Published:Updated:

CSK v RCB: இது ஜடேஜா வெர்சஸ் ஆர்சிபி-ங்க... சென்னையின் பெரும் எழுச்சியும் கோலி செய்யும் தவறுகளும்!

CSK v RCB

'பௌலிங் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சியா? ஊருக்குள்ள கேட்டுப் பாரு, பீல்டிங் சும்மா தெறியா இருக்கும்' என அடுத்த ஓவரில் க்றிஸ்டியனை ரன் அவுட்டும் செய்தார் ஜட்டு. 'என்னாமா உழைக்கிறான்யா' என கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டார் தோனி.

CSK v RCB: இது ஜடேஜா வெர்சஸ் ஆர்சிபி-ங்க... சென்னையின் பெரும் எழுச்சியும் கோலி செய்யும் தவறுகளும்!

'பௌலிங் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சியா? ஊருக்குள்ள கேட்டுப் பாரு, பீல்டிங் சும்மா தெறியா இருக்கும்' என அடுத்த ஓவரில் க்றிஸ்டியனை ரன் அவுட்டும் செய்தார் ஜட்டு. 'என்னாமா உழைக்கிறான்யா' என கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டார் தோனி.

Published:Updated:
CSK v RCB
கால்பந்து உலகில் எல் க்ளாஸிகோ என்கிற பதம் ரொம்பவே பிரபலம். பரம வைரிகளான ரியல் மேட்ரிட்டும் பார்சிலோனாவும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தை அப்படி சொல்வார்கள். கிரிக்கெட் லீக்கை பொறுத்தவரை அந்தப் பதம் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிகளுக்கே பொருந்தும். இந்த முறை மும்பை அணி கொஞ்சம் சொதப்ப, 'ஹலோ நாங்க வேணா அந்த இடத்துக்கு வரட்டுமா?' என கேப்பில் நுழைய பார்த்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஆனால் சென்னை அணியோ, 'அட இது நம்ம பாடிசோடா' என பழக்கதோசத்தில் தூக்கிக்கொண்டுபோய் குமுறியதுதான் மிச்சம்.

தொடர்ந்து நான்கு போட்டிகளில் ஜெயித்து கொஞ்சம் மிதந்தபடிதான் இந்தப் போட்டிக்கு வந்தது ஆர்.சி.பி. மறுபுறம், 'நாங்க வைக்கிற குறி எப்போனாலும் தப்பும். எல்லாத்துக்கும் பழகிக்கங்க' ரேஞ்சில்தான் ஒவ்வொரு ஆட்டத்தையும் அணுகுகிறது சென்னை. மொயின் சென்ற ஆட்டத்தின் பாதியிலேயே பீல்டிங் செய்யாமல் பெவிலியன் போய்விட்டதால் இந்த ஆட்டத்தில் அவரின் இடம் சந்தேகமாய் இருந்தது. நினைத்ததைப் போலவே அவருக்கு ஓய்வு கொடுத்து தாஹிரை உள்ளே அழைத்து வந்திருந்தார் தோனி. (அடுத்த ஆட்டத்தில் வந்துவிடுவார் எனச் சொல்லியிருக்கிறார் உத்தப்பா) இங்கிடியும் வெளியே அமர, பிராவோ இன்.

CSK v RCB
CSK v RCB

மறுபக்கம் கோலியோ கேன் ரிச்சர்ட்சனையும் ஷபாஸ் அஹ்மதையும் வெளியே அனுப்பிவிட்டு க்ரிஸ்டியனையும் சைனியையும் உள்ளே அழைத்து வந்திருந்தார். பிட்ச் ஸ்லோவாகும் என நினைத்து தோனி பிராவோவையும் தாஹிரையும் கொண்டுவந்தது சரியா, இல்லை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என நினைத்து கோலி சைனியை உள்ளே அழைத்து வந்தது சரியா என அப்போதே கேள்வி எழுந்தது. 'தம்பி, நான் இங்க ராஜாவுக்கெல்லாம் ராஜா' என கடைசியில் காலரை தூக்கிவிட்டது தோனிதான். டாஸிலும் அதுவே எதிரொலித்தது. டாஸ் வென்று, 'ட்யூ இருக்காது. பிட்ச் இரண்டாம்பாதியில் ஸ்லோவாகும். எனவே நாங்கள் முதலில் பேட்டிங்' என அறிவித்தார் தோனி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

170 ரன்கள் எடுத்தாலே டிபெண்ட் செய்ய நல்ல வாய்ப்பிருக்கும் பிட்ச் என்பதையறிந்து மெதுவாகவே தொடங்கினார்கள் டுப்ளெஸ்ஸியும் கெய்க்வாட்டும். முதல் ஐந்து ஓவர்களில் வெறும் 37 ரன்கள்தான். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் 14 ரன்கள் வர, 51 ரன்கள் என்கிற டீசன்ட் ஸ்கோரோடு மிடில் ஓவர்களில் அடியெடுத்து வைத்தது. சிக்கும் பந்தை பவுண்டரி லைனைத் தாண்டி அடிப்பது, இல்லையென்றால் ஸ்ட்ரைக் ரொட்டெட் செய்வது என டிபிக்கல் பேட்ஸ்மேன் இன்னிங்க்ஸை இருவரும் ஆட, ஸ்கோர் அதுபாட்டுக்கு உயர்ந்துகொண்டே இருந்தது. அதுவும் சாஹல் ஓவரில் கெய்க்வாட் அடித்த ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் செம ஸ்டைல்.

CSK v RCB
CSK v RCB

சாஹலின் அடுத்த ஓவரில் அவர் கெய்க்வாட்டை பழிவாங்க, 9.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. அடுத்து வந்த ரெய்னா, 'அடிச்சா சிக்ஸ்தான் சார்' என்கிற மோடிலேயே இருக்க, அடுத்தடுத்து மூன்று சிக்ஸ்கள் பறந்து ரன்ரேட்டை எகிற வைத்தன. ஷார்ட் பாலில் தடுமாறும் ரெய்னாவை சைனி வைத்து சமாளிக்காமல் சுந்தர், க்றிஸ்டியனை எல்லாம் பந்துபோட அழைத்தது டிபிக்கல் கேப்டன் கோலி சொதப்பல். கடைசியாய் அவர் சைனியை அழைத்துவர அவர் பந்திலும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டுவிட்டு அடுத்த ஓவரில் ஹர்ஷல் படேலிடம் வீழ்ந்தார் ரெய்னா. அடுத்த பந்திலேயே டுப்ளேஸ்ஸியும் கிளம்ப, சட்டென பழைய நினைவுகள் எல்லாம் சென்னை ரசிகர்கள் கண்முன் வந்துபோனது.

அடுத்த ஓவரில் சுந்தர் வீசிய ஷார்ட் லென்த் பாலை டீப் மிட்விக்கெட் பக்கம் ஜட்டு இழுத்து அடிக்க நேராக க்றிஸ்டியன் கைக்கு போனது பந்து. அதை சட்டென பிடித்து கீழே தவறவிட்டுவிட்டு 'கைதி' படத்தில் பிரியாணி அண்டா முன் உட்காரும் கார்த்தி போல கீழே உட்கார்ந்தார் க்றிஸ்டியன். அந்த ஒரு தவறு கிட்டத்தட்ட ஆர்.சி.பியின் ரிசல்ட்டை அப்போதே சொல்லிவிட்டது. அடுத்துவந்த ஜேமிசன், பிராவோ ஸ்டைலில் ஸ்லோ பால்களை முயல, 'ஹே நல்லா போட்டுக்கொடுக்குறான்ப்பா' என 17 ரன்களை குவித்தார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். 16 ஓவர்களில் 134/3 என்றிருந்தது ஸ்கோர்.

ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் மொத்தமே 11 ரன்கள்தான். ராயுடுவும் வேறு நடையைக் கட்டியிருந்தார். சரி ஒரு 170 ரன்னை எப்படியாவது நெருங்கிடுவோம் என 19வது ஓவரில் 9 ரன்கள் எடுத்தார் ஜடேஜா. ஸ்கோர் இப்போது 154/4. கடைசி ஓவர் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக இந்த சீசனில் அடையாளம் காணப்பட்டிருக்கும் ஹர்ஷல் படேல். 'தம்பி நீ ஸ்பெஷலிஸ்ட்டா இருக்குறதே இன்னும் எனக்கு பந்து போடாத ஒரே காரணத்துனாலதான்' என முதல் இரண்டு பந்துகளை சிக்ஸுக்கு பறக்கவிட்டார் ஜடேஜா.

'நேரா போட்டாத்தான அடிக்கிற' என அடுத்த பந்தை கீப்பருக்கே தூக்கிப் போட்டார் ஹர்ஷல். அதையும் குறுக்கே புகுந்து சிக்ஸுக்குப் பறக்கவிட்டார் ஜட்டு. ஃப்ரீ ஹிட்டான அடுத்த பந்தும் சிக்ஸுக்குப் பறந்தது. 25 ரன்கள் மூன்றே பந்துகளில். அதற்கடுத்த பந்தில் இரண்டு ரன்கள் தட்டிவிட்டு ஐந்தாவது பந்தில் மேலும் ஒரு சிக்ஸ். இன்னும் ஒரு சிக்ஸ் அடித்தால் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்கள் என்கிற சாதனையை படைக்கலாம் ஜடேஜா.

CSK v RCB
CSK v RCB

ஆனால், 'அண்ணே ஒன்பது வருஷமா ஆடி இப்போத்தான் பர்பிள் கேப் எல்லாம் வாங்குற நிலைமைல இருக்கேன்' என்பதுபோல ஹர்ஷல் பாவமாய் பார்க்க, கடைசி பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ஜடேஜா. மொத்தமாய் அந்த ஓவரில் 37 ரன்கள். ஆனாலும் ஒரு மோசமான ரெக்கார்டுக்கு ஹர்ஷல் சொந்தமாகிவிட்டதுதான் சோகம். ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற பட்டத்தை கொச்சி டஸ்கர்ஸ் அணியின் பிரஷாந்த் பரமேஸ்வரனோடு பங்குபோட்டுக்கொள்கிறார். கொச்சியை வச்சி செய்தது அப்போது பெங்களூரு அணியில் இருந்த கெயில். 'நீ பற்ற வைத்த நெருப்பொன்று!'

CSK v RCB
CSK v RCB

170 ரன்கள் தாண்டினாலே அதிகம் என்ற பிட்ச்சில் சர் ஜடேஜாவின் சர்ர்ர்ர் மாயத்தால் 191 ரன்களை எட்டியது சென்னை டார்கெட் பெரியது என்பதால் அதிரடியாகவே ஆட்டத்தைத் தொடங்கினார்கள் படிக்கல்லும் கோலியும். அதுவும் படிக்கல் எல்லாம். 'என் சங்கத்து ஆளை கடைசி ஓவர்ல அடிச்சது யாரு' மோடில்தான் முழுக்கவே ஆடினார். முதன் மூன்று ஓவரிலேயே 44 ரன்கள். ஆனாலும் ஆர்.சி.பியின் சொதப்பல்கள் தொலைதூர ஏதோவொரு கிரகத்தின் மைக்ரோ உயிரிகள் வரை பிரபலம் என்பதால் பொறுமை காத்தார்கள் சென்னை ரசிகர்கள். நினைத்தது போலவே 4வது ஓவரின் முதல் பந்தில் சுட்டிக்கொழந்தை சாம் கோலியை ஸ்லோ வைட் லென்த் பாலில் ஆசைகாட்டி ஏமாற்றி வீட்டிற்கு அனுப்பினார். கோலி இடதுகை பந்துவீச்சாளர்களிடம் வீழ்வது இது எத்தனையாவது முறை என்பது அவருக்கே வெளிச்சம்.

'பத்தல... எனக்கு இன்னும் ஸ்லோவா வேணும்' என தாக்கூரிடம் பந்தைக் கொடுத்தார் தோனி. அவர் படிக்கல்லின் உடலை ஷார்ட் பாலால் டார்கெட் செய்ய ரெய்னாவிடம் ஈஸியாய்க் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார் படிக்கல். வெற்றிக்குத் தேவை மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என இன்னும் இரண்டே விக்கெட்கள்தான். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 65/2.

இதன்பின்னர் தொடங்கியது வின்டேஜ் சி.எஸ்.கே ஆட்டம். மிடில் ஓவர்களை ஸ்பின்னர்கள் கொண்டு கடத்தி பேட்ஸ்மேன்களை பதற்றத்திற்கு உள்ளாக்கி மோசமான ஷாட் ஆடவைத்து வெளியே அனுப்பும் அதே ஸ்டைல். அதைத் தன் இரண்டாவது பந்திலேயே செய்தார் ஜடேஜா. சுந்தர் அவுட்! அடுத்த ஓவர் தாஹிர். இதுவரை களமிறங்காமல் சேர்த்து வைத்திருந்த வெறியை எல்லாம் தீர்த்துக்கொள்ள பந்தை விட்டெறிந்தார் தாஹிர். ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் தடுமாற மீண்டுமொரு முறை பிளான் ஒர்க் அவுட் ஆகியது. அடுத்த ஓவரில் ஜடேஜா வீசிய பாலை சிக்ஸ் அடிக்க முயன்று அவுட்டானார் மேக்ஸ்வெல். 12 ஆட்டங்களில் இதுவரை ஜடேஜாவை எதிர்கொண்டு ஆறுமுறை அவரிடம் விக்கெட்டை இழந்திருக்கிறார் மேக்ஸ்வெல்.

CSK v RCB
CSK v RCB

'பௌலிங் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சியா? ஊருக்குள்ள கேட்டுப் பாரு, பீல்டிங் சும்மா தெறியா இருக்கும்' என அடுத்த ஓவரில் க்றிஸ்டியனை ரன் அவுட்டும் செய்தார் ஜட்டு. 'என்னாமா உழைக்கிறான்யா' என கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டார் தோனி. 'இப்ப என்ன மிச்சம் இருக்குறது இந்தாளுதான' என டிவில்லியர்ஸையும் தன் அடுத்த ஓவரில் ஜடேஜா காலி செய்ய, 'பேசாம ஜடேஜாவை மட்டும் க்ரவுண்டுல இறக்கிவிட்டிருக்கலாம். 11 பேரா இறங்கி தப்புப் பண்ணிட்டோம் போலயே' என யோசிக்கத் தொடங்கினார்கள் சி.எஸ்.கே வீரர்கள்.

அப்புறமென்ன, டெயில் எண்டர்கள் தடவித் தடவி பத்து ஓவர்களைக் கடத்த, 'யார் பௌலிங் போட்டாலும் விக்கெட்டு கிடைக்குதுபா' என்கிற குஷியில் ஜாலியாய் ஆடினார்கள் சென்னை வீரர்கள். அதுவும் கடைசி இரண்டு ஓவர்கள் எல்லாம் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் 'நானும் ஆடுவேன்' என அடம்பிடிக்கும் வாண்டை சமாளிக்க டம்மியாய் ஓவர் போடுவார்களே... அப்படித்தான் இருந்தது. முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது ஆர்.சி.பி. பேட்டிங், பீல்டிங், பௌலிங் என எதையும் விட்டுவைக்காத ஜடேஜாதான் ஆட்டநாயகன்.

CSK v RCB
CSK v RCB
'ப்ளே ஆப் போக வாய்ப்பே கிடையாது' என்கிற வல்லுநர்களின் கணிப்பை பொய்யாக்கி, 'இந்தத் தடவையும் கஷ்டமோ' என்கிற ரசிகர்களின் சந்தேகங்களை சுக்குநூறாக்கி ஜம்மென டேபிள் டாப்பராய் அமர்ந்திருக்கிறது சென்னை. சென்றமுறை போல் அல்லாமல் ஓர் அணியாக எல்லா மேட்ச்சையும் ஆடுவதால் ப்ளே ஆப் வாய்ப்புகள் பிரகாசம்.
CSK v RCB
CSK v RCB

மறுபக்கம், இத்தனை நாள்களாய் வெற்றி தந்த மயக்கத்தில் கோலியின் அணித் தேர்வு சொதப்பல்கள் வெளியே தெரியவில்லை. ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. நான்கே பேட்ஸ்மேன்களோடு களமிறங்குவது, 43 போட்டிகளில் ஆடி இன்னமும் 500 ரன்களைக் கடந்திடாத க்றிஸ்டியனுக்கு திரும்பத் திரும்ப வாய்ப்பு கொடுப்பது, ஃபார்மில் இருக்கும் அசாருதீனுக்கு அணியில் இடம்கொடுக்காதது, பவர்ப்ளேயில் மின்னும் வாஷிங்டன் சுந்தருக்கு பந்தே கொடுக்காமல் வைத்திருப்பது என ஏகப்பட்ட சொதப்பல்கள். போதாதென்று அவர் தலைமையில் பீல்டிங்கிலும் சொதப்பித் தள்ளுகிறார்கள். இதை எல்லாம் சீக்கிரம் சரி செய்யாவிட்டால் ஈ சாலாவும் கப்பு நம்தில்லை.