Published:Updated:

IPL 2021: கோலிதான் வர்றாரு... கோப்பையைத் தூக்கப்போறாரு... ஏய் ஈ சாலா?! LEAGUE லீக்ஸ் - 1

கோலி | ஆர்சிபி
கோலி | ஆர்சிபி ( twitter.com/RCBTweets )

கோலியின் கேப்டன்சியும் சிறப்பாக அமைந்தால், தனது முதல் ஐபிஎல் கோப்பையில், ஆர்சிபி முத்தமிடும்... இந்த ஆண்டாவது அவர்களின் ஈ சாலா கப் கனவு நிறைவேறுமா... ஆர்சிபி-யின் பிரச்னைகளும், சவால்களும் என்னென்ன?!

சீசன் ஒன்றிலிருந்து, எல்லா வருடமும் விளையாடிய பெருமைக்குரிய ஆர்சிபி, கனவுக்கோப்பைக்காக வருடக்கணக்காகத் தவமிருக்கிறது. ஐபிஎல் அணிகளில், அதிக கேலிகளை எதிர்கொண்ட அணியும் இதுதான், எத்தனை வீழ்ச்சிகளைச் சந்தித்தாலும் அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் அணியும் இதுதான். 2009, 2011 மற்றும் 2016-ல் என மூன்றுமுறை கோப்பைக்கு மிகஅருகாமையில் சென்று கோட்டை விட்ட ஆர்சிபி, இந்த வருடம் பத்து வீரர்களை அதிரடியாக விடுவித்தது. மினி ஏலத்தில் 35 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல் உள்பட பல பவர்ஸ்டார்களை இறக்கியிருக்கிறது.

இந்த ஆண்டாவது ஆர்சிபிக்கு ஈ சாலா கப் கனவு நிறைவேறுமா... அவர்களின் பிரச்னைகளும், சவால்களும் என்னென்ன?!

பிரச்னை 1: லோயர் மிடில் ஆர்டர்!

பவர்ஃபுல் பேட்டிங் லைன் அப்பைக் கொண்ட ஆர்சிபியின் அடிநாதமே கோலியும், ஏபிடியும்தான். கடந்த ஐபிஎல்-ல், 3000 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கடந்த இவர்களைச் சுற்றித்தான் அணியின் பேட்டிங்லைன் அப்பே கட்டமைக்கப்பட்டிருந்தது‌. சென்ற வருடம், இவர்களுக்குக் கைகொடுத்தார் தேவ்தத். தனது அறிமுக சீசனிலேயே ஆர்சிபியின் சார்பில் அதிக ரன்களை (473) எடுத்தார். ஆனாலும் இன்னொரு ஓப்பனர் ஃபின்ச் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் வீரர்கள் மொத்தமாகச் சொதப்ப, பல போட்டிகளில், இதன்காரணமாக வீழ்ந்தது ஆர்சிபி. ஃபினிஷிங் வேலையை, அதிரடியாகச் செய்து காட்ட, ஒரு சரியான வீரர் அவர்களுக்கு அமையவில்லை.

RCB | IPL 2021
RCB | IPL 2021
twitter.com/RCBTweets

பிரச்னை 2: ஆர்சிபியும் ஸ்பின்னர்களும்!

உலகின் தலைசிறந்த வீரர்களாக கோலியும், ஏபிடியும் இருந்தாலும், ஸ்பின் பந்துகள், அவர்களைத் திணறடிக்கும் தோட்டாக்கள். லெக் ஸ்பின்னிங், மிஸ்டரி ஸ்பின்னிங், ஆஃப் ஸ்பின்னிங், ஸ்லோலெஃப்ட் ஆர்ம் ஆர்தடாக்ஸ் என ஸ்பின்னில் உள்ள அத்தனை வகைப் பந்துகள் மூலமாகவும், எதிரணிகள், சென்றமுறை ஸ்பின்னுக்கு ஒத்துழைத்த அரபு எமிரேட்ஸ் மைதானங்களில், இவர்கள் இருவர் மட்டுமில்லாமல் மற்ற ஆர்சிபி வீரர்களையும் திணறடித்தனர். 23 ஆர்சிபி விக்கெட்டுகளை கடந்தமுறை ஸ்பின்னர்கள் வீழ்த்தியிருந்தார்கள், இதில் குறிப்பாக, 14 முறை லெக் ஸ்பின்னர்களிடம் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள். அதேபோல், அணியின் வலக்கை ஆட்டக்காரர்கள், ஆஃப் ஸ்பின் பௌலிங்கில் ரன்கள் சேர்க்கத் திணறுவது தொடர்கிறது.

பிரச்னை 3: டெத்ஓவர் பௌலிங்!

பல ஆண்டுகளாக ஆர்சிபியால் சரிசெய்ய முடியாத ஒரு பிரச்னையாக இருப்பது இந்த டெத்ஓவர் பௌலிங். ஆர்சிபியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்கள் வழங்குதில் கொடை வள்ளல்கள். ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளருக்காக வருடக்கணக்காக தவமிருக்கிறது ஆர்சிபி. உமேஷ், சைனி, உடானா என எல்லாருமே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறந்த ஸ்பெல்களை வீசினார்களே தவிர, தொடர்ச்சியாக எல்லாப் போட்டியிலும் மிரட்டும் வகையிலான மேட்ச் வின்னிங் பர்ஃபாமென்சை யாருமே தரவில்லை. சிராஜின் 3/8 தவிர்த்து வேறெந்த குறிப்பிடத்தகுந்த சிறந்த பந்துவீச்சையும், சென்ற ஆண்டு, ஆர்சிபி பௌலர்களிடமிருந்து பார்க்க முடியவில்லை.

Siraj | RCB | IPL 2021
Siraj | RCB | IPL 2021
twitter.com/RCBTweets

பிரச்னை 4: நிலையாமையே நிலையானது!

ஆர்சிபியைப் பொறுத்தவரை, ஐபிஎல்-ல் நிலைத்தன்மை இல்லாத அணியாகவே இது இருந்து வருகிறது. போன சீசனில், முதல் பத்து போட்டிகளில், ஏழில் வென்று கோப்பைக்கனவை ரசிகர்களின் கண்களில் காட்டிய, ஆர்சிபி, அடுத்ததாக வந்த ஐந்து போட்டிகளை வரிசையாகத் தோற்றது. சாம்பியன் ஆசையை ப்ளே ஆஃபுடனே முடித்து வெளியேறியது. உச்சத்தைத் நோக்கி வெகுண்டெழுந்து முன்னேறுவதும், அங்கிருந்து ஏறிய வேகத்தில் சரிந்து விழுந்து மண்ணைக் கவ்வுவதும்தான் ஆர்சிபியின் ஸ்டைல்.

பிரச்னை 5: ஆட்ட வியூகங்கள்!

போட்டிக்கான ஒரு சரியான கேம் பிளானோடு களமிறங்காதது, ஆர்சிபியின் சறுக்கலுக்கான இன்னொரு காரணம். அதேபோல் பிளான் 'ஏ' வேலை செய்யாத நேரத்தில், அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்னும் முன்யோசனையில்லாமல், போட்டியின் போக்கிலே போய் பல சந்தர்ப்பங்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறது ஆர்சிபி. மும்பை இந்தியன்ஸைப் போல், போட்டியின் லகானை எந்த நொடியிலும் தங்களது கைப்பிடிக்குள் கொண்டு வரும் திறன் ஆர்சிபியிடம் இல்லை.

2021 சவால்கள்!

ஒவ்வொரு குறைபாடையும் பார்த்துப் பார்த்து நேர்செய்யும் நோக்கத்தில், ஃபிஞ்ச், உடானா உள்ளிட்ட பத்து வீரர்களை அதிரடியாக வெளியேற்றியது ஆர்சிபி. அதன் மூலமாக கிட்டத்தட்ட, 35 கோடி, அவர்களது பாக்கெட்டுக்கு வர, அதை வைத்து தங்களுக்குத் தேவையானவர்களை டார்கெட் செய்து தூக்கியது ஆர்சிபி.

அசாருதின் | RCB | IPL 2021
அசாருதின் | RCB | IPL 2021
twitter.com/RCBTweets

ஓப்பனராக தானே களமிறங்க இருப்பதாக கோலி கூறி இருப்பது, ஆர்சிபி பவர்ப்ளே ஓவர்களில் ரன்களைக் குவிப்பதற்கு பேருதவியாக அமையும். ஏனெனில், முன்னதாக, இந்த ஓப்பனர் ஸ்பாட்டில்தான் பல சம்பவங்களைக் கோலி செய்திருக்கிறார். கைவசமிருந்த 35 கோடியில், மேக்ஸ்வெல்லை, 14.25 கோடி கொடுத்தும், பேட்டிங்கோடு, வேகப்பந்து பிரச்னையை சேர்த்து சரி செய்வதற்காக ஆல் ரவுண்டர், கைல் ஜேமிசனையும் (15 கோடி) ஆர்சிபி வாங்கியது. இவ்வகையில், லோயர் மிடில் ஆர்டரைச் செப்பனிட, சுமார் 30 கோடிகளை, அதுவும் இரண்டே வீரர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது ஆர்சிபி.

இதன்பின் பின்ச் ஹிட்டராக, சையத்முஸ்தாக் அலி தொடரில், 37 பந்துகளில் சதமடித்த, அதிரடிமன்னன் அசாருதினை 20 லட்சத்துக்கு வாங்கி, உள்ளே கொண்டு வந்திருந்த அணி நிர்வாகம், டேன் கிறிஸ்டியனை, 4.8 கோடிக்கு வாங்கியிருக்கிறது. பந்துகளை இறுதி ஓவர்களில் பவுண்டிரி லைனைத் தாண்ட வைப்பதுடன், பந்துவீச்சாலும் டேன் கிறிஸ்டியனால் மிரட்ட முடியுமென்பது அணிக்கு வலுசேர்க்கும். ஜோஷ் ஃபிலிப்புக்கு மாற்றாக, நியூஸிலாந்தின் ஃபின் ஆலனை தற்போது ஆர்சிபி கைவசம் வைத்திருக்கிறது. அதனால், ஃபின் ஆலனையும் ஓப்பனிங்கில் எதிர்பார்க்கலாம். அதேபோல், அசாருதின் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பதும் கூடுதல்பலம். இவர்களைத் தவிர, வேறு பேட்டிங் ஆப்ஷன்களாக, சச்சின் பேபி, கேஎஸ் பரத், ராஜத் படிதர், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்ட வீரர்களும் ஆர்சிபிக்குள் இருக்கின்றனர்.

தடைகள்!

இவ்வளவு பார்த்துப் பார்த்து, பேட்டிங் படை பலத்தை ஆர்சிபி வலுவாக்க முயன்றாலும், இதிலும் சில குறைகள் கண்ணில் படத்தான் செய்கின்றன. அசாருதினுக்கு இது அறிமுக ஐபிஎல். அவரால் படிக்கல் ஏற்படுத்தியதைப்போல ஒரு தாக்கத்தை சர்வதேச வீரர்களுக்கு எதிராக ஏற்படுத்திவிட முடியுமா என்பது சந்தேகம். இந்தியாவில் இதுவரை விளையாடாத, ஐபிஎல்-க்கு முற்றிலும் புதியவரான ஜேமிசன், இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்வாரா என்பதற்கும் விடையில்லை.

சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பேஷ் லீகில், 13 போட்டிகளில், 379 ரன்களைக் குவிந்திருந்தாலும், கடந்த ஐபிஎல்-ல், 13 போட்டிகளில், வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தவர் மேக்ஸ்வெல். பெளலிங்கிலும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய மேக்ஸ்வெல் இந்த ஆண்டு ஆர்சிபியைக் காப்பாற்றுவாரா என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. டேன் கிறிஸ்டியனும் ஐபிஎல்-ல் ஒரு இடைவெளிக்குப்பிறகு வருகிறார். அதனால் அவரும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது சந்தேகமே!

சாதகமான மைதானங்கள்!

ஏபிடி | RCB | IPL 2021
ஏபிடி | RCB | IPL 2021
twitter.com/RCBTweets

கடந்த ஆண்டுகளில், பொதுவாக, சரிபாதி போட்டிகளை, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி விளையாடும். இந்தப் போட்டிகளில், என்னதான் தனது திறமையைக்காட்டி, ஆர்சிபி பேட்டிங் லைன்அப், 200 ரன்களை வாரிக் குவித்தாலும், இது சிறிய மைதானம் என்பதால், இந்த ஸ்கோரை, டிஃபெண்ட் செய்ய முடியாமல், ஆர்சிபி, பெரும்பாலான போட்டிகளில் தோற்றுப்போகும். ஆனால் இம்முறை, மூன்று போட்டிகள் சென்னையில் நடக்க இருப்பதால், ஆர்சிபி, முதலில் விளையாடி ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், சுலபமாக டிஃபெண்ட் செய்யமுடியும். அதேபோல், ஐந்து போட்டிகள், பேட்டிங் பாரடைஸ் கொல்கத்தாவில் நடப்பதால், இவற்றையெல்லாம் ஹை ஸ்கோரிங் கேமாக மாற்றி, அதனைக் கையகப்படுத்த, ஆர்சிபிக்கு வாய்ப்புகள் அதிகம்.

IPL 2021 : தோனி, டுப்ளெஸ்ஸி விக்கெட்டைத் தூக்கிய  அவேஷ் கான் யார்?! #CSKvDC

பௌலிங்கைப் பொறுத்தவரை, சஹால், ஸாம்பா, சுந்தர், மேக்ஸ்வெல் என நான்கு ஸ்பின் பௌலர்களை வைத்துள்ளது ஆர்சிபி. முதல் மூன்று போட்டிகள், சுழலுக்கு ஒத்துழைக்கும், சென்னை பிட்சில் நடைபெறுவதால், அந்தப் பிட்ச்களில், கோலிக்கான சாய்ஸ் நிறையவே இருக்கின்றது.

150+ வேகத்தோடு அச்சுறுத்தும் சைனி, பவுன்சர்களால் தாக்கக்கூடிய ஜேமிசன், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட், ஹர்ஷல் பட்டேல், பந்துகளை ஸ்லோ கட்டர்களாக வீச செய்ய, டேனியல் சாம்ஸ், ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் பந்துவீச சபாஷ் அஹமது, வெரைட்டிகளை வீச கேன் ரிச்சர்ட்சன் என ஒரு பெரிய பௌலிங் படையையே வைத்துள்ளார் கோலி. ஆனாலும், ஏற்கனவே சொன்னதைப்போல, எந்த வீரர் எந்த மைதானத்துக்கு ஒத்துவருவார், அவர்களைக் கொண்டு வியூகத்தை வகுத்து, எப்படி வெற்றிக்கான ஃபார்முலாவை உருவாக்குவது என்பவைதான் கோலிக்கு சவால்.

சஹால் | RCB | IPL 2021
சஹால் | RCB | IPL 2021
twitter.com/RCBTweets

உத்தேசப் பிளேயிங் லெவன்:

கோலி, படிக்கல், அசாருதின், ஏபிடி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், சச்சின் பேபி, கிறிஸ்டியன், ஜேமிசன், சுந்தர், சைனி/சிராஜ், சஹால்.

ஓட்டை விழுந்த இடத்தில் எல்லாம் சிமென்ட் வைத்துப்பூசி, முடிந்த அளவு, குறைபாடுகளைக் களைந்துள்ளது ஆர்சிபி. எல்லாம் சரியான திசையில் நகர்ந்து, கோலியின் கேப்டன்சியும் சிறப்பாக அமைந்தால், தனது முதல் ஐபிஎல் கோப்பையில், ஆர்சிபி முத்தமிடும்... கோலிதான் வர்றாரு!

அடுத்த கட்டுரைக்கு