Published:Updated:

IPL 2021: டின்டா அகாடமி டு டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்... ட்ரால்களை வென்ற சிராஜின் மாயவித்தைகள்!

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

2019 சீசனில் சிராஜின் எக்கானமி 9.55, இந்த சீசனில் அவருடைய எக்கானமி 7.26 மட்டுமே. சிராஜ் தன்னைத்தானே எவ்வளவு மெருகேற்றியிருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள இந்த எண்களே போதுமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் இருக்கிறது. யார் கையில் கிடைத்தாலும் அவர்களின் எந்தவித பின்னணியைப் பற்றியும் யோசிக்காமல் சகட்டுமேனிக்கு கிண்டலடிப்பதே அந்தக் கூட்டத்தின் வேலை. ஏன் எதற்கு கிண்டலடிக்கிறோம் என்ற லாஜிக்கெல்லாம் இந்தக் கூட்டத்திற்கு தெரியவே தெரியாது. இப்படிப்பட்ட நயவஞ்சகமிக்க ட்ரோலர்களிடம் சிக்கி சின்னாபின்னமான பலரில் முகமது சிராஜும் ஒருவர்.

இரண்டு சீசன்களுக்கு முன்பு சிராஜை 'டின்டா அகாடமி ஸ்டூடண்ட்' என்றும் 'உமேஷ் யாதவின் தம்பி' என்றும் குறிப்பிட்டு கிண்ட்லடித்தனர். ஒவ்வொரு ஆர்சிபி போட்டியின் போதுமே இந்தக் கிண்டல்கள் சிராஜைத் துரத்திக் கொண்டு இருந்தன. ஆனால், அதையெல்லாம் தாண்டி அவருடைய பௌலிங்கை மெருகேற்றிக் கொண்டு இன்று அவர் அடைந்திருக்கும் உயரம் வியப்பளிப்பதாக உள்ளது.

ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக பார்க்கப்பட்ட சிராஜ், 19வது ஓவரில் ரஸலுக்கு 5 டாட் பால்களை வீசுகிறார். ரிஷப் பண்ட்டை க்ரீஸுக்குள் வைத்துக் கொண்டு கடைசி ஓவரில் ஸ்கோரை டிஃபண்ட் செய்கிறார். இந்த மாற்றம் எப்படி வந்தது?
கோலி, முகமது சிராஜ்
கோலி, முகமது சிராஜ்

சிராஜை டின்டா அகாடமி ஸ்டூடண்ட் என விமர்சித்தவர்களுக்கு டின்டாவை பற்றியும் முழுதாக தெரியாது, சிராஜை பற்றியும் முழுதாகத் தெரியாது. இருவரையும் ஒரு சில மோசமான ஐபிஎல் பர்ஃபார்மென்ஸ்களை வைத்து மட்டுமே அளவிட்டிருக்கின்றனர். ஆனால், ஐ.பி.எல் மட்டுமே கிரிக்கெட் கிடையாதே?! அதைத் தாண்டியும் பல விதமான போட்டிகளும் தொடர்களும் இருக்கின்றன.

டின்டா, சிராஜ் இருவருமே ரெட்பால் ஸ்பெசலிஸ்ட்கள். 2015-16 சீசனில் ஹைதராபாத் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் அறிமுகமான சிராஜ் 5 சீசன்களில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இப்படி ஒரு ரெக்கார்டை வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரும் வைத்திருக்கவில்லை.

'டின்டா அகாடமி' என எந்த பௌலர் அதிக ரன்களை கொடுத்தாலும் ட்ரோல் செய்பவர்கள் டின்டாவின் ரெட்பால் ரெக்கார்டுகளையும் உணராதவர்களே! 2005லிருந்து ரஞ்சி போட்டியில் ஆடிவருகிறார் டின்டா. கடந்த பத்தாண்டுகளில் எந்த சீசனை எடுத்து பார்த்தாலும் பெங்கால் அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவராக டின்டாவின் பெயரே முதலில் இருக்கும். இந்திய அணி தவறவிட்ட மிகச்சிறந்த ரெட்பால் ஸ்பெசலிஸ்ட் அவர்.

2005-ல் கங்குலிதான் டின்டாவின் திறமையை கண்டறிந்து பெங்கால் அணியில் சேர்த்துக்கொண்டார். 2005க்கு பிறகு, இந்திய அணியில் கங்குலியின் செல்வாக்கு எப்படி இருந்தது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஒருவேளை கங்குலி பழைய கேப்டனாகவே இருந்திருந்தால் யுவராஜ், கெய்ஃப் போல டின்டாவும் அப்போதே இந்திய அணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பார். இப்போது, நாம் லெஜண்டாக கொண்டாடும் வீரராகக் கூட உயர்ந்திருப்பார்.

RCB கோலி, சிராஜ்
RCB கோலி, சிராஜ்

ட்ரோல் செய்பவர்கள் இந்த பிண்ணனியை எல்லாம் தெரிந்துக்கொள்ள தயாராக இல்லை. வளர்ந்து வரும் வீரர்கள் மீது 'டின்டா அகாடமி' என முத்திரை குத்தி அற்ப லைக்குகளை அள்ளுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

கங்குலியால் கண்டுபிடிக்கப்பட்டவர் டின்டா என்றாலும், டின்டாவை தொடர்ந்து செதுக்கி அவருக்கான வாய்ப்புகளை கங்குலியால் வழங்க முடியவில்லை. இது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். ஆனால், டின்டா அளவுக்கு சிராஜ் துரதிர்ஷ்டசாலி இல்லை. கேப்டன் விராட் கோலி சிராஜை செதுக்கி அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்.

இரண்டு சீசன்களாக, டெஸ்ட் மேட்ச்களில் நியுபாலில் வீசி பழக்கப்பட்ட சிராஜை டெத் ஓவர்களில் பயன்படுத்தி அடிவாங்க வைத்துக்கொண்டிருந்தார் கோலி. கடந்த சீசனில்தான் சிராஜை பவர்ப்ளேயில் வீச வைக்க வேண்டும் என்கிற எண்ணமே கோலிக்கு வந்தது. நியுபாலை தூக்கி சிராஜ் கையில் கொடுத்தார் கோலி. அவ்வளவுதான்! எல்லாமே தலைகீழாக மாறியது. இத்தனை நாள்களாக ரன்களை வாரி வழங்குவதற்காக ஏளனம் செய்யப்பட்ட சிராஜ் எதிரணியின் பேட்டிங் ஆர்டர்களை மொத்தமாக சிதைக்கத் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த துபாய் சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக பவர்ப்ளேயில் ஒரே ஸ்பெல்லில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார். ஐபிஎல் வரலாற்றில் வீசப்பட்ட மிகச்சிறந்த ஸ்பெல்களில் இதுவும் ஒன்று. இந்த ஸ்பெல்தான் சிராஜின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டி போட்டது. ஆஸ்திரேலிய சீரிஸிலும் இதன் பிறகே ஆடினார். தந்தையை இழந்த சோகத்திலும் அந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த சீசனிலும் இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறப்பாக வீசியிருக்கிறார். அதுவும், அவர் அதிகம் திணறும் டெத் ஓவர்களில் இரண்டு தரமான சம்பவங்களை செய்திருக்கிறார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் ரஸல் அடித்தால் கொல்கத்தா வெற்றி என்ற நிலையில், அந்த ஓவரை சிறப்பாக வீசி வெறும் 1 ரன்னை மட்டுமே கொடுத்திருப்பார். ரஸலுக்கு 5 டாட் பால்களை வீசியதுதான் ஹைலைட்டே. ரஸலை ஒரு சிக்சர் கூட அடிக்கவிடாமல் வைட் யார்க்கர்கள் மூலம் மாய வித்தை நிகழ்த்தினார்.

முகமது சிராஜ், பண்ட், கோலி
முகமது சிராஜ், பண்ட், கோலி

அதேமாதிரிதான், நேற்றைய போட்டியிலும் கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் க்ரீஸில் நிற்க 14 ரன்களை டிஃபண்ட் செய்திருக்கிறார். முதலில் வீசிய நான்கு பந்துகளையுமே நல்ல யார்க்கராக்கியிருந்தார். கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன் தேவையென்ற போது ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் யார்க்கர் வீச முயன்று ஸ்லாட்டில் வீசுவதை விட, வைடு யார்க்கர்களாக வீசிவிடலாம் என முடிவெடுத்தார். அந்த பந்துகள் ஃபுல் டாஸாக போயிருந்தாலும் டெல்லி அணியால் வெல்ல முடியவில்லை. இந்த போட்டிகள் மட்டுமில்லை, மும்பைக்கு எதிராகவும் பொல்லார்டை க்ரிஸுக்குள் வைத்துக்கொண்டு டெத் ஓவரில் 6 ரன் மட்டுமே கொடுத்து மிரட்டியிருப்பார்.

2019 சீசனில் சிராஜின் எக்கானமி 9.55, இந்த சீசனில் அவருடைய எக்கானமி 7.26 மட்டுமே. சிராஜ் தன்னைத்தானே எவ்வளவு மெருகேற்றியிருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள இந்த எண்களே போதுமானது. வாய்ப்புகள் கிடைப்பது பெரிதல்ல. திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைப்பதே பெரிய விஷயம். சிராஜின் பலம் என்ன என்பதை உணர்ந்து ஆர்சிபி அவருக்கு சரியான வாய்ப்புகளை பவர்ப்ளேயில் கொடுத்ததால்தான், இன்று டெத் ஓவர்களிலும் மிரட்டக்கூடிய பௌலராக மெருகேறியிருக்கிறார் சிராஜ்.

'டின்டா அகாடமி' என லாஜிக்கே இல்லாமல் விமர்சிக்கப்பட்டவர், இன்று ஆர்சிபியின் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்டாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். வாழ்க்கை ஒரு வட்டம்டா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு