வாய்ப்புண்டு' என்னும் நம்பிக்கையோடு தொடங்கியது சன்ரைசர்ஸ். அதுவும் மணீஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோவைக் கொண்டு தொடங்கியது, சரியான முடிவாக பார்க்கப்பட்டது. முதலிரு ஓவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள எடுத்த ஓப்பனர்கள், சகாரியா வீசிய மூன்றாவது ஓவரிலிருந்து அதிரடி அர்னால்டுகளாக ஆடத் தொடங்கினர். பவர்பிளே ஓவர்களில் ரன்ரேட் பத்தைத் தொட்டது.

திருப்புமுனையாக, விக்கெட் கணக்கை, ஏழாவது ஓவரிலேயே, முஸ்தாஃபிஜுர், தனது கட்டரினால், மணீஷை போல்டாக்கி வீழ்த்தியதன் மூலம் தொடங்கி வைத்தார். வில்லியம்சன் உள்ளே வந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே, இந்த இரு பேட்ஸ்மேன்களுக்கும் கட்டம்கட்ட, லெக் ஸ்பின்னர் திவேதியாவைக் கொண்டு வந்தார் சாம்சன். எதிர்பார்த்ததைப் போலவே, பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார் திவேதியா. அனுஜ் பிடித்த கடினக்கேட்சால், அபாயகரமான பேர்ஸ்டோவைக் காலி செய்தது ராஜஸ்தான்.

RR v SRH
RR v SRH

அடுத்துவர இருக்கும் வீரர்களின் பெயர்களையும், அவர்களது சமீபத்திய ஆட்டத்திறத்தையும், வைத்துக் கணக்கிட்ட போதே, போட்டியின் முடிவு விளங்கிவிட்டது. கேப்டனாக வார்னர் சரியாகச் செயல்படவில்லை என்று சன்ரைஸர்ஸ் நிர்வாகம் நினைத்திருந்தாலும், பேட்ஸ்மேனாகவாவது அவரைத் தொடர்ந்திருக்கச் செய்திருக்கலாம். அதனைச் செய்ய அவர்கள் தவறியதன் விளைவை அடுத்துவந்த ஓவர்கள் சுட்டிக் காட்டின.

பேர்ஸ்டோவுக்கு அடுத்ததாக வந்தார் விஜய் சங்கர். மோரீஸ் வீசிய பந்தில், வில்லியம்சன் தந்த ஒரு கேட்ச் வாய்ப்பை சகாரியா தவறவிட, 'அவர் தராவிட்டால் என்ன நான் தருகிறேன்!' என்பதைப் போல், விஜய் அடுத்த பந்தை புல் ஷாட்டாக்க முயன்று, மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முப்பரிமாண வீரர், ஃபீல்டிங், பௌலிங் பேட்டிங் என மூன்றிலும் சிறப்பாய்ச் சோதிக்க, அது சன்ரைசர்ஸுக்கு பாதகமாய் முடிந்தது‌.

அடுத்ததாக வந்த, கேதர் ஜாதவ், வில்லியம்சனுடன் இணைந்து, அடுத்ததாக ஒரு மினி பார்ட்னர்ஷிப்பை பில்டப் செய்ய முயல, 13 பந்துகள் என்னும் சொற்ப ஆயுளோடே முடிவுக்கு வந்தது அது. சன்ரைசர்ஸிடம் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த கடைசி நம்பிக்கையும் காய்ந்து போகும்படி, தாகி வீசிய பந்தில், வில்லியம்சன், டீப் மிட் விக்கெட்டிலிருந்த மொரீஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, முடிவுக்கு வந்தது சன்ரைசர்ஸின் கதை. ஆனால், உண்மையில், பேர்ஸ்டோவின் விக்கெட் விழுந்தபோதே, அவர்களது முடிவுரைக்கான முகவுரை வரையப்பட்டதுதான் உண்மை.

RR v SRH
RR v SRH

அடுத்து இருந்த ஒரே கேள்வி, ராஜஸ்தான், சன்ரைசர்ஸை ஆல் அவுட் செய்யுமா, இல்லை அரை ஜீவனத்தோடு, இறுதிப்பந்துவரை சன்ரைசர்ஸ் போராடுமா என்பது மட்டுமே! நடுவில், மின்னல் போல வந்து சேர்ந்த நபி, 5 பந்துகளில் இரண்டை சிக்ஸராக்கி, ஒன்றை பவுண்டரியாக்கி, மைக்ரோ சைஸ் கேமியோவோடு, முஸ்தஃபிஜுரின் பந்தில் விடைபெற்றார். வார்னருக்கு மாற்றுவீரராக, ஜேசன் ராயை சன்ரைசர்ஸ் முயன்றிருந்தாலாவது, போட்டியின் முடிவை மாற்ற, கொஞ்சமாவது வாய்ப்பு இருந்திருக்கலாம்.

வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், இறுதியாக, சம்பிரதாயத்துக்காக வீசப்பட்ட பந்துகளை கேதரும் சமத்தும் சந்தித்துக் கொண்டிருந்தனர். ஒரே ஓவரில் இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்த மோரீஸ், மூன்று விக்கெட்டுகளை தன் பெயரில் பதிவேற்றிக் கொண்டதுடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், 14 விக்கெட்டுகளோடு, இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். அதற்கடுத்த ஓவரிலேயே, ரஷித் விக்கெட்டை வீழ்த்தினார் முஸ்தாஃபிஜுர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 165 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸ் சேர்த்திருந்தது.

RR v SRH
RR v SRH

சன்ரைசர்ஸ் இதுவரை ஆடியிருந்த பெரும்பாலான போட்டிகளில், மிக நெருங்கிச் சென்றுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது. ஆனால், இந்தப் போட்டியில், 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, மோசமான நிலையில் முடித்துள்ளது. டில்லி போன்ற ஒரு ஃபிளாட் டிராக்கில், பலமான பேட்டிங் வரிசையோடு களமிறங்காமல், தங்களது பேட்டிங்கை மேலும் வலுவிழக்கச் செய்வதைப் போல், வார்னரை வெளியே உட்கார வைத்த போதே, தங்களுக்கான குழியை அவர்களே வெட்டிக் கொண்டார்கள். ஏழு போட்டிகளில், ஒன்றை மட்டுமே வென்று, தங்களது பிளே ஆஃப் வாய்ப்பைக் கடினமாக்கிக் கொண்டுள்ளது சன்ரைசர்ஸ்.

2016-ம் ஆண்டு, கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் அதற்குப் பிறகு, பிளே ஆஃப் வாய்ப்பைத் தவற விட்டதே இல்லை. இந்த இடத்திலிருந்து மீண்டெழுவது சன்ரைசர்ஸுக்குச் சவாலாகவே இருக்கப் போகிறது. ராஜஸ்தானோ இந்த வெற்றியின் மூலம், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அடுத்த கட்டுரைக்கு